Last Updated : 01 Aug, 2018 08:49 AM

 

Published : 01 Aug 2018 08:49 AM
Last Updated : 01 Aug 2018 08:49 AM

2 மினிட்ஸ் ஒன்லி 04: கதையல்ல நிஜம்!

இந்தத் தொடரை எழுதத் தொடங்கின முதல் வாரத்துல நான் சொல்லணும்னு நினைத்த ஒரு மனிதரைப் பற்றிதான் இப்போ இங்கே எழுதப் போறேன்.

நம்மைச் சுத்தி இருக்குற நாலு தெரு, என்னோட நண்பர்கள், பக்கத்து வீடு, எதிர் வீட்டு ஆட்களுக்குன்னு சின்ன சின்ன உதவிகள் செய்துட்டு இருக்கும்போது, அதையே பெருசா செய்யணும்னு எனக்கு புரியவைத்தவர் அந்த மனிதர்.

ரெண்டு  வருஷங்களுக்கு முன்பு சென்னையில டிசம்பர் மாதத்துல வெள்ளம் வந்தது. அது வர்றதுக்கு ஒரு மாதம் முன்னாடி நவம்பர் முதல் வாரத்துல பயங்கர கனமழை பெய்தது. அப்போ தீபாவளி நேரம். அந்த மழையில சைதாப்பேட்டை குடிசைவாழ் பகுதி மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டாங்க.

கால் முளைத்த கருணை

எஃப்.எம் ரேடியோவுல ஆர்.ஜேவா வேலை பார்த்துக்கிட்டிருந்த நான், ‘‘உங்களால முடிந்த போர்வை, பெட்ஷீட், பால் பாக்கெட், பிஸ்கட்னு என்ன தர முடியுதோ அதை ரேடியோ ஸ்டேஷனுக்கு அனுப்பி வையுங்க. பாதிக்கப்பட்டவங்கக்கிட்ட நாங்க கொண்டுபோய் சேர்க்குறோம்”னு ஆன் ஏர்ல பதிவு செய்துக்கிட்டிருந்தேன்.

அந்த நேரத்துல தலை சரியா சீவாத பரட்டை முடி, 10 நாட்களுக்கும் மேல சேவ் செய்யாத தாடி, அழுக்கு வேட்டி, கசங்கிய சட்டை, கால்ல ரப்பர் செருப்பு, சாப்பிட்டே 2 நாள் ஆகியிருக்குங்கிற நிலையில ஒரு பெரியவர் ரேடியோ ஸ்டேஷன் பக்கம் வந்தார்.

என்னைப் பார்த்ததும், “தம்பி.. ஒரு நிமிஷம். நில்லுங்க. சைதாப்பேட்டை பகுதியில மழையில பாதிக்கப்பட்டவங்களுக்கு இந்தப்பக்கம் உதவி செய்றதா சொன்னாங்

களே?’ன்னு சரியா பேச முடியாத வராக இழுத்தார். அவருக்கு எங்க எஃப்.எம் பேர்கூட சொல்லத் தெரியல. சரி… ஏதோ அவருக்கு உதவி தேவைப்படுதுன்னு கேட்கப் போறார்னு நினைத்து, “ஆமாம். சொல்லுங்க தாத்தா. இந்த இடம்தான்”னு அவர் இன்னும் என்ன கேட்பார்னு நின்னேன்.

கையில கொண்டு வந்திருந்த பையைப் பிரித்து 5 டைகர் பிஸ்கட் பாக்கெட்டை எடுத்து என் கையில கொடுத்து, “இந்தாங்க தம்பி. ஏதோ என்னால முடிந்தது. இதை அந்தப் பகுதியில பசியில இருக்குறவங்கக்கிட்ட கொடுத்துடுங்க!”ன்னு சொல்லிட்டு வேறு எதுவும் பேசாம திரும்பிப் போயிட்டார். அவரை அழைத்து ரேடியோவுல பேச வைத்தால் இன்னும் பலபேர் உதவ முன் வருவாங்களேன்னு நினைத்து திரும்பிக் கூப்பிடலாம் என்ற எண்ணம் வருவதற்குள் அந்த தாத்தா தூரமா மறைந்து போயிருந்தார்.

மனசளவு கைகள்

தன்னால சரியா நடக்கக்கூட முடியாத நிலையில, மூணு மூணு ரூபாய்ல 15 ரூபாய்க்கு, 5 பிஸ்கட் பாக்கெட்களை வாங்கிக்கிட்டு ரேடியோ ஸ்டேஷனைத் தேடிட்டு வந்து

கொடுத்துட்டு ஒரு செகண்ட் லுக் கூட கொடுக்காமல் போன அந்த பெரியவரோட மனநிலை என்னவா இருக்கும்னு பிரம்மிப்பா நினைச்சு பார்த்துக்கிட்டே இருந் தேன்.

இது நடந்து ஒரு மாதம் இருக்கும். அடுத்து டிசம்பர் 1-ம் தேதி வெள்ளம் சென்னை நகரத்துக்குள் சூழ்ந்தது. அன்றைக்கு வேலையை முடிச்சுட்டு வீட்டுக்குள்ள போன நான், மழை நீர் நகரத்தைச் சூழ ஆரம்பிக்க... எனக்கு பயம் அதிகரித்தது. என்னோட நண்பர்கள் ஒவ்வொருத்தரையா தொடர்பு கொண்டு, ஒவ்வொரு இடத்துலயும் என்னென்ன உதவிகள் தேவைன்னு போன், முகநூல், ட்விட்டர்ல கனெக்ட் பண்ண ஆரம்பிச்சேன்.

இணைந்த கரங்கள்

இரவு 11.30 மணி ஆச்சு. கேமரா ப்ளாஷ் கட் மாதிரி டக்குன்னு ஒரு ப்ளாஷ்ல பிஸ்கட் பாக்கெட்டோடு வந்த அந்த தாத்தோவோட முகம் நினைவுக்கு வந்தது. எனக்குள்ளே ஒரு அசவுகரியமான ஃபீலிங். சரியா சொல்லணும்னா குற்ற உணர்ச்சி. ஒரு 75 வயசு தாத்தாவால் தன்னால் முடியாத நிலையிலும் அவ்வளவு தூரம் வந்து உதவ முடியும்னா நாம வீட்டுல உட்கார்ந்து பண்ணிக்கிட்டு இருக்கிறோமேங்கிற கேள்வி.

உடனே கொஞ்சமும் யோசிக்காம வீட்ல இருந்து வீதிக்கு இறக்கிடணும்னு தோணுச்சு, கிளம்பினேன். அன்றைக்கு இறங்கின அந்த ஆர்வம்தான் 15 நாட்கள் வீட்டு பக்கமே போகாம அப்போ வேலை பார்க்க வைத்தது. இன்றைக்கு இந்த 2 வருஷங்கள்ல ‘சென்னை மைக்ரோ’ என்ற பேர்ல 26 ஆயிரம் இளைஞர்கள் ஒண்ணாச் சேர்ந்தாங்க என்றால் இவ்வளவுக்கும் அந்தத் தாத்தாதான் காரணம்.

‘தனக்கு மிஞ்சிதான் தானம்’னு சொல்வாங்க. அது கிடையாது. ஏன்னா நாம் ஒரு நல்ல நிலையில இருக்கோம்னு எடுத்துப்போம். ஞாயிற்றுக்கிழமை விடு முறைன்னு நல்லா தூங்கிட்டு காலை 11.30 மணிக்கு எழுந்து 12.30-க்கு நாயர் மெஸ்ல போய் லஞ்ச் சாப்பிட போக லாம்னு கிளம்புறோம். அந்த நேரத்துல எதிர்ல ஒரு விபத்து நடந்தா உடனே அவங்கள காப்பாத்தணும்னு ஒரு மன நிலை வரலாம்.

ஏன்னா.. அன்னைக்கு நமக்கு பெரிசா வேலை இருக்காது. அதுவே திங்கள்கிழமை காலையில பரபரப்பா ஓடிட்டு இருக்குறப்ப, ஒரு விபத்துன்னா அப்போ காப்பாற்ற முடியாதுன்னு இருக்கலாமா? அதுதான் இல்லை. எந்த நேரமா இருந்

தாலும், அது நம்மோட அசவுகர்யமான சூழலா இருந்தாலும் உதவி செய்ய இறங்கிடணும். அதைத்தான் அந்தத் தாத்தாகிட்ட இருந்து நான் கற்றுக்கொண்டேன்.

குடைந்தெடுக்கும் கேள்விகள்

கடந்த 3 வாரங்களா நான் எழுதுற இந்தத் தொடரை படிச்சவங்க, என்னோட நண்பர்கள், நான் ரேடியோவுல சொல்றப்ப எதிர்ல இருந்து கேட்டுட்டு படிக்க ஆரம்பிச்சவங்கன்னு பலபேரு என்கிட்ட ஒரு கேள்வி கேட்கிறாங்க.

‘எழுதணும்கிறதுக்காக இப்படி புதுசு புதுசா ஆட்களை உருவாக்கிறீங்களா? அப்புறம் ஏன் நீங்க சொல்ற ஆட்களோட புகைப்படம் இல்லைன்னு சொல்றீங்க? நீங்க சொல்ற இந்த ஆட்கள் உண்மையாவே இருக்காங்களா?’ இப்படிப்பட்ட கேள்விகள் வருது. இந்தக் கேள்விகளைக் கேட்டு எனக்கு பயங்கர ஆச்சர்யமா இருக்கு.

நான் 10 தலையோட ராவணனை பார்த்தேன், கால் மட்டும் மீன் மாதிரி உடம்பு எல்லாம் மனுஷன் மாதிரி ஒரு உருவத்தை பாத்தேன், எங்க வீட்டுக்கு பக்கத்துல மாணிக்கக் கல்லை கக்கிய நாகப் பாம்பை பார்த்தேன்னு அப்படி இப்படினு எதுவும் இந்தத் தொடர்ல எழுதவும் இல்லை. அப்புறம் ஏன் இப்படி கேள்வி கேட்குறாங்கன்னு ஆச்சர்யம் இப்பவும் இருக்கத்தான் செய்யுது. என்னப் பண்றது.. நாம அந்த மாதிரி ஆகிட்டோம்.

பிஸ்கட் பாக்கெட்டோடு வந்த அந்தத் தாத்தா தொடங்கி ரயில்வே ஸ்டேஷன்ல சந்தித்த அந்த அக்கா, பிளஸ் 2 பரீட்சையில 1,176 மார்க் வாங்கிட்டு படிக்காம மதுரை பேருந்து நிறுத்தத்துல பூ விற்றுக்கொண்டிருந்த அந்த மாணவி என, இவங்களோட ஒவ்வொரு சம்பவங்களும் கொடுக்கும் படிப்பினை வேறு வேறு. ஒவ்வொருத்தர்கிட்டயும் சாதாரணமா பேச்சு கொடுத்ததனால நடந்த விஷயங்கள், அனுபவங்கள்தான் இப்படி அமைந்தது. எல்லாருமே ரத்தமும், சதையுமா உயிரோட இருக்குற வங்க. இவங்க யாருமே கற்பனை மனிதர்கள் அல்ல.

இதை இன்னும் ஒரு படி மேலே போய் ஒரு விளையாட்டு போல இங்கே விளையாடப் போறோம். இதை நீங்களும் முயற்சி செய்து பார்க்கப் போறீங்க. இன்னைக்கே நீங்க ஒரு ஓலாவுலயோ, ஊபர் கார்லயோ அல்லது ஆட்டோவுலயோ டிராவல் பண்றீங்க. ஒரு ஜவுளிக் கடைக்கோ, மளிகைக் கடைக்கோ போறீங்க.

அந்த இடத்துல அங்கே வேலை பார்க்குறவங்கக்கிட்ட அல்லது நாம பயணிக்கிற அந்த கார் ஓட்டுநர்கிட்ட நம்ம வேலையைத் தவிர்த்து குறைந்தது ஒரு 5 நிமிடம் செலவு செய்து பேச்சுக் கொடுங்க. அடுத்த வாரத்துக்குள்ள 10 பேரை மீட் பண்ணுங்க. அதுல குறைந்தது ஒருத்தர்கிட்டயாவது ஒரு கதை கிடைக்கும்.

அது கதை அல்ல; அனுபவம். அந்த அனுபவத்தை என்னோட https://www.facebook.com/rjbalajiofficial என்ற முகநூல் பக்கத்திலும், https://www.facebook.com/TamilTheHindu என்ற ‘இந்து தமிழ்’ முகநூல் இன்பாக்ஸ் பக்கத்திலும் எழுதுங்க. உங்கள் பகிர்தலுக்காக காத்திருக்கிறேன் நண்பர்களே.

- நிமிடங்கள் ஓடும்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x