Last Updated : 22 Aug, 2018 10:10 AM

 

Published : 22 Aug 2018 10:10 AM
Last Updated : 22 Aug 2018 10:10 AM

2 மினிட்ஸ் ஒன்லி 06: ஸ்கோர் தாத்தா

கருத்து சார்ந்த விஷயங்களைப் பகிர்ந்துக்கிறதில்  இருந்து இந்த வாரம் கொஞ்சம் கலகலப்பா மாறுவோம்னு சொல்லியிருந்தேன்.

ஆனா, இப்போ கேரள வெள்ளம் வந்து மனசை ரொம்ப பாரமாக்கிடுச்சு. முகநூல், ட்விட்டர்ல, "நீங்க என்ன செய்யப்போறீங்க பாலாஜி?" என்றும்,  "நாங்க என்ன செய்யணும்?" என்று கேட்டும்  நிறைய மெசேஜ் வந்துட்டே இருக்கு.

சென்னை வெள்ளம் வந்தப்போ மக்களே இறங்கி மாறி மாறி உதவி செய்துக்கிட்டதுனால மீட்புப் பணிகள் செய்ற வேலை கொஞ்சம் எளிமையாதான் இருந்தது. ஆனா இன்னைக்கு கேரளாவுல இருக்குற சூழல் அப்படியே வேற. கனமழை ஆரம்பித்து 10 நாட்களுக்கு அப்பறம்தான் மீட்புப் பணிகள்னு இறங்கவே முடியுது. 

அதுவும் படகுகள் துணையோடு, மீனவர்களோட சேர்ந்து ராணுவ வீரர்கள் செய்ற மீட்புப் பணிகளைத்தான் பார்க்க முடியுது. ஏதாவது செய்தாகணுமே என்ற ஆதங்கமும், அக்கறையும் இருந்தாலும் உடனடியாகச் செய்யமுடியாம நின்னுக்கிட்டிருக்கோம்.

நம்ம ஊர்ல இருந்து இப்போ பணமாவும், பொருளாவும் அனுப்ப ஆரம்பிச்சுட்டாங்க. நல்ல விஷயம். சென்னை, கடலூர்ல வெள்ளம் வந்து ரெண்டரை வருஷங்களுக்குப் பிறகும்கூட இப்பவும் சிலர் அந்த பாதிப்புல இருந்து மீண்டு வெளியே வராம இருக்காங்க. கடந்த 10 நாட்களா துண்டிக்கப்பட்டு இருக்குற மொத்த கேரள மாநில மக்களோட தேவை அதிகம்.

பள்ளி, கல்லூரி, முதியோர் இல்லம், மக்கள் வாழும் வீடு எல்லாமும் உருக்குலைந்து கிடக்கு. ஏழுல இருந்து எட்டு லட்சம் மக்கள் சாலைக்கு வந்துட்டாங்க.  இதுக்கு நாம ஒரு வாரம், 10 நாட்கள் உதவி செய்றோம்னு மட்டுமே இருந்துடக்கூடாது.  ‘என்னப்பா இன்னும் வெள்ளம் வெள்ளம்னு எத்தனை நாளைக்குத்தான் பேசிட்டே இருப்பீங்க. அடுத்த மம்முட்டி படமே ரிலீஸாகிடுச்சு’ன்னு ஒரு கட்டத்துல  நினைத்துவிடக் கூடாது.

இப்போ அதில் ஒரு கட்டமா நாங்க எங்க தன்னார்வலர்களோட சேர்ந்து கேரளாவுல இருக்குற சில பள்ளிக்கூடங்களை சீரமைத்துத் தர்ற வேலையில இறங்கலாம்னு இருக்கோம். இதைத்தான் நாங்க முன்னாடி சென்னையில செய்திருக்கோம். இதே மாதிரி நீங்களும் உங்க நண்பர்களோடு சேர்ந்து ஏதாவது ஒரு நல்ல விஷயங்கள அடுத்த சில மாதங்கள்ல செய்யலாம்.

என்னோட நேரமா என்னென்னு தெரியல. ஜாலியா ஏதாவது பேசலாம்னு இருக்கும்போது இந்த மாதிரி ஏதாவது ஒரு விஷயம் நடந்துடுது.

யார் இந்த மனுஷர்?

நான்  இந்த வாரம் சொல்லலாம்னு  நினைத்த  மனிதர்  ‘ஸ்கோர் தாத்தா’. யார் இந்த ஸ்கோர் தாத்தான்னு சொல்றதுக்கு முன்னாடி, நம்ம தமிழ்நாட்டில் தனித்த அரசியல் ஆளுமையாக இருந்து சமீபத்தில் மறைந்த கலைஞர் அவர்களைப்  பற்றியும் ஒரு  விஷயம் நினைவுக்கு வருது.

ஒரு மனிதர் அறுபது - எழுபது வருஷத்துக்கும் மேல தினமும் காலையில 4.30 மணிக்கு எழுந்து இரவு 12 மணி வரைக்கும்  ஓயாம உழைத்துக்கொண்டே இருந்திருக்கிறார். அதுவும் கடந்த ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் முரசொலி பத்திரிகையில ஒரு நாள் விடாம ‘என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே’  என்று தொடங்கி தன்னோட கையெழுத்துலயே  கடிதம்

எழுதியிருக்கிறார். இதை வெறும் வேலைன்னு எடுத்துக்கிட்டு செய்தா ஒருத்தரால முடியாது. மனப்பூர்வமான விருப்பத்தோட எடுத்துக்கிட்டாத்தான் அது சாத்தியப்படும். அதைத்தான் கலைஞர் அவர்களும்  செய்திருக்கிறார்.

நான் சொன்ன அந்த  ‘ஸ்கோர்’ தாத்தாவ என்னோட நண்பன் வீட்டுக்குப் பக்கத்துல இருக்குற கிரவுண்டுல பார்த்திருக்கேன். தன்னோட மகன், மகளை எல்லாம் நல்லா படிக்க வைத்து அவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தையும் காட்டியவர். இப்போ கடந்த 20 வருஷமா எல்லா ஞாயிற்றுக்கிழமையும் கிரவுண்டுக்கு வந்து அங்கே  கிரிக்கெட் விளையாடுற பசங்களோட 'ஸ்கோர்' எழுதுற வேலையைச் செய்வார்.

 மூணு பிரிவா பசங்க பிரிந்து விளையாடுவாங்க. எங்க டீமுக்கு வாங்க தாத்தான்னு ஒவ்வொரு  குழுவும் அவரை அப்படி அன்பா கூப்பிடுவாங்க. நோ பால், ‘வைட்’னு எல்லாமும் அழகா ஒரு பேப்பர்ல எழுதி அசத்துவார். ஞாயிற்றுக்கிழமை அவரைப் பார்க்காம இருக்கவே முடியாது.  ஒரு மனிதன் 20 வருஷமா இந்த வேலையையே செய்துட்டு வர்றார். அதில் அவருக்கு அப்படி ஒரு சந்தோஷம்.

எங்க வீட்டுல  ஒரு  தாத்தா  இருந்தார். நாளிதழ்ல வர்ற நினைவஞ்சலி, இரங்கல் விளம்பரத்துல இருக்குற போன் நம்பருக்கு கால் செய்து ஆறுதல் கூறுவார். அவங்க யாரு? என்னன்னுகூட தாத்தாவுக்கு தெரியாது. இருந்தாலும் அதை  இறந்துபோற வரைக்கும் விடாமல் செய்தார். அதே மாதிரி  தெருவுல தினமும் ஒரு தாத்தா, பாட்டி கடந்த 10 வருஷங்களுக்கும் மேல  வாக்கிங் போய்ட்டே இருக்காங்க.

சமீபத்துல ஒரு ஆராய்ச்சி கட்டுரை படித்தேன். அதில் இன்னைக்கு இருக்குற பசங்க 24 வயசுக்குள்ள 5 வேலையை மாத்திடுறாங்கன்னு போட்டிருந்துச்சு. ஏன் இப்படி? ‘எங்க அப்பா 2 மணி நேரம் பேப்பர் படிப்பார்’, ‘என்னோட தாத்தா அரை நாள் முழுசா பேப்பர் படிக்கிறதுல செலவழிப்பார்!’னு இப்போ எல்லாம் கேள்விப்பட முடியுதா?

கலைஞர் தொடங்கி, ‘ஸ்கோர்’ தாத்தா, இரங்கல் செய்திக்கு ஆறுதல் சொல்ற எங்க வீட்டு தாத்தா, தெருவுல போகுற வாக்கிங் தாத்தா இப்படி எல்லோரிடமுமே இருந்த விஷயம் ஒண்ணு சின்சியாரிட்டி. இன்னொன்னு டிசிப்ளின். அதை அவங்க வாழ்க்கை முழுக்க ஒரு மனப்பூர்வமான விருப்பத்தோட செய்திருக்காங்க.

நான் திறமைசாலி. என்னால முன்னுக்கு வர முடியும். இதெல்லாம் இந்த காலகட்டத்துக்கு சரியா இருக்குமான்னா, ஓ.கே. ஆனா அந்தத் திறமை ஒரு கட்டம் வரைக்கும்தான் கூட்டிட்டுப் போகும். 

அடுத்த லெவல்ங்கிற விஷயம் அந்த டிசிப்ளின், சின்சியாரிட்டியிலதான்  இருக்கு. போங்க… உங்க வீட்டுக்குப்  பக்கத்துலயும் நிச்சயம்  ஒரு ஸ்கோர்  தாத்தாவோ, வாக்கிங் தாத்தாவோ இருப்பாங்க. கொஞ்ச நேரம் அவங்கக்கிட்ட பேசுங்க. நிறைய விஷயங்கள் கிடைக்கும்.

- நிமிடங்கள் ஓடும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x