Last Updated : 05 May, 2018 05:42 PM

 

Published : 05 May 2018 05:42 PM
Last Updated : 05 May 2018 05:42 PM

ஆரோக்கிய உரிமைக்கு வழிநடத்த குரல் கொடுக்கும் செவிலியர்கள்

மே 12 - உலக செவிலியர் தினம்

பொதுமக்களுக்கு செவிலியர்கள் ஆற்றி வரும் உன்னதமான பணியினை உலகிற்கு உணர்த்தும் வகையில், தற்கால மருத்துவ முறையை நிறுவிய ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேலின் நினைவைப் போற்றும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் மே 12-ஆம் நாள் உலக செவிலியர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இந்நாள் மக்களின் ஆரோக்கியத்தில் செவிலியரின் பங்கை சிறப்பித்து நினைவு கூரப்படுகிறது.

உலக செவிலியர் தினத்தின் முக்கியத்துவம்:

நாம் நோயினால், வலியிலும் வேதனையிலும் துடித்த காலத்தில், மருத்துவமனைகளில் நம்மை அன்புடனும், பரிவுடனும் கவனித்துச் சேவை செய்த செவிலியர்களுக்கு மானசீகமாக நன்றி சொல்லும் நாள் இது. மருத்துவமனைகளை ‘டாக்டரிங் ஹோம்’ என்று அழைப்பதில்லை. ‘நர்ஸிங் ஹோம்’ என்றுதான் அழைக்கிறோம். டாக்டர்கள் பரிசோதனை செய்து, என்ன மாதிரி சிகிச்சை என்பதை முடிவு செய்கிறார்கள். ஆனால் அவர்களின் வழிகாட்டலோடு இரவும் பகலும் சிறப்பாகச் செய்து நோயாளிகளைக் கவனிப்பது செவிலியர்களே.

‘நர்ஸ்’எனும்போது, ஏதோ ஆங்கில மருத்துவத்துடன், அல்லது மேற்கத்திய பாணி மருத்துவமனைகளுடன் மட்டுமே கற்பனை செய்கிறோம். ஆனால், நம் மரபிலேயே இதற்கு முன்னோடிகள் உண்டு. வேத காலத்தில் நம் சுஸ்ருதர் தரையில் அமர்ந்து அறுவை சிகிச்சை செய்யும் ஓவியத்தில், ஒரு பாத்திரத்தில் நீருடன் பெண் ஒருவர் நிற்பதைக் காணலாம். ஆயுர்வேத மருத்துவத்தின் தந்தையான சரகர், ‘ஒரு திறமையான மருத்துவ சிகிச்சைக்கு நோயாளி, டாக்டர், செவிலியர் மற்றும் மருந்து ஆகிய நான்கு விஷயங்கள் மிக அவசியம். என்பதை உணர்த்துகிறார். மேலும், செவிலியர் சுத்தமாகவும், நல்ல மருத்துவ அறிவோடும், எல்லோரிடமும் கருணை காட்டுபவராகவும் இருக்க வேண்டும்’ என்கிறார். எங்கெல்லாம் அன்பு நிறைந்த சேவை தேவையோ, அங்கெல்லாம் பெண்களே முதலிடம் பெறுகின்றனர்.

புத்தரின் காலத்தில் பிக்குணிகள், சிறந்த மருத்துவச் சேவையாற்றி உள்ளதாக அறிகிறோம். கிறிஸ்துவம், மருத்துவத்தில் உன்னதப் பங்காற்றுகிறது. இதில் கன்னியாஸ்திரிகளுக்குப் பெரும் பங்கு உண்டு. ‘விளக்கேந்திய மங்கை’ என்று உலகம் முழுவதும் போற்றப்படும் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல், செவிலியர் சேவையின் முன்னோடி. ஐரோப்பாவில் நடைபெற்ற க்ரீமியன் போரில் இரவு வேளைகளிலும் கையில் விளக்கை ஏந்தித் தேடித்தேடிச் சென்று சேவை புரிந்த அவரைப் போற்றும் வண்ணமே இந்நாள் கொண்டாடப்படுகிறது. இன்றும் நர்ஸிங் பட்டம் பெறும் செவிலியர்கள், கைவிளக்கில் ஒளியேற்றி, தன்னலமற்ற மனிதகுலச் சேவையைச் செய்ய உறுதி ஏற்கின்றனர்.

செவிலியம் உலகத்தின் மாபெரும் சுகாதாரச் சேவைத் தொழில் எனக் கருதப்படுகிறது. உடலியல், உளவியல், சமூகவியல் ஆகிய அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு நோயாளிகளுக்கு சேவை செய்வதற்கு ஏற்றவாறு செவிலியர்கள், சிறந்த பயிற்சியையும், கல்வியையும், அனுபவத்தையும் பெறுகின்றனர். வேலைப்பளு மிக்க மருத்துவர்கள் நோயாளிகளுடன் இருக்கக்கூடிய நேரம் மிகக் குறைவானதே. ஆனால் இருபத்து நான்கு மணிநேரமும் செவிலியர்கள் நோயாளிகளுடனே இருந்து அவர்களைக் கவனிக்கின்றனர். நோயை மேற்கொள்வதிலும், மனவுறுதியை வளர்ப்பதிலும் நோயாளிகளுக்கு நட்பாகவும், ஆதரவாகவும், உதவியாகவும் செயலாற்ற செவிலியர்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர்.

மருத்துவ ரகசியம்:

டாக்டர்கள் போலவே நர்ஸ்களுக்கும் உறுதிமொழி உண்டு. பயிற்சி முடித்ததும் இந்த உறுதிமொழியை ஏற்க வேண்டும். ‘செவிலியர் சேவையின் அறக்கோட்பாடுகளுக்கும் எனது பணியின் புனிதத்துக்கும் தீங்கு நேராமல், சேவையை மேற்கொள்வேன் என இறைவன் முன் உறுதியேற்கிறேன். என் மூத்த செவிலியர்களுக்கும், சக செவிலியர்களுக்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன். எனது திறமைக்கு ஏற்ப உண்மையுடன் மருத்துவர்களின் கட்டளைகளையும், என் மூத்தோரின் வழிகாட்டலையும் ஏற்றுச் செயல்படுத்துவேன். கேடு தரும் எந்த மருந்தையும் தெரிந்தோ, தெரியாமலோ யாருக்கும் தரமாட்டேன். எனது பணியில் நான் அறியும் ரகசியங்களை, எக்காரணம் கொண்டும் எவருக்கும் தெரிவிக்க மாட்டேன். நோயாளிகளின் நலனுக்கென வாழவும், என் தொழிலின் உயர் லட்சியங்களுக்கு என்னை அர்ப்பணிக்கவும் உறுதியேற்கிறேன்’ என்பதே அந்த உறுதிமொழி!

‘ஆரோக்கிய உரிமைக்கு – வழிநடத்த குரல் கொடுக்கும் செவிலியர்கள்’ இதுதான் இவ்வாண்டு (2018) உலக செவிலியர்கள் தின கருப்பொருள். புனிதமான செவிலியர் சேவையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திப் பணியாற்றி வரும் செவிலியர்களை அப்படி குறிப்பிடுவது பொருத்தம்தானே!

அ.மகாலிங்கம்

இயக்குநர், டுவின்டெக் அகாடமி

தொடர்புக்கு: mahali@mahali.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x