Last Updated : 11 May, 2018 01:34 PM

 

Published : 11 May 2018 01:34 PM
Last Updated : 11 May 2018 01:34 PM

சின்ன சின்ன வரலாறு: ஜிலீர் ஐஸ்க்ரீம்

கத்திரி வெயில் வாட்டி எடுக்கிறது. இந்தப்பொழுதில் முதலில் மனதில் தோன்றும் தித்திப்பான வஸ்து "ஐஸ்க்ரீம்". இப்படி ஆழ் மனதை கொள்ளைகொண்டுள்ள பொருளின் சரித்திரத்தை தெரிந்து கொள்ள வேண்டாமா?

சமீபத்தில் படித்த ஒரு செய்தி. வெனிசூலா நாட்டின் மிகப்பழமை வாய்ந்த கார்னாட்டோ ஐஸ்க்ரீம் பார்லர் சமீபத்தில் மூடப்பட்டுவிட்டது. ஒரு நிமிடம் ஓர் இறப்பில் ஏற்படும் துயரம் எட்டிப்பார்த்தது. இதில் என்ன அவ்வளவு முக்கியமான செய்தியா என்று யோசித்துப்பார்த்தால், ஆம் என்றே தோன்றுகிறது. ஏனென்றால், ஐஸ்க்ரீமின் வரலாறு அப்படி இது முதலில் ஒரு பணக்கார வர்க்கத்தின் பிரத்தியேக ஆடம்பர உணவாக இருந்து பின் மிக மெதுவாக நத்தைபோல் ஊர்ந்து சாதாரண மக்களின் கைகளில் வந்தடைந்தது என்பதைச் சொல்கிறது.

ஆக ஒரு நாட்டில் இப்படி எல்லோருக்குமாகிப்போன பண்டம் மறுபடியும் இல்லாமல் போனால், பொருளாதார மாற்றத்திற்கான ஆரம்பமோ என்று அச்சம் வருகிறது. வெனிசூலா நாட்டின் இந்த நிலைமைக்குக் காரணம்... இறங்கு முகத்தில் இருக்கும் ஆயிலின் சர்வதேச விலை. எண்ணை ஏற்றுமதியை முக்கியமான பொருளாதார அம்சமாகக் கொண்ட இந்த நாட்டில் தற்போது ஐஸ்க்ரீம் தயாரிக்கத் தேவையான பால் ,சர்க்கரை எனப் பொருள்களுக்கு ஏகத்தட்டுப்பாடு.

கவலையைப் பின்தள்ளி ஐஸ்க்ரீமைப்பற்றிய சில ஜில் தகவல்களைப்பார்ப்போம்.

சில ஐஸ்க்ரீம்களில் முட்டைச் சேர்க்கப்படுகிறது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அட, முட்டைதான் இப்போது வெஜிடேரியன் முட்டையாக வருகிறதே என்று சமாளித்தாலும்  அக்மார்க் நான்வெஜிடேரியன் ஐஸ்க்ரீம் வெனிசூலாவின் இந்தக் கார்னாட்டோ பார்லரின் அதி ருசிகரமான பண்டமாக இருந்திருக்கிறது. இங்கே கிடைக்கப்பெற்ற சில வினோதவகைகள்...பூண்டு, அவகேடோ, ஆக்டபஸ், மீட்.... இவை ஐஸ்க்ரீமா என்று வாயைப்பிளக்கப்போய், ஒரு ஆக்டபஸ்லாகவமாக உள் நுழையும் அபாயமிருப்பதால்.... வேண்டாம் வாயைத்திறக்க வேண்டாம்.

ஆனால் வியப்பான இந்த ஐஸ்க்ரீம்களை வியக்காமல் முதல் முதல் கண்டுபிடித்தவர் யார் என்பதைச் சரியாக சொல்லிவிடலாம். வேறு யார், சீனர்கள் தான். யோசித்துப் பார்த்தால், எம்.ஆர்.ராதா ஒரு படத்தில் சொன்னது போல் இந்தியாவில் இட்லி சுடுவதற்கான ஆவியைக் கண்டுபிடித்துக்கொண்டிருந்த வேளையில், சீனாவில் மற்ற

கண்டுபிடிப்புக்களுடன் இந்த ஐஸ்க்ரீமையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். இது சுமார் 200 பிசியில் என்று கருதப்படுகிறது. சீனாவின் ராஜா, டாங்க் ஆப் ஷாங்க் இதற்காகவே 99 ஆட்கள் கொண்ட குழு ஒன்றை ஏற்படுத்தி, இவர்களை மலையிலிருந்து ஐஸ் கட்டிகளைப் பிளந்து எடுத்துவரச்செய்து, அதில் மாவு, பச்சைக்கற்பூரம், மற்றும் பசும்பால் கலந்து கலவையாகச்செய்து முதல் முதல் இந்த அபார வஸ்துவைச் செய்தாராம்.

இதனால் தான், முதல் முதலில் ஐஸ்க்ரீம் கட்டியாக இல்லாமல் ஓர் குளிர் பானம் போல் தான் இருந்திருக்கிறது.

 

 

மார்கோபோலோ இத்தாலி சென்றபோதுதான் அந்த நாட்டிற்கு இதை அறிமுகம் செய்து வைத்தாராம். அப்போது ஐஸ்எப்படிச் செய்வது என்பது யாருக்கும் தெரியாது.ஆகவே மலைகளில் விழுந்து கிடக்கும் பனிப்பாறைகளைப் பெயர்த்துவந்து அதைப்பொடி செய்து, ஒரு சர்பத் போலத்தான் தயாரித்திருக்கிறார்கள்.

1533 யில் காதிரீன் டீ மென்ஸி எனும் ராணி இரண்டாவது ஹென்றியை மணந்து இந்த சர்பத் வகை ஐஸ்க்ரீமை பிரான்ஸ் நாட்டிற்கு அறிமுகம் செய்தாராம். பேரரசர் அலெக்சாண்டருக்கும் தேன் கலந்த இந்த ஐஸ்க்ரீம்கள் மிகவும் பிடிக்குமாம்.

இந்த ஐஸ்க்ரீம்கள் பொதுமக்களுக்கு கிடைக்க ஆரம்பித்தது பதினேழாம் நூற்றாண்டில் தான். பிரான்ஸ் நாட்டின் கஃபேப்ரோகோப் எனும் இடத்தில் தான். அப்போதும் கூட இதன் விலை ஏழு குதிரை விலையாக உயர்ந்து நின்றதால், மிகவும் வசதி பெற்றவர்களின் ஏகபோக தின்பண்டமாகவே இருந்தது. அமெரிக்காவின் பிரெசிடெண்ட் திரு ஜார்ஜ் வாஷிங்டனுக்கு மிகவும் பிடித்திருந்ததால், தினமும் 200$ (இந்தக்காலத்தில் 3500$) க்கு வாங்கிச் சாப்பிடுவாராம். மறக்காமல் இதை மனதில் வைக்கவும்.

தற்போது உள்ள அரசியல் சூழலில் அவ்வப்போது எடுத்துவிட செளகர்யமாக இருக்கும்.

ஆனால் அப்போதிருந்த ஒரே சிக்கல், குளிர்பதன வசதி இல்லாததால் நாம் தி நகர் தெரு ஓர கடைகளில் வாங்கிச் சாப்பிடும் ஐஸ்க்ரீம் போல் உருகி வழிந்து பாடாய்ப்படுத்தித்தான் இருந்திருக்கிறது. அதனால் 1800 வரையில், சில முக்கியமான தருணங்களில் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்தது. இந்த ஐஸ்க்ரீம்களின் திடத்தன்மையைக்காக்க, மலைகளிலிருந்து ஐஸ்கட்டிகள் பாளம் பாளமாக வெட்டிவந்து, இதற்காகவே செய்யப்பட்ட செங்கல் வீடுகளில் வைக்கோல் நிரப்பப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும். ஐஸ்க்ரீம் செய்யும் முறைக்கு பாட் ஃப்ரீசர் என்று பெயர். உப்பும் ஐஸ்கட்டிகளும் போடப்பட்ட பக்கெட்டுகளில் பால் ஏட்டை வைத்து உறைந்தபின் அதுவே ஐஸ்க்ரீம்.

பென்சில்வேனியா நகரத்தில் 1851 ல் ஜேகப் பசில் என்பவரால் முதல் முதல் ஐஸ்க்ரீம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டது.

1870-ல் ஜெர்மானியர் கார்ல் வான்லிண்டே என்பவரால் குளிர்பதனப்பெட்டி கண்டு பிடிக்கப்பட்டு. .இதற்குப்பிறகு ஐஸ்க்ரீம் நமக்கு எவ்வளவு நெருக்கமாகவந்துள்ளது என்பதை நான் சொல்லத்தேவை இல்லை.

இதற்குப்பின் வரும் வெவ்வேறு காலகட்டத்தில் இதற்கான கோன், திடத்தன்மையைக்குறைத்து உள்காற்றை இரட்டிப்புசெய்யப்பட்ட சாஃப்ட் ஐஸ்க்ரீம் ,சேமியா தூவி அலங்கரிக்கப்பட்ட பலூடா.. .என்று ஆச்சர்யங்கள் அசத்தலாக வந்துகொண்டே இருந்தன.

ஒன்றை யோசித்துப்பார்த்தால் , மருந்துக்குக்கூடக் குளிர் இல்லாத இந்திய தேசங்களில் இந்த ஐஸ்க்ரீம் எப்படிச் செய்யப்பட்டது? முதல் முதலில் கல்கத்தாவில் மக்னோலியா என்ற உணவகத்தில் தான் செய்யப்பட்டது.

 

 

1956-களில்தான் இதன் தயாரிப்புக்குத் தேவையான இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, தில்லியில் க்வாலிடி ஐஸ்க்ரீம்மின் தயாரிப்பு தொடங்கியது. அது வரையில் இங்கு ஐஸ்க்ரீம் என்றால் ஒரு குச்சியில் ஐஸ் கட்டி சொருகப்பட்டு அதில் ஏதாவது ஒருவகை சிரப் ஊற்றப்பட்டுக் கொடுக்கப்பட்டது. ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன் நீங்கள் கடைகளில் பானம் வாங்கினால், இப்போது போல் ஐஸ் தேவை கேட்கப்படும்.

ஆனால் ஆம் என்று சொல்லிற்கு அதிகமாக ஐம்பது காசுகள் சேர்க்கப்படும். காரணம், ஐஸ் விலை கொடுத்து வாங்கப்பட்டது.

சென்னையில் 1842-ல் கட்டப்பட்ட விவேகானந்தர் இல்லத்திற்கு அப்போது வைக்கப்பட்டப் பெயர் ஐஸ் ஹவுஸ். காரணம் இங்குதான் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் ஐஸ் லண்டனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இந்த வியாபாரம் ஜிங் ஃப்ரெட்ரிக் ட்யூடர் என்பவரால் செய்யப்பட்டது. ஆனால் 1880 களில் பெரும் நஷ்டத்தால் மூடப்பட்டது.

ஆக இனி சாப்பிடும்போது சில்லென்று தொண்டையில் இறங்கும் ஐஸ்க்ரீமுடன் , எவ்வளவு சிரமப்பட்டிருக்கிறோம் இந்த பதார்தத்தைக் கண்களால் பார்க்க என்பதை நினைவில் கொண்டால், ஜிஸ்டி யினால் ஏற்பட்ட ஐஸ்க்ரீம் விலை ஏற்றம் மனதில் படாமல் போகலாம்.

லதா ரகுநாதன்

lrassociates@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x