Last Updated : 17 Apr, 2018 09:10 AM

 

Published : 17 Apr 2018 09:10 AM
Last Updated : 17 Apr 2018 09:10 AM

காற்றில் கரையாத நினைவுகள் 8: மிதிப்பதும், மதிப்பதும்!

நா

ங்கள் பள்ளியில் படிக்கும்போது மிதிவண்டியே அலங்காரத் தேர். வீட்டுக்கொரு மிதிவண்டி அவசியம். இன்று கார்களில் ‘நானோ’ தொடங்கி ‘பென்ஸ்’ வரை தரவரிசை இருப்பதைப் போல அன்று பணக்கார மிதிவண்டிகளும் இருந்தன. கொஞ்சம் முடிந்தவர்கள் உராய்வில் எரியும் (டைனமோ) விளக்கு வைத்த சைக்கிள் வைத்திருப்பார்கள். எளியவர்கள் சைக்கிளில் மண்ணெண்ணெய் விளக்கை மாட்டியிருப்பார்கள். சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு அந்த விளக்கு காற்றில் அணையாமல் இருக்கும்.

அன்று எல்லோருக்கும் நடையே பிரதானம். சிலருக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது. அவர்கள் கிராமத்தில் இருந்து நடந்தே வருவார்கள். இன்று இருக்கின்ற வாகன வசதிகள் அப்போது அறவே கிடையாது. அன்று நடை போக்குவரத்து, இன்று உடற்பயிற்சி.

இரண்டு சைக்கிள்கள் இருக்கும் வீடே வசதியானது. சைக்கிளில் காற்றடிக்க பம்ப் இருக்கும் வீடே பணக்கார வீடு. பள்ளிக்கு முன்னால் இருக்கும் சைக்கிள் கடைகளில் மாணவர்களைக் கவர்வதற்காக அவர்களே காற்றடித்துக் கொண்டால் இலவசம் என்கிற சலுகை வழங்கியிருப்பார்கள்.

பெண்கள் மிதிவண்டி ஓட்டுவது அன்றைய நாட்களில் அபூர்வமாகவே இருந்தது. சிவகாமி டீச்சர் எங்கள் தொடக்கப் பள்ளிக்கு சைக்கிளில் வந்து புரட்சி செய்தார். எல்லோரும் அவரை ‘சைக்கிள் டீச்சர்’ என்றே அழைப்பார்கள். மாணவர்களுக்கு அவரிடம் கொஞ் சம் பயம் ஜாஸ்தி.

அன்று மிதிவண்டி ஓட்டப் பழகுவது பெரிய சாதனை. முதலில் சின்ன சைக்கிளை வாடகைக்கு எடுக்க வேண்டும். ஒருசில கடைகளில்தான் சின்ன சைக் கிள் இருக்கும். சக நண்பர்கள் நான்கு புறமும் பிடிக்க, ஓட்டத் தொடங்க வேண்டும். அவர்கள் ஒரு பக்கம் பிடித்தால், சைக்கிள் மறுபக்கம் சாயும். கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை வந்து பெடலை மிதிக்கத் தொடங்கினால், நமக்கு ஓட்ட வந்துவிட்டது என்ற நம்பிக்கையில், நண்பர்கள் பிடித்திருக்கும் கையை எடுத்துவிடுவார்கள். அவர்கள் சைக்கிளைப் பிடிக்கவில்லை என்று தெரிந்துவிட்டால் போதும்.. அதுவரை சுமுகமாக போய்க்கொண்டிருந்த வண்டி தாறுமாறாக ஓடும்.

இடுப்பை வளைக்காதே

சைக்கிள் ஓட்டக் கற்றுத் தருபவர்கள் ‘இடுப்பை வளைக்காதே’ என செல்லமாக தலையில் குட்டுவார்கள். பலமுறை அடிபட்டு, கால் கை காயங்களை வீட்டுக்குத் தெரியாமல் மறைத்து, ஓட்டக் கற்றதும், உலகத்தை வென்ற மகிழ்ச்சி ஏற்படும்.

ஆரம்பத்தில் குரங்குப் பெடலில்தான் சைக்கிள் ஓட்டத் தொடங்குவோம். ‘குரங்குப் பெடல்’ என்கிற அந்தப் பெயர் எப்படி வந்தது என்பது இப்போது வரை சத்தியமாகத் தெரியவில்லை.

பிறகு, குறுக்குக் கம்பி மீது வளைந்து நெளிந்து ஓட்டுவோம். கால் எட்டாதது தான் காரணம். ஒருவழியாக எட்டும் போது நமக்கும் மீசை முளைத்த மகிழ்ச்சி. சைக்கிள் ஓட்டத் தெரியும் வரை அன்று சமூகம் யாரையும் ஆணாக அங்கீகரித்ததில்லை.

டபுள்ஸ் செல்ல தடை

சைக்கிள் ஓட்டக் கற்றதும், அதுவே பல வாகனங்களாக தோன்றத் தொடங்கும். ‘ஷோலே’ படம் வந்தபோது மிதிவண்டியையே குதிரையாக நினைத்து சவாரி செய்வோம். என்னதான் ஓட்டினாலும் அப்பாவின் சைக்கிள் அவருக்கு மட்டுமே. அதை லேசில் நம்மிடம் தரமாட்டார். அதற்கு காற்றடிப்பதும், ஞாயிற்றுக்கிழமைகளில் அதை துடைத்து வைப்பதும் மகன்களின் வேலை. வாராவாரம் முறைவைத்து துடைப்போம். அப்பா நம்மை நம்பி சைக்கிள் கொடுப்பது, ஆண் குழந்தைகளுக்கு தாவணி போடும் சடங்குபோல.

சைக்கிளில் இருவர் (டபுள்ஸ்) செல்ல தடை இருந்த காலம் ஒன்று உண்டு. அப்படிப் போனதற்காக போலீஸ்காரர்களிடம் பிடிபட்டவர்கள் உண்டு. டபுள்ஸ் போய் மாட்டிக்கொண்டால், சக்கரங்களில் இருக்கிற காற் றைப் பிடுங்கிவிடுவதுதான் அதற்கு தண்டனை. எதிரே வருகிற சில நல்லெண்ணம் கொண்டவர்கள் ‘போலீஸ் பிடிக்குது’ என்று எச்சரிக்கை தர, அங்கு நாங்கள் இறங்கி நடந்து தப்பித்தது உண்டு.

ஒரே ஒரு போலீஸ்காரர் இருந்தால் போதும், ஒட்டுமொத்த திருவிழாவும் ஊரில் எந்தச் சத்தமும் இன்றி நடந்தேறும். அன்று மக்களிடம் அந்த அளவு கட்டுப்பாடு இருந்தது.

‘சைக்கிளின் பின்னால் மூட்டை வைக்க அனுமதிக்கப்படுகிறது. கொஞ்சம் சைக்கிள் அசைந்தால் மனிதனால் குதித்துவிட முடியும், மூட்டையால் முடியுமா?’ என்ற யோசனை அரசுக்கு வர, சைக்கிளில் டபுள்ஸ் போவது அனுமதிக்கப்பட்டது. அதற்குப் பிறகு மூன்று பேர்கூட போய் விதியை மீறத் தொடங்கினார்கள். எப்போதுமே, விதியை மீறுவதில் மக்களுக்கு அலாதி சுகம்.

நாங்கள் வேளாண் கல்லூரியில் படித்தபோது, பரந்த அந்த வளாகத்துக்குள் மாணவர்களும், மாணவிகளும் மிதிவண்டிகளில் சிட்டுக்களைப் போல சிறகடிப்பார்கள். அங்கு அனைத்து மாணவர்களுக்கும் மிதிவண்டி அவசியம். அப்போதுதான் காலை 7 மணிக்கு காக்கி சீருடையில் மண்வெட்டியோடு செய்முறை வகுப்புக்குச் சென்று, நெல் வயலில் நிற்க முடியும். 10 மணிக்குத் திரும்பி வந்து குளித்து முடித்து, தேநீர் பருகி அடுத்த வகுப்புக்கு ஆஜராக முடியும். மாலை வேளைகளில் தாவரப் பூங்காவுக்குப் பயணித்து, பட்டாம்பூச்சிகளை வலைவீசிப் பிடித்துவர முடியும். இரவு தேநீர் விடுதிக்குச் சென்று சூடாக தேநீர் அருந்திவிட்டு வந்து, நள்ளிரவு வரை படிக்க முடியும். பல மாணவிகள் அங்கு வந்த பிறகு, ஒரே மாதத்துக்குள் சைக்கிள் விடுவதற்கு கற்றுக்கொள்வார்கள். எதுவும் தேவை என்கிறபோது, மனசுக்குள் வைராக்கியம் நுழைந்து விடுகிறது.

கோவையில் அப்போது திரையரங்குகளில் ‘சைக்கிள் டிக்கெட்’ என்கிற ஒன்று உண்டு. குறிப்பிட்ட எண்ணிக்கையில் நுழைவுச் சீட்டுகளை ஒதுக்கி, சைக்கிள் கொண்டு வருகிறவர்களுக்கு வரிசை யாக விநியோகிப்பார்கள். நாங்கள் முதல் காட்சி தொடங்கும்போதே சைக்கிளை வரிசையில் நிறுத்திவிடுவோம். இரவுக் காட்சிக்கு எளிதில் டிக்கெட் கிடைத்துவிடும். பூட்டிய கேட்டுகளை தாண்டிக் குதித்து தயாராக ஒருவர் நிற்க, மற்றவர் சைக்கிளை தம் பிடித்துத் தூக்கிக் கொடுப்பதும் உண்டு.

இப்படி முதல் நாளே படத்தைப் பார்த்துவிட்டு, அடுத்த நாள் கல்லூரி முழுவதும் தாங்களே அதை இயக்கியது போல சில நண்பர்கள் தம்பட்டம் அடிப்பார்கள்.

இன்று மழலைப் பள்ளிக்குச் சேரும் முன்பே குழந்தைகள் மிதிவண்டி ஓட்டக் கற்றுக்கொண்டு விடுகிறார்கள். காரணம், இரு பக்கமும் சாய்ந்தாலும் விழாத முட்டுக்கொடுக்கும் வசதி. சில நாட்களில் அவர்களே சமத்தன்மையை அறிந்துகொள்கிறார்கள். வாகன சமத்தன்மை வாழ்க்கையிலும் வரும்போது தான் உண்மையான வெற்றி சாத்தியமாகும்.

தூரம் முக்கியம் அல்ல

அன்று மோட்டார் சைக்கிள் அபூர்வம். அதில் அதிக ‘புடுபுடு’ சத்தம் வந்தால் அது உயர்ந்த ரகம் என்று எங்களுக்கு நினைப்பு. அப்படி ஒருவர் ஓட்டி வரும்போது பதினெட்டுப் பட்டிக்கும் அந்தச் சத்தம் கேட்கும்.

இன்றோ இளைஞர்கள் பாத்ரூமுக்குக்கூட பைக்கில் போகிறார்கள். அதிக வேகத்தில் பறந்து, முட்டி மோதி, சிலர் மூளைச் சாவில் முடிகிறார்கள். குறைந்த தூரத்துக்கு சைக்கிளில் சென்று அடிபட்டவர்கள் அன்று யாருமே இல்லை. வண்டியிலேயே இருந்தது வேகத்தடை. பெரும்பாலும் தூரங்களை சைக்கிளால் கடந்தவர்களுக்கு அன்றைய நாட்களில் மருத்துவம் தேவைப்படாத உடல்நலம் வாய்த்தது. இன்று இருசக்கர வாகன வரிசையில் சைக்கிளுக்கு இடமில்லை. எரிபொருளோடு ஓடும் வாகனத்துக்கே அந்த முத்திரை.

கார்கள் அன்று அதிசயம். ஊருக்கு ஒன்று இருப்பதே பெரிது. எந்த கார் என்பது முக்கியமில்லை. எதுவாக இருந்தாலும் அந்தஸ்து. இன்று கார்களை நிறுத்தக்கூட இடம் இல்லாத சூழல். தெருக்கள்தோறும் நிரம்பி வழிகிற நெரிசல்.

தூரம் என்பது முக்கியம் அல்ல; நேரம் என்பதே முக்கியம் என்பது மாநகரங்கள் உணர்த்தும் பாடம். அப்படிப் பார்த்தால் இன்னும் சில நாட்களில் ‘கார்களால் கடப்பதைவிட கால்களால் விரைவில் கடந்துவிடுவோம்’ என்கிற காலம் வரும். மிதிவண்டிகளுக்கு மகுடம் மறுபடியும் வரும். அப்போது மிதிக்கத் தொடங்குவதை மதிக்கத் தொடங்குவோம்!

- நினைவுகள் படரும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x