Published : 04 Apr 2018 01:14 PM
Last Updated : 04 Apr 2018 01:14 PM

ரஜினி அரசியல்: 45 -குருஜியின் ஜெயந்தி விழா

‘யார் என்னை மையமாக வைத்து காவிரிப் பிரச்சினையை ஊதிப் பெரிசாக்குறாங்களோ, என் மேல உள்ள பொறாமையினாலும், என் மேல் உள்ள பயத்தினாலும் இதை வச்சு எனக்கெதிராக அரசியல் செய்றாங்களோ, அவங்களை நான் தேர்தல் வரும்போது பார்த்துக்கிறேன். அதுவரைக்கும் என் ரசிகர்கள் பொறுமையா சாந்தமா இருக்கணும்!’ என்று 2002 அக்டோபர் 9-ம் தேதி மீடியாக்களிடம் பேசிய ரஜினி, அதன் பிறகு தொடர்ந்த அரசியல் செயல்பாடுகள்தான் காவிரிக்கான உண்ணாவிரதம், தென்னக நதிகள் இணைப்புக்கான மக்கள் இயக்க அறிவிப்பு போன்றவை. இதில் எல்லாம் ரசிகர்கள் மத்தியிலும், மீடியாக்கள் மத்தியிலும் ரஜினி எதிர்பார்த்ததை விடவும் வரவேற்பு இருந்தது.

அந்த உற்சாகத்துடனே அடுத்த கட்ட அரசியல் நகர்வுக்கான வேலைகளை ரஜினியின் நெருக்கமான நண்பர்கள் வட்டாரம் செய்ய ஆரம்பித்து விட்டது. அதில் ஒன்றாகவே ரஜினி 2004 மக்களவைத் தேர்தலில் கட்சி ஆரம்பித்து போட்டியிட்டால் அவருடைய கட்சிக்கான வெற்றி வாய்ப்பு எப்படியிருக்கும்? என்று குறிப்பிட்ட மீடியா டீம் சர்வே செய்வதாகவும் தகவல்கள் கசிந்தன.

பொதுவாகவே ரஜினி தன் அரசியல் முடிவை தன் மனசாட்சியைக் கேட்டும், மனசாட்சியை வழி நடத்தும் ஆண்டவனைக் கேட்டும் எடுப்பதான கருத்தோட்டமே இருக்கிறது. அதிலும் அவருக்கு அரசியல் என்றால் பயம். கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஆகப்பெரும் அரசியல் புலிகள் இருக்கும்போது, அவர்கள் பல முறை ஆட்சியாண்டதற்கு அடையாளமாக அதிகார வர்க்கத்தின் பெரும் தூண்களாக விளங்கும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்.கள் இருகோஷ்டிகளாக இந்த இருவரின் பக்கம் நிற்கும் போது, தேர்தல் அரசியல் வெற்றியை நிலைநிறுத்தும் தொழிலதிபர்கள் இவர்கள் சார்ந்தே நகரும்போது, நாம் அரசியலில் குதித்தால் என்ன ஆவோம் என்பதை நன்றாக அறிந்தே இருந்தார் என்பதை அவரின் நெருக்கமான நண்பர்கள் உணர்ந்தே இருந்தார்கள்.

இன்னும் ஒரு படி மேலே போய் சோ போன்ற அரசியல் பத்திரிகையில் ஊறித் திளைத்த ஜாம்பவான்கள் அவருக்கு அனுசரணையாக அவர் எதிர்பார்ப்பதற்கும், சமூக, அரசியல் நடைமுறைக்கும் உள்ள வேறுபாட்டை எடுத்துச் சொல்பவர்களாகவும் இருந்துள்ளார்கள். அதற்கு ஓர் உதாரணமாகவே 1996-ல் அரசியல் என்பது ரஜினி மாயைதான் என்ற கண்ணோட்டத்தில் அத்தனை மீடியாக்களும் பொழிப்புரை நிகழ்த்திக் கொண்டிருக்க, சோ மட்டும் தன் துக்ளக் வார இதழ் நடத்திய தேர்தல் சர்வேயுடன், ரஜினி அரசியலுக்கு வந்தால் வெற்றி வாய்ப்பு எப்படி என்பதை தனி சர்வேயாக நடத்தச் சொல்லியிருக்கிறார். அந்தக் கருத்துக்கணிப்பின் விவரங்கள் சர்வே செய்தவர்களுக்கே அதிர்ச்சியை ஊட்டியிருக்கின்றன. அதில் எழுபத்தி ஐந்து சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ரஜினி அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை என்பதுதான் அது. மீதமுள்ள 25 சதவீதமும் இளைஞர்கள். அந்த சர்வேயை சோ தனது பத்திரிகையில் வெளியிடவில்லை. இதை சமீபத்தில் அந்த சர்வேயில் ஈடுபட்ட பத்திரிகையாளர் மணா ரஜினி குறித்த தன் கட்டுரையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இங்கே அது முக்கியமில்லை. என்றாலும் கூட அந்த சர்வே முடிவுகள் யார் கைக்கு போயிருக்கும்? அவர் அதை வைத்து தன் வட்டாரத்தில் எத்தகைய ஆய்வுகள் செய்திருப்பார்? என்ன முடிவு எடுத்திருப்பார் என்றெல்லாம் யோசிக்க வைக்கிறது. ‘ரஜினியா, அரசியலா.. அதெல்லாம் 1996 தேர்தலோட முடிஞ்சு போச்சுய்யா!’ என்று வெற்றிலைச் சீவலை வாயில் மெல்லாத குறையாக சட்டென்று சொல்லும் இன்றைய அரசியல் விமர்சகர்கள் இந்த சர்வே குறித்து எத்தகையதொரு தீர்க்க தரிசனம் கொண்டிருக்கிறார்கள் என்பதையெல்லாம் நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

நான் கேட்பதெல்லாம் 1996 தேர்தலின் போது மட்டும்தான் ரஜினி அரசியலுக்கான சர்வே நடந்ததா? அதற்குப் பிறகு 2001 சட்டப்பேரவைத் தேர்தல், 2004 மக்களவைத் தேர்தல், 2006 சட்டப்பேரவைத் தேர்தல், 2009 மக்களவைத் தேர்தல், 2011 சட்டப்பேரவைத் தேர்தல், 2014 மக்களவைத் தேர்தல், 2016 சட்டப்பேரவைத் தேர்தல் நடந்த சமயங்களில் எல்லாம் ரஜினிக்காக இத்தகைய சர்வேக்கள் நடந்ததா? அப்படி நடக்கவில்லை என்றால் கூட தனக்கான அரசியல் களம், தேர்தல் களம் ஈரம் பாய்ந்து உள்ளதா? விதைப்புக்கான நாள் நெருங்கி விட்டதா என்பதை ரஜினியும், அவருக்கு நெருக்கமான வட்டாரமும் பல்ஸ் பார்க்காமலா இருந்திருக்கும்?

அப்படியானால் 2002 அக்டோபரில் நடத்திய காவிரிக்கான உண்ணாவிரதம், அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த மாதங்களில் தென்னக நதிநீர் இணைப்புக்கான பணிகள் அதையொட்டி தான் ஆரம்பிப்பதாக சொன்ன மக்கள் இயக்கம் போன்றவை ரஜினியை திரைமறைவில் எந்த அளவுக்கு தேர்தல் அரசியலுக்கும் நெருக்கமாக நகர வைத்திருக்கும் என எண்ணிப் பார்க்க வேண்டியதிருக்கிறது.

அது மட்டுமல்ல, இந்த உண்ணாவிரதம் மற்றும் மக்கள் இயக்கத்தின் போது சொன்ன, ‘காவிரியில் எனக்கு எதிராக அரசியல் செய்யும் குறிப்பிட்ட கட்சிக்கு பாடம் கற்பிப்பேன்!’ என சொன்ன அவரின் சொல்லுக்கு அர்த்தம் இருந்துதானே ஆகவேண்டும். அதை முன்வைத்துத்தான் 2004 மக்களவைத் தேர்தலில் ரஜினி அரசியலில் குதிப்பார் என்றே எதிர்பார்த்தனர் ரசிகர்கள்.

அதற்கு ஏற்றாற்போல் ரஜினியின் திரைமறைவு அரசியல் 2002-ம் ஆண்டு டிசம்பரிலேயே நகர்கிறது. இதோ... ரஜினியின் ஆன்மீக குருவான சச்சிதானந்த மகராஜ் சுவாமியின் எண்பத்தி எட்டாவது பிறந்தநாள் விழா. கோவையில் நடைபெற ஏற்பாடாகிறது. அதில் ரஜினி கலந்து கொள்கிறார் என்பதை விட, அதில் அவர் அரசியல் குறித்த முக்கியமான அறிவிப்பை வெளியிட இருக்கிறார் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்து கொள்கிறார்கள் ரசிகர்கள்.

‘காவிரி பிரச்சினைக்கான உண்ணாவிரதத்தின்போது வெளிமாவட்ட ரசிகர்களை சென்னை வரக்கூடாது என்று உத்தரவு போட்டிருந்தார். அதனால் போக முடியவில்லை. சரி, தன் பிறந்தநாளின் போதாவது (12.12.2002) ரசிகர்களை சந்திப்பார். தரிசனம் கொடுப்பார் என்று எதிர்பார்த்தோம். அதுவும் நடக்கவில்லை. இப்போது கோவைக்கு வருகிறார். அதிலும் சச்சிதானந்த மகராஜ் பிறந்தநாளை தானே முன்னின்று நடத்துகிறார் என்றதும் அவர்களுக்கு இருப்புக் கொள்ளவில்லை.

அவரை வரவேற்க, பேனர்கள் கட்ட, சுவர் விளம்பரங்கள் செய்ய என எகிறிக் குதித்தார்கள். அதற்கு எடுத்த எடுப்பிலேயே மன்றத் தலைமையிலிருந்து தடா. ரஜினி ஆன்மீகமா, அரசியலா என்பதை முடிவு செய்யவில்லை. நீங்கள் அதை அரசியல்படுத்துவதையும் விரும்பவில்லை. எந்த இடத்திலும் அங்கே அரசியல் வந்து விடக்கூடாது!’ என்றே உத்தரவுகள் பறந்தன.

அதனால் கையது கட்டி, வாயது பொத்தி ரசிகர்கள் சும்மா இருக்க, கோவையில் உள்ள சச்சிதானந்தா மகராஜ் டிரஸ்ட்டை சேர்ந்தவர்கள் இதையொட்டி ரெசிடென்சி ஓட்டலில் திடீர் பத்திரிகையாளர் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்தார்கள். சுவாமி சச்சிதானந்தா தன் ஜெயந்தி விழாவை வழக்கமாக தான் பிறந்த கோவையிலும், அடுத்த வருடம் அமெரிக்காவிலும் நடத்துவது வழக்கம். கோவையில் விழா நடக்கும்போது அமெரிக்காவிலிருந்து கோவைக்கு வந்து சுவாமிஜி விழாவில் பங்கேற்பார். அந்த சமயம் ரஜினி வரமாட்டார். வருவதாகச் சொன்னாலும் வேண்டாமென்று சொல்லி விடுவார் சுவாமிஜி. ஏனென்றால் ரஜினியைப் பார்க்கக் கூட்டம் கூடி விடும். ஜெயந்தி விழா ரஜினி விழாவாக மாறி விடும் என்பதால்தான் இந்த ஏற்பாடு.

அதுவே சச்சிதானந்தா அமெரிக்காவில் பிறந்தநாளைக் கொண்டாடும் போதெல்லாம் அங்கே சென்று விடுவார் ரஜினி. அந்த வகையில் 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தன் பிறந்தநாளைக் கொண்டாடினார் சச்சிதானந்தா. ரஜினியும் கலந்து கொண்டிருந்தார். 2002 ஆம் வருடம் தன் பிறந்தநாளுக்கு நான்கு மாதங்கள் இருக்கும்போதே சமாதியாகி விட்டார். எனவே அவரது ஜெயந்தி விழாவை அமெரிக்காவில் நடத்தலாமா? அல்லது அவர் வழக்க முறைப்படி அவரின் பிறந்த மண்ணான கோவையிலேயே நடத்தலாமா என்று ரொம்பவுமே குழம்பிப் போயிருந்திருக்கிறார்கள் சச்சிதானந்தா டிரஸ்ட் நிர்வாகிகள். இந்த நிலையில்தான் இது சம்பந்தமாக ரஜினியைச் சந்தித்தனர் டிரஸ்ட்டை சேர்ந்தவர்கள்.

‘இதிலென்ன உங்களுக்குத் தயக்கம்? குருஜி எப்படி தன் ஜெயந்தி விழாவைக் கொண்டாடி வருகிறாரோ, அப்படியே செய்யுங்கள். போன வருடம் அமெரிக்காவில் கொண்டாடினார் என்றால் இந்த முறை கோவையில் கொண்டாடுவதுதானே முறை? கோவையிலேயே அதற்கு ஏற்பாடு செய்யுங்கள். குருஜியின் போதனைகள், தத்துவங்கள் அமெரிக்காவில் பரவியதை விட, அதிகமாக நம் நாட்டில்தான் பரவ வேண்டும். அதற்கு நானே தூணாக நிற்கிறேன். நானே வந்து குருஜி சொன்ன வாக்குகளை பிரகடனப்படுத்துகிறேன்!’என்று ரொம்ப யதார்த்தமாக, அழுத்தமாகச் சொல்லயிருக்கிறார் ரஜினி. அதன் எதிரொலியாகவே இந்த விழாவுக்கான தடபுடல் ஏற்பாடுகளை டிரட் சார்பாக செய்ய ஆரம்பித்திருந்தனர் அதன் நிர்வாகிகள்.

- பேசித் தெளிவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x