Published : 16 Mar 2024 06:05 PM
Last Updated : 16 Mar 2024 06:05 PM

செங்கோட்டை முழக்கங்கள் 68 - ‘புதிய காற்று... புதிய வேகம்’ | 2014

பிரதமர் மோடி

இந்தியா - ஒரு வளர்ந்து வரும் நாடு. உண்மை ஆனால் இன்னும் எத்தனை காலம்தான் வளரும் நிலையிலேயே தொடர்வது? எப்போது நாம் வளர்ந்த நாடு ஆவது? இந்தக் கேள்வி எல்லாருக்கும் எழலாம். ஒரு தலைவருக்கு மட்டும் இதற்கு உடனடியாக நேர்மறைத் தீர்வு காண வேண்டும் என்கிற தீவிரமான எண்ணம் தோன்றியது. அதே வேகத்தில் அதை செயல்படுத்தவும் தொடங்கினார். உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிரச் செய்ய பல பிரதமர்கள் உண்மையில் பாடுபட்டனர்; வெற்றியும் கண்டனர். தலை நிமிரச் செய்வது மட்டுமல்ல; உலகத்துக்குத் தலைமை தாங்கும் திறனும் தகுதியும் பொறுப்பும் இந்தியாவுக்கு உள்ளது என்பதை நிரூபித்துக் காட்டியவர் - நரேந்திர மோடி!

பாரத தேசியம் - மூச்சு; 'வசுதைவ குடும்பகம்' உலகம் முழுதும் ஒரு குடும்பம் - கொள்கை. தேசியத்தை சர்வதேசியத்துடன் இணைத்த நவீன உலகத்தின் நவீன தலைவராய் உருவெடுத்த பிரதமர் நரேந்திர மோடி, 2014 ஆகஸ்ட் 15 அன்று டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய முதல் உரை இதோ:

அன்பார்ந்த நாட்டு மக்களே, இன்று இந்த நாட்டிலுள்ள, வெளிநாட்டிலுள்ள எல்லா இந்தியர்களும் சுதந்திர விழாவை கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த புனிதமான சுதந்திரத் திருநாளில், அனைத்து அன்பான குடிமக்களுக்கும் இந்தியாவின் பிரதான சேவகனின் நல்வாழ்த்துகள். உங்கள் நடுவே நான் பிரதம மந்திரியாக அல்ல பிரதம சேவகனாக நிற்கிறேன். விடுதலைப் போராட்டம் பல ஆண்டுகள் நடைபெற்றது. பல தலைமுறையினர் தமது இன்னுயிரை ஈந்தார்கள். எண்ணற்ற மக்கள் தமது இளமையை, வாழ்க்கையைத் தியாகம் செய்தனர். நமது வாழ்நாள் முழுவதும் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் கழித்தனர். நாட்டின் சுதந்திரத்துக்காக இன்னுயிரை ஈந்த அனைவருக்கும் எனது வணக்கம், வாழ்த்துகள், அஞ்சலி.

இந்திய சுதந்திரத்தின் இந்தப் புனிதமான தருணத்தில் இந்த கோடிக்கணக்கான குடிமக்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன். இந்திய விடுதலைக்கான போராட்டத்தில் தமது இன்னுயிரை இழந்த தியாகிகள் அனைவரையும் நினைவு கூர்கிறேன். இந்தச் சுதந்திர தினம், நமது நாட்டின் பிற்படுத்தப்பட்ட சுரண்டப்பட்ட ஒடுக்கப்பட்ட தலித்துகள் மற்றும் ஏழை மக்களின் நல்வாழ்வுக்காக இந்திய தாயின் நல்வாழ்வுக்காக உழைப்பதற்கு உளமார உறுதி எடுத்துக் கொள்வதற்கான திருவிழாவாகும்.

எனது அன்பார்ந்த நாட்டு மக்களே, தேசத் திருவிழா என்பது தேசத்தின் குணநலனை சுத்திகரிக்கிற மறுகட்டமைக்கிற தருணமாகும். இந்த தேசியத் திருவிழா, நமது குணநலனை மேலும் சுத்திகரிக்க தேசத்துக்கு நம்மை அர்ப்பணித்துக் கொள்ள நமது ஒவ்வொரு செயலையும் தேசத்தின் நலனுடன் இணைத்துக்கொள்வதில் நம்மைத் தீர்மானித்துக் கொள்ள உத்வேகம் தருகிறது. அப்போதுதான் இந்த விடுதலை திருவிழா, இந்தியாவை மேலும் புதிய உயரங்களுக்கு இட்டுச் செல்லும் உத்வேகத் திருவிழாவாக இருக்கும்.

எனது அன்பார்ந்த நாட்டு மக்களே, இந்த தேசம், அரசியல் தலைவர்களாலோ ஆட்சியாளர்களாலோ அரசுகளாலோ கட்டப்பட்டதல்ல. இந்த தேசம் நமது விவசாயிகள் தொழிலாளர்கள் தாய்மார்கள், சகோதரிகள் இளைஞர்களால் கட்டப்பட்டு உள்ளது. (This nation has neither been built by political leaders nor by rulers nor by governments. This nation has been built by our farmers, our workers, our mothers and sisters, our youth.) தலைமுறை தலைமுறையாக நமது முனிவர்கள், துறவிகள், ஞானிகள், ஆசிரியர்கள், விஞ்ஞானிகள் மற்றும் சமூகப்பணியாளர்களின் கடும் முயற்சி, கடும் உழைப்பின் பலனாக இன்று நாடு இந்த நிலையை எட்டியுள்ளது. தங்களது வாழ்நாள் முழுதும் தேசத்துக்காக உழைத்த இந்த மகத்தான மனிதர்கள், இந்த மகத்தான தலைமுறைகள் - நமது ஆழ்ந்த மரியாதைக்கு முற்றிலும் தகுதியானவர்கள். ஒரு சிறிய நகரத்தின் வறிய குடும்பத்தில் இருந்து ஒருவன் செங்கோட்டைக் கொத்தளத்தில் இந்திய தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தும் வாய்ப்பு பெற்று இருக்கிறான். இதுதான் இந்திய சாசனத்தின் அழகு; அதன் திறன் இதனை சாத்தியமாக்கி இருக்கிறது. நமது சாசனத்தை வடிவமைத்தவர்களிடம் இருந்து நாம் பெற்ற விலைமதிப்பற்ற மரபுச் சொத்து இது.

சகோதரர்களே சகோதரிகளே, சுதந்திரத்துக்குப் பிறகு நாம் இந்த இடத்தை இன்று அடைந்திருக்கிறோம் என்றால் அதற்கு, எல்லாப் பிரதமர்கள், எல்லா அரசுகள், எல்லா மாநில அரசுகளின் பங்களிப்பே காரணம். இதற்கு முன்வந்த எல்லா அரசுகளுக்கும், இன்றைய இந்தியாவை இந்த உயரத்துக்கு இட்டுச் செல்லப் பாடுபட்ட, நாட்டுக்குப் பெருமை சேர்த்த முன்னாள் பிரதமர்கள் அனைவருக்கும் எனது மரியாதையை நன்றி உணர்வைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நாடு தொன்மையான கலாச்சார பாரம்பரியம் எனும் அடித்தளத்தின் மீது கட்டப்பட்டு இருக்கிறது. நமது பணி கலாசாரம் குறித்து வேதகாலத்தில் நமக்கு சொல்லப்பட்டு நாம் கற்றுக் கொண்டு, மனதில் இருத்திக் கொண்ட ஒரே மந்திரம்: "Sangachchhdhvam Samvadadhvamsam wo manasijdanalaam". நாம் சேர்ந்து நடக்கிறோம், சேர்ந்து நகர்கிறோம் (முன்னேறுகிறோம்) சேர்ந்து உறுதி கொள்கிறோம், நாம் அனைவரும் சேர்ந்து இந்த நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்கிறோம். இந்த அடிப்படை மந்திரத்தை உள்வாங்கிக் கொண்டு, நம் மக்கள் 125 கோடி பேரும் இந்த நாட்டை முன்னேற்றி வருகின்றனர்.

நேற்றுதான் புதிய அரசின் முதல் நாடாளுமன்றக் கூட்டம் நிறைவடைந்தது. நாடாளுமன்ற கூட்டம் நமது சிந்தனையைப் பிரதிபலிக்கிறது, நமது விருப்பங்களின் பிரதிபலிப்பு இது என இன்று நான் பெருமையுடன் கூற முடியும். பெரும்பான்மை பலத்தால் (மட்டுமே) முன்னேறுவதை நாம் ஆதரிக்கவில்லை; பெரும்பான்மை என்கிற குணத்தைக் கொண்டு முன்னேறுவதில் நமக்கு ஆர்வம் இல்லை. வலுவான கருத்தொற்றுமை அடிப்படையில் (மட்டுமே) முன்னேற விரும்புகிறோம். ("We are not for moving forward on the basis of majority, we are not interested to move forward by virtue of majority. We want to move ahead on the basis of strong consensus.")

"Sangachchadhwam" நாடாளுமன்றக் கூட்டம் முழுதையும் நாடு கண்டு இருக்கிறது. எதிர்தரப்பு மற்றும் எல்லா கட்சிகளோடும் தோளோடு தோள் சேர்த்து பணியாற்றுவதில் முனெப்போதும் இல்லாத வெற்றியை சாதித்து இருக்கிறோம். இதற்கான பெருமை பிரதமரை மட்டுமன்று, அரசு தரப்புக்கு மட்டுமல்ல; இதற்கான பெருமை எல்லா எதிர்க்கட்சித் தலைவர்களையும் எல்லா எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் சேரும். செங்கோட்டைக் கொத்தளத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரைக்கும், எல்லா அரசியல் கட்சிகளுக்கும் எனது வணக்கம். அவர்களின் வலுவான ஆதரவின் காரணமாக நாட்டை முன்னோக்கி இட்டுச் செல்லும் முக்கிய முடிவுகள் சிலவற்றை நம்மால் எடுக்க முடிந்தது. நேற்று நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நிறைவடைந்தது.

சகோதரர்களே சகோதரிகளே, நான் டெல்லியைச் சேர்ந்தவன் இல்லை. நான் டெல்லிக்கு வெளியாள். இந்த இடத்தின் நிர்வாகம், (அது) செயல்படும் விதம் குறித்து எனக்கு கருத்து (அனுபவம்) எதுவும் இல்லை. இந்த இடத்தின் செல்வாக்கு மிக்க வர்க்கத்திலிருந்து நான் தனிமைப்பட்டு இருக்கிறேன். ஆனால் கடந்த இரண்டு மாதங்களில் ஒரு வெளிநபராக, (இது குறித்த) ஓர் உள்நபர் பார்வை கிடைத்தது. வியந்து போனேன். இது (செங்கோட்டை உரை) அரசியல் தளம் அல்ல; தேசிய கொள்கைக்கான தளம். ஆகவே இங்கு நான் கூறும் கருத்துகளை அரசியல் கோணத்தில் மதிப்பிடக்கூடாது. நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன் - இந்த நாட்டை இந்த அளவுக்கு (முன்னேற்றி) கொண்டு வந்துள்ள முன்னாள் பிரதமர்கள் எல்லாருக்கும் மற்றும் முந்திய அரசுகள் அனைத்துக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன். நான் வேறு ஒன்று சொல்ல இருக்கிறேன்; இதனை அரசியல் பார்வை கொண்டு நோக்க வேண்டாம்.

நான் டெல்லிக்கு வந்து உள்நபர் பார்வை செலுத்திய போது, அது எவ்வாறு இருந்தது என்பதை உணர்ந்தேன்; அதனைக் கண்டு வியப்பு அடைந்தேன். ஒரே சமயத்தில் ஒரு பிரதான அரசாங்கத்தின் உள்ளே தனித்தனியே பல டஜன் அரசுகள் இயங்குவது போல் தோன்றியது. ஒவ்வொருவருக்கும் அவருக்கென்று ஒரு தனித்தளம் இருந்தது போல் தோன்றியது. இவைகளுக்கு உள்ளே ஒற்றுமையின்மை, மோதல்போக்கு இருந்ததை கவனித்தேன். ஒரு துறை இன்னொரு துறைக்கு எதிராக மோதியது; ஒரே அரசு இரண்டு துறைகள் எதிரெதிர் சண்டையிட்டு உச்ச நீதிமன்றத்தை அணுகினார்கள்!

ஒரே தேசத்தின் மக்களிடையே இந்த ஒற்றுமையின்மை மோதல்! எவ்வாறு நம் நாட்டை முன்னேற்றிச் செல்ல முடியும்? அதனால்தான் இந்த சுவர்களை இடித்துத் தரைமட்டமாக்கும் முயற்சிகளைத் தொடங்கினேன்; ஓர் அரசாங்கத்தை உருவாக்கும் முயற்சிகளைத் தொடங்கினேன்; ஓர் ஒன்று சேர்க்கப்பட்ட அமைப்பு அல்ல; ஓர் இயல்பான அமைப்பு; ஒரே இலக்கு ஒரே சிந்தனை ஒரே திசை ஒரே சக்தி கொண்ட ஒன்றுபட்ட முழுமையான அமைப்பு. தேசத்தை ஒரே இலக்கு நோக்கி விட்டு செல்ல தீர்மானம் கொள்வோம். (It seemed as if dozens of separate governments were running at the same time in one main government.It appeared that everyone has his own fiefdom. I could observe disunity and conflict among them. One department is taking on the other department and taking on to the extent that two departments of the same government are fighting against each other by approaching Supreme Court. This disunity, this conflict among people of the same country! How come we can take the country forward? Snd that is why I have started making efforts for razing these walls; I have started making efforts at making the Government, not an assembled entity, a harmonious whole with one aim, one mind, one direction, one energy. Let's resolve to steer the country to one destination.)

ஒரே திசையை நோக்கி நகர்வதற்கான சக்தி நம்மில் இருக்கிறது. ஒருசில நாட்களுக்கு முன்பு... இப்போதெல்லாம் செய்தித்தாள்களில், மோடியின் அரசு வந்துவிட்டது அதிகாரிகள் எல்லாம் குறிப்பிட்ட நேரத்துக்கு அலுவலகம் வருகிறார்கள் குறிப்பிட்ட நேரத்தில் அலுவலகங்கள் திறக்கப்படுகின்றன அங்கே எல்லாரும் குறிப்பிட்ட நேரத்துக்கு வந்து விடுகிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. இந்தியாவின் தேசிய செய்தித்தாள்கள், தொலைக்காட்சி ஊடகங்கள் இந்த செய்தியை பிரதானமாகக் கொண்டு சென்றதை கவனித்தேன். அனைத்தும் குறித்த நேரத்தில் நடைபெறுவதில், தூய்மைப் பணிக்கு உரிய கவனம் தரப்படுவதில் அரசின் தலைமையாக எனக்கு மகிழ்ச்சியை விடவும் வலியையே தந்தது. ஏன் இப்படி..? அரசு அலுவலர்கள் குறித்த நேரத்துக்கு வருவதே ஒரு செய்தியா..? அது ஒரு செய்தி ஆகிறது என்றால் நாம் எந்த அளவுக்கு (கீழே) விழுந்து விட்டோம் என்பதையே காட்டுகிறது. சகோதர சகோதரிகளே இப்படித்தான் அரசு நடைபெற்றது என்பதற்கான நிரூபணம் தான் இது (இந்த செய்தி).


சர்வதேசப் போட்டியை எதிர்கொள்ளும் இன்று, பல கோடி இந்தியர்களின் கனவுகளை நிறைவேற்ற வேண்டும் எனில், 'எப்படியோ நடக்கிறது..' 'ஏதோ போகிறது..' என்கிற (மன)நிலையில் நாட்டை நிர்வகிக்க முடியாது (கூடாது). பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற, அரசு இயந்திரம் எனும் கருவியைக் கூர்மையாக்க வேண்டும்; அதை மேலும் ஆர்வம் கொண்டதாய் மேலும் செயல்திறன் கொண்டதாய் ஆக்க வேண்டும்; இந்த திசையில் தான் இன்று நாம் செயல் புரிகிறோம்.

அன்பார்ந்த நாட்டு மக்களே, டெல்லிக்கு வெளியில் இருந்து இங்கு நான் வந்து நீண்ட காலம் ஆகவில்லை; ஆனால் என்னால் ஒரு உறுதிமொழி தர முடியும் - கடைநிலை ஊழியர் முதல் அமைச்சரவைச் செயலாளர் (Cabinet Secretary) வரை ஒவ்வொருவரும் திறமையானவர், ஒவ்வொருவருக்கும் அதிகாரம் இருக்கிறது; அனுபவம் இருக்கிறது. இந்த அதிகாரத்தை (தூக்கத்திலிருந்து) எழுப்ப வேண்டும், இந்த அதிகாரத்தை ஒன்றிணைக்க வேண்டும், இந்த அதிகாரத்தின் மூலம் நாட்டு நலனை விரைவுபடுத்த வேண்டும்; நான் மிக நிச்சயமாக இதைச் செய்வேன். நாட்டு மக்களுக்கு நான் உறுதி கூறுகிறேன் - இதனை நாம் நிறைவேற்றுவோம்; மிக நிச்சயமாக நிறைவேற்றுவோம். மே 16 அன்று என்னால் இதை சொல்லி இருக்க முடியாது; ஆனால் இரண்டரை மாத அனுபவத்துக்குப் பிறகு, மூவண்ணக் கொடியை சாட்சியாக வைத்து, ஆகஸ்ட் 15 அன்று சொல்கிறேன் - இது சாத்தியம்; இது நிறைவேற்றப்படும்.

சகோதரர்களே சகோதரிகளே, உங்களில் யாரேனும் ஒரு நாளின் முடிவில், அன்றைய தினம் தான் ஆற்றிய பணி, நாட்டின் ஏழை மக்களுக்கு உதவி இருக்கிறதா அல்லது நம் நாட்டில் நலனை பாதுகாப்பதில் பங்காற்றி உள்ளதா என்று உங்களுக்குள் கேட்டு உள்ளீர்களா? வாழ்க்கையில் தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நாட்டு நலனுக்காக இருத்தல் வேண்டும் என்பது 125 கோடி மக்களில் ஒவ்வொருவரின் குறிக்கோளாக இருக்க வேண்டாமா? துரதிருஷ்டவசமாக, ஏதேனும் ஒரு பணிக்காக ஒருவரை அணுகும் போது 'இதனால் எனக்கு என்ன கிட்டும்?' என்று தொடங்குகிறார் என்கிற சூழல்தான் இன்று உள்ளது. 'இதில் நான் ஏன் என்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்?' என்று வினவுகிறார்.

இதனால் அவருக்கு (நேரடியாக) பயன் ஏதும் இல்லை என்றால், 'நான் ஏன் கவலைப் பட வேண்டும்?' என்று கேட்கிறார். எல்லாமே சுயநலன் சார்ந்ததாக மட்டுமே இருக்க முடியாது. தேசத்துக்கென்று சில (பணிகள்) இருக்கின்றன. இதனைப் புரிந்து கொண்டு, நமது தேசிய குணத்தை வகுத்துக் கொள்ள வேண்டும். 'நான் ஏன் கவலைப்பட வேண்டும்?', 'இதனால் எனக்கென்ன வந்தது?' போன்ற எண்ணங்களுக்கு அப்பால் நாம் எழ வேண்டும். 'தேசத்தின் நலனுக்காக நான் இருக்கிறேன்; இது விஷயத்தில் நான் வழிகாட்டியாக இருப்பேன்' என்று சிந்திக்க வேண்டும். இந்த உணர்வை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

சகோதரர்களே சகோதரிகளே, பாலியல் வன்கொடுமை பற்றி கேட்கும் போது நாம் அவமானத்தில் தலை குனிகிறோம். மக்கள் வெவ்வேறு வாதங்களை முன்வைக்கிறார்கள். சிலர் இதை உளவியல் ரீதியாக அலசுகிறார்கள். ஆனால் சகோதரர்களே சகோதரிகளே, இன்று இந்த தளத்தில் இருந்து பெற்றோர்களைக் கேட்டுக் கொள்கிறேன், 10 - 12 வயது பெண் குழந்தைகள் உள்ள பெற்றோரைக் கேட்டுக் கொள்கிறேன் - எப்போதும் எச்சரிக்கையுடன் இருங்கள்; எங்கே செல்கிறீர்கள் எப்போது திரும்ப வருவீர்கள்?

குறிப்பிட்ட இடத்துக்கு சென்று சேர்ந்தவுடன் எனக்குத் தகவல் தெரிவியுங்கள் என்று அவ்வப்போது குழந்தைகளிடம் சொல்லிக் கொண்டே இருங்கள். தங்கள் புதல்வியிடம் பெற்றோர்கள் நூற்றுக்கணக்கான கேள்விகள் கேட்கிறார்கள்; இதேபோன்று தங்கள் புதல்வர்களிடம் எங்கே போகிறாய் ஏன் போகிறாய் உன்னுடைய நண்பர்கள் யார் என்று கேட்கிறார்களா? பாலியல் வன்முறையில் ஈடுபடுபவன் யாரோ ஒருவரின் மகன்தானே? அவனுக்கும் பெற்றோர் இருக்கிறார்கள். பெற்றோராக அவனிடம், நீ எங்கே போகிறாய் என்ன செய்கிறாய் என்று கேட்டிருக்கிறார்களா? தங்கள் புதல்விகளின் மீது கட்டுப்பாடுகள் விதிப்பதை போல முதல்வர்கள் மீதும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பெற்றோர்கள் தீர்மானிக்க வேண்டும்; அவர்களைக் கேள்வி கேட்க வேண்டும்.

எனது அன்பார்ந்த சகோதரர்களே சகோதரிகளே, சட்டம் தனது கடமையைச் செய்யும்; மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆனால் பெற்றோராக இந்த சமுதாயத்தில் ஒருவராக நமக்கும் சில பொறுப்புகள் இருக்கின்றன. தமது தோள்களில் துப்பாக்கிகளை சுமந்து கொண்டு அப்பாவிகளைக் கொலை செய்யும் மாவோயிஸ்டுகளும் தீவிரவாதிகளும் கூட ஒருவரின் (ஒரு பெற்றோரின்) பிள்ளைகள் தாம். தமது பிள்ளைகள் ஏன் தவறான பாதையை தேர்ந்தெடுத்தார்கள் என்று இந்தப் பெற்றோர்கள் கேட்டு இருபப்பார்களா என்று அறிய விரும்புகிறேன்.

ஒவ்வொரு பெற்றோரும் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்; தவறான வழிகாட்டுதல் காரணமாக தம் பிள்ளைகள் பிறரைக் கொல்லும் தவறான வழியை தேர்ந்தெடுத்து விட்டார்கள் என்பதை அறிய வேண்டும். இந்தப் பிள்ளைகள் தம் நாட்டுக்கோ தமது குடும்பத்துக்கோ தமக்கோ கூட சேவை செய்யவில்லை. வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ள இளைஞர்களுக்குச் சொல்வேன் - அவர்கள் இப்போது என்னவாக இருந்தாலும் என்னவெல்லாம் பெற்றிருந்தாலும் (இப்போது அவர்களுக்கு இருக்கும் வசதிகள்) இந்தியத் தாய் வழங்கியதேயாகும்.

நீங்கள் என்னவாக இருந்தாலும் அது உங்கள் பெற்றோரின் காரணமாகவே வந்தது. இந்த பூமியின் மீது இரத்தம் சிந்தும் துப்பாக்கியை விடுத்து உங்கள் தோள்களில் ஏர் கலப்பையை சுமந்தால் இந்த பூமி எத்தனை பசுமையாக எத்தனை அழகாக எத்தனை நன்மை உள்ளதாக இருக்கும்! இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த மண்ணில் ரத்தம் சிந்தப் போகிறோம்? இன்னும் எத்தனை காலத்துக்கு அப்பாவி உயிர்களைக் காவு கொள்ளப் போகிறோம்? இதன் மூலம் நாம் என்ன பெறப் போகிறோம்? வன்முறைப் பாதை நமக்கு எந்த ஒன்றையும் தரவில்லை.

சகோதரர்களே சகோதரிகளே சமீபத்தில் நான் நேபாளம் சென்று இருந்தேன். உலகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக அங்கே, நான் ஒன்று சொன்னேன். யுத்த வழியில் சென்று இருந்த அசோக சக்கரவர்த்தி, வன்முறைக் காட்சியைக் கண்டு (மனம் வெதும்பி) புத்த மார்க்கத்துக்கு மாறினார். ஒரு காலத்தில் நேபாள இளைஞர்கள் வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுத்து இருந்தார்கள்; ஆனால் இன்று அதே இளைஞர்கள் அரசியல் சாசனத்துக்காகக் காத்து இருக்கிறார்கள். முன்னர் அவர்களோடு இணைந்து பணியாற்றிய அதே மக்களே இப்போது சாசனத்தை வடிவமைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆயுதங்களை விட்டு புத்தகங்களின் பக்கம் திரும்புகிற பாதைக்கான மிகச் சிறந்த உதாரணமாக நேபாளம் திகழ்கிறது என்றால் உலகம் முழுதும் உள்ள இளைஞர்கள் வன்முறை பாதையைக் கைவிட்டு (அமைதிப் பாதைக்கு) திரும்ப இது ஒரு உத்வேகமாக அமையும்.

சகோதரர்களே சகோதரிகளே, புத்தரின் பூமியாகிய நேபாளம் உலகத்துக்கு ஒரு நற்செய்தி தர முடியும் என்றால், இந்தியாவால் ஏன் அந்த செய்தியைத் தர முடியாது? ஆகவே, வன்முறைப் பாதையைத் துறந்து, சகோதரத்துவப் பாதையை தேர்ந்தெடுக்க, காலம் நம்மை அழைக்கிறது.

சகோதரர்களே சகோதரிகளே, ஏதோ காரணத்துக்காக பல காலமாக இங்கே சமய சச்சரவுகள் இருந்து வருகின்றன. இதுதான் நாட்டின் பிரிவினைக்கு வழிகோலியது. சுதந்திரத்துக்குப் பிறகும் சாதிய மதவாத நஞ்சை நாம் எதிர் கொள்ள வேண்டி இருந்தது. இதனால் யாருக்கு என்ன பயன்? நிறைய சண்டை இட்டு விட்டோம். பல பேர் கொல்லப்பட்டுள்ளனர். நண்பர்களே சற்று பின்னோக்கிப் பாருங்கள், இதனால் யாருக்கும் பயனில்லை என்பதைக் கண்டு கொள்வீர்கள்.

இந்தியத் தாயின் மீது களங்கம் ஏற்படுத்துவதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. ஆகவே எல்லா மக்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன் - சாதியம், மதவாதம், மண்டல வாதம் ,சமூகப் பொருளாதார அடிப்படையிலான பாகுபாடு என்று எதுவாக இருந்தாலும் இவையெல்லாம் நமது முன்னேற்றப் பாதையில் தடைகளேயாகும். நாம் நெஞ்சாரத் தீர்மானிப்போம் - இத்தகைய நடவடிக்கைகளை அடுத்த 10 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்போம்; பதற்றங்கள் இல்லாத சமுதாயம் நோக்கி நடைபோடுவோம். அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் சகோதரத்துவம் மூலம் எவ்வளவு வலிமை பெறுகிறோம் என்பதை உணர்வீர்கள். ஒரு முறை இதனை அனுபவித்துப் பார்ப்போம்.

எனது அன்பார்ந்த நாட்டு மக்களே, எனது வார்த்தைகளில் நம்பிக்கை வையுங்கள்; நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். இதுவரை நிகழ்த்திய பாவங்களை நிறுத்துங்கள்; நல்லெண்ண சகோதரத்துவ வழியைப் பின்பற்றுங்கள்; நமது நாட்டை முன்னோக்கி செலுத்த தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

அறிவியல் முன்னேற்றத்தால், சகோதரர்களே சகோதரிகளே, நமது சிந்தனையில் நவீனத்துவ உணர்ச்சிகள் மிகுந்து வருகின்றன; ஆனால் நாம் என்ன செய்கிறோம்? நமது நாட்டில் பாலின விகிதாசாரம் என்ன என்பதை குறித்து எப்போதேனும் எண்ணிப் பார்த்து இருக்கிறோமா? 1,000 ஆண் குழந்தைகளுக்கு 940 பெண் குழந்தைகள் - சமுதாயத்தில் சமமின்மையை உருவாக்குவோர் யார்? நிச்சயமாக, கடவுள் அல்ல. தங்களுடைய பாக்கெட்டுகள் நிரம்ப வேண்டும் என்பதற்காக தாயின் கருவில் வளரும் பெண் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் என்று மருத்துவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். மகன் வேண்டும் என்பதற்காக மகள்களை தியாகம் செய்யாதீர்கள் என்று தாய்மார்களை சகோதரிகளைக் கேட்டுக் கொள்கிறேன்.

முதிய பருவத்தில் தம்மை ஆதரிப்பவர்கள் என்பதற்காக தாயும் தந்தையும் மகன் வேண்டும் என்கிற தூண்டுதலுக்குச் சில சமயம் ஆளாகிறார்கள். நான் பொது வாழ்வில் பணி புரியும் ஒரு நபர். ஐந்து ஆண் பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் தனியே பங்களா நிறைய கார்கள் கொண்ட பல குடும்பங்களில் பெற்றோர்களைக் கட்டாயப் படுத்தி முதியோர் இல்லங்களில் வாழச் செய்வதைப் பார்த்திருக்கிறேன். இத்தகைய குடும்பங்களைப் பார்க்கிறேன்.

தம்முடைய வம்சத்துக்கு ஒரே ஒருவராக ஒரு பெண் குழந்தை மட்டுமே கொண்ட குடும்பங்களையும் பார்க்கிறேன். இந்தப் புதல்வி தனது கனவுகளைத் துறந்து திருமணம் கூட செய்து கொள்ளாமல் தனது முதிய பெற்றோர்களை கவனித்துக் கொள்வதிலேயே தமது முழு வாழ்வையும் அர்ப்பணித்துக் கொள்கிறார்கள். இந்தப் பாகுபாடு, 21-ம் நூற்றாண்டில் நிலவும் பெண் சிசுக்கொலை, மாசடைந்த களங்கப்பட்ட மனநிலையைக் குறிக்கிறது. இந்த சிந்தனையில் இருந்து நாம் விடுபட வேண்டும், இந்த விடுதலை திருவிழாச் செய்தி இதுதான்.

சமீபத்தில் காமன்வெல்த் போட்டிகள் நடத்தப் பட்டன. இந்திய விளையாட்டு வீரர்கள் நாட்டுக்குப் பெருமை சேர்த்தனர். இவர்களில் 29 பேர் பெண்கள். இவர்களுக்காக பெருமை கொள்வோம்; கைதட்டிப் பாராட்டுவோம். இந்தியாவின் புகழுக்கும் பெருமைக்கும் பெண்கள் பங்களிக்கிறார்கள். இதனை அங்கீகரிப்போம். அவர்களையும் தோளோடு தோளாக உடனழைத்துக் கொள்வோம். இதன் மூலம் நமது சமூக வாழ்வில் நுழைந்துவிட்ட தீமைகளைக் களைய முடியும். ஆகவே சகோதரர்களே சகோதரிகளே, நமது சமூக தேசிய அடையாளமாக இந்த திசையில் நாம் தொடர்ந்து பயணிப்போம்.

சகோதரர்களே சகோதரிகளே, வளர்ச்சி மட்டுமே நமது நாட்டின் முன்னுள்ள ஒரே வழி. நல்ல அரசுமுறை (governance) மட்டுமே ஒரே வழி. நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல, நல்ல அரசுமுறை மற்றும் வளர்ச்சி இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன; இவற்றின் வழியே நாம் முன்னேறுவோம். நல்ல அரசுமுறை என்று நான் சொல்லும் போது... தனியார் பணியில் இருக்கும் ஒருவரைக் கேட்கும்போது அவர் நான் வேலை (job) செய்கிறேன் என்கிறார்; (இதுவே) அரசுப் பணியில் இருப்பவரைக் கேட்டால் சேவை (service) செய்கிறேன் என்பார். இருவருமே சம்பாதிக்கிறார்கள். ஆனால், ஒருவருக்கு அது வேலை மற்றவருக்கு - சேவை. அரசு சேவையில் இருக்கும் சகோதர சகோதரிகளைக் கேட்கிறேன் - சேவை என்கிற சொல் வலுவிழந்து விட்டதா? தனது அடையாளத்தை இழந்து விட்டதா? அரசு பணியில் இருக்கும் நபர்கள் வேலை செய்வதில்லை, சேவை செய்கிறார்கள். இந்த உணர்வை நாம் மீட்டெடுக்க வேண்டும். இதனை ஒரு தேசிய உணர்வாக முன்னெடுக்க வேண்டும். இந்த திசையில் நாம் முன்செல்ல வேண்டும்.

சகோதரர்களே சகோதரிகளே, இந்த நாட்டின் நலனுக்குத் தேவையான நடவடிக்கைகளைக் குடிமக்கள் மேற்கொள்ள வேண்டுமா இல்லையா? யோசித்துப் பாருங்கள் இந்த நாட்டின் 125 கோடி மக்கள் இணைந்து ஓரடி முன்னெடுத்து வைத்தால், இந்த நாடு 125 கோடி அடிகள் முன்னேறி இருக்கும்! ஜனநாயகத்தின் அர்த்தம், ஓர் அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதுடன் நின்று விடுவது இல்லை; நாட்டின் எதிர்பார்ப்புகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்ற, 125 கோடி மக்கள் அரசுடன் தோள் சேர்ந்து உழைப்பதே ஜனநாயகத்தின் அர்த்தமாகும். நாம் மக்களுடன் பங்குதாரர் ஆக வேண்டும். பொதுமக்கள் - தனியார் ஒத்துழைப்பின் கீழ் நான் தொடர்ந்து முன்னேற வேண்டும். பொது மக்களின் பங்களிப்புடன் நாம் முன்னேற வேண்டும். தயவு செய்து சொல்லுங்கள் - நமது விவசாயிகள் ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள்? தனிநபர்களிடம் விவசாயி கடன் பெறுகிறார்; தனது கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போகிறது. தனது மகளின் திருமணத்துக்காக கடன் வாங்குகிறார்; திருப்பிச் செலுத்த முடியாமல் போகிறது. தனது வாழ்நாள் முழுவதும் இன்னல்களை சந்திக்க நேர்கிறது. இத்தகைய விவசாயிகளின் ஏழைக் குடும்பங்களை யார் காப்பாற்றுவார்?

சகோதரர்களே சகோதரிகளே, இந்த விடுதலைத் திருநாளில் ஒரு புதிய திட்டத்தைத் தொடங்குவதற்காக வந்துள்ளேன். பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா என்று அழைக்கப்படும். (ஜன் - ஜனம்; தன் - தனம்; யோஜனா - யோசனை / திட்டம்) இந்தத் திட்டத்தின் மூலம் நாட்டின் மிக வறிய மக்களை வங்கிக் கணக்குடன் இணைக்க விரும்புகிறேன். பல லட்சம் குடும்பங்களில் மொபைல் போன் இருக்கிறது; ஆனால் வங்கிக் கணக்கு இல்லை. இந்தநிலையை மாற்ற வேண்டும். நாட்டின் பொருளாதார வளங்கள், ஏழைகளின் நலனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும். இந்தப் புள்ளியில் இருந்து மாற்றம் தொடங்கும். இந்தத் திட்டம் (பல) ஜன்னல்களைத் திறக்கும். ஆகவே பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு பெறுவோருக்கு ஒரு 'டெபிட் கார்டு' (பற்று அட்டை) வழங்கப்படும். இந்த அட்டையுடன் ஒவ்வொரு ஏழைக் குடும்பத்துக்கும் ஒரு லட்ச ரூபாய்க்கு காப்பீடு உறுதி செய்யப்படும்; இதனால் அவர்கள் வாழ்க்கையில் ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டால் அந்தக் குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் காப்பீடு கிடைக்கும்.

சகோதரர்களே சகோதரிகளே, இது இளைஞர்களின் நாடு. நாட்டு மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர் 35 வயதுக்குக் குறைவானவர்கள். நமது நாடு தான் உலகில் மிக அதிக இளைஞர்களைக் கொண்டுள்ளது. நாம் இதன் ஆதாயத்தைப் பெற வேண்டும் என்று எப்போதாவது எண்ணி உள்ளோமா? இன்று உலகத்துக்கு, திறன் வாய்ந்த பணியாளர்கள் தேவைப்படுகிறது. இந்தியாவுக்கும் திறன் வாய்ந்த பணியாளர்கள் தேவை. சில சமயங்களில், நமக்கு நல்ல ஓட்டுனர் தேவை; ஆனால் கிடைப்பது இல்லை. தச்சர் தேவைப்படுகிறார்; ஆனால் கிடைப்பது இல்லை. நல்ல சமையல்காரர் வேண்டுமென்றால் கிடைப்பதில்லை. நம்மிடம் இளைஞர்கள் வேலையின்றி இருக்கிறார்கள். ஆனால் நாம் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இளைஞர்கள் கிடைப்பதில்லை. நமது நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்றால் திறன் மேம்பாடு மற்றும் திறன்பட்ட இந்தியாவே நமது லட்சியமாக இருக்க வேண்டும். லட்சக்கணக்கான இந்திய இளைஞர்கள் திறன்களைப் பெற வேண்டும்.

இதற்காக நாடு முழுதும் பழமையானது அல்ல; ஒரு (புதிய) நெட்வொர்க் தேவை. இந்தியாவை ஒரு நவீன தேசம் ஆக்குவதில் பங்களிக்கும் திறன்களை அவர்கள் பெற வேண்டும். உலகின் எந்த நாட்டுக்கு சென்றாலும் இவர்களின் திறன்கள் பாராட்டப்பட வேண்டும்; இரண்டு முனைகள் கொண்ட வளர்ச்சிக்கு நாம் முயற்சிக்க வேண்டும். வேலைகளை உருவாக்கும் திறன் கொண்ட இளைஞர்களை உருவாக்க விரும்புகிறேன்; வேலைகளை உருவாக்கும் திறன் அற்ற, வாய்ப்புகள் பெறாத இளைஞர்கள் உலகில் எந்த மூலையில் இருக்கும் இளைஞர்களையும் எதிர்கொண்டு, தமது கடின உழைப்பு மற்றும் சாமர்த்தியத்தால் உலக மக்களின் இதயங்களை வென்று தலை நிமிர்ந்து நிற்க வேண்டும். இத்தகைய இளைஞர்களின் திறன்களைக் கட்டமைக்க விரும்புகிறோம். சகோதரர்களே சகோதரிகளே மிக விரைவாக திறன் வளர்ச்சியை விரிவுபடுத்தத் தீர்மானித்து இருப்பதால் இதனை நிறைவேற்ற வேண்டும் என்று விரும்புகிறேன்.

சகோதரர்களே சகோதரிகளே, உலகம் மாற்றத்துக்கு உள்ளாகி இருக்கிறது. எனது அன்பார்ந்த நாட்டு மக்களே, உலகம் மாறிவிட்டது. ஏதோ ஒரு மூலையில் தனியே இருந்து கொண்டு, தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்து கொண்டு தனது எதிர்காலத்தை இந்தியா தீர்மானிக்க முடியாது. உலகப் பொருளாதாரம் மாறி உள்ளது. அதற்கேற்ப நாம் செயல்பட வேண்டும். சமீபத்தில் அரசு பல முடிவுகள் எடுத்துள்ளது; நிதிநிலை அறிக்கையில் சில அறிவிப்புகள் செய்துள்ளது; உலகத்துக்கும் உலகம் முழுதும் உள்ள இந்தியர்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன்: இளைஞர்களுக்கு மென்மேலும் வேலை வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்றால் உற்பத்தி துறையை நாம் இன்னமும் மேம்படுத்த வேண்டும். ஏற்றுமதி இறக்குமதி இடையே சமநிலையை வளர்க்க வேண்டும் என்றால் உற்பத்தித் துறையை வலுவாக்க வேண்டும். கல்வியை இளைஞர் திறனைப்பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்றால், உற்பத்தி துறையை நாட வேண்டும். இதற்கு, இந்தியா தனது முழு வலிமையும் தர வேண்டும்.

உலக சக்திகளையும் அழைக்கிறோம். ஆகவே உலகம் முழுதும் உள்ள மக்களுக்கு செங்கோட்டைக் கொத்தளத்தில் இருந்து வேண்டுகோள் விடுக்கிறேன் - 'வாருங்கள், இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள். 'உலகின் எந்த நாட்டிலும் விற்பனை செய்யுங்கள் ஆனால் உற்பத்தியை இங்கே செய்யுங்கள். எதையும் செய்வதற்கு நம்மிடம் திறன் ஆற்றல் ஒழுங்கு விடா முயற்சி இருக்கிறது. உலகத்துக்கு சாதகமான வாய்ப்பைத் தருகிறோம் - 'வாருங்கள், இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்'. எலக்ட்ரிக்கல் முதல் எலக்ட்ரானிக்ஸ் வரை 'வாருங்கள், இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்'. ஆட்டோமொபைல் முதல் வேளாண் மதிப்புக் கூட்டு வரை 'வாருங்கள், இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்'. பேப்பரோ, பிளாஸ்டிக்கோ - 'வாருங்கள், இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்'. செயற்கைக்கோள் அல்லது நீர்மூழ்கிக் கப்பல் எதுவாயினும் - 'வாருங்கள், இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்'. எங்கள் நாடு வலிமையானது. வாருங்கள், உங்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்.

சகோதரர்களே சகோதரிகளே, இந்த நாட்டு இளைஞர்களுக்கு குறிப்பாக தொழில் துறையில் பணிபுரியும் சாமானியர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். நாட்டில் தொழில் கல்வித் துறையில் பணிபுரியும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். 'வாருங்கள், இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்' என்று உலகத்துக்கு அழைப்பு விடுப்பது போலவே, நம் நாட்டு இளைஞர்களுக்கும் கூறுகிறேன். (அழைப்பு விடுக்கிறேன்) 'மேட் இன் இந்தியா' என்கிற செய்தி உலகின் எல்லா மூலையிலும் சென்று சேர்வதே நமது கனவாக இருத்தல் வேண்டும். இதுவே நமது கனவாக இருக்க வேண்டும். நம்ம நாட்டுக்கு சேவை புரிவது என்றால் நமது இளைஞர்கள் பகத்சிங் போன்று தூக்கில் தொங்க வேண்டியது அவசியமா என்ன? சகோதரர்களே சகோதரிகளே, ' ஜெய் ஜவான் ஜெய் கிசான்' முழக்கத்தை லால் பகதூர் சாஸ்திரி எழுப்பினார். ஒரு ராணுவ வீரர் எல்லையில் தன் இன்னுயிரை ஈந்து இந்தியத் தாயைப் பாதுகாக்கிறார். இதேபோன்று கிடங்குகளை உணவுப் பொருட்களால் நிரப்பி இந்தியத் தாய்க்கு விவசாயி சேவை செய்கிறார். இதுவும் தேசத்துக்கான சேவைதான். கிடங்குகளை நிரப்புதல் எனும் மிகப்பெரிய சேவையை இந்தியாவுக்கு விவசாயி வழங்குகிறார். அதனால்தான் லால்பகல் சாஸ்திரி 'ஜெய் ஜவான் ஜெய் கிசான்' என்று முழங்கினார்.

சகோதரர்களே சகோதரிகளே, இளைஞர்களான உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன் - நீங்கள் (இத்தனை பேர்) இருந்தும், நாம் ஏன் மிகச் சிறிய (சாதாரண) பொருட்களையும் இறக்குமதி செய்ய வேண்டும்? நம் நாட்டு இளைஞர்களால் தீர்வு காண முடியும். இவர்கள் ஆராய வேண்டும், எது மாதிரியான பொருட்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகின்றது என்று கண்டறிய வேண்டும்; இவற்றில் ஒரு பொருளையெனும் சிறு குறு தொழில்கள் மூலமே இவர்கள் உற்பத்தி செய்யத் தீர்மானிக்க வேண்டும். எதிர்காலத்தில் இதை நாம் இறக்குமதி செய்ய வேண்டி இராது. உண்மையில் இவற்றை நாம் ஏற்றுமதி செய்யும் நிலைக்கும் முன்னேறுவோம்.

நமது நாட்டின் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஒவ்வொருவரும் ஒரு பொருளை உற்பத்தி செய்யத் தீர்மானித்தால், இந்தியா அப்பொருட்களின் ஏற்றுமதி நாடாக மாறும். ஆகவே நமது இளைஞர்களை குறிப்பாக சிறு தொழில் முனைவோரை வேண்டுகிறேன் - குறிப்பாக இரண்டு விஷயங்களில் சமரசம் செய்து கொள்ளாதீர்கள். ஒன்று - ஜீரோ குறைபாடு (zero defect) இரண்டு - ஜீரோ விளைவு (zero effect) நாம் உற்பத்தி செய்யும் பொருட்களில் எந்த குறைபாடும் இருக்கக் கூடாது; நாம் ஏற்றுமதி செய்யும் எந்தப் பொருளும் நமக்கு திரும்பி வரக் கூடாது. பொருள்களை உற்பத்தி செய்யும் போது சுற்றுச்சூழலை பாதிக்காத ஜீரோ விளைவு கொண்டதாக இருக்க வேண்டும். குறைபாடு இல்லாத உற்பத்தி என்கிற கனவை நோக்கி நாம் நடை போட்டால், சகோதரர்களே சகோதரிகளே, நமது இலக்கை நம்மால் எட்ட முடியும் என்று நம்புகிறேன்.

சகோதரர்களே சகோதரிகளே, இந்திய இளைஞர்கள் உலகில் இந்தியாவின் அடையாளத்தை முற்றிலுமாக மாற்றி அமைத்துள்ளார்கள். முன்னர் இந்தியாவை உலகம் எவ்வகையில் அறிந்து இருந்தது? 25 - 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்தியா என்றாலே பாம்பாட்டிகளின் தேசம், சூனியக்காரன் தேசம் என்று உலகில் பலர் (தவறாக) கருதி இருந்தனர். இந்தியாவின் உண்மையான அடையாளம் அவர்களைச் சென்று சேரவில்லை. ஆனால் எனது அன்பான சகோதர சகோதரிகளே, நம் நாட்டு இளைஞர்கள், 20-22-23 வயது இளைஞர்கள், அவர்களின் கணினித் திறமை மூலம் உலகத்தை வசியம் செய்து விட்டார்கள். நமது, தொழில்முறை ஐ.டி. இளைஞர்கள், இந்தியாவுக்கு புதிய அடையாளத்தை நல்கும் புதிய பாதையைத் தந்துள்ளார்கள். ஒரு நாட்டுக்கு இந்த வலிமை இருக்கும்போது, அந்த நாடு வேறு எதைப் பற்றியும் யோசிக்க முடியுமா? ஆகவே நமது கனவு - 'டிஜிட்டல் இந்தியா'. நான் சொல்லும் டிஜிட்டல் இந்தியா, மேம்பட்ட மக்களுக்கு அல்ல; வறிய மக்களுக்கானது.

இந்தியாவின் எல்லா கிராமங்களும் பிராட்பேண்ட் இணைய வசதியால் இணைக்கப்பட்டால், தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கும் தொலைதூரக் கல்வி வசதி வழங்கப்பட்டால், நமது கிராமத்துக் குழந்தைகள் எவ்வளவு தரமான கல்வியைப் பெறுவார்கள் என்று யோசித்துப் பாருங்கள். மருத்துவர் பற்றாக்குறை உள்ள இடங்களில் நாம் 'டெலி மருத்துவ நெட்வொர்க்' உருவாக்கினால், இத்தகைய பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு எது மாதிரியான மருத்துவ சேவைகள் தேவை என்பதற்கான சரியான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கலாம். இந்திய குடிமக்களின் கைகளில் மொபைல் போன் இருக்கிறது; (எல்லா இடங்களிலும்) மொபைல் தொடர்பு இருக்கிறது; (எனில்) மொபைல் அரசுமுறை (mobile governance) திசை நோக்கி நடக்கலாமா? நாட்டின் ஒவ்வொரு ஏழையும் தனது மொபைல் போன் மூலம் வங்கிக் கணக்கு நிர்வகிக்க, அரசிடம் இருந்து தனக்கு தேவையானதைக் கோருவதற்கு, சாத்தியமாகிற திசை நோக்கி நகர வேண்டும். டிஜிடல் இந்தியா நோக்கி நகர வேண்டும்.

டிஜிட்டல் இந்தியா நோக்கி நகர்வதில், நமக்கு ஒரு கனவு இருக்கிறது. இன்று நாள் எலக்ட்ரானிக் பொருட்களை பெரிய அளவில் இறக்குமதி செய்கிறோம். நண்பர்களே நீங்கள் ஆச்சரியப் படுவீர்கள் - டெலிவிஷன்கள் மொபைல் போன்கள், ஐபேட் மற்றும் பல எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை இறக்குமதி செய்கிறோம். பெட்ரோலிய எண்ணெய் டீசல் இறக்குமதி செய்வது அவசியம். இதற்கு அடுத்ததாக உள்ளது எலக்ட்ரானிக் பொருட்கள். இந்தியாவில் எலக்ட்ரானிக் பொருட்களை உற்பத்தி செய்து தன்னிறைவு பெற்றவர்களாக மாறினால், டிஜிட்டல் இந்தியா நமக்கு அரசு கருவூலத்துக்கு எவ்வளவு பெரிய உதவியாக இருக்கும்! ஆகவே டிஜிட்டல் இந்தியா சிந்தனையை முன்னெடுக்க வேண்டும் என்றால், இ-கவர்னன்ஸ் தேவை ஆகிறது. இ-கவர்னன்ஸ் என்பது எளிய, திறன்மிக்க, சிக்கனமான கவர்னன்ஸ் ஆகும். இ- கவர்னன்ஸ், நல்ல கவர்னன்ஸுக்கு வழி கோலுகிறது. ரயில்வே இந்த நாட்டில் தொடர்புகளை ஏற்படுத்தியது என்று சொன்ன காலம் உண்டு. அப்படித்தான் இருந்தது. இன்று சொல்கிறேன் - நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் இணைக்கும் ஆற்றல் மிக்கதாய் இப்போது ஐ.டி. இருக்கிறது. அதனால்தான் டிஜிட்டல் இந்தியா மூலம் ஒற்றுமை மந்திரத்தை நினைவாக்க விரும்புகிறோம்.

சகோதரர்களே சகோதரிகளே, இவை அனைத்தையும் கொண்டு நாம் முன் சென்றால், உலகத்தோடு சம அளவில் நிற்பதற்கான ஆற்றல் கொண்டதாய் டிஜிட்டல் இந்தியா இருக்கும். நமது இளைஞர்களுக்கு அந்தத் திறன் இருக்கிறது; இது அவர்களுக்குக் கிடைத்துள்ள நல்வாய்ப்பு.

சகோதரர்களே சகோதரிகளே, நாம் சுற்றுலாத் துறையை மேம்படுத்த விரும்புகிறோம். ஏழையிலும் ஏழைகளுக்கு சுற்றுலாத்துறை வேலைவாய்ப்பு வழங்குகிறது. தானியம் விற்போர் ஏதோ சம்பாதிக்கிறார்; ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் ஏதோ சம்பாதிக்கிறார்; பக்கோடா விற்பவர் ஏதோ சம்பாதிக்கிறார்; தேநீர் விற்பவரும் ஏதோ சம்பாதிக்கிறார். தேநீர் விற்பவர் பற்றி பேசும் போது, எனக்குள் அது பற்றிய உடைமை உணர்வு (sense of belonging) உண்டாகிறது. சுற்றுலாத்துறை ஏழைகளிலும் ஏழைக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது. ஆனால் சுற்றுலாத் துறையை வளர்ப்பதில், நமது தேசிய குணத்திலேயே, ஒரு பெரும் தடை இருக்கிறது. சுற்றிலும் அசுத்தம் நிரம்பி இருக்கிறது.

சுதந்திரத்துக்குப் பிறகு, சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், 21ம் நூற்றாண்டில் 14 ஆண்டுகளைக் கடந்த பிறகும், நாம் இன்னமும் அசுத்தத்திலேயே வாழ விரும்புகிறோம். அரசு அமைத்த உடன் நான் தொடங்கிய முதல் வேலை - தூய்மைப் படுத்துதல். இது ஒரு பிரதம செய்கிற வேலையா என்று மக்கள் வியந்தார்கள். பிரதம மந்திரிக்கு இது ஒரு அற்ப வேலை என்று மக்கள் கருதலாம். ஆனால் எனக்கு இது மிகப் பெரும் பணி. தூய்மையாய் வைத்திருத்தல் ஒரு மிகப் பெரும் பணி. நமது நாடு தூய்மையாக இருக்க முடியாதா? அசுத்தத்தை பரப்ப மாட்டோம் என்று 125 கோடி மக்களும் தீர்மானித்தால், உலகில் எந்த சக்தியால் நமது நகரங்களில் கிராமங்களில் அசுத்தத்தைப் பரப்ப முடியும்? இந்த அளவு கூட நம்மால் தீர்மானிக்க முடியாதா?

சகோதரர்களே சகோதரிகளே, 2019 - மகாத்மா காந்தியின் 150வது ஆண்டு. மகாத்மா காந்தி 150- வது பிறந்த நாளை எவ்வாறு கொண்டாட இருக்கிறோம்? நமக்கு விடுதலை பெற்றுத் தந்த, நமது நாட்டுக்கு மிகப் பெரும் கவுரவம் சேர்த்த மகாத்மா காந்திக்கு நாம் தரப் போவது என்ன..? சகோதரர்களே சகோதரிகளே, சுத்தமும் ஆரோக்கியமும் மகாத்மா காந்தியின் இதயத்துக்கு மிகவும் நெருக்கமானவை. நமது கிராமம் நகரம் தெரு பகுதி பள்ளி கோயில் மருத்துவமனை மற்றும் பிற பகுதிகளில் அசுத்தம் சேராமல் பார்த்துக் கொள்வோம் என்கிற தீர்மானம் அல்லாது, 2019-ல் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளில் நாம் தருவதற்கு என்ன இருக்கிறது? இது அரசால் மட்டுமே நிகழக் கூடியது அல்ல; பொதுமக்களின் பங்களிப்பு வேண்டும். நாம் அனைவரும் சேர்ந்து இதனைச் செயல்படுத்த வேண்டும்.

சகோதரர்களே சகோதரிகளே, நாம் 21-ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமது தாய்மார்களும் சகோதரிகளும் இயற்கை உபாதைகளைத் திறந்த வெளியில் செய்வது நமக்கு எப்போதாவது வலித்திருக்கிறதா? பெண்களின் கண்ணியம் நம் அனைவரின் கூட்டுப்பொறுப்பு அல்லவா? (Has it ever pained us that our mothers and sisters have to defecate in the open? Whether dignity of women is not our collective responsibility?) கிராமத்து ஏழைப் பெண்மணிகள் இரவுக்காகக் காத்துக் கிடக்கிறார்கள்; இருள் சூழ்கிற வரை அவர்களால் 'வெளியே' செல்ல முடியாது. அதுவரை, எந்த அளவுக்கு உடல் சித்திரவதைகளை சந்தித்து இருப்பார்கள்! எத்தனை நோய் அபாயம் அவர்களைத் தாக்கி இருக்கும்! நமது தாய்மார்களின் சகோதரிகளின் கண்ணியத்தை காக்க நம்மால் கழிப்பறைகளைக் கட்டித் தர இயலாதா? சகோதரர்களே சகோதரிகளே, ஆகஸ்ட் 15 என்பது, பல பெரிய காரியங்களைப் பற்றிப் பேசுகிற பெரிய திருவிழா என்று சிலர் கருதலாம்.

சகோதரர்களே சகோதரிகளே பெரியதைப் பற்றி பேசுவதில் முக்கியத்துவம் இருக்கிறது. பெரிய அறிவிப்புகளை வெளியிடுவதில் முக்கியத்துவம் இருக்கிறது; ஆனால் சில சமயங்களில் அறிவிப்புகளால் எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது; அறிவிப்புகள் நிறைவேற்றப்படாமல் போகும்போது, சமுதாயமே ஏமாற்றத்துக்கு உள்ளாகிறது. ஆகவே எதை நிறைவேற்றுகிற சாத்தியம் கண்ணில் தெரிகிறதோ, அதைப் பற்றி மட்டுமே பேச விரும்புகிறோம். சகோதரர்களே சகோதரிகளே, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து ஒரு பிரதம மந்திரி, சுத்தம் பற்றி, கழிப்பறைகள் கட்டுவதைப் பற்றிப் பேசுவதைக் கேட்டு நீங்கள் அதிர்ச்சி அடையலாம். சகோதரர்களே சகோதரிகளே, எனது பேச்சு எந்த அளவு தாக்கம் பெறும், மக்கள் இதனை எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் இது எனது இதயபூர்வமான உறுதி. நான் ஒரு ஏழைக் குடும்பத்தில் இருந்து வருகிறேன். நானே வறுமையைக் கண்டு உணர்ந்து இருக்கிறேன்.

ஏழைகளுக்கு மரியாதை (கண்ணியம்) தேவை; அது தூய்மையில் இருந்து தான் தொடங்குகிறது. ஆகவே நான் இந்த ஆண்டு அக்டோபர் 2 முதல் தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி 4 ஆண்டுகளுக்குச் செயல்படுத்த இருக்கிறேன். நான் இன்று ஒரு தொடக்கத்தை செய்ய விரும்புகிறேன்; அதாவது, நாட்டில் உள்ள எல்லா பள்ளிகளிலும் , மாணவிகளுக்குத் தனியே கழிப்பறைகள் கட்டாயம் இருக்க வேண்டும். அப்போதுதான் நமது புதல்விகள் இடையிலேயே பள்ளியை விட்டு வெளியேறவேண்டிய நிர்பந்தம் நேராது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதி நிதி, பயன்பாட்டுக்கு இருக்கிறது. இந்த நிதியை அடுத்த ஓராண்டுக்கு கழிப்பறைகளைக் கட்டுவதில் செலவு செய்யுமாறு வேண்டுகிறேன். கழிப்பறைகள் கட்டுவதற்கு பட்ஜெட்டை அரசு பயன்படுத்த வேண்டும். சமூகப் பொறுப்புணர்வின் கீழ் உங்கள் செலவுகளில் கழிப்பறைகளைக் கட்டுவதற்கு முன்னுரிமை தருமாறு கம்பெனிகளுக்கு அனுப்பி விடுகிறேன். மாநில அரசுகளின் உதவியுடன் இந்த இலக்கு ஓராண்டுக்குள் எட்டப்பட வேண்டும்; அடுத்த ஆகஸ்ட் 15 அன்று, மாணவ மாணவிகளுக்கு தனித்தனியே கழிப்பறைகள் இல்லாத பள்ளிகளே இந்தியாவில் இல்லை என்று உறுதியாக அறிவிக்கும் சூழலில் நாம் இருக்க வேண்டும்.

சகோதரர்களே சகோதரிகளே, நாம் கனவுகளுடன் முன்னேறினால், அவற்றை நிறைவேற்றும் நிலையில் உள்ளோம். நான் இன்று வேறு ஒன்றையும் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். தேசநலன் குறித்து விவாதிப்பதில் முக்கியத்துவம் இருக்கிறது. ஆனாலும் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விருப்பம் இருந்தாலும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. தமக்குத் தாமே வெளிப்படுத்திக் கொள்ளலாம், அரசுக்கு எழுதலாம், போராடலாம், மனு தரலாம். ஆனாலும் அவர்களாகவே எதையும் செய்வதற்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.

இன்று நான் ஒரு புதிய யோசனையுடன் வந்துள்ளேன். நமது நாட்டில் பிரதம மந்திரியின் பெயரில் பல திட்டங்கள் நடந்து வருகின்றன. வெவ்வேறு தலைவர்களின் பெயரில் பல்வேறு திட்டங்கள் உள்ளன. ஆனாலும் இன்று நாடாளுமன்ற உறுப்பினரின் பெயரில் ஒரு திட்டத்தை அறிவிக்க இருக்கிறேன் - Sansad Adarsh Gram Yojana. (Sansad - நாடாளுமன்றம்; Adarsh - ஆதர்ச; Gram Yojana - கிராம திட்டம்) சில அளவுகோல்களை நிர்ணயிப்போம். நாடாளுமன்ற உறுப்பினர்களே, உங்கள் தொகுதியில் 3,000 - 5,000 மக்கள் தொகை கொண்ட ஏதேனும் ஒரு கிராமத்தைத் தேர்ந்தெடுங்கள். நேரம் இடம் அந்த இடத்தின் சூழ்நிலை ஆகியன, அளவுகோல்களாக இருக்கட்டும். அவ்விடத்தில் ஆரோக்கியம் சுத்தம் சுற்றுச்சூழல் பசுமை இணக்கம் ஆகியனவும் அளவுகோல் ஆகட்டும். இந்த அளவுகோல்களின் அடிப்படையில், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் 2016 வாக்கில் ஒரு, முன்மாதிரி கிராமம் (model village) உருவாக்க வேண்டும். குறைந்தபட்சம் இதை நம்மால் செய்ய முடியாதா? இதை நாம் செய்யாமல் இருக்கலாமா? நாம் ஒரு தேசத்தை கட்டமைக்க வேண்டுமெனில் கிராமத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும். ஒரு முன்மாதிரி கிராமம் உருவாக்குவோம். 2016 என்று இலக்கு நிர்ணயிக்கக் காரணம் - இது ஒரு புதிய திட்டம்.

ஒரு திட்டத்தை வடிவமைக்க, செயல்படுத்த கால அவகாசம் தேவை. 2016-க்குப் பிறகு, 2029 பொதுத் தேர்தலுக்கு முன்பாக இந்த நோக்கதுக்காக மேலும் இரண்டு கிராமங்களைத் தேர்ந்தெடுப்போம். 2019-க்குப் பிறகு, ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தனது ஐந்தாண்டு பதவிக் காலத்தில் தனது பகுதியில் குறைந்தது ஐந்து மாதிரி கிராமங்களை உருவாக்க வேண்டும். மாநிலங்களவை உறுப்பினரும் ஒரு கிராமத்தை தத்தெடுக்க வேண்டும் என்று கோருகிறேன். இந்தியாவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாதிரி கிராமத்தை நாம் உருவாக்கினாலும், அதைப் பார்த்து சுற்றியுள்ள கிராமங்களும் உற்சாகம் பெறும். எல்லா அமைப்பு முறைகளும் வசதிகளும் கொண்ட மாதிரி கிராமத்தை நிறுவுவோம்.

அக்டோபர் 11 - ஜெயபிரகாஷ் நாராயண் அவர்களின் பிறந்தநாள். அன்றைய தினம் இந்த திட்டத்துக்கான முழு வடிவத்தையும், எல்லா நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் முன்பும், மாதிரி கிராமத்தை நிறுவ சமர்ப்பிக்கிறேன். தத்தம் மாநிலங்களுக்கு ஏற்றவாறு அந்தந்த மாநில அரசுகள், மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் தீர்மானிக்குமாறு வேண்டுகிறேன். நாட்டில் உள்ள ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் மாதிரி கிராமம் ஒன்றை நிறுவுவதைக் கற்பனை செய்து பாருங்கள். விரைவிலேயே இந்தியாவின் ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு முன்மாதிரி கிராமம் இருக்கும்; கிராமப் பகுதிகளில் அடிப்படை தேவைகளை வழங்க நமக்கு உற்சாகம் தரும்; நமக்கு புதிய திசையை காட்டும்; ஆகவே நாம் Sansad Adarsh Gram Yojana திட்டத்தை முன்னெடுப்போம்.

எனது அன்பான சகோதர சகோதரிகளே, நமது அரசாங்கம் பதவி ஏற்றதில் இருந்து, இனிமேல் திட்டக்குழு என்ன ஆகும் என்பது குறித்து பத்திரிகைகளில் தொலைக்காட்சிகளில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. திட்டக்குழு நிறுவப்பட்டபோது, அப்போது இருந்த தேவைகள் மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையிலேயே அது செய்யப்பட்டது என்று நம்புகிறேன். சமீப ஆண்டுகளில், நாட்டின் வளர்ச்சிக்கு திட்டக்குழு அதன் வழியில் பங்காற்றி இருக்கிறது; அதை மதிக்கிறேன்; அதற்காகப் பெருமை கொள்கிறேன். ஆனால் தற்போது நாட்டில் நிலவும் சூழல் வித்தியாசமானது. இனியும், பொருளாதார நடவடிக்கைகளின் மையமாக அரசுகள் இல்லை; இந்த நடவடிக்கைகளுக்கான தளம் விரிவடைந்து உள்ளது. மாநில அரசுகள் வளர்ச்சியின் மையமாக இருந்து வருகின்றன; இதை ஒரு நல்ல அறிகுறியாகப் பார்க்கிறேன். இந்தியாவை நாம் முன் கொண்டு செல்ல வேண்டும் என்றால், மாநிலங்களை முன் செலுத்துவதால் மட்டுமே நிகழ முடியும்.

கடந்த 60 ஆண்டுகளில் இருந்ததை விடவும் இப்போது இந்தியாவின் கூட்டாட்சிக் கட்டமைப்பு மிகவும் முக்கியம் ஆகிறது. நமது கூட்டாட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்த, நமது கூட்டாட்சிக் கட்டமைப்பு துடிப்புள்ளதாக மாற, நமது கூட்டாட்சிக் கட்டமைப்பை வளர்ச்சியின் பாரம்பரியமாக எடுத்துச் செல்ல, பிரதமர் மற்றும் முதல்வர்களின் கூட்டு அணி வேண்டும்; மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு அணி முன்னோக்கிச் செல்ல வேண்டும்; இந்தப் பணியை செய்வதற்கு திட்டக்குழு பற்றிய (மீள்) பார்வை தேவை. செங்கோட்டைக் கொத்தளத்தில் இருந்து கூறுகிறேன் - இது மிகவும் பழமையான அமைப்பு முறை, புத்தாக்கம் செய்யப்பட வேண்டும். சில சமயங்களில் பழைய வீட்டைப் புதுப்பிக்க அதிகம் செலவாகும்; மனநிறைவையும் தராது. அதன் பிறகு, புதிய வீட்டையே கட்டி இருக்கலாமே என்று உணர்வோம். ஆகவே இன்னும் குறுகிய காலத்தில் திட்டக்குழுவுக்கு பதிலாக புதிய அமைப்பைத் தோற்றுவிப்போம்.

புதிய வடிவம், புதிய கட்டமைப்பு, புதிய உடல், புதிய ஆத்மா, புதிய சிந்தனை, புதிய திசை, புதிய நம்பிக்கை, படைப்பாற்றல் கொண்ட சிந்தனை, பொது - தனியார் கூட்டு, இயற்கை வளங்களின் உச்சப் பயன்பாடு, நாட்டின் இளைஞர் சக்தியின் பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் வளர்ச்சியை நாடும் மாநில அரசுகளின் விருப்பங்களை மேம்படுத்த, மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க, கூட்டாட்சிக் கட்டமைப்புக்கு அதிகாரம் வழங்க ஒரு புதிய அமைப்பை நிறுவுவோம். வெகு விரைவில், திட்டக் குழுவுக்கு பதிலாக செயல்படும் இந்த அமைப்புக்கான திசையை நோக்கி நகர இருக்கிறோம்.

சகோதரர்களே சகோதரிகளே இன்று ஆகஸ்ட் 15 - மகரிஷி அரவிந்தரின் பிறந்தநாள். ஒரு போராட்டக்காரராக இருந்து யோக குரு என்கிற சாதனை உயரத்தை எட்டியவர். இந்தியாவின் எதிர்காலம் குறித்து அவர் கூறுகிறார் - "உலக நன்மைக்கு இந்தியாவின் ஆன்மிக சக்தி மற்றும் ஆன்மீக பாரம்பரியம் முக்கிய பங்கு வகிக்கும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது." இத்தகைய உணர்வுகளை மகரிஷி அரவிந்தர் (அவ்வப்போது) எதிரொலித்தார். மகான்களின் சொற்களில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. ஞானிகள் துறவிகள் ரிஷிகள் கூடிய வாக்கியங்களில் எனக்கு மிகப் பெரும் நம்பிக்கை உள்ளது. அதனால்தான் இன்று செங்கோட்டை கொத்தளத்தில் இருக்கும்போது எனக்கு சுவாமி விவேகானந்தரின் சொற்கள் நினைவுக்கு வருகின்றன. அவர் கூறினார் - " இந்தியத் தாய் மீண்டும் எழுச்சி பெறுவதை என் கண் முன்னால் பார்க்கிறேன். என் தாய் இந்தியா, உலக குருவாக அமர்ந்திருப்பாள். ஒவ்வோர் இந்தியரும் மனிதகுல நன்மைக்காக சேவை புரிவார். இந்தியாவின் இந்த மரபு, உலக நன்மைக்குப் பெரிதும் உதவியாய் இருக்கும்." இந்தச் சொற்களை சுவாமி விவேகானந்தர் தனக்கே உரித்தான பாணியில் கூறினார்.

நண்பர்களே, சுவாமி விவேகானந்தரின் சொற்கள் ஒருபோதும் உண்மையற்றதாக இருக்கவே முடியாது. சுவாமி விவேகானந்தரின் சொற்கள், உலக குருவாக இந்தியாவை அவர் கண்ட காட்சி, அவரின் தொலைநோக்குப் பார்வை, அவரது கனவை நினைவாக்க நமக்கு உத்வேகம் தருகின்றன. திறன் வாய்ந்த இந்த தேசம், இயற்கை வரங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட இந்த தேசம், இளைஞர்களின் இந்த தேசம் வரும் நாட்களில் உலகத்துக்காகப் பலவற்றைச் செய்ய முடியும்.

சகோதரர்களே சகோதரிகளே, நமது வெளியுறவுக் கொள்கையைப் பற்றி அதிகம் பேசப்படுகிறது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, பல பரிமாணங்களைக் கொண்டதாக இருக்க முடியும் என்று தெளிவாக நம்புகிறேன். (I clearly believe that India's foreign policy can be multi-dimensional) ஆனாலும் ஒரு முக்கியமான விஷயத்தை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். விடுதலைக்காகப் போராடிய போது நாம் ஒன்றாகப் போரிட்டோம். அந்த சமயத்தில் நாம் தனித் தனியாக இல்லை. நாம் சேர்ந்து இருந்தோம்.

நம்முடன் எந்த அரசாங்கம் இருந்தது? நம்மிடம் என்ன ஆயுதங்கள் இருந்தன? காந்தி இருந்தார், சர்தார் படேல் இருந்தார், லட்சக்கணக்கான விடுதலைப் போராட்ட வீரர்கள் இருந்தார்கள், எதிரே ஒரு பிரம்மாண்டப் பேரரசு இருந்தது. அந்தப் பேரரசுக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் வெற்றி பெறவில்லையா? அந்நிய சக்திகளை நாம் தோற்கடிக்க வில்லையா? அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறக் கட்டாயப்படுத்த வில்லையா? நாம் ஒன்றாய் இருந்தோம். நமது முன்னோர்கள் நமது வலிமையைக் காட்டினர். அரசு அதிகாரம் இல்லாமல், ஆயுதங்கள் இல்லாமல், போதிய வளங்கள் கூட இல்லாமல் இந்திய மக்கள் அத்தகைய பிரம்மாண்ட பேரரசை நீக்க முடிந்தது என்றால் நண்பர்களே, வறுமையை நம்மால் முறியடிக்க முடியாதா? வறுமையை நம்மால் தோற்கடிக்க முடியாதா? வறுமையை ஒழித்தல் இன்றைய தேவை.

எனது அன்பான 125 கோடி மக்களே, வறுமையை ஒழிக்க அதற்கு எதிராக வெற்றி காணத் தீர்மானம் கொள்வோம். இந்தியாவில் வறுமை ஒழிப்பு என்கிற கனவுடன் முன்னேறுவோம். நமது அண்டை நாடுகளுக்கும் இந்த பிரச்சினை இருக்கிறது. சார்க் நாடுகள் அனைத்தும் சேர்ந்து வறுமைக்கு எதிரான போரை ஏன் திட்டமிடக் கூடாது? நாம் இணைந்து போராடி வறுமையைத் தோற்கடிப்போம். கொல்வதும் கொல்லப்படுவதும் இன்றி வாழ்கிற உணர்வு எத்தகையது என்பதை ஒரு முறையேனும் (முயற்சித்து) பார்ப்போமே.. இந்த மண்ணில் தான் சித்தார்த்தரின் வாழ்க்கைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. ஒரு சகோதரர் தனது அம்பால் பறவையைத் தாக்கினார் அவரது மற்றொரு சகோதரர் அந்த அம்பை வெளியே எடுத்து அந்தப் பறவையைக் காப்பாற்றினார். அவர்கள் இருவரும் தமது தாயிடம் சென்று கேட்டார்கள் - இந்தப் பறவை யாருக்குச் சொந்தம்? வீழ்த்தியவருக்கா? காப்பாற்றியவருக்கா? காப்பாற்றியவருக்குத்தான் என்று தாயார் சொன்னார். கொலை செய்பவரை விட காப்பாற்றுபவருக்கு தான் வலிமை அதிகம் என்று தாய் சொன்னார். அதுதான் எதிர்காலத்தில் அவரை புத்தர் ஆக்கியது. அதனால்தான், வறுமைக்கு எதிரான போரில் அண்டை நாடுகளின் ஒத்துழைப்பை நாடுகிறேன்.

சார்க் நாடுகளுடன் சேர்ந்து இதன் முக்கியத்துவத்தை உருவாக்க முடியும். உலகில் நாம் ஒரு சக்தியாக உருவெடுப்போம். தோளோடு தோள் சேர்ந்து வறுமைக்கு எதிராக போராடி வெற்றி பெறும் கனவுடன் நாம் சேர்ந்து பணியாற்றுவது அவசியம் ஆகும். நான் பூடான், நேபாளம் சென்று இருந்தேன். பதவி ஏற்பு நிகழ்ச்சியில் சார்க் நாடுகள் அனைத்திலும் இருந்து பிரமுகர்கள் பங்கேற்றார்கள். இது ஒரு நல்ல துவக்கம் ஆகும். இது நிச்சயமாக நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். நமது நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்; உலக நன்மைக்குப் பயன் தருவதாக இருக்க வேண்டும் என்று நம்புகிறேன். இதுவே இந்தியாவின் சிந்தனையும் ஆகும். இத்தகைய கரங்கள் உதவிக்கு நீள வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. இந்தக் கனவுகளை நிறைவேற்றும் வகையில் நாம் முன்னேறிச் செல்ல முயற்சிக்கிறோம்.

சகோதரர்களே சகோதரிகளே, இன்று ஆகஸ்ட் 15 - நமது நாட்டுக்காக ஏதேனும் செய்யத் தீர்மானிப்போம். நாம் நமது நாட்டுக்கு நன்மை செய்பவர்களாக இருப்போம். நமது நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லத் தீர்மானிப்போம். சகோதரர்களே சகோதரிகளே அரசாங்கத்தில் உள்ள எனது சகாக்களே ஓர் உறுதி கூறுகிறேன் - நீங்கள் 12 மணி நேரம் உழைத்தால் நான் 13 மணி நேரம் உழைப்பேன். நீங்கள் 14 மணி நேரம் உழைத்தால் நான் 15 மணி நேரம் உழைப்பேன். ஏன்? ஏனென்றால் நான் ஒரு பிரதமராக உங்களிடம் இல்லை; முதல் சேவகனாக இருக்கிறேன். சகோதரர்களே சகோதரிகளே, இந்த நாட்டுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று உறுதி கூறுகிறேன். உலக நன்மைக்காக இந்த நாடு பணியாற்றும் என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். இந்த எதிர்காலத்தைக் கொண்டு வரவே இந்துஸ்தான் பிறந்துள்ளது, இந்தியா பிறந்துள்ளது. இந்த நாட்டின் நலனுக்காக முழு மனதுடன் 125 கோடி மக்களும் முன்னேறிச் செல்ல வேண்டும்.

மீண்டும் ஒரு முறை, தாய் இந்தியாவை பாதுகாக்கும் எல்லா பாதுகாப்பு படைகள் துணை ராணுவத்தினர் மற்றும் எல்லா பாதுகாப்பு படைகளின் தியாகங்கள், அர்ப்பணிப்பு உணர்வை எண்ணிப் பெருமைப் படுகிறேன். நாட்டு மக்களுக்குக் கூறுவேன் - இடையராத கண்காணிப்பே சுதந்திரத்துக்கான விலை ஆகும். நமது ராணுவம் விழிப்புடன் இருக்கிறது. நாமும் விழிப்புடன் இருத்தல் வேண்டும். நமது நாடு புதிய உச்சங்களைத் தொட போட வேண்டும் என்கிற தீர்மானத்தோடு முன்னேறுவோம். முழு சக்தியுடன் இதனை என்னோடு சேர்ந்து உரக்கச் சொல்லுங்கள்: பாரத் மாதா கி ஜே! பாரத் மாதா கி ஜே! பாரத் மாதா கி ஜே! ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x