Published : 19 Jan 2018 09:02 PM
Last Updated : 19 Jan 2018 09:02 PM

ரஜினி அரசியல்: 12 - வகுப்புவாதி; ஆன்மிகவாதி வேறுபாடு

அண்ணாதுரை திமுக கட்சியை உருவாக்கி 18 ஆண்டுகள் கழித்தே ஆட்சியில் அமர்ந்தார். கருணாநிதி திமுகவில் முக்கிய இடத்திற்கு வந்தும் அதே அளவு வருடங்கள் பிடித்தே முதல்வர் நாற்காலிக்குள் தன்னை பொருத்திக் கொண்டார். எம்ஜிஆரும் திமுகவில் 1952-ல் சேர்ந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து 1972-ல் கட்சி ஆரம்பித்து, 1977-ல் (அரசியலில் 25 ஆண்டுகள் பணியாற்றியே) ஆட்சிக்கட்டிலைப் பிடித்தார். ஜெயலலிதாவும் கூட 1981-ல் அதிமுகவில் இணைந்து அரசியலில் பத்தாண்டு கடும் உழைப்புக்குப் பின்பே 1991-ல் முதல்வர் ஆனார்.

அப்படி நேரடி அரசியலில் இன்று வரை இறங்காத ரஜினி 1990களில் தொடங்கி வெறும் அரசியல் சர்ச்சைகளில் மட்டுமே உலா வந்திருக்கிறார். ஒன்று அரசியலில் இறங்கி மக்கள் பணியாற்ற வேண்டும். அல்லது அரசியலுக்கே வராமல் தானுண்டு தன் குடும்பம் உண்டு; தன் தொழில் உண்டு என்று இருக்க வேண்டும். இவரோ மற்ற எவருமே செய்யாத அரசியல் சர்ச்சைக்குள் 1990 முதலே சிக்குவதும், கழுவின மீனில் நழுவின மீனாக இருப்பதுமே வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார். அது அரசியலில் வெற்றியடைய வைக்கும்? வெற்றியடைய வைக்குமோ இல்லையோ! 27 ஆண்டுகால ரஜினி-அரசியல் சர்ச்சைக்கு அழுத்தமான ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என்பதே நிஜம். அதற்காகவேனும் ரஜினியின் முடிவை நாம் வரவேற்கத்தான் வேண்டும். அதெல்லாம் இருக்கட்டும். அவர் 1996-ல் தானே அரசியல் வசனத்தை உதிர்த்தார்? 1990ல் எங்கே, எப்படி? நீங்கள் கேட்பது புரிகிறது.

'ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படைச்ச ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது!' என்று 1996-ல் தமாகா - திமுகவிற்கு கொடுத்த அரசியல் வாய்ஸ் வைத்துதான் ரஜினியைச் சுற்றி இன்றளவும் அரசியல் சுழல்கிறது. அப்போதே அவருடைய அரசியலுக்கான வாய்ப்பு முடிந்துவிட்டது என்பதுதான் பெரும்பான்மையோரின் கருத்து.

'அரசியலுக்கே நான் வரலைன்னு எல்லோரும் சொல்றாங்க. நான் 1996லேயே அரசியலுக்கு வந்துட்டேன். அப்ப நான் நினைச்சிருந்தா 1996லேயே அரசியலில் பெரிய பதவியை அடைஞ்சிருக்க முடியும். எனக்கு பதவி ஆசை கிடையாது. அப்பவே பதவிக்கு ஆசைப்படாதவன் 20 வருஷம் கழிச்சு இப்பவா ஆசைப்படுவேன்!' என்று ரஜினியே இப்போது ரசிகர்களிடமும் முழங்கியிருக்கிறார்.

உண்மையில் ரஜினியைச் சுற்றி 1995-1996ல்தான் அரசியல் சர்ச்சை சுழன்றதா? 'என்னை வாழ வைக்கும் தெய்வங்களே!' என்று எப்போது அவர் தன் மேடைப் பேச்சுக்கு தொடக்க வரியை அமைத்தாரோ, அப்போதே அவர் அரசியல்வாதி ஆகிவிட்டார். அந்த தொடக்க வரியை எப்போது உச்சரிக்க ஆரம்பித்தார் என்பது அவருக்கே வெளிச்சம்.

ஆனால் அதிகாரபூர்வமாக, பத்திரிகைகள் 1985-1990 வாக்கிலேயே அவரை அரசியல்படுத்த ஆரம்பித்துவிட்டன. அதற்கேற்ப அவர் பேட்டிகளும் வெளியாகியிருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் ஆன்மிக அரசியல் என்ற சொற்றொடரை அப்போதே பயன்படுத்தியிருக்கிறார் என்பதுதான் அதில் உள்ள ஆச்சர்யம். 20.02.1985ல் ஜூனியர் விகடன் இதழ் (இதழுடன் இலவச இணைப்பு) ரஜினி அரசியலில் நுழைவாரா? என்ற கேள்வியுடன் ஒரு ஐந்து மணி நேர பேட்டி என்ற தலைப்பிலான RajiniFans.com சிறப்பிதழை அட்டைப்படக் கட்டுரையாக வெளியிட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து 5-11, 18.03.1987-ல் அதே ஜூனியர் விகடன் இதழ் அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றுகிறார்கள். ரஜினியுடன் ஒரு பேட்டியை அட்டைப்படத்துடனே அச்சிட்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து பல்வேறு பத்திரிகைகளிலும் அவரைப் பற்றி பேட்டி என்றாலும், ஹேஸ்யம் என்றாலும் அரசியல் பஞ்ச் இல்லாமல் இருந்ததில்லை. 1990-ல் ஒரு பல்சுவை வார இதழில் (உதயம்) ரஜினியின் ஒரு பேட்டி வெளியாகியிருக்கிறது. நிருபர் அவரிடம் கேட்கிறார். 'நீங்கள் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தீவிரமாக ஈடுபட திட்டமிட்டிருப்பதாக சொல்கிறார்களே உண்மையா?' எனக் கேட்கிறார்.

''நான்சென்ஸ். நான் மட்டும் அரசியலில் ஈடுபட என் மனதைப் பக்குவப்படுத்தி இருந்தேன்னு வச்சுக்குங்க. பிரமாதமா, பிரம்மாண்டமா அரசியல் பண்ணிக் காட்டுவேன். ஆனா எனக்கு அதில் விருப்பமே கிடையாது. நான் நடிக்க வேண்டிய படங்கள் கைவசம் எக்கச்சக்கமா இருக்கு. அதை முடிச்சுக் கொடுக்கவே நேரமில்லாம இருக்கும்போது நான் ஏன் அரசியலில் குதிக்கணும். அதுலயும் காங்கிரஸ் கட்சியில் ஏன் சேரணும்? எல்லாமே பொய். வதந்தி. விஷமிகள் வேணும்னே திட்டம் போட்டு பரப்பறாங்க. அரசியலில் குதிக்கிறதை விட வேற நல்ல காரியங்கள் நிறையவே இருக்கு!'' என்றார் ரஜினி.

'அரசியலில் ஆர்வம் இல்லாத நீங்கள் தமிழ்நாடு முழுக்க ரசிகர் மன்றங்களை உருவாக்கி ஏன் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்து வருகிறீர்கள்?' என நிருபரிடம் புறப்படுகிறது அடுத்த கேள்வி. அதற்கும் பட்டென்று ரஜினியிடம் பதில் வருகிறது.

''ஒரு உண்மையை தெரிஞ்சுக்குங்க. என் பெயரில் ரசிகர் மன்றங்களை நான் உருவாக்கவில்லை. மக்களேதான் உருவாக்கிட்டாங்க. ஏன்னா அவங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கு. அவங்க திரையில் பார்த்து ரசித்த ஹீரோவை, அவங்களுக்கு பிடிச்ச ஹீரோவை நேரில் ஒரு தடவை பார்க்கணும்னு ஆசைப்படறாங்க. அதுக்காக செலவு செஞ்சு சொந்த ஊரிலிருந்து பல மைல் தூரம் கடந்து சென்னைக்கு வந்து என்னைப் பார்க்கிறாங்க. அவ்வளவுதான். மற்றபடி கஷ்டப்படறவங்களுக்கு உதவி செய்றேன். யெஸ். ரஜினிகாந்த் 20 வருஷங்களுக்கு முன்னால சின்னப் பையனா, சாதாரண சிவாஜிராவ் கெய்க்வாட் ஆக வீதியில திரிஞ்சவன். இன்னிக்கு சினிமாவுல நடிச்சு பணக்காரனாயிட்டேன். என்னிடமுள்ள பணத்தை உதவி கேட்டு வர்றவங்களோட முடிஞ்சளவு பகிர்ந்து கொள்ளணும்னு முயற்சி பண்றேன். அது தப்பா. அந்த சின்ன சின்ன உதவிகளுக்கெல்லாம் அரசியல் உள்நோக்கம் கற்பிக்காதீங்க!'' என்றார் ரஜினி.

அரசியலையும், நாட்டில் நடக்கும் பிரச்சினைகள் குறித்த கேள்விக்கு, ''பொதுமக்களை அரசியல்வாதிகள் சுரண்டுவதாக நினைக்கிறேன். இது என் உறுதியான கருத்து. அப்பாவி மக்களின் அறியாமையை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கிறாங்க!'' என்றார் உறுதியுடன்.

உங்களுக்கு மதப்பிடிப்பு அதிகம் என்றும், சந்நியாசி போல் நடந்து கொள்வதாகவும் கருத்து நிலவுகிறேதே? என கேள்வி.

''மதத்தின் மேல் நம்பிக்கை வைக்கிற வகுப்புவாதி அல்ல நான். நானொரு ஆன்மிகவாதி. மதங்கள் மக்களை குழப்பியடிக்குது. எனக்கு கடவுள் மேல நம்பிக்கை இருக்கு. ஆனா மதத்தின் மேல இல்லை. அடிப்படையில் நான் ஒரு மனிதன். அடுத்தபடியா நான் இந்தியன். அவ்வளவுதான். மனுசனை மனுசன் மதிக்கக் கத்துக்கிட்டா போதும் பிரபஞ்சப் பேரமைதி உருவாகி விடும்!'' என்றார் ரஜினி.

சாமான்ய நிலையிலிருந்து பிரபலமானவர் ஆன்மிகம் பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறதே என உப கேள்வி. அதற்கும் ரஜினியிடம் சளைக்காமல், ''ஏன் பேசக்கூடாது? நான் மனிதன் இல்லையா? எனக்கு நிரந்தர அமைதி தேடி அலையும் ஆன்மா இல்லையா? நான் வாழ்க்கையை வித்தியாசமா பார்க்கிறேன். அதனாலதான் மத்தவங்கள்ல இருந்து நான் வித்தியாசமானவனா தெரியறேன். என் எதிர்கால வாழ்க்கை பத்திக்கூட நான் தெளிவான யோசனைகள் வச்சிருக்கேன்!'' என்றார் பதிலாக.

1989-ல் பிரபல இதழில் வெளிவந்த ரஜினி பேட்டி ஒன்று.

கண்மூடித்தனமாய் ஹீரோ ஒர்ஷிப் செய்கிறார்கள் இன்றைய சினிமா ரசிகர்கள். இது சரியானதாய் தோன்றுகிறதா?

சாதாரண சிவாஜி ராவ் என்பவனை இன்றைக்கு சூப்பர் ஸ்டார் ஆசனத்தில் கொண்டு போய் உட்கார வைத்திருக்கிறார்கள். யார்? ரசிகர்கள். இன்றைக்கு எனக்காக உயிரையும் விட காத்திருக்கிறார்கள். ஏன்? அதில் கண்மூடித்தனமான ஹீரோ ஒர்ஷிப் இல்லை. அது அன்பு. ஆத்மார்த்தமான ஈடுபாடு. அவர்களுக்காக என்ன வேண்டுமானாலும் நான் செய்யத் தயார். தேவையெனில் என் உயிரையும் கொடுப்பேன்.

உங்கள் வாழ்க்கை, உங்களுக்கு கற்றுத்தந்த பாடம்?

பேசித் தெளிவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x