Last Updated : 28 Nov, 2017 06:21 PM

 

Published : 28 Nov 2017 06:21 PM
Last Updated : 28 Nov 2017 06:21 PM

சின்னச் சின்ன வரலாறு: உப்பு தான் சம்பளம்!

பாட்ஷா பட ஸ்டைலில் இது கூறுகிறது...

"எனக்கு இன்னொரு பெயரும் உண்டு "வெள்ளைத்தங்கம்".

எது அந்த இது?

அட, நம்ம உப்புதாங்க!

எலே... உப்பு பெறாத விஷயத்துக்கு அடிச்சிக்கிறீங்க... நம் வழக்காடலில் சொல்லப்படும் சாதாரண வார்த்தைகள். அதாவது உப்புக்குக்கூட உதவாத அவ்வளவு சின்ன விஷயமாம்.

இப்படிப்பட்ட வாக்கியங்கள் நமக்கு உப்பின் மேன்மையைக் கீழிறக்கி காட்டுகின்றன. ஆனால் உப்பு ஓர் உப்பு சப்பில்லாத விஷயமல்ல.. சப்பென்று அறையும் உப்பின் வரலாறு.

நம் வரலாறுகள் பல, வளர்ச்சிகள் பல, போர்கள் பல. இப்படிப் பல பலவற்றிற்கு அடிப்படைக் காரணம் உப்பு. நம்ப முடியவில்லையா? உப்பு பண்டமாற்று முறை வர்த்தகத்தின் ஒரு முன்னோடி பொருள். உப்பைக் கொடுத்து மாற்றாகத் தங்கம், தந்தம், தோல், மிளகு, சர்க்கரை, கோலா கொட்டைகள், மணிகள் வாங்கப்பட்டன. வரலாற்றுக் கதைகளைப் பார்த்தால் இந்த வெள்ளைத்தங்கம் மஞ்சள் தங்கத்தைவிட அதிக மதிப்பு வாய்ந்த பொருளாக இருந்திருக்கிறது. இவை தவிர உப்பால் மிக அதிகமாக வாங்கப்பட்டது..அடிமைகள்.

அதிகமாகக் கிடைக்காத உப்பு மலிந்து கிடைத்த அடிமைகளை வாங்க உபயோகப்பட்டது. இப்படி வாங்கப்பட்ட அடிமைகளை உப்புச் சுரங்கங்களில் மேலும் உப்பை எடுக்க உபயோகப்படுத்தி, மேலும் அடிமைகள் வாங்கப்பட்டனர். மார்க்கோ போலோவால் எழுதப்பட்ட வரலாற்றுச் சரிதத்தில், பேரரசர் முகம் பொதிக்கப்பட்ட உப்பு கேக்குகள் திபெத் நாட்டில் அமோல் எனும் நாணயமாக உபயோகத்தில் இருந்ததாகக் கூறுகிறது. 1935 வரையில் பொதுவான பரிமாற்றப் பண்டமாக உப்பு இருந்திருக்கிறது.

மற்றுமொரு சுவாரஸ்ய விஷயம் 1812-ல் நடந்த போரின்போது அமெரிக்க அரசாங்கம் போதிய பணம் இல்லாத காரணத்தால் போர் வீரர்களுக்கு உப்புத்தண்ணீர் கூலியாக கொடுக்கப்பட்டதாம்!!! அட சம்பளம் ஒரு பக்கம் இருக்கட்டும் ,பல போர்களின் அடிப்படை காரணம் உப்பளங்களின் மேல் அதிகாரம் செலுத்தபோட்டி. ரெவல்யூஷனரி போர் அமெரிக்காவுக்கும் பிரட்டனுக்கும் நடந்த போது, பிரட்டென் அமெரிக்காவிற்குச் செல்லும் உப்பு போக்குவரத்தை துண்டித்து அதனால் அமெரிக்கா உணவு பண்டங்களை பாதுகாக்க உப்பில்லாமல் போரில் பின்னடைந்ததாம். மிக முக்கியமான ஃபிரஞ்சு புரட்சியின் அடிப்படைக் காரணம் பிரான்ஸ் நாட்டில் விதிக்கப்பட உப்புவரி.

இப்போது நாம் எப்படி ஜிஸ்டி வரி ஏற்றத்தை எதிர்த்து போராடுகிறோமோ, அதேபோல் உப்பு வரியை எதிர்த்துப் பல போராட்டங்கள் வரலாற்றில் கூறப்படுகிறது. இதுஒரு வரி ஈட்டும் பொருளாக இருந்திருக்கிறது. இத்தாலி, பிரிட்டன், ஃப்ரான்ஸ் போன்ற நாடுகளில் எப்போதெல்லாம் நாட்டு வரவு செலவில் துண்டு விழுகிறதோ அப்போது முதலில் உயர்த்தப்படுவது உப்பு வரி.

இவ்வளவு சொல்லிவிட்டு இந்த உப்பு நமக்கு எப்படி சுதந்திரம் வாங்கிக்கொடுத்தது என்பத்தைப் பார்க்காவிட்டால் நாம் உப்புப்போட்டு சாப்பிடுவதில்லை என ஆகும்...1930 க்களில் காந்தியால் நடத்தப்பட்ட 'சால்ட் மார்ச்' நமக்கு சுதந்திரத்தையும் உப்பையும் பெற்றுக்கொடுத்திருக்கிறது. அந்தச்சமயத்தில் பெரும்பாலான உப்பு வழங்கல் பிரிட்டனிலிருந்துதான். நம் நாட்டில் உப்பளங்கள் இருந்தும் பிரட்டென் அதன் உற்பத்தியைத் தடை செய்திருந்தது.

கூடுதலாக நாம் இறக்குமதி செய்த உப்பின் மேல் வரியும் விதித்தது. இதைக்கண்டித்து தடை செய்யப்பட்ட உப்பு உற்பத்தியை எதிர்த்து காந்தி ஒரு கைபிடி அளவு மண் கையில் எடுத்து "இப்போது பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அடித்தளம் அசையப்போகிறது என்றபடி ஒரு குவளையில் கடல்நீரை எடுத்துக்காய்ச்சி உப்பாகக் கையில் எடுத்து நம் சுதந்திரத்தை பெற்றுத்தந்தார்.

இது மட்டும் நடக்காமல் போயிருந்தால்...யார் கண்டது நாம் கோக்கோ கோலாவுடன் உப்பையும் இன்றும் இங்கிலாந்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்துகொண்டிருப்போம். ரோம் நாட்டில் உப்பு போக்குவரத்திற்காக தனி பாதை....சால்ட் சாலை.... உருவாக்கப்பட்டது.

ரோமானியர்கள் தான் முதன்முதலாக வீரர்களுக்கு உப்பை சம்பளமாக் கொடுக்கத்தனர்.  லத்தீனில் இதை சலேரியும் அதாவது உப்பு சம்பளமாக கொடுக்கப்பட்டது என்று சொல்லப்பட்டு தற்போது salary என்று நம் சம்பளம் சொல்லப்படுவதற்கான காரணம்.

அதே போல் Erie canal என்று சொல்லப்படும் ஒரு பொறியியல் சாதனையின் மற்றுமோர் பெயர் "the ditch salt built” காரணம் உப்பிலிருந்துவந்த வரிப்பணத்தின் மூலம் இந்தக்கால்வாய் நியூயார்கின் ஹாட்சன் நதியையும் க்ரேட் ஏரியையும் இணைத்து அமைக்கப்பட்டது.

சரி...இந்த உப்பு எப்படி உற்பத்திசெய்யப்படுகிறது? இரண்டு முறைகள் உள்ளன. கடல்நீரை அறுவடை செய்து அல்லது கடலின் அருகில் வருடங்களாகப் புதைந்து கிடக்கும் உப்புச் சுரங்கங்களிலிருக்கும் உப்புப்பாறைகளை உடைத்துச் சுத்திகரிப்பது. 6000 பிசி-யில் சீனாவில் லேக் யுன்செங்க் எனுமிடத்தில் இந்த உற்பத்தி முதல் முதல் தோன்றியதாக வரலாறு. இதன் தேவை எதனால் உணரப்பட்டிருக்கும்? யோசித்துப்பார்த்தால், மனிதன் மிருகங்களை அடித்துத் தின்றுகொண்டிருந்தபோது உப்பு தேவை படவில்லை.

காரணம் மிருகங்களின் உடலிலேயே இருந்த உப்பு சத்து போதுமானதாக இருந்தது. ஆனால் எப்போது நாம் சமைக்கத்தொடங்க ஆரம்பித்தோமோ அப்போதே உப்பின் தேவையும் ஆரம்பமாகிறது. நம் உடலுக்குத் திரவ சமநிலைப்படுத்த, தசைகள் மட்டும் நரம்புகளின் சீரான நிலைக்கு உப்பு தேவை. இதில் உள்ள சோடியம் மற்றும் க்ளோரைட் நம் சுவாசம் மற்றும் செரிமானத்திற்கு தேவை.

சத்துக்கள் மற்றும் ஆக்சிஜென்னை உடல்முழுவதும் சென்று சேர்க்கவும் தேவைப்படுகிறது. மற்றும் உப்பு ஒரு பாக்டீரியா தடுப்புப்பொருள்.நம் சாப்பாட்டுபொருட்களை நாள்பட வைப்பதற்குத் தேவையான உப்பு அவசியம். ரோமானியர்கள் மம்மிஃபிகேஷன் எனும் இறந்த உடலைப் பதப்படுத்தலுக்கு உப்பைத்தான் உபயோகித்தனர்.

இதைத்தவிர உப்புக்கும் மதங்களுக்கும் நிறைய தொடர்பு இருந்திருக்கின்றது. எல்லா மதங்களுமே உப்பை தீய சக்தியை அப்புறப்படுத்த உபயோகித்திருக்கின்றன. ஜூடாஸ் உப்பை நாம் இப்போது உபயோகிக்கும் ஸ்டாம்ப் பேப்பர் போல் கருதி, இது மனிதனுக்கும் கடவுளுக்கும் ஏற்பட்ட ஒரு ஒப்பந்த பத்திரமாகக் கண்டனர்.

இஸ்லாமியர்கள் ஒரு கைப்பிடி உப்பைக்கொடுத்தால் பேரம் முடிந்ததாகக் கருதினர். இஜிப்தியர்கள், கிரேக்கர், ருமானியர் அனைவரும் உப்பைக் கடவுளுக்குப் படைத்தனர். ஜப்பானியர்கள் ஒரு நாடகம் நடப்பதற்கு முன் மேடை ஓரம் உப்பைத் தெளித்து கண்திருஷ்டி கழித்தனர். ஹேய்டியில் ஒரு ஜோம்பியை உயிர்கொள்ளச்செய்ய உப்புத்தேவை என நினைத்தனர். ஜெர்மானியர்கள் புதிதாகத் திருமணம் முடிந்து வீடு வரும் புதுமணத் தம்பதியர் வீட்டில் எல்லா மூலைகளிலும் ஒரு பிடி உப்பைத் தூவி வைப்பார்கள்.

எதிர்மறை கதிர்களை தடுப்பதற்கு. பைபிளில் முப்பது இடங்களில் உப்பைப்பற்றி கூறப்படுகிறது. புத்த மதத்தில் இறந்த வீட்டுக்குச் சென்று வீடு திரும்பும்போது, ஒரு பிடி உப்பை அள்ளி தலை சுற்றி எறிந்துவிட்டுத்தான் வருவார்கள். இறந்த உடலிலிருந்த ஆவி முதுகில் அமர்ந்து சவுகர்யமாய் புது வீடு நுழைவதைத்தடுக்க. இவ்வளவு ஏன் ,1933 ல் தலாய் லாமா ஓர் உப்புப்படுக்கையில் உட்கார்ந்த நிலையில் புதைக்கப்பட்டார். ஸ்காட்லேண்டில் பீர் பானம் தயாரிப்பில் உப்பு சேர்க்கப்பட்டது காரணம் அது அற்புதமான பாணமாக வருவதைத் தடுக்கும் துர்தேவதைகளை பக்கம் வராமல் தடுக்க.

ஆனால் தற்போது உப்பின் கெடுதல் தன்மைபற்றி மிக அதிகம் பேசப்பட்டு வருகிறது. அதிகமான சோடியம் உட்கொள்ளப்படுவதால் ரத்த அழுத்தம் அதிகரித்து சிறுநீரகம், இதயம் பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. எது எப்படியோ, உங்கள் உணவில் வேண்டுமானால் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

ஆனால் வீட்டில் போர்பம்ப் போடும்போது நூறு அடியில் உப்புக்கறிக்கும் கடல் நீர் ப்ரவாகமாக வந்தால்... கவலை வேண்டாம். உங்கள் வீட்டில் வெள்ளைத் தங்கம் ஆறாய்... நீராய் ஓடப்போகிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x