Published : 04 Sep 2023 02:22 PM
Last Updated : 04 Sep 2023 02:22 PM

செங்கோட்டை முழக்கங்கள் - 13: அளவுக்கு அதிகமான விடுமுறையால் பலவீனம் | 1959

இந்தியா சுதந்திரம் அடைந்து பன்னிரெண்டு ஆண்டுகள் கழித்து 1959-ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில்தான் பிரதமர் நேரு பல புதிய தளங்களில் புதிய துறைகளில் தனது கருத்துகளைப் பதிவு செய்கிறார். ஒற்றுமை, சகோதரப் பாசம், சுதந்திரப் போராட்ட வரலாறு உள்ளிட்ட ‘வழக்கமான’ சங்கதிகள் இருந்தாலும், ஐந்தாண்டுத் திட்டங்கள், பெரிய தொழிற்சாலைகள், கிராமப்புற மேம்பாடு, அரசு அலுவலர்களின் பங்கு… இப்படி பல முக்கிய அம்சங்களைத் தொட்டுச் செல்கிற இந்த உரை, சுவாரஸ்யமான ஓர் அம்சத்தையும் நன்கு எடுத்துரைக்கிறது. அதுதான் ‘அலுவலக விடுமுறை நாட்கள்’. ஆண்டுதோறும், இத்தனை விடுமுறை நாட்கள் நமக்குத் தேவையா என்று வினவுகிறார் பிரதமர் நேரு. இதற்குப் பின்னர் வேறு எந்தப் பிரதமரும் அதிக விடுமுறை நாட்கள் குறித்துக் கவலைப்படதாய்த் தெரியவில்லை. அந்த வகையில் 1959 ஆகஸ்ட் 15 அன்று பிரதமர் நிகழ்த்திய செங்கோட்டை முழக்கம் – தனித்துவம் மிக்கது. இனி… பிரதமர் ஆற்றிய 1959 சுதந்திர தின உரை இதோ:

“இன்று நாம் மீண்டும் சுதந்திர இந்தியாவின் ஆண்டு விழாவைக் கொண்டாடக் கூடி இருக்கிறோம். என்னவெல்லாம் செய்துள்ளோம் என்று பின்னோக்கிப் பார்ப்போம், இனி என்ன செய்யப் போகிறோம் என்பதையும் பார்ப்போம். 12 ஆண்டுகள் ஆகி விட்டன; ஒரு நாட்டின் 12 ஆண்டுகள் என்பது மிகக் குறுகிய காலம் ஆகும். இங்கே... டெல்லியில்... நமது நாட்டில் உள்ள கல்லும் மண்ணும் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது. இந்த 12 ஆண்டுகளில் பழைய பிரச்சினைகளை விரட்டப் பார்த்தோம்; நீண்டகால வறுமையை விரட்ட முயற்சித்தோம்.

அடிமைத் தனத்தை விரட்டியதை விடவும் வறுமை ஒழிப்பு மிகக் கடினம் ஆனது. ஏனென்றால், அதற்கு முதலில் நமது பலவீனத்தை ஒழிக்க வேண்டும்; நமது முதுகின் மீதுள்ள சுமைகளைக் குறைக்க வேண்டும். 12 ஆண்டுகளில் என்னவெல்லாம் நடந்தன..? என்னவெல்லாம் நடக்கவில்லை..? நிறைய நல்ல விஷயங்கள்... சில மோசமான விஷயங்கள் நடந்தன. நமது பலவீனத்தை அது காட்டியது. நமது சரித்திரம் இதைக் காட்டும்.

உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் எண்ணற்ற பிரச்சினைகளை சந்தித்தோம். சுயநலம் மற்றும் பேராசையால் நம்மில் சிலர் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்தனர். சமுதாயத்துக்கு நல்லதை மறந்து விட்டோம். நாம் நாட்டுக்குக்கான பெரிய காரியங்களை சாதிக்க வேண்டி இருக்கிறது என்பதை மறந்து விட்டோம். இப்போதும் நம்மில் சிலருக்கு சில தொல்லைகள், சில பிரச்சினைகள் இருக்கின்றன. இன்னமும் இந்தப் பிரச்சினைகளில் இருந்து முற்றிலும் வெளி வந்துவிடவில்லை.

பணவீக்கம் உள்ளிட்ட சில பிரச்சினைகளில் நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை என்கிற நிலைதான். ஆனால், இந்த நிலைமை நிச்சயம் கட்டுக்குள் வந்து விடும். மனிதனின் பேராசையால் விளைந்ததை அவன் சந்தித்துத்தான் ஆக வேண்டும். இன்று நாம் யார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். காந்திஜி நம்முடன் இருந்த நாட்களை நினைவுகூர்வோம். அவரைப் பின் தொடர்ந்ததால் நாம் வெற்றி பெற்றோம். எந்த அளவுக்கு அதனை நாம் நினைவில் கொண்டுள்ளோம்? நாட்டு நிர்மாணப் பணியை நினைவில் கொள்வோம்.

நமது நாட்டு ஒற்றுமையைக் கட்டுவித்தல் முதல் கடமை. தனித்தனி பிரிவுகளாகப் பிரிந்து கிடத்தல் கூடாது. மாநிலங்கள், மொழிகள், சாதிகள், மதம் அல்லது, வேறு எதுவாக இருந்தாலும். இந்தப் பிரிவுகளால் நாம் வலிமையை இழந்தோம். வீழ்ந்தோம். நமது எதிர்கால சரித்திரம் ஒளிர்வதாக இருப்பதற்கு பதிலாக சிறு சமூகங்களுக்கு இடையில் சண்டைகள் என்று ஆகி விடக்கூடாது. எனவே, ஒற்றுமையே முக்கியம்; நமக்கு இடையே உள்ள சுவர்கள் இடிக்கப்பட வேண்டும்.

இந்தியா முழுமையும் பற்றி யோசியுங்கள்; என்னதான் நல்ல பகுதியாக இருந்தாலும், அதனைத் தனியே துண்டாகப் பார்க்காதீர்கள். அது ஏன் இன்னமும் சிறப்பாக இருக்க முடியாது? ஒரு பகுதி உயர்வானதாக இருக்கிறது என்றால், காரணம் அது இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது. அது இந்தியாவின் பகுதி இல்லை எனில், அதற்கு உயரமோ முக்கியத்துவமோ இல்லை. எனவே, நாம் இந்தப் பகுதியில் வாழ்வதானால் இங்குள்ள பிரிவுகளில் வாழ்வதை விட்டு எல்லாரும் சேர்ந்து வாழப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். வேற்றுமை உணர்வை நீக்கியாக வேண்டும். இதில் நாம் வென்றாக வேண்டும்.

அடுத்ததாக நமது எதிர்கால இலக்கு என்ன? நம்முடைய நோக்கம் என்ன? அது பொருளாதாரம்; சமூகம் சார்ந்தது. வறுமை ஒழிக்கப்பட வேண்டும். வேறு என்ன அளவுகோல் வைத்து நமது வளர்ச்சியை அளக்கப் போகிறோம்?

முன்பு, காந்திஜி வழி நடத்தினார். அதன்படியே இந்திய மக்கள் முன்னேறினர். சாமானிய மக்களைப் பற்றிய அக்கறை வேண்டும். மெளனமாக மக்கள், கிராமங்களில் வாழ்கிறார்கள். டெல்லி ஒரு சிறப்பு நகரம். இந்தியாவின் தலைநகரம். டெல்லியில் வாழும் நாம் கொடுத்து வைத்தவர்கள் டெல்லி நகரம் - இந்தியா அல்ல; அது இந்தியாவின் தலைநகரம் அவ்வளவுதான்.

இந்தியாவில் பல லட்சக்கணக்கானோர் கிராமங்களில் வாழ்கிறார்கள். இந்த கிராமங்கள் உயராமல் டெல்லி, பம்பாய், கல்கத்தா, மதராஸ் முன்னேறாது. எனவே, எப்போதும் இந்த கிராமங்களை நம் முன்னால் நிறுத்திக் கொள்ள வேண்டும். எப்படியேனும் அவர்கள் வளர்வார்கள் என்றா சொல்வது? அது எப்படி? என்னுடைய உங்களுடைய முயற்சிகளால் அவர்கள் வளர்வார்கள். அவர்களுடைய துணிச்சலால், அவர்களை அவர்களே நம்புவதால் வளர்வார்கள். நம்முடைய மக்கள் தங்களைத் தாமே நம்புவதற்கு மறந்து விட்டார்கள். நம்முடைய கிராமவாசிகள் நல்லவர்கள், மிக நல்லவர்கள்.

அரசு அலுவலர்கள் சிலவற்றைச் செய்கிறார்கள். அரசு அவர்களுக்கு ஏதாவது செய்யும். அதற்காகச் செய்கிறார்கள். மாறாக, தாமே எழுந்து முன்வந்து பணி செய்வார்களா..? சமூக வளர்ச்சி நோக்கி, திட்டங்கள் தீட்டப்படுகின்றன. எல்லாம் சரியாக அமைந்தால், இது இந்தியாவுக்கு, உலகத்துக்கு புரட்சிகரமான மாற்றமாக அமையும். இந்தியாவின் வலிமையான ஐந்தரை லட்சம் கிராமங்கள் விழிக்கட்டும்; உற்சாகத்துடன் எழட்டும்.

அரசுப் பணியாளர்கள் மட்டுமே பணியாற்றினால் புரட்சி எற்படாது. அது வெறுமனே அலுவலகப் பணியாகும். அதில் உயிர்ப்பு இருக்காது. வாழ்க்கை சொர்க்கத்தில் இருந்து வருகிறது. அது எந்த சமூகத்துக்கும் மேலே இருந்து வழங்கப்படவில்லை. எனவே ஒரு கேள்வி எழுகிறது – நாம் நகரவாசிகளா... கிராமவாசிகளா...? நம்முடைய சொந்தக் காலில் நிற்க வேண்டும். ஒத்துழைத்துப் பணியாற்ற வேண்டும். அரசு அதற்கு உதவ வேண்டும்.

அரசியல் அலுவலர்களுக்கு எல்லா விதங்களிலும் உதவுங்கள். ஆனால் சமூகம், அரசு அலுவலர்களால் மட்டும் உயர்வதில்லை; தன்னுடைய சொந்தக் காலில் உயர்கிறது. அதிலும் கிராமங்களுக்கு இது அதிகம் பொருந்தும். கூட்டுறவு சங்கங்கள் மூலம் பணி நடைபெற வேண்டும். (அங்குதான்) மக்களின் அதிகாரம் பெருகி இருக்கும். மக்கள், இணைந்து பணியாற்ற அறிந்து கொள்ள வேண்டும்; அதில் நம்பிக்கை வைக்க வேண்டும்.

எல்லா இடத்திலும் அரசு தலையிட வேண்டியது இல்லை. அரசின் தலையீடு மிகக் குறைவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நிர்வாகத்தை மக்கள் தங்கள் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். பெரிய கொள்கைகளில் நம்பிக்கை வையுங்கள். இது நாம் நினைவில் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம்.

இந்தியாவின் வளர்ச்சியை எவ்வாறு அளக்கலாம்? 40 கோடி மக்கள் வளர்கிறார்கள். இந்த ஜன சமூகம் எவ்வாறு வளர்கிறது? கடின உழைப்பு வேண்டும். தமது கடின உழைப்பால் வளங்களை உருவாக்குவார்கள். நாடு முழுதும் பரவும். சில நாடுகள் மகிழ்ச்சியாக இருக்கின்றன. சில நாடுகள் ஏழ்மையில் உள்ளன. மகிழ்ச்சியான நாடுகளைப் பாருங்கள்… எவ்வாறு இவை மகிழ்ச்சியாக உள்ளன? கடின உழைப்பு. மேலும் கடின உழைப்பு! ஐரோப்பாவாக இருந்தாலும். அமெரிக்கா, ஆசிய நாடுகளாக இருந்தாலும் அவர்கள் மகிழ்ச்சி பெறக் காரணம் - இரவும் பகலும் நல்கும் கடின உழைப்பு.

கடின உழைப்பு நமக்குப் புதிது அல்ல இதற்கு எதிரானது (சோம்பல்) நமது வாடிக்கை அல்ல. அது ஒரு விபத்து. ஐரோப்பா, ஜப்பான், சீனா, ரஷ்யா, அமெரிக்கா அளவுக்கு நாம் உழைப்பது இல்லை. நாமும் அறிவாலும் கடின உழைப்பாலும் முன்னேறலாம். உழைப்பு இல்லாமல் உயர்வு இல்லை. உலகம் உழைப்பில்தான் உருள்கிறது. உலகின் சொத்துகள் எல்லாம் வளங்கள் எல்லாம் தனி மனிதனின் உழைப்பால்தான் உருவானது. களத்தில் விவசாயி, தொழிற்சாலையில், கடையில், கைவினை தொழிலாளி... இவர்கள் தத்தம் உழைப்பை நல்குகிறார்கள். சில பெரிய அதிகாரிகள் அலுவலக அறையில் அமர்ந்து கொண்டு ஏற்பாடுகள் செய்கிறார்கள். அவர்கள் வளங்களை உருவாக்குவதில்லை. விவசாயி, தொழிலாளி, கலைஞன் தனது உழைப்பால் உருவாக்குகிறான். எனவே நமது உழைப்பை, கடின உழைப்பை அதிகரிக்க வேண்டும்.

பஞ்சாப் மாநிலத்தில் பணி நேரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. எனக்கு மகிழ்ச்சி. இது பஞ்சாபில் வளத்தைக் கூட்டும். பஞ்சாப் மக்கள் பயன் பெறுவார்கள். நாம் நிறைய விடுமுறை நாட்கள் கொண்டிருக்கிறோம். இதில் உலகில் வேறு எந்த நாடும் நம்முடன் போட்டியிட இயலாது. விடுமுறை நல்லதுதான். அது ஒருவனுக்குப் புத்துணர்ச்சி தருகிறது. ஆனால், அளவுக்கு அதிகமான விடுமுறை பலவீனம் ஆக்குகிறது; இதனால், வேலை செய்யும் வழக்கம் விட்டுப் போகிறது.

மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் வாசலில் இருக்கிறோம். முதல் இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களில் பயன் அடைந்தோம். மிகுந்த முன்னேற்றம் கண்டோம். நம்து கேள்விகள் அதிகரித்துள்ளன. கேள்விகள் நம்மை சூழ்ந்துள்ளன. நமது கையும் காலும் வலுவடைந்து வருகின்றன. நாம் வளர்ந்து வருகிறோம்.

நம் முன் எழும் கேள்விகளுக்கு வளர்ச்சியே காரணம். முன்னோக்கி நகராதவனுக்கு கேள்வியும் இல்லை; பதிலும் இல்லை. அதனால்தான் நம்மை சுற்றி கேள்விகள். பிரசினைகள்! இது ஒரு வளரும் நாட்டின் கேள்விகள். பிரச்சினைகள். நம்து நாடு அடிமட்டத்தில் இருந்து வளர்கிறது. எனவே, பிரச்சினைகளைப் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

பெரிய இரும்புத் தொழிற்சாலைகள் நிர்மாணிக்கப்படுகின்றன. எல்லா வகைப் பெரிய ஆலைகளும் வருகின்றன. தொழிற்சாலை என்றால் காலியாக இருக்காது. புதிய வாழ்க்கை அங்கே தோன்றும். இந்தியாவில் ஒவ்வொரு மூலையிலும் புதிய ஆலைகள் உதயமாகும்.

பெரிய பெரிய முனைவுகள், அதற்கான அடித்தளங்கள், பல லட்சம் பேருக்கு வேலை, மக்கள் தமது கடின உழைப்பால் செல்வங்களை உருவாக்குவார்கள். நமது ஐந்தாண்டுத் திட்டங்கள் - அங்கொன்றும் இங்கொன்றுமாக வளங்களை உருவாக்க அல்ல; வளமான இந்தியாவை கட்டமைக்க வந்தவை. அதற்கான அடித்தளம் வலுவாக இருக்கிறது. இது அந்தரத்தில் உருவானவை அல்ல. அடித்தளம் வெளியில் தெரியவில்லை. ஆனாலும் அது நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. இதுவரை, இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களில் பார்த்தோம். மூன்றாவது இதோ வந்து கொண்டு இருக்கிறது. அதற்கான ஏராபடுகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் ஓய்வு நேரமே இல்லை!

கடின உழைப்பு இல்லாமல், உடல் வருத்தம் இல்லாமல் எந்த சமுதாயமும் முன்னேற முடியாது. யார் கடினமாக உழைக்கவில்லையோ அவர்கள் தோல்வியுறுவார்கள். நம்முன் ஒரு பரீட்சை இருக்கிறது. உலகில் இருந்து ஒரு சவால்... உலகின் கண்கள் நம் மீதே இருக்கின்றன. இது மாபெரும் தேசம். மகாத்மா காந்தி போன்ற மாமனிதரை இந்த யுகத்திலும் தருகிற நாடு நமது.

காந்திஜி நமக்கு மூன்று பாடங்கள் கற்றுத் தந்தார். தவறானதை செய்ய வேண்டாம்... தவறான பாதையில் செல்ல வேண்டாம்... சுயநலத்தில் இறங்கி நாட்டுக்குக் கேடு விளவிக்க வேண்டாம்... இளைஞர்கள் பெரியவர்கள் சிறுவர்களுக்கு அவரது பாடம் இது. இதனை நாம் மறந்தால் அந்தக் கணமே விழ்ந்து விடுவோம். 12 ஆண்டுகள் கடந்துவிட்டன. பதின்மூன்றாவது ஆண்டில், நானும் நீங்களும் கைகோர்த்து தலை நிமிர்ந்து வளர்ச்சிப் பாதையில் நடப்போம். நமக்கான இலக்கை குறித்த காலத்தில் அடைந்தே தீருவோம். ஜெய் ஹிந்த்!”

(தொடர்வோம்)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x