Published : 28 Aug 2023 06:55 PM
Last Updated : 28 Aug 2023 06:55 PM

செங்கோட்டை முழக்கங்கள் 10 - அன்று சொன்னதே இன்றும் | 1956

ஜவஹர்லால் நேரு ஆற்றிய 1956-ஆம் ஆண்டு சுதந்திர தின உரை மிகவும் சிறப்பானது. இந்த முறை பிரதமர் நேருவின் பேச்சில் ஒருவித ஆற்றாமை தெரிகிறது; சற்றே ஆவேசம் தெறிக்கிறது. இந்த உரையை மூன்று கூறுகளாகப் பார்க்கலாம். நாம் இங்கே உரையின் வடிவத்தை, அதன் போக்கிலேயே பார்க்கிறோம். அதாவது எப்படித் தொடங்கி எப்படி முடிந்ததோ அப்படியே காண்கிறோம். அபூர்வமாக எப்போதேனும், உரையின் முக்கிய அம்சங்களை, பிரச்சினைகளின் அடிப்படையில் பிரித்துத் தொகுக்க வேண்டி வரலாம். இயன்றவரை அதனைத் தவிர்த்து உரையை அதன் போக்கிலேயே பார்ப்போம். அப்போதுதான், பேசியவரின் மனநிலை, எண்ண ஓட்டம் குறித்து நமக்குத் தெளிவாகத் தெரிய வரும்.

1956 ஆம் ஆண்டு உரையில் பிரதமர் நேரு – வெளியுறவு, உள்நாட்டில் மாநிலங்களின் மறுசீரமைப்பு மற்றும் குறைந்து வரும் காந்திய சிந்தனைகளின் தாக்கம் என்று மூன்று அம்சங்களில் கவனம் செலுத்துகிறார். பொதுவாக, மிகச் சீரான மென்மையான பாரம்பரிய முறைப்படியே தனது உரையைத் தொடங்குகிறார் நேரு.

‘சுதந்திர இந்தியாவின் பிறந்த நாளான இன்று, அனைவருக்கும் நல்லது நடக்கட்டும். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு புதிய இந்தியா உதயம் ஆனது. அது புதிது; அதுவே தொன்மையானதும் கூட. பல்லாண்டுப் போராட்டம், தியாகம், வியர்வை, ரத்தம்… இதன் பிறகே, காந்திஜியால் வடிவமைக்கப்பட்ட புதிய இந்தியா, புதிய வண்னம், புதிய ஒளி தோன்றியது. புதிய அறிவுக் கூர்மை, புதிய கண்ணோட்டம் கொண்டு இருந்தது. இந்த விடுதலைக்காக, லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்கள் அமைதி வழியில் துணிச்சலுடன் போராடினர். எதிரியுடன் சண்டை இட்டோம்; அதே சமயம், அவர்களோடு நட்பையும் வளர்த்தோம். நாம் அல்ல; காந்திஜி - இந்தப் புதிய உதாரணத்தை ஏற்படுத்தினார். ஏனெனில் நாம் அவரின் வீரர்கள். காந்திஜி நமக்கு, புதிய போராட்ட வழிமுறையைக் கற்றுத் தந்தார். இந்த வழியில் நாம், கோடிக்கனக்கான மக்கள், தியாக வாழ்க்கைக்கு வடிவமைக்கப் பட்டனர். நாம் விடுதலை பெற்றோம். பிற நாடுகளிலும் இந்தச் செய்தி சென்றடைந்தது. நாம் பெரிய நாடு என்பதால் அல்ல; இங்கே 37 கோடி மக்கள் வாழ்கிறார்கள் என்பதால் அல்ல; நாகரிகமான முறையில், அமைதியான வழியில், எதிரியையும் நண்பன் ஆக்கிக் கொள்கிற புதிய அணுகுமுறையில் அவர்களை (உலக நாடுகளை) கவர்ந்தோம்.

இந்த நாட்டின் பெருமிதம், நமது அமைதியான அணுகுமுறையில் அடங்கி இருக்கிறது. உலகம் இதில்தான் மயங்கிப் போனது. இன்றைய இளைஞன் இந்தப் பாடத்தை மறந்து போனான்.. நமக்கு அறிவுக் கூர்மையைத் தந்த, உலகின் பார்வையில் நமது கவுரவத்தை உயர்த்திக் காண்பித்த அமைதிப் போராட்டத்தை இன்றைய இளைஞர்கள் மறந்து போய் விட்டார்கள்.

சர்வதேச நடப்புகளில் நாம் சில சேவைகள் புரிந்துள்ளோம். பெரிய பிரச்சினைகளில் தீர்வு எட்ட நாம் கை கொடுத்து இருக்கிறோம். இப்போதும் போருக்கான குரல்கள் எழுவதைக் கேட்கிறோம். உலகம் தனது பார்வையை நம் மீது திருப்பி இருக்கிறது. ஏன்? நம்மிடம் பெரிய ராணுவம் இருக்கிறது என்பதற்காக அல்ல; நாம் அச்சுறுத்துவோன் என்பதற்காக அல்ல. நாம், நல்ல சேவை செய்வோம் என்று நம்புகிறார்கள். உலகை அச்சுறுத்தும் பிரச்சினைகளில், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது எப்படி என்று நாம் கற்று இருக்கிறோம். இதனால்தான் உலகில் நமக்கு மரியாதை இருக்கிறது. மீண்டும் ஒருமுறை போர் அபாயத்தை சந்திக்க வேண்டிய நிர்பந்தத்தில் உலகம் இருக்கிறது. எனவே நாம் பழைய பாடங்களை நினைவில் கொண்டு, எச்சரிக்கையுடன் பணி புரிய வேண்டும்.

‘பஞ்ச சீலம்’ என்கிற சொல் கேள்விப் பட்டு இருப்பீர்கள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து சென்ற இந்தக் கோட்பாடு - உலக நாடுகள் ஒவ்வொன்றும் தமக்குள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று விவரிக்கிறது. இந்த ஐந்து கோட்பாடுகளும் பழமையானவை; ஆனாலும் புதிது. இந்தக் கோட்பாடு விரிந்து கிடக்கிறது, உலகம் முழுதும் பரவிக் கிடக்கிறது. இரண்டு வழிகள்தாம் உள்ளன; அழிவுக்கு வழிகோலும் போர்; அல்லது அமைதிக்கு இட்டுச் செல்லும் பஞ்சசீலம். மூன்றாவது வழி என்று எதுவும் இல்லை. மீண்டும் ஒருமுறை இந்த உலகம் ஆபத்தான சூழலில் சிக்கி உள்ளது.

மீண்டும் ஒருமுறை, நல்லதோ தீயதோ ஆகஸ்ட் மாதத்தில் நிகழ உள்ளது. இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில்தான் மாபெரும் சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்து புதிய அத்தியாயம் தொடங்கியது. ஏறத்தழ இதே மாதத்தில்தான், உலகின் இரு பெரும் யுத்தங்கள் 1914 -லும் 1939 - லும் தொடங்கின. இதே மதத்தில் இதே நாளில், ஜப்பான் சரண் அடைந்ததன் மூலம் கடைசி யுத்தம் முடிவுக்கு வந்தது. இது அபாயங்களும் நன்மைகளும் நிறைந்த விநோதமான மாதம். எனவே நாம் எச்சரிகையுடன் இருத்தல் வேண்டும். இன்று உலகம் அபாயத்தில் உள்ளது. ஏனெனில் இது அணுகுண்டு மற்றும் ஹைட்ரஜன் குண்டுகளின் காலம். நாம் அஜாக்கிரதையாக இருக்க முடியாது. நமது பொறுப்புகளை நாம் மறந்து விடலாகாது. காந்திஜி கற்றுத் தந்த பாடத்தை மறந்துவிடக் கூடாது. மறந்து போனால், மறைந்து போவோம்.

லண்டனில் நாளை நடைபெற இருக்கும் மாநாட்டில் உலகை அச்சுறுத்தும் சூயஸ் கால்வாய் பிரச்சினை முடிவுக்கு வரும் என்று நான் நம்புகிறேன். அமைதியான வழியில் ஏதேனும் ஒரு தீர்வு எட்டப்படும் என்று நம்புகிறேன். ஒவ்வொரு நாட்டோடும், குறிப்பாக எகிப்து மற்றும் இங்கிலாந்துடன் நாம் நட்புடன் இருக்கிறோம். இரு நாடுகளுக்கும் நண்பன் நாம். எப்போது வாய்ப்பு கிட்டினாலும் அமைதி வழியில் அன்றி அடக்குமுறை வாயிலாக நாம் தீர்வுக்கு முயற்சிப்பதே இல்லை. இந்த சந்திப்பின் போது நமது நண்பர்கள் அமைதியான முறையில் எந்த நாட்டுப் பெருமைக்கும் ஊறு நேராதாவாறு தீர்வு எட்டுவர் என்று நம்புகிறேன். மற்றவருக்கு அவமரியாதை ஏற்படுத்தாத எந்த முடிவும் நல்ல முடிவுதான். அச்சுறுத்தலைப் பயன்படுத்தினால் அடுத்த போருக்கு விதை தூவுவதாக அர்த்தம். அதே சமயம் நட்பு முறையில் தீர்வுக்கு வழி கண்டால், அது (எல்லாருக்கும்) நல்லது.

இந்தியாவுக்கு சுதந்திரம் எவ்வாறு கிடைத்தது என்று நினைவு இருக்கிறதா..? சில நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்தோம். நட்பு மற்றும் ஒத்துழைப்புடன் கூடிய சுமுகமான போராட்டம் மூலம் இதனை முடிவுக்குக் கொண்டு வந்தோம். விளைவு? இன்று நமக்கும் இங்கிலாந்துக்கும் இடையே பகைமை இல்லை. மாறாக, இப்போது நாம் இருவரும் சுதந்திர நாடுகளாக, நண்பர்களாக உள்ளோம். பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்த்துக் கொண்டோம். அவர்கள் ஒருவேளை நம்மை நசுக்க நினைத்து இருந்தால் நிலைமை வேறுமாதிரி போயிருக்கும். அப்படியும் சுதந்திரம் பெற்றிருப்போம். ஆனால் நம் இருவருக்கும் இடையே நீண்டகால கசப்புணர்வு ஏற்பட்டு இருக்கும்.

எனவே பிரச்சினைகளைத் தீர்க்க ஒரேவழி – மற்றவரின் உரிமைகளை மதித்தல், சில கோட்பாடுகளைப் பின்பற்றுதல். சூயஸ் கால்வாய் பிரச்சினைக்கும் இதே வழியில் தீர்வு கானப்படும் என்று நம்புகிறேன். லண்டனில் முதல் சந்திப்பில் தீர்வு எட்டப்படவில்லை எனில் இரண்டாம் மூன்றாம் சந்திப்பில் எட்டப்படலாம். ஒன்றில் மட்டும் தெளிவாக இருத்தல் வேண்டும். அச்சுறுத்தல் மூலம் தீர்வுக்கு முயற்சித்தல் கூடாது. அதனால் பிரச்சினை தீராது; விளைவுகளும் மோசமாக இருக்கும். உலகம் முழுதும் மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

பஞ்சசீலம் பற்றிக் கூறினேன். இந்தச் சொல் நமது மண்ணில் நமது மொழியில் இருந்து தோன்றியது. (எனவே) நாம் இதனை எந்த அளவுக்குப் பின்பற்றுகிறோம் என்று பார்க்க வேண்டும். கடந்த சில மாதங்களாக இந்த நாட்டில் வினோதமான சம்பவங்கள் நிகழ்வதைப் பார்க்கிறேன். அடிக்கடி நமது சகோதரர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றனர். நாம் எதிரியுடன் சண்டையிட்டு நண்பனாக்கிக் கொண்டோம். ஆனால் சகோதரகளுக்குள் பிரச்சினைகளை சுமுகமாகத் தீர்த்துக் கொள்ள பொறுமையும் புரிதலும் இல்லாமற் போய் விட்டது. காந்திஜியின் காலம் கடந்து போய் விட்டதா..?

தற்போதைய தலைமுறை, வித்தியாசமான வார்ப்பாகத் தோன்றுகிறது. நமது இளைஞர்கள் தெருவில் இறங்கித் தம் சகோதரர்களுடன் சண்டையிட்டுத் தமது வீரத்தைக் காட்டுகிறார்கள்! எங்களது காலத்தில் நாங்கள் எதிரியின் ராணுவம், துப்பாக்கிகளைக்கூட எங்கள் கைகளையும் உயர்த்தாமல் எந்தப் புகாரும் தெரிவிக்காமல் எதிர்கொண்டோம். இன்றைய இலைஞர்களுக்கு என்ன பிரச்சினை? எதனால் வார்க்கப்பட்டவர்கள் இவர்கள்? இந்தியாவுக்கு விடுதலை பெற்றுத் தந்த காந்திஜியின் வார்ப்புகள் முடிந்து போயினரா..? இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எனக்கு வயதாகிறது. நாங்கள் இந்த தேசத்தின் வயதான வீரர்கள். எங்கள் காலம் கடந்து போகிறது. ஆனால் எங்கள் காலத்தில் நாங்கள் ஒன்று செய்து இருக்கிறோம். இந்தியாவுக்கு சேவை புரிந்து இருக்கிறோம். காந்திஜியின் திருவடியில் அமர்ந்து இதனைக் கற்று இருக்கிறோம். உலகமே வியந்து பாராட்டுகிற வழிமுறை இது.

அற்பத்தனமான செய்கைகளை, தெருக்களில் இறங்கி சண்டையிட்டுக் கொள்வதை நாம் விட்டுவிட வேண்டும். இன்று இந்தியா எந்த வழியில் போகிறது..?

மாநில மறுசீரைப்பு குறித்து நீங்கள் அறிவீர்கள். இது ஒன்றும் அத்தனை பெரிய அரசியல் / சமூகப்பிரச்சினை கிடையாது. ஒரு பகுதி, இந்த மாநிலத்தில் இருக்கிறதா அல்லது அடுத்த மாநிலத்தில் இருக்கிறதா என்பது பொருட்டே அல்ல. இது மக்களின் உணர்ச்சி தொடர்பானது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். மக்களின் உணர்ச்சிகளை மதிக்கிறேன். ஆனால் இதற்காக ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வது கூடாது. அரசுக் கட்டிடங்கள், அரசு சொத்துகளைத் தாக்குவதை ஏற்க முடியாது. அரசாங்க சொத்து என்பது தனிநபரின் அல்லது ஓர் அரசு அலுவலரின் சொத்து அல்ல. அது நாட்டுக்கு சொந்தமானது. இந்த நாட்டின் சொத்துகலை அழிக்க முற்படுவது… இது ஒரு புதிய வழிமுறை!

மக்களவை என்பது என்ன..? இந்த நாட்டு மக்களின் பிரதிநிதிகள் இங்கு வருகிறார்கள். அவர்கள் இந்த நாட்டின் பெருமிதம். அவர்களின் முடிவுகள் இந்த நாட்டின் சட்டங்கள். இந்த நாட்டு மக்கள் மட்டுமல்ல; உலகமே அதனை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இது நமக்கான நாடாளுமன்றம். அங்கே ஒரு தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்படும் போது, அதற்கு எதிர்ப்பு இருந்தால், காவல்துறையினரைத் தாக்குவதா? அரசுக் கட்டிடங்களை சேதப்படுத்துவதா? இதுதான் அறிவுடைமையின், துணிச்சலின் அடையாளமா? யோசித்துப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு அரசியல் கட்சியும் இது குறித்து பரிசீலிக்க வேண்டும். ஐயமில்லை, எந்தவொரு நாட்டிலும் பல்வேறு கருத்துகள் இருக்கத்தான் செய்யும். இருக்க வேண்டும். ஆனால் இதனை முன்னெடுப்பதற்குப் பல வழிகள் உண்டு. பேச்சுக்கான வழிகள் திறந்து இருக்க வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் (மட்டுமே) தீர்வு காணப்பட வேண்டும்.

பேச்சுவார்த்தை என்பது வேறு; வன்முறை என்பது (முற்றிலும்) வேறு. ஒரு கட்சி மக்களை வன்முறைக்குத் தூண்டுகிறது என்றால் அது இந்தியாவுக்கு விசுவாமாக இல்லை என்றுதான் பொருள். அது இந்திய சுதந்திரத்தின் வேர்களைத் தாக்குகிறது (என்று பொருள்) எனவே ஒவ்வொரு கட்சியும் மக்களை எதை நோக்கி வழி நடத்துகிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தனது கருத்தைத் தெரிவிக்க ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது. விவாதங்கள் மூலம் மக்களின் வாக்குகளைப் பெற ஒவ்வொரு கட்சிக்கும் உரிமை இருக்கிறது. நீங்கள் விரும்பினால் வேறு அரசைத் தேர்ந்தெடுக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது. அந்த மாற்றம், பெரும்பான்மை விருப்பப்படி ஜனநாயக முறையில் நடைபெற வேண்டும், ஆனால் நாம் சண்டையிட்டுக் கொண்டு வன்முறையில் இறங்கினால், அதற்கு ஜனநாயகம் என்ன செய்ய முடியும்?

இந்தியா, எதை நோக்கிச் செல்கிறது என்று பார்க்க வேண்டும். நம்முடைய பண்டைய வழிமுறைகள் வலுவிழந்து விட்டனவா.? ஒவ்வொரு நாடும் அதற்கான கலாசாரத்தில் வார்க்கப்பட்டு இருக்கிறது. நமது வார்ப்பு என்ன? நாம் பண்டைய வழிமுறையில் செல்கிறோம்; காரணம் - பல நூறு ஆண்டு

மரபு நமது ரத்த நாளங்களில் கலந்து இருக்கிறது. அதனை யாரும் நம்மிடம் இருந்து கொண்டுபோகவோ அல்லது நாம் அதனை மறக்கவோ இயலாது. ஆனால் இது என்ன இவர்கள் பண்டைய வார்ப்பாகவும் இல்லை, புதிய வார்ப்பாகவும் இல்லை! இவர்கள் காலித்தனம், அடாவடித் தனத்தில் வார்க்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதனைப் பரிசீலியுங்கள். பல துறைகள் மக்கள் முன் திறக்கின்றன – ஐந்தாண்டுத் திட்டங்கள். பெரிய சவால் நம் முன் இருக்கிறது. நம் முழு வலிமையையும் அதற்கு அர்ப்பணிக்க வேண்டி இருக்கிறது; ஒரு சிறிய நிலத்துண்டு இந்த மாநிலத்தில் இருக்கிறதா… அண்டை மாநிலத்தில் இருக்கிறதா என்பதில் நமது வலிமையை வீணடிக்க வேண்டாம்.

ஒவ்வொரு இந்தியனும் குறிப்பாக ஒவ்வொரு இளைஞனும் எதை நோக்கிச் செல்கிறோம் என்பதைப் பரிசீலிக்க வேண்டும். நமது நாட்டில் ‘பஞ்சசீலம்’ பின்பற்றப்பட வேண்டுமா இல்லையா என்பதை அவர்கள் பரிசீலிக்கட்டும். பஞ்சசீலத்தின் பொருள் – (ஒருவரோடு ஒருவர்) நட்புடன் உடன்பட்டு வாழ்தல்; வன்முறை அல்ல. இந்த அரசுக்கு அக்கறை இருக்கிறது. இவர்கள் உங்களின் சேவகர்கள். நீங்கள் எப்போது விரும்பினாலும், விட்டுவிட்டுப் போக நாங்கள் தயார். ஆனால் அது அச்சுறுத்தல் மூலம் நடவாது. நாடாளுமன்றத்தில் முடிவு கடுமையாக முன்னெடுக்கப்படும். ஏனெனில் அது இந்த நாட்டின் சட்டம். வன்முறையின் மூலம் எந்தத் தீர்வையும் எட்ட முடியாது என்பதை நீங்கள் உணர்வீர்கள். மாநில மறுவரையறை முடிவுகளை மாற்ற இயலாது; திரும்பப் பெற இயலாது என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நான் சொல்வதையோ அரசு சொல்வதையோ மாற்றிக் கொள்ளலாம்; ஆனால் இதுவோ, நாடாளுமன்றம் தீர்மானித்தது; நாம் அதற்குத் தலை வணங்கியாக வேண்டும். நீங்கள்தான் என்னப் பிரதமராகத் தேர்ந்தெடுத்தீர்கள். நானும் ஒரு மனிதன்தான். மக்களவையின் முடிவுகள் அடுத்ததாய் மாநிலங்களவைக்கு வரும். அதுவே இறுதியானது. இவற்றையும் மாற்ற முடியும். ஆனால் தொந்தரவுகள் மூலம் அல்ல. இந்த வழியில் மாற்ற முடியும் என்று நம்பினால் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள். இது இந்திய நலன்களுக்கு எதிரானது.

சுதந்திரம் பெற்று 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆகஸ்ட் 15ஆம் நாள் நம்மை நாமே நோக்கிக் கொள்வோம். கடந்த 9 ஆண்டுகளில் நடந்த பணிகள் குறித்து நிறைய பேசுகிறார்கள். என்னவெல்லாம் நடந்தன; இந்தியாவின் மதிப்பு எந்த அளவு உயர்ந்துள்ளது! சில வாரங்களுக்கு முன்புதான் ஒரு மாத சுற்றுப்பயணம் முடித்து விட்டு வந்தேன். செல்லும் இடங்களில் எல்லாம் எல்லார் பார்வையும் இந்தியா மீதே படர்ந்து இருக்கிறது. நாம் எப்படி முன்னேறுகிறோம்… நமது வலிமை, கவுரவம் எவ்வாறு உயர்கிறது என்பதைக் காண ஆர்வமாக உள்ளார்கள். எத்தனை பணிகள் ஆற்ற வேண்டி உள்ளன… என்று பார்க்கிறேன். நமது பார்வையை முன்னோக்கி செலுத்த வேண்டும்.

ஐந்தாண்டுத் திட்டம் நோக்கி நமது ஆற்றலை நகர்த்த வேண்டும். வறுமை, அறியாமை, வேலையின்மை.. இவற்றை அகற்றியாக வேண்டும். புதிய வளமான இந்தியாவை நிர்மாணிக்க வேண்டும். நாம் இந்த உலகத்துக்கு சேவை ஆற்ற வேண்டும். இது கடினமான பணிதான்; ஆனால் இப்படி எத்தனையோ கடினமான பணிகளை நாம் மேற்கொண்டு நிறைவேற்றியும் இருக்கிறோம். மீண்டும் இதுபோன்று செய்து காட்டுவோம். எனவே இந்த நாளில் சற்றே பின்னோக்கிப் பார்ப்போம். வன்முறையற்ற அமைதி மற்றும் ஒத்துழைப்பில் வார்க்கப்பட்டது இந்த நாடு. நம்முடைய பண்டைய மற்றும் நவீன கலாசாரத்தின் தாக்கம் கொண்டவர்கள் நாம்.

2,500 ஆண்டுகளுக்கு முன்பு, கவுதம புத்தர் வாழ்ந்து நமக்குப் பெருமை சேர்த்தார். அவரது பெயர் நமது நாட்டில் மட்டுமல்ல; உலகம் எங்கும் ஒளி விடுகிறது. அவர் சொன்னவை என்றைக்கும் நிலைத்து நிற்கக் கூடிய மதிப்பு கொண்டவை. இந்த நாட்டில் தோன்றிய புத்தர், காந்தி ஜி போன்றோர் இந்த நாட்டை உருவாக்கியவர்கள். நமது நாட்டின் பண்டைய கலாசாரம் / பண்பாடு நமக்கு வலிமை சேர்த்து நம்மை உயிர்ப்புடன் வைத்துள்ளது. கவுதம புத்தர், காந்தி ஜி போன்ற தலைவர்கள் நம்முடைய நாட்டை மகத்தானதாகச் செய்தனர். விடாமுயற்சியுடன் அந்த வழியில் தொடர்ந்து முன்னேறுவோம். ஜெய் ஹிந்த்!

பிரதமர் நேரு ஆற்றிய இந்த உரையின் பெரும் பகுதி இன்றைக்கும் பொருந்துவதாய் உள்ளது. இது நமக்குப் பெருமையா.. அன்றி சிறுமையா..?

(தொடர்வோம்)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x