Published : 26 Aug 2023 03:48 PM
Last Updated : 26 Aug 2023 03:48 PM
சுதந்திர இந்தியாவின் முதல் சில ஆண்டுகளில் பல முக்கிய, நீண்டகால முடிவுகள் எடுக்க வேண்டி இருந்தது. இதற்கு மக்களைத் தயார் செய்ய வேண்டும். நல்ல வேளையாக, நமக்குக் கிடைத்த நல்வரமாக, தொலைநோக்குப் பார்வை கொண்ட நல்ல தலைவர், நமக்குப் பிரதமராக வாய்த்தார். 1955 ஆகஸ்ட் 15 – இந்திய சுதந்திரத்தின் எட்டு ஆண்டு நிறைவில் ஜவஹர்லால் நேரு ஆற்றிய உரை, சற்றே நீளமானது. பல பிரச்சினைகளைப் பற்றிப் பேசி நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கடமை இந்தப் பேச்சில் தனித்துத் தெரிகிறது.
‘அந்த நாள் உங்களுக்கு நினைவிருக்கிறதா? நீண்ட பயணத்துக்குப் பிறகு இந்த இடத்தை நாம் அடைந்துள்ளோம். இதன் பிறகு பலர் – பெரியோர், சிறியோர் - வீழ்ந்து விட்டனர். மீண்டும் எழுந்தோம்.’
‘நாம் கொண்டிருந்த கனவுகள் நினைவு இருக்கிறதா? கனவுகள் நிறைவேறுவதற்கான ஒரு நாள் வந்தது. சுதந்திரம் விடிந்தது. 8 ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடுகிற போதே கண்களில் நீர்த் திவலைகள் வடிகின்றன. சில சம்பவங்கள் இங்கும் எல்லையிலும் நடைபெற்றன. அகதிகளாக பிரச்சினைகளை சந்தித்து விட்டு இங்கே வந்துள்ளவர்கள் எத்தனை பேர்? இங்கும் பாகிஸ்தானிலும் பிரச்சினைகளை எதிர் கொண்டோம். நல்லது. இவற்றை நாம் சகித்துக் கொண்டோம். பல வினாக்களுக்கு விடை காண முயற்சித்தோம். இன்னமும் பல, மீதம் உள்ளன. எட்டு ஆண்டுகள் கடந்து விட்டோம் நமது நமது நாட்டின் தற்போதைய நிலைமை என்ன..?’
‘இன்னமும் நாம் சுதந்திர இந்தியாவின் சிறுபிள்ளைகள். ‘இளம் பிராயத்தில்’ நாம் வெளிப்படுத்திய வலிமையை உலகம் அறியும். இன்று நம்மில் சிலர் கடந்த எட்டு ஆண்டுகளைப் பின்னோக்கிப் பார்க்கின்றனர். இன்னும் சிலர், முன்னோக்கிப் பார்க்கின்றனர். என்ன செய்துள்ளோம்… என்ன செய்ய இருக்கிறோம்..? செய்வதற்கு நிறைய இருக்கிறது. குறிப்பாக, பலவீனம் ஆனவர்களுக்கு செய்ய வேண்டி உள்ளது. நமது பலவீனத்தைக் களைந்தால் அன்றி, நமது வலிமை கூடாது.’
எப்போதும் போல, நமது நாட்டின் வெளியுறவுக் கொள்கையைத் தெளிவாக எடுத்துக் கூறும் நேரு, உலக நடப்புகளை நாட்டு மக்களுக்கு விளக்குகிறார்: ‘உலகத்தைப் பாருங்கள். எந்த நாட்டுக்கு எதிராகவும் நமது கரங்களை நாம் எப்போதும் உயர்த்தவில்லை. இனியும் நமது கரங்கள் யாருக்கு எதிராகவும் உயராது என்று நம்புகிறேன். ஒவ்வொரு நாட்டையும் நட்புடனே பார்க்கிறோம். நட்புக் கரம் நீட்டுகிறோம். ஆங்காங்கே சில சிக்கல்கள் இருக்கின்றன. இதனால் நட்புக்கான காரணம் மங்கி விடவில்லை. ஏனெனில், இது ஒன்றே உலகுக்கான சரியான பாதை. நமது அண்டை நாடுகளுடன் நெருங்கிய கூட்டுறவு விரும்புகிறோம்.
‘பஞ்சசீலம்’என்கிற சொல்லை நீங்கள் கேட்டு இருப்பீர்கள். நாடுகளுக்கு இடையே உறவு எப்படி இருக்க வேண்டும்... மொத்த உலகத்துடன் நமது உறவு எப்படி இருக்க வேண்டும்.. என்று எடுத்துச் சொன்னோம். சில புதிய நாடுகள் நம்மிடம் பயிற்சி பெற்றன; உலகம் சற்றே மாறியது. ஆனாலும், விரும்பத்தகாத சில சமபவங்கள் உலகில் நிகழ்ந்தன. நாம் கவலையுற வேண்டியது இல்லை. பொதுவாக, உலகின் சூழல் முன்னேற்றம் கண்டுள்ளது என்பதில் மகிழ்ச்சி. நேற்று வரை பகைமையுடன் வெறுப்புடன் பார்த்துக் கொண்ட சில நாடுகளின் கவலைகள் இன்று சற்றே குறைந்து இருக்கின்றன. சில நாடுகள் பரஸ்பரம் கைகுலுக்கிக் கொள்ளவும் தயராக இருக்கின்றன. மிக்க மகிழ்ச்சி. ஒவ்வொரு நாட்டுக்கு இடையிலும் அமைதி நிலவுகிறது.’
இதனைத் தொடர்ந்து உள் நாட்டுப் பிரச்சினைக்குள் நுழைகிறார் பிரதமர் நேரு. கூறுகிறார்: ‘இன்று ஆகஸ்ட் 15 – கோவா நமது கவனத்தில் இருக்கிறது. விடுதலைக்காக நாம் போராடிய போது, கோவா, பாண்டிச்சேரி, அல்லது வேறு ஏதேனும் ஒரு பகுதி, ஐரோப்பிய நாடுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று யாரும் நினைத்தோமா? சுமார் 200 அல்லது 300 ஆண்டுகளாக இவை ‘தனித்து’ இருந்தன. உங்களுக்கு ஏன் கோவா வேண்டும் என்று சிலர் வினோதமாகக் கேட்கலாம். இந்திய வரைபடத்தை நீங்கள் பார்த்தது இல்லையா? அது – இந்தியாவின் ஒரு பகுதி. யாரால் அதைப் பிரித்து விட முடியும்?’
கடந்த எட்டு ஆண்டுகளில், கோவா போன்ற பல கேள்விகளுக்கு அமைதியான முறையில் தீர்வு கண்டுள்ளோம். இன்றும் கூட கோவா விவகாரத்தில் நாம் ராணுவ நடவடிக்கை எடுக்கப் போவதில்லை. இதனை நாம் அமைதியான வழியில் தீர்த்து வைப்போம். இதை ஏன் சொல்கிறேன் என்றால், இந்தியாவுக்கு வெளியில் உள்ள சிலர், மற்றும் நமக்குள்ளேயே சிலர், மக்களை ஏமாற்ற நினைக்கலாம். அங்கே ராணுவத்தை நிறுத்தி உள்ளதாய், வெளியாட்கள் தவறான (பொய்யான) செய்தியைப் பரப்பலாம். அருகே ராணுவம் இல்லை. உள் நாட்டிலும் சிலர் கலவர சூழலை ஏற்படுத்த முனையலாம். நாம் ராணுவத்தை அனுப்பப் போவதில்லை. அமைதியான முறையில் இதற்குத் தீர்வு காண்போம். அங்கே செல்ல விருபுகிறவர்களுக்கு வாழ்த்துகள். ஆனால் அங்கே போகிறவர்கள், ‘சத்யாகிரஹி’ என்று அழைத்துக் கொண்டால், சத்யாகிரகம் என்கிற கோட்பாடு, வழிமுறைகள் பற்றி அவர்கள் நினைவுபடுத்திக் கொள்ளட்டும்.
ராணுவம், சத்யாகிரகிகளைப் பின்தொடர்ந்து செல்வதில்லை. அவர்களிடம் எந்த ஆயுதமும் இல்லை. நிராயுதபாணிகள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம். ஒருவர் சட்டத்தை மீறுகிற போது, அவரைக் கைது செய்ய அரசுக்கு உரிமை இருக்கிறது; சிறைக்கு அனுப்பலாம். ஆனால் நாம் இதனைச் செய்ய மாட்டோம். ஆனாலும், யாரும் அநாகரிகமாகப் பேச வேண்டாம். எத்தனை நாடகள் ஆனாலும் சமாதானமாகப் பேசியே தீர்வு காண்போம்.’
‘பெரிய பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு தரும் மேஜிக் இருப்பதாய்த் தவறாக எண்ணிக் கொள்ள வேண்டாம். எதையேனும் நிறைவாகச் செய்ய வேண்டும் எனில், அதில் அவசரம் காட்டக் கூடாது. சில காலம் காத்து இருப்போம். காத்து இருத்தல் – ஓய்வு அல்ல; அதை விட வலிமையானது. உறுதியானது’.
பஞ்சசீலம் குறித்து உங்களிடம் கூறினேன். உலகம் மாறி உள்ளதை உங்கள் கவனத்துக் கொண்டு வந்தேன். உலகில் நமது கவுரவம், வெற்று முழக்கங்களால் உயரப் போவது இல்லை. நாம் என்ன செய்கிறோம் என்பதையே உலகம் பிரதிபலிக்கும். எட்டு ஆண்டுகளில், நமது நாட்டின் எதிர்காலத்துக்கான அஸ்திவாரம் போட்டுள்ளோம். இதன் மீது கட்டிடம் எழுப்புகிற காலம் வந்துள்ளது. அடிப்படைகளை வலுவாகப் போட்டுள்ளோம். இதனை மேலும் வலுவாக்க வேண்டும்.’
சுதந்திரம் பெற்று நாட்கள் நகர நகர, மக்களிடையே சுதந்திர உணர்வும் மங்கிக் மொண்டே வருவதை நேரு உனர்ந்து இருக்கிறார். இதற்கு இடையேதான் தேசத்தை நிர்மாணிக்கிற பணியில் முனைந்து ஈடுபட்டார். அவ்வப்போது, சரியான பாதையை விட்டு மக்கள் விலகாது தொடர்வதை உறுதி செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் நேருவுக்கு இருந்தன. அவரது உரைகளில் அது எதிரொலித்துக் கொண்டே இருந்தது. கூறுகிறார்:
‘சில பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். சில சங்கடங்கள் நேரலாம். நாம் எழுப்ப நினைக்கும் கட்டிடங்கள் இன்றைக்கான வெற்றுக் கட்டுமானங்கள் அல்ல. இவை நாளைக்கானது; நாளை மறுநாளைக்கானது. வரவிருக்கும் தலைமுறைக்கானது. இதனை வலிமையாக்க வேண்டும்; இதற்கு நமது உழைப்பை நல்க வேண்டும்.’
‘பஞ்சசீலம் பற்றிப் பேச வேண்டும். நாடுகளுக்கு இடையே உறவு இப்படித்தான் இருத்தல் வேண்டும். இந்த ‘பஞ்சசீலம்’என்கிற சொல், பழங்காலத்தில் வேறு பொருளில் பயன்படுத்தப்பட்டது. நம்மை நாம் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். வெளிப்பேச்சுக்கு மட்டுமே அமைதி, அமரத்துவம் பற்றிப் பேசப் போகிறோமா..? மனதில் இதயத்தில், பெருமிதம் இல்லையெனில் ஒருவருக்கொருவர் இணைந்து பணியாற்ற முடியாது. நமக்குள் நாம் இணைந்து பணியாற்ற முடியாது எனில், வெளி நபர்களுக்கு நாம் என்ன அறிவுரை கூறி விட முடியும்? இதனால்தான் இது மேலும் முக்கியம் ஆகிறது.’
‘இந்த பெரிய இந்துஸ்தானத்தில் எத்தனை முகங்கள் உள்ளன? எத்தனை வடிவங்கள் உள்ளன? எத்தனை மதங்கள், மண்டலங்கள், சித்தாந்தங்கள், நிறங்கள், மாநிலங்கள் உள்ளன? இந்தியா - சகோதர சகோதரிகளின் நிலம் ஆகும். இங்கே எந்த சுவர்களும் இருக்கலாகாது. நம்மிடையே சாதிப் பிரிவினைகள் உள்ளன. இதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். ஒரு சமூகத்தை மற்றொரு சமூகம் பிரித்துப் பார்க்கலாகாது. நீண்ட காலமாக இது இந்தியாவை பலவீனம் ஆக்கி வருகிறது. பல முகங்கள், பல வடிவங்கள் தக்க வைக்கப்பட வேண்டும். நாம் எல்லாரும் ஒரே சகோதரத்துவத்தின் கீழ்வருகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எல்லாரும் இணைந்து ஒன்றாய் முன்னேற வேண்டும்.
இரண்டாவது – நாம் செய்யும் எதையும் அமைதியான முறையில் செய்ய வேண்டும். நான் இதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். நாம் அமைதி குறித்து நிறையப் பேசுகிறோம். வாய்ப்புகள் ஒருவருக்கு எதிராக ஒருவரை நிறுத்துகின்றன. நமக்குள் இருக்கும் மிருகம் வெகு எளிதில் நம்முடன் சண்டைக்கு வந்து விடுகிறது. மக்களை, குறிப்பாக இளைஞர்களை, கேட்டுக் கொள்கிறேன் - பொறுப்பு உணர்ந்து செயல்படுங்கள். ’
இன்றைய உலகைப் பாருங்கள். இது அணுசக்தி உலகம். சிறிய சச்சரவுகளில் இருந்து நமது சிந்தனையைத் திருப்ப வேண்டும். எந்த அளவுக்கு இந்த நாடு புதுயுகத்தைப் புரிந்து கொண்டு இருக்கிறது? நாடு முன்னேறுகிறது. இந்த சிந்தனையுடன் நீங்கள் இருக்கிறீகள் என்று நம்புகிறேன். இது முக்கியம்.
1955-களில் நிகழ்ந்த முக்கிய மாற்றத்தைக் குறிப்பிட்டுப் பேசுகிறார் நேரு: ‘சில நாட்களுக்கு முன்பு, மாநில மறுசீரமைப்பு ஆணையம் நிறுவப்பட்டது. பாரபட்சமற்று நடுநிலையுடன் செயல்படும் மூன்று நபர்களை ஆணையத்துக்குத் தேர்வு செய்திருக்கிறோம். ஆய்வு செய்யச் சொல்லி இருக்கிறோம். இன்னும் இரு மாதங்களுக்குள் அவர்களின் அறிக்கையும் பரிந்துரைகளும் சமர்ப்பிக்கப் படலாம். அது என்ன பரிந்துரையாக இருக்கும் என்று எனக்குத் தெரியாது. எனவே அது குறித்து கருத்து தெரிவிக்க இயலாது. ஒன்று மட்டும் சொல்வேன். அது எத்தனை சூடான நிலவரமாக இருந்தாலும் பஞ்சாப், தக்காணம், கிழக்கு, மேற்கு எதுவாக இருந்தாலும், வரப் போகிற பரிந்துரைகளை அமைதியுடன் ஏற்க வேண்டும். அமைதியாகத் தீர்வு காணப்பட வேண்டும்.
நம்முடையது வெவ்வேறு மாநிலங்கள்; வெவ்வேறு நாடுகள் அல்ல. எல்லாரும், ஒவ்வொருவரும் விரும்புகிற முடிவு இருக்கவே முடியாது; அதற்கு சாத்தியம் இல்லை. ஆறிவார்ந்த முடிவு எடுக்க ஆணையம் முயற்சிக்கும். ஆணையம் சொல்வதை ஏற்றுக் கொள்வோம். சண்டை வேண்டாம். நமது பிரச்சினைகளை நம்மால் சமாதானமாய்த் தீர்த்துக் கொள்ள இயலும் என்று உலகத்துக்கு காட்ட வேண்டும். இதுவே வலிமையின் அடையாளம். முழக்கங்களை எழுப்புவது வலிமையின் அடையாளம் அல்ல; அது, சிறுபிள்ளைத்தனம்.’
இந்த உரையில் அடிக்கடி பஞ்சீலம் குறித்து மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறார் நேரு. இந்தக் கொள்கையின் மீது அவருக்கு இருந்த நம்பிக்கையின் வெளிப்பாடு அது. கூறுகிறார்:
‘பஞ்சசீலத்துக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. பிற நாடுகளுடன் நட்பு; மற்றவரின் குறுக்கீடு கூடாது; சமமாக இருந்து ஒருவருக்கு ஒருவர் உதவுதல். இரண்டாவது - பஞ்சசீலம் குறித்த நமது அணுகுமுறை. நாம் சரியான பாதையில் நடப்பது நமக்குள்ளே இருக்கிறது. தவறான பாதையை நாம் தேர்ந்தெடுக்கக் கூடாது. ஒற்றுமையாய் நடப்போம். இந்தியா முழுவதும் ஒரே சமுதாயம். இது பழைய பாடம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த பாடம். நமக்கு நாமே பாடம் கற்றுக் கொள்ளலாம். பிறருக்குப் பாடம் எடுக்க நமக்கு உரிமையில்லை. நாம் பிறருக்கு சொல்லித் தருவது பெருமை அல்ல. நம்முடைய செயல்களால் அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.’
விடுதலையின் எட்டாவது ஆண்டை கொண்டாடுகிறோம். கட்டிடத்தின் ஒரு மாடி கட்டி விட்டோம். இரண்டாவது மாடி கட்ட வேண்டும். நமக்கு முன்னர் கடின உழைப்பு தியாகம் புரிந்தவர்களை நினைவு கொள்வோம். இந்தியாவின் தொன்மையான குரலைக் கேட்போம். மூத்தோரின் பழைய குரல் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. இன்னும் ஓராண்டில், முக்கியமான ஒன்றைக் கொண்டாட இருக்கிறோம். இந்தியாவில் பிறந்த ஆகச் சிறந்த மனிதன் – கவுதம புத்தர் மறைந்து 2,500 ஆண்டுகள் நிறைவு அடைய இருக்கிறது.. இங்கும் பிற நாடுகளிலும் இதனைக் கொண்டாடுவோம். இவரைக் கொண்டாடுவது நம்முடய உயரிய கொள்கைகளைக் கொண்டாடுதல் ஆகும். அவரோடு, மகாத்மா காந்தியையும் நினைவில் கொள்வோம். ஏனெனில் நமது சாதனைகளுக்கு அவரே ஆதாரம். புத்தர் - காந்தி வலியுறுத்திய கொள்கைகளை நாம் பின்பற்றினால் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் நிலையானதாக இருக்கும்; இதயம் வலிமையாக இருக்கும்; கண்கள் நேராகப் பார்க்கும். இதனை மனதில் கொண்டு முன்னேறுவோம். ஜெய்ஹிந்த்.
(தொடர்வோம்)
முந்தைய அத்தியாயம் > செங்கோட்டை முழக்கங்கள் 8 - ஒன்றாய் உழைப்போம்... ஒன்றாய் உயர்வோம் | 1954
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT