Published : 12 Nov 2017 11:06 AM
Last Updated : 12 Nov 2017 11:06 AM

காலத்தின் வாசனை: சந்துகளுக்கும் சரித்திரம் உண்டு!

ழங்கால அரண்மனைகள், புராதனமான கோட்டைகள் இவற்றுக்குப் பின்னால் ஒரு சரித்திரம் இருப்பதுபோல நாம் கவனிக்காது கடந்து செல்லும் சந்துகளுக்குப் பின்னாலும் ஒரு சரித்திரம் இருக்கிறது. தெருக்களின் மறைவில் அவை ஒளிந்து கொண்டிருக்கலாம். ஆனாலும் காலத்தின் கையைப் பிடித்துக்கொண்டு வெகுதூரம் வந்துவிட்ட தெருவின் குழந்தைகள் அவை. குறிப்பாக தஞ்சாவூர் சந்துகள்!

வெளிச்சம் புகாத, காற்றோட்டமில்லாத சாக்கடைகளுடன் கூடிய வழித்தடங்கள் அல்ல அவை. எங்கிருந்தோ ஜில்லென்று காற்று சந்துகளின் ஊடாக ஓடிவரும். வெயிலின் சூடு படாத வெளிச்சம், சந்து முழுவதும் வியாபித்திருக்கும் உள்ளடங்கிய வீடுகளின் திண்ணைகளில் பெண்கள் வம்பளந்து கொண்டும் குழந்தைகள் விளையாடிக் கொண்டும் இருப்பார்கள். ஏதோ ஒரு வீட்டில் வாய்ப்பாட்டு சாதகம் செய்வது கேட்கும்.

தெற்கு வீதியிலிருந்து பழைய பேருந்து நிலையம் பக்கமாக மூன்றுக்கு மேற்பட்ட சந்துகள் இருக்கின்றன. என் நண்பர் ஒருவர் “பல வருஷங்களாக தஞ்சாவூரில் வசிக்கும் எனக்கே எந்த சந்து வழியாக பஸ் ஸ்டாண்டு போவது என்று தடுமாறி விடும்! பேசாமல் பஸ் ஸ்டாண்டு போகும் சந்து என்று எழுதிப் போட்டுவிடலாம்” என்பார் தமாஷாக.

தஞ்சாவூர் சந்துகளின் பெயர்கள் விசித்திரமாக இருக்கும். காடேராவ் சந்து, பச்சண்ணா சந்து, சின்ன பியால் சந்து,பெரிய பியால் சந்து, ஜெக்கேராவ் சந்து, தவே சந்து, காக்கா வட்டாரம், தத்தோஜிப்பா சந்து, பாலோபா சந்து, வரகப்பையர் சந்து..... நாயக்க மன்னர்களிடமும், மராட்டிய மன்னர்களிடமும் பணிபுரிந்த மந்திரி பிரதானிகள், சேனாதிபதிகள் ஆகியோரின் பெயர்கள் இவை.

வரகப்பையர் ரகுநாத நாயக்கரிடம் அமைச்சராகப் பணிபுரிந்தவர். போலீஸ் ராமசாமி நாயக்கர் சந்து, கிருஷ்ணப்பிள்ளை சந்து, செண்பக வள்ளியம்மாள் சந்து, போகி லட்சுமண நாயக்கர் சந்து, நல்லப்பா சந்து, சேவு கொத்தனார் சந்து என்று அக்கால பிரமுகர்களின் பெயர்களைத் தாங்கியும் சில சந்துகள் இருக்கின்றன.

வேப்பமர சந்து இன்னும் இருக்கிறது. வேப்பமரம்தான் இல்லை. மறைந்த மணிக்கொடி எழுத்தாளர் ஸ்வாமிநாத ஆத்ரேயர், பாலோபா சந்தில்தான் குடியிருந்தார்.

ராணி வாய்க்கால் சந்து என்ற சந்தில் தேவதாசிகள் வசித்திருக்கிறார்கள். கீழவாசல் அத்தர் மொஹல்லா மசூதிக்கு எதிரில் கந்தப் பொடிக்கார சந்து இருக்கிறது. இன்னும்கூட அங்கிருப்போர் அகர்பத்தி தயாரிக்கும் குடிசைத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். அங்கே நுழைந்தாலே பத்தி வாசனை மனசை மயக்கும். ஆனால், அங்கு வசிக்கும் குடும்பங்களுக்கு அகர்பத்தி வாசனை வறுமையின் வாசனையாகவே இன்னும் இருக்கிறது. பொற்கொல்லர்களுக்காகவே ஒரு சந்து இருந்திருக்கிறது. மேளக்கார சந்து மேளம், தவில் வாசிக்கும் தொழில் முறைக் கலைஞர்களின் குடியிருப்பாக இருந்துள்ளது.

கீழவாசலில் கீரை விற்பவர்களுக்காகவே ஒரு சந்து இருந்தது. அதன் பெயர் கீரைக்கார சந்து. புரோகிதர்கள் மட்டுமே குடியிருந்த சந்தின் பெயர் பச்சண்ணா சந்து. பழைய பேருந்து நிலையத்தின் பின்னால் இருக்கும் ஒரு சந்தின் பெயர் மாட்டு மேஸ்திரி சந்து. இந்த சந்து முனையில் ரமணி என்பவர் எஸ்.ஆர். சைக்கிள் கம்பெனி என்ற பெயரில் ஒரு சைக்கிள் கடை வைத்திருந்தார். சுவரிலிருந்து சரிவாக ஒரு படுதா. கீழே பெஞ்சு. இந்த இடம் தஞ்சை கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் சந்தித்துப் பேசும் இடமாக இருந்திருக்கிறது. சந்திப்பு இடமாக மட்டுமின்றி கட்சி அலுவலமாகவும் செயல்பட்டது அந்த இடம். இங்கே மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் வந்து தொண்டர்களை சந்தித்து உரையாடிச் செல்வது உண்டு. தோழர் ரமணி இன்னும் அதே சந்தில் வசிக்கிறார் பழைய நினைவுகளுடன்.

பல வருடங்களுக்கு முன்னர் தில்லியிலிருந்து தஞ்சாவூர் வந்திருந்தார் எழுத்தாளர் க.நா.சு. நண்பர்கள் புடை சூழ தெற்குவீதியில் நடந்து போய்க்கொண்டிருந்தார். குறிப்பிட்ட சந்தின் பெயரைச் சொல்லி உறுதிசெய்துகொண்டு அந்த சந்தையே பார்த்தபடி சற்று நேரம் நின்றார். என்ன விஷயம்? என்று கேட்டோம்.

“இந்த சந்தில்தான் என் காதலி குடியிருந்தாள்” என்றார் பெருமூச்சுடன், அந்த 80 வயது காதலர்!

அய்யங்கடைத் தெருவில் குப்பண்ணா சந்தில் ஒரு செக்கோஸ்லோவாகியா இளைஞன் எங்கள் குடும்பத்துடன் சேர்ந்து வசித்தான். அவனுக்கு அந்த சந்து மிகவும் பிடித்து விட்டது. தெருவின் சந்தடிகளை எல்லாம் அந்த சந்து விழுங்கிவிட்டு அமைதியாக இருக்கும்.

பச்சைப்பாசி படிந்த சுவர்கள், பழங்கால வீடுகள் எங்கள் ஊர் பிராகில் கூட இப்படி ஒரு அழகான இடம் இல்லை என்பான். நம்ம ஊர் அற்ப சமாச்சாரங்கள் எல்லாம் அவனுக்கு அதிசயம்தான். அதற்கு குப்பண்ணா சந்தும் விதிவிலக்கல்ல.

ஒருநாள் அந்திவேளை சந்தின் கடைசியில் கிணற்றுக்கு மறுபுறம் யாரது? அந்த இளைஞனும் யாரோ ஒரு வெள்ளக்காரியும் முத்தமிட்டபடி. எனக்கு மிகுந்த கோபம்.

“ஸாரி கோபால்! இவளைப் பெரிய கோயிலில் பார்த்தேன். பெல்ஜியத்திலிருந்து வந்திருக்கும் ஊர்சுற்றி இவள்! இந்த சந்தை பற்றி சொன்னேன்! பார்க்கணும்னு ஒரே அடம்! அழைத்துவந்தேன்! அவளுக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. நாங்கள் குப்பண்ணா சந்தை கெளரவிக்க விரும்பினோம், அதனால்தான்...” என்றான்.

- தஞ்சாவூர்க் கவிராயர்.

தொடர்புக்கு:-

thanjavurkavirayar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x