Last Updated : 16 Nov, 2017 10:00 AM

 

Published : 16 Nov 2017 10:00 AM
Last Updated : 16 Nov 2017 10:00 AM

ஒரு நிமிடக் கட்டுரை: ‘மோட்டல்’ எனும் சுயாட்சிப் பகுதிகள்!

மீபத்தில் மதுரையிலிருந்து அரசுப் பேருந்தில் பகல் பயணமாகச் சென்னை சென்றேன். வழியில் விழுப்புரம் பக்கம், ஒரு மோட்டலில் வண்டி நின்றது. நல்ல பசி. உள்ளே போனேன். சாப்பிட்டுக்கொண்டிருந்த ஒரு பெரியவரை (அவரும் பயணிதான்) மோசமான வார்த்தைகளால் திட்டிக்கொண்டிருந்தார் சர்வர்.

தயங்கியபடி, பக்கத்து மேஜையில் உட்கார்ந்தேன். “என்ன வேணும்?” என்று சர்வர் கேட்ட தொனியிலேயே எனக்கு பாதிப் பசி போய்விட்டது. “என்ன இருக்குதுண்ணே?” என்றேன். “புரோட்டாவும், பிரியாணியும்தான் இருக்கு” என்றார். சோறு, எலுமிச்சை சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம் இல்லாத தேசத்தில் இறங்கிவிட்டேன் போலும்!

“புரோட்டா, மத்தியான பயணத்துல சாப்பிடுற அயிட்டமா?” என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, ‘டொங்க்’ என்று பெரும் சத்தத்துடன் தண்ணீர் டம்ளரை வைத்தார். எச்சில் இலையை வீசும், அதே ‘பக்குவத்து’டன் இலையும் போட்டார். மோட்டல் என்பதால் எச்சரிக்கை உணர்வோடு “புரோட்டா எவ்வளவுண்ணே?” என்றேன். ஒரு செட் 70 ரூபாய். “கிரேவி தனியாத்தான் வாங்கணும்” என்று சொல்லிவிட்டுப் போனார். திட்டுவாங்கிய பெரியவர் வேண்டாம் என்று சைகை காட்டியதால், சர்வர் திரும்பிவரும் முன்னே ஓடிவந்துவிட்டேன்.

வெளியில், நொறுக்குத்தீனியாவது கிடைக்குமா என்று தேடத் தொடங்கினேன். பாதாம் பால் இருந்தது. வாங்கிக் குடித்தேன். ‘மாட்டுக்கு ஊற்றுகிற கழுநீர்’ போன்ற சுவை. குடித்துவிட்டு விலை கேட்டேன். “40 ரூபாய்” என்றார் கடைக்காரர். முகம் வெளிறிப்போய் அதன் அதிகபட்ச சில்லறை விற்பனை (எம்ஆர்பி) விலையைப் பார்த்தேன். 30 ரூபாய் என்றுதான் போட்டிருந்தது. கேட்டால், “இங்கே அப்படித்தான் சார்” என்றார்.

நிலக்கடலை, பொட்டுக்கடலை, பட்டாணிக்கடலை ஏதாவது கிடைக்கிறதா என்று பார்த்தால், எல்லாமே மசால் கலந்த வறுவலாகத்தான் இருந்தது. ‘தொலைகிறது’ என்று நிலக்கடலை மசால் வாங்கினேன். 20 ரூபாய். அதுவும் காம்பிப்போய் (கெட்டுப்போய்) இருந்தது. “இதுக்கு 70 ரூபாய் பரோட்டாவே சாப்பிட்டிருக்கலாம்போல” என்று முனங்கிக்கொண்டே பயணத்தைத் தொடர்ந்தேன். இந்த அனுபவத்தைப் பெறாத தமிழ்நாட்டுக்காரர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

உணவுப் பாதுகாப்புச் சட்டம், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் என்று நிறைய இருக்கின்றன. அவற்றை அமல்படுத்துவதற்கு அதிகாரிகள் எல்லாம் இருக்கிறார்கள். உணவுப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சொன்னார், “தம்பி, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் இந்தச் சட்டங்கள் அமலில் இருக்கின்றன. ஓட்டல்கள் மட்டுமல்ல, வடை விற்கிற கிழவிகள் முதல் கோயில் திருவிழாவில் நன்கொடையாகக் கூழ் ஊற்றுபவர்கள் வரை உணவுப் பாதுகாப்புத் துறைக்குத் தெரியப்படுத்தி FSSAI சான்று பெற வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. தெரியுமா?” என்று சிரிக்காமல் சொன்னார். வியாபாரிகளும் நுகர்வோர் கள்தானே? வேறெங்காவது பட்டுத் திருந்தட்டும்!

- கே.கே.மகேஷ்

தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x