Last Updated : 10 Oct, 2017 02:40 PM

 

Published : 10 Oct 2017 02:40 PM
Last Updated : 10 Oct 2017 02:40 PM

சின்ன சின்ன வரலாறு!- 1: கண்ணாடியின் கதை

வெளியே கிளம்பும் முன் கடைசியாக நாம் செய்யும் வேலை, கண்ணாடி முன் நின்று முக ஒப்பனையை சரிபார்ப்பது. 

யோசித்துப்பாருங்கள், வீட்டுக்கு ஸ்கூட்டரில் வருபவர் யாரேனும் ஒருவராவது அழைப்புமணி அடிக்கும்முன் ஸ்கூட்டர் கண்ணாடியில் பார்த்து தலை சீவாமல் இருந்ததுண்டா?

இவ்வளவு அத்தியாவசிய பொருளான இந்தக் கண்ணாடி இல்லாமலிருந்தால்?! எனும் யோசனையே இந்தக் கண்டுபிடிப்பைப்பற்றித் தெரிந்துகொள்ளும் ஆவலைத் தூண்டியது.

தற்போது நம் முகங்களைப் பிரதிபலிக்கும் வகை கண்ணாடி 1835ம் வருடம் ஜஸ்டஸ் வான் லெபே எனும் ஜெர்மன் வேதியியலாளரால் கண்டுபிடிக்கப்பட்டது.

கண்ணாடியின் ஒரு பக்கம் மட்டும் மெல்லிய பூச்சாக உருக்கப்பட்ட வெள்ளியை , வெள்ளி நைட்ரேடின் ரசாயன குறைப்பின் மூலம் படரச்செய்ய, இது வரையில் பிரதிபலிப்பை காட்டமுடியாத ஒளிபுகா கண்ணாடி, நம் அசட்டுச்சிரிப்புக்களை செவ்வனே காட்டத்தொடங்கியது.

ஆனால் கண்ணாடி எனும் பொருளின் வரலாறு கி.மு., 6000-ல் தொடங்கிவிட்டது.

இதுகூட நமக்குக்கிடைத்த வரலாற்றுக் குறிப்புகளின் தகவல்தான். துருக்கிதான் இதன் முன்னோடி. இயற்கைப் பொருட்களின் மேல் பாகத்தை பாலிஷ் ஏற்றி கண்ணாடியாக உபயோகித்தனர்.

பின் எகிப்தியர்கள் செம்பை மெருகேற்றி உபயோகித்தனர்.சீனாவில் தகரம் மற்றும் தாமிரம் கொண்டு உருவாக்கிய ஸ்பெகுலம் எனும்பொருளை மெருகேற்றி உபயோகித்தனர்.

ஆனால் இவை யாவும் விலையுயர்ந்த பொருளாக சாமானியர்களின் கைகளுக்கு கிட்டாமல் தான் இருந்தது. இவர்கள் தன் முக லாவண்யங்களை தண்ணீர் வழி பிரதிபலிப்புக்களில் பார்த்துத் தான் மகிழமுடிந்தது.

லெபனானில் கி.பி. முதல் நூற்றாண்டில்  உலோக பூச்சுக்களை அறிமுகப்படுத்தினர். ரோமானியர்கள் லெட் வேதிப்பொருளை உள் செலுத்திய ஊதப்பட்ட கண்ணாடி உருண்டைகளை உபயோகித்தனர்.

மெர்குரி அமால்கம், தகரமென்று வெவ்வேறு வடிவத்தில் வந்த முகம்பார்க்கும் கண்ணாடி, தற்போது அலுமினியத்தை வெற்றிட முறையில் உட்செலுத்தி செய்யப்படுகிறது.

முக்கியமான புள்ளிக்கு வருவோம். இப்போது பேய்களுக்கு திரைப்பட காலம். காணொளிகளில்,திரை அரங்குகளில் என்று எங்கெங்கு காணினும் பேய்க்களடா. இதை நான் இப்போது சொல்வதற்கு காரணம், கண்ணாடிக்கும் பேய்களுக்கும் எப்போதும் தொடர்பு உண்டு.

முதல் முதல் தன் முகத்தைப் பார்த்து மனிதன் பயந்தது காரணமாக இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்!!

இந்தக் காரணத்தால்தான், பேய் முகங்கள் சினிமாவில் கதாநாயகி கண்ணாடி முன் நிற்கும் போது அதிலிருந்து வந்து பயமுறுத்தும். இறந்த ஆத்மாக்கள் கண்ணாடியில் குடிபுகுந்து ஏழு வருடம் குடித்தனம் செய்யும் என்பது பழங்கால ருமேனியர்கள் நம்பிக்கை. அதனால் தவறி கண்ணாடி உடைந்துவிட்டால் அதைப் பள்ளம் தோண்டிப் புதைப்பார்கள்.

இல்லாவிட்டால் அதில் குடி இருந்த பேய் உலா செல்லத் தொடங்கி விடுமாம்.வீட்டில் யாராவது இறந்துபோனால் அனைத்துக் கண்ணாடிகளும் துணிபோட்டு மூடப்பட்டுவிடும்.

இந்தப் பேய் பயத்தால் ஒரு கண்ணாடி உற்பத்தி தொழிற்கூடம் ஆரம்பிக்கும்முன் செய்யப்பட வேண்டியதாக சொல்லப்பட்டிருப்பவையைப் பார்த்தால்....

நாம் எங்கே இருந்தோமோ அங்கேயே இருக்கிறோம் என்பது புரியும். இந்த விதிகள் மெசோபொடேமியா ( தற்போது ஈரான், இராக், சிரியா, துருக்கி இருக்கும் இடம்) 3300 ஆண்டுகள் முன் களிமண் அட்டைகளில் எழுதிவைத்து தற்போது பிரிட்டிஷ் அருங்காட்சியத்தில் உள்ளது.

இதன் படி நல்ல மாதம் மற்றும் நேரம் பார்த்து சூளைக்கு அடித்தளம் அமைக்கவேண்டும். முடிந்தபின் அதில் கூபூ எனும் கடவுளின் உருவம் பதிக்க வேண்டும். இதன் பின் வெளி ஆட்கள் உள்ளே நுழையக்கூடாது. சுத்தம் இல்லாதவர் யாரும் கூபூவின் எதிர் வரக்கூடாது.

கண்ணாடி உற்பத்தி தொடங்கும் நாள் முதல் ஆடு ஒன்றைப் பலி கொடுக்க வேண்டும். பின் வாசனைப் பத்திகள் ஏற்றிவைத்து,வெண்ணெய்யும் தேனும் முதலில் ஊற்றிவிட்டு பின் தான் சூளையைப் பற்றவைக்க வேண்டும்.

இதன் பின் கண்ணாடி செய்வதற்கு தேவையான பொருட்கள், செய்முறை என்று விளக்கப்பட்டிருக்கிறது.

இவ்வளவு சொல்லிவிட்டு கண்ணாடி செய்வதற்கான பொருட்களைச் சொல்லாவிட்டால் எப்படி?

சிலிகா,. அதாவது மண் தான் இதன் முதல் மூலப்பொருள். இதனுடன் சோடா ஆஷ், லைம்ஸ்டோன் சேர்த்து 1700 டிகிரி செல்சியஸில் உருகவைக்கும்போது கண்ணாடி உருவெடுக்கிறது.

முதலில் இன்காட்களாக செய்யப்பட்டு, பின் உருக்கப்பட்டு வேண்டிய வடிவில் கண்ணாடிப்பொருட்களாக செய்யப்படுகிறது. இதில் தட்டையாக வடிவமைக்கப்படுவதே நாம் முகம் பார்க்கும் கண்ணாடி.

இந்தக்கண்ணாடி ஸ்னோவைட் கதையில் உள்ளதுபோல்,உலகிலேயே மிக அழகான முகம் எது என்று சொல்லுமா...? சொல்லலாம்...இதற்கும் ஓர் ஆப் வராமலா போய்விடும்.

காத்திருப்போம்.. நம் முகம் என்றாவது இப்படி வருமென்று.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x