

பலன்கள்: எதிலும் பொறுமையுடனும் தைரியத்துடனும் ஈடுபடும் கடக ராசி வாசகர்களே, நீங்கள் மனசாட்சிக்கு விரோதமான காரியத்தை செய்ய மாட்டீர்கள். நீங்கள் எதிலும் ஈடுபடுவதற்கு முன் யோசிப்பீர்கள். தெய்வ சிந்தனை உடையவர்கள், பெற்றோர்களை மதித்து நடப்பீர்கள். இந்த ஆண்டு உங்கள் வேலைகளை தன்னடக்கத்துடன் செய்து முடிப்பீர்கள். சமுதாயத்தில் உங்களின் நிலையை உயர்த்திக்கொள்வதற்கு ஏதுவான நல்ல காரியங்களைச் செய்வீர்கள்.
உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். இந்த ஆண்டு முழுவதும் வருமானம் சீராக இருக்கும். வீடு, வாகனம் ஆகியவற்றை வாங்குவீர்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்வரும் இடையூறுகளை முன்கூட்டியே உணர்ந்து அதற்கேற்ப செயல்முறைகளை மாற்றிக்கொள்வீர்கள்.
இல்லத்தில் தடைபட்டிருந்த திருமணம் போன்ற சுப காரியங்கள் நடந்தேறும். தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். அதேநேரம் சகோதர, சகோதரி வழியில் சிறிது மனத் தாங்கல் ஏற்படலாம். எனவே விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளவும். அதோடு அனாவசிய வம்பு, வழக்குகளில் ஈடுபட்டு பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். மற்றபடி உங்கள் துறையைச் சேர்ந்தவர்கள் தாமாகவே தேடி வந்து நட்புகொள்வார்கள். உங்களின் வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொண்டவர்கள்கூட உங்களுக்கு உதவி செய்யும் காலகட்டமாக இது அமைகிறது.
ஜூலை மாதத்தில் இருந்து ஆண்டு இறுதி வரையில் உள்ள காலகட்டம் உங்களை புத்துணர்ச்சியுடன் செயல்பட வைக்கும். கடந்த கால கசப்பான அனுபவங்களில் இருந்து விடுபடுவீர்கள். பொருளாதார நிலைமை சீரடையும். சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள்.
நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுக்கு ஆதரவாக இருப்பீர்கள். புதிய சொத்துக்களை வாங்கும் போது வில்லங்கம் ஏற்படாத வகையில் கவனமாக வாங்கவும். தொழில் ரீதியாக தேவையான பயணங்களைச் செய்வீர்கள். உங்களின் மதிப்பு, மரியாதை உயரும். சிலருக்கு அரசு விருதுகளும், பாராட்டுகளும் கிடைக்கும். சிலருக்கு புதிய வீட்டுக்கு பெயர்ச்சியாகும் வாய்ப்பு கிடைக்கும்.
பூர்வீகச் சொத்துக்கள் வகையில் இருந்த வில்லங்கம் விலகி, சுமுகமான பாகப்பிரிவினை உண்டாகும். பழைய சொத்துக்களும் விற்பனையாகும். இதனால் வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவுகள் ஏற்படாது. குடும்பத்தார் உங்களுடன் விட்டுக்கொடுத்துப் பழகுவார்கள். உங்கள் தோற்றத்தில் வசீகரம் உண்டாகும். நீண்ட காலமாக தடைபட்டு வந்த குழந்தை பாக்கியம் இந்தக் கால கட்டத்தில் கிடைக்கும்.
பிள்ளைகளை வெளி நாடுகளுக்கு அனுப்பிப் படிக்க வைப்பீர்கள். எவருக்கும் இந்தக் காலகட்டத்தில் உங்கள் பெயரில் பணம் வாங்கித் தர வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரித்தாலும் உங்கள் செயல்களை செவ்வனே செய்து முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு நேசக்கரம் நீட்டுவார்கள்.
அலுவலக ரீதியான பயணங்களின் மூலம் ஓரளவுக்குத்தான் நன்மைகள் கிடைக்கும். மற்றபடி உங்கள் கௌரவத்திர்கு எந்தப் பங்கமும் ஏற்படாது. சிலருக்கு விரும்பிய ஊர்களுக்கு இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் சிக்கல்களை சந்திப்பீர்கள். அதனால் சிலருக்கு நஷ்டங்கள் உண்டாகலாம். அதேநேரம் கூட்டாளிகள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து நடந்து கொள்வார்கள். இதனால் உங்களின் செயல்திறன் அதிகரிக்கும்.
மற்றபடி புதிய முதலீடுகளை நன்கு யோசித்த பிறகே செய்யவும். அரசியல் வாதிகளுக்கு தடைகள் ஏற்பட்டாலும் திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றியடையும். சமூகத்தில் அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள். பல வழிகளிலும் வருமானம் பெருகும். தொண்டர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். கலைத்துறையினருக்கு புகழும், பாராட்டும் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். திட்டமிட்ட வேலைகளில் பொறுப்புடன் நடந்துகொண்டால் சிரமங்களைத் தவிர்க்கலாம்.
ரசிகர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். சக கலைஞர்கள் நட்பு பாராட்டுவார்கள். பெண்மணிகளுக்கு இது மகிழ்ச்சி நிறைந்த ஆண்டு. குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். கணவர் உங்களை மதித்து நடப்பார். அவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். பண வரவு சரளமாகவே இருக்கும். ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகளுக்கு படிப்பில் ஈடுபாடு அதிகரிக்கும். விளையாட்டுகளில் பங்கேற்று வெற்றி பெறுவீர்கள். சீரிய முயற்சி செய்தால் மேலும் மதிப்பெண்களை அள்ளலாம். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள்.
புனர் பூசம் 4ம் பாதம்: இந்த ஆண்டு இதுவரை இருந்து வந்த பலவிதமான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். பின் தங்கிய நிலையிருப்பவர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வார்கள். தாயின் உடல் நலத்தில் கவனம் தேவை.
பூசம்: இந்த ஆண்டு உங்களுடைய உடல் நலத்தை பொறுத்த வரை கால் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட உபாதைகள் வரலாம். சிலருக்கு ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை ஏற்படலாம். நல்ல பணப் புழக்கம் இருக்கும்.
ஆயில்யம்: இந்த ஆண்டு எடுத்த காரியம் அனுகூலத்தைக் கொடுக்கும். மதிப்பு மரியாதை சீராக இருக்கும். வீன் விவாதங்களைத் தவிர்க்கவும். குடும்பத்தில் தம்பதிகளில் இடையே இடையே இருந்து வந்த பிரச்சனைகள் சுமூகமாக மறையும்.
பரிகாரம்: முடிந்தால் திருவண்ணாமலை அல்லது பர்வத மலையை பவுர்ணம் அன்று வலம் வரவும். “அல்லி மலரை” அம்பாளுக்கு திங்கள் தோறும் சாத்திவர குழப்பங்கள் அகலும். மனம் தெளிவடையும்.
பலன்கள்: எதிலும் தங்களது தனித்தன்மையை வெளிப்படுத்தும் சிம்ம ராசி வாசகர்களே நீங்கள் தர்ம சிந்தனை உடையவர்கள். அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற வேண்டும் என்று விரும்புவீர்கள். பழமையையும் கலாசாரத்தையும் மதித்து நடப்பீர்கள். முன்னோர்களின் ஆசீர்வாதங்களை முழுமையாக பெற வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள்.
இந்த ஆண்டு குடும்பத்தில் சூழ்ந்திருந்த பிரச்னைகள் விலகி தெளிவு பிறக்கும். குறிக்கோளை சுலபமாக அடைவீர்கள். பணக் கஷ்டம் நீங்கும். பொதுக்காரியங்களில் உங்கள் நேரத்தை செலவிடுவீர்கள். தாய் வழி உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேர்ந்து உங்களை மகிழ்ச்சிப்படுத்தும்.
சமுதாயத்தில் உயர்ந்தவர்களுடன் நெருங்கிய தொடர்பு உண்டாகும். போட்டியாளர்களின் சதிகளை தவிடு பொடியாக்கி விடுவீர்கள். அதேநேரம் அவ்வப்போது உடல் உபாதைகள் தோன்றி மறையும். குறிப்பாக வயிறு, தோல் சம்பந்தப்பட்ட உபாதைகள் உண்டாகலாம். அதனால் உடல் நலத்தில் கவனமாக இருக்கவும்.
மற்றபடி உங்கள் திறமைக்குத் தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். சட்டப் பிரச்னைகள் பெரிதாகாமல் பார்த்துக்கொள்வீர்கள். வம்பு, வழக்குகளை விட்டுக்கொடுத்து நடந்து கொண்டு முடித்துக்கொள்வீர்கள். உங்களைப் பற்றி வீண் புரளி சொல்பவர்களிடமிருந்து விலகி இருப்பீர்கள். உங்களின் நுண்ணிய அறிவால் புதிய ஆற்றலைப் பெறுவீர்கள். குடும்பத்தினருடன் விருந்து, கேளிக்கைகளில் பங்கேற்று மகிழ்வீர்கள்.
ஜூலை மாதத்தில் இருந்து ஆண்டு இறுதி வரை உள்ள கால கட்டத்தில் பொருளாதாரத்தில் சிறப்பான வளர்ச்சியை அடைவீர்கள். தனிப்பட்ட முறையிலும், கூட்டுத் தொழிலிலும் நல்ல நிலை ஏற்படும். உங்களின் தெய்வ நம்பிக்கை பலப்படும். பிறரைச் சார்ந்து செய்து வந்த காரியங்களை தனித்துச் செய்து பெருமையடைவீர்கள்.
போட்டியாளர்களை சமாளிப்பீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் கவனமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் நிறையும். உற்றார், உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொண்டு அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக்கொள்வீர்கள். உங்களின் செல்வாக்கு உயரும். இந்தக் கால கட்டத்தில் வீட்டைப் பழுது பார்ப்பது போன்ற காரியங்களை செய்ய வேண்டாம்.
ஷேர் மார்க்கெட், ஸ்பெகுலேஷன் துறைகளில் அதிக வருமானத்தை எதிர்பார்க்க முடியாது. அவசியமில்லாத பயணங்களைத் தவிர்க்கவும். அதோடு முக்கிய முடிவுகளை உயர்ந்தோரின் ஆலோசனைகளைக் கேட்டு எடுக்கவும். உடல் ஆரோக்யம்,மன நலம் சீராக யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றைச் செய்வீர்கள். இந்தக் காலகட்டத்தில் ராசியிலுள்ள குரு பகவானால் உற்சாகமாக செயல்படுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாவீர்கள். ஆனால் சக ஊழியர்களின் ஒத்துழைப்பினால் அனைத்து இடையூறுகளையும் தாண்டி வந்து விடுவீர்கள். சிலருக்கு அலுவலக ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றங்கள் உண்டாகலாம். மற்றபடி முயற்சி மேற்கொண்டால்தான் உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்.
வியாபாரிகள் புதிய முயற்சிகளை மேற்கொண்டு பலன் அடைவீர்கள். அதேநேரம் கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளவும். மற்றபடி கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடியும். புதிய திட்டங்களை செயல்படுத்தி வாடிக்கையாளர்களின் கவனத்தைக் கவர்வீர்கள். அரசியல் வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். பயணங்களால் நன்மைகள் உண்டாகும். உங்களின் அனைத்து வேலைகளையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். அதேநேரம் தொண்டர்கள் உங்களை சிறிது அலட்சியப்படுத்துவார்கள். எனவே அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும். கலைத் துறையினருக்கு அதிக முயற்சிகளுக்குப் பிறகே புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
ரசிகர்களின் பாராமுகத்தால் வேதனை அடைவீர்கள். சக கலைஞர்கள் உங்களுக்கு உதவ மாட்டார்கள். எனவே அவர்களிடம் எந்தக் கோரிக்கையையும் எடுத்துச் செல்ல வேண்டாம். மற்றபடி பொறுப்புடனும்,பொறுமையாகவும் நடந்துகொண்டு செயல்படவும்.
பெண்மணிகள் இந்த ஆண்டு கூடுதல் வருமானத்தைக் காண்பீர்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவரிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டு அவரின் அன்பைப் பெறவும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடத்த வாய்ப்பு உண்டாகும். மாணவமணிகள் படிப்பில் முழுமையான கவனத்தைச் செலுத்தினால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். எனவே படிப்பைத் தவிர வேறு எதையும் நினைக்க வேண்டாம்.
மகம்: இந்த ஆண்டு பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். முயற்சிகளின் பேரில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். குழந்தை பாக்கியம் கிட்டும். வீட்டிற்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும்.
பூரம்: இந்த ஆண்டு புதிய வீடு, மனை ஆகியவற்றை வாங்கும் போது கவனம் தேவை. ஒரு முறைக்கு இரு முறை விசாரித்து வாங்குவது நல்லது. நண்பர்கள், உறவினர்கள் அன்னியோன்னியமாக இருப்பர்.
உத்திரம் 1ம் பாதம்: இந்த ஆண்டு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். சற்று முயற்சி எடுத்தால் பதவி உயர்வு உங்களை வந்து சேரும். எதிர்பார்திருந்த பணி இடமாற்றம் உங்களை வந்து சேரும்.
பரிகாரம்: ஞாயிற்றுக் கிழமைதோறும் அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று நெய் விளக்கு ஏற்றி வழிபடவும். “எருக்க மலரை” சிவனுக்கு அல்லது கணபதிக்கோ அர்ப்பணம் செய்து வணங்கி வர நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
பலன்கள்: எதிலும் தங்களது உழைப்பையும் தன்னார்வத்தையும் வெளிப்படுத்தும் கன்னி ராசி வாசகர்களே குடும்பத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்கள் நீங்கள். அதீதமான உணர்வுகள் கொண்டவர்கள். கவுரவத்தை அனைத்து இடத்திலும் எதிர்பார்ப்பீர்கள். சிக்கனத்தை கடைபிடிப்பதிலும் வல்லவர்கள். உலகம் முழுவதும் சுற்றிவர வேண்டும் என்று விருப்பம் கொண்டவர்கள்.
தெளிவாக திட்டமிட்டு உடனுக்குடன் செயல்படுவீர்கள். உங்களுக்குக் கீழ் பணி புரிபவர்களுக்கு மன உற்சாகத்தையும் தைரியத்தையும் கொடுப்பீர்கள். இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக பாவிக்கும் மனப் பக்குவம் கிடைக்கும். வசீகரமான பேச்சும் மிடுக்கான நடையும் உங்களின் தன்னம்பிக்கையைப் பறைசாற்றும். கிடைக்க வேண்டியவை தானாகவே கிடைத்துவிடும்.
வழக்கு விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். குழந்தைகள் பிறந்து வம்சம் விருத்தியாகும். குடும்பத்தில் உற்றார், உறவினர்கள் முழுமையான ஆதரவைத் தந்து உங்களின் கைகளை பலப்படுத்துவார்கள்.
அதேநேரம் எதிலும் அவசரமும் பரபரப்பும் வேண்டாம். தவறு செய்பவர்களிடம் கூட்டு சேர வேண்டாம். அவர்களிடம் இருந்து சுமுகமாக விலகிவிடவும். கடினமான உழைப்புக்கு நடுவே சற்று ஓய்வெடுத்துக்கொள்ளவும். மற்றபடி முன் அறிமுகம் இல்லாதவர்களும் உங்களுக்கு உதவுவார்கள்.
ஜூலை மாதத்தில் இருந்து ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் பண வசதிக்கு எந்தக் குறைவும் ஏற்படாது. என்றாலும் கடினமாக உழைக்க வேண்டி வரும். சிலருக்கு அனாவசியச் செலவுகள் செய்ய நேரிடலாம். அதனால் மனச் சோர்வுக்கு ஆளாகாமால் உங்கள் வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்தவும். உடல் நலத்தில் அக்கறை காட்டவும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை. உற்றார், உறவினர்கள் ஒன்றுமில்லாத விஷயத்தைக் கூடப் பெரிதுபடுத்தி விடுவார்கள். எனவே அவர்களிடம் எச்சரிக்கை தேவை.
பிள்ளைகளுக்கு சிறிது பின்னடைவு ஏற்படும். செய் தொழிலில் அகலக்கால் வைக்க வேண்டாம். மற்றபடி கோயில்களில் நடைபெறும் விசேஷ பூஜைகளில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். தர்ம காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள்.சகோதர சகோதரிகளிடம் ஏற்பட்ட பிணக்குகளைப் பேசித் தீர்த்துக் கொண்டு உறவுகளைப் புதுப்பித்துக்கொள்வீர்கள்.
உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் சற்று காலதாமதத்துடனே பரிசீலிப்பார்கள். எனவே பொறுமையுடனும் பொறுப்புடனும் நடந்துகொள்ளவும். மற்றபடி முடிவு சாதகமாகவே அமையும். வேலையில் திருப்தி காண்பீர்கள். வெளியூர் பயணங்களைச் செய்வீர்கள். சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். இதனால் அலுவலகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும்.
வியாபாரிகளுக்கு முயற்சிகளுக்குத் தகுந்த லாபம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய வியாபாரம் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சீராக இருக்கும். சிறிய சிரமங்களுக்குப் பிறகே புதிய குத்தகைகள் கிடைக்கும். சிலருக்கு கால்நடைகளால் நல்ல லாபம் கிடைக்கும். பால் வியாபாரம் நன்றாக நடக்கும்.
அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள். மேலிடத்தின் ஆதரவு இருப்பதால் புதிய பதவிகளைப் பெற்று மகிழ்வீர்கள். உங்களின் புகழும், செல்வாக்கும் உயரும். தொண்டர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள்.
கலைத்துறையினருக்கு பழைய ஒப்பந்தங்களை முடித்துக்கொடுப்பதில் சிரமங்கள் ஏற்படும். என்றாலும் கடினமாக உழைப்பீர்கள். ரசிகர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். அனைத்து விஷயங்களையும் நன்றாக முடித்துவிடுவீர்கள்.
அதேநேரம் இந்த வருடம் கடினமாக உழைக்க வேண்டி வரும். உங்களின் விடா முயற்சியை சக கலைஞர்கள் பாராட்டுவார்கள். அவர்களால் சில வாய்ப்புகளும் கிடைக்கும். பெண்மணிகள் கணவரால் பாராட்டப்படுவார்கள். இதனால் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் கிடைக்கும். அவர்களை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவுடன் உங்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நண்பர்கள் உதவி செய்வார்கள்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த ஆண்டு மேலதிகாரிகளின் அனுசரனை இருந்து வரும். வியாபாரிகள் சிறப்பான முன்னேற்றைப் பெறலாம். லாபம் அதிகரிக்கும். உங்கள் வியாபாரத்தை விரிவாக்கம் செய்வீர்கள். எதிரிகளை வீழ்த்துவதற்கு உண்டான பாதைகளை வகுத்துக் கொள்வீர்கள்.
அஸ்தம்: இந்த ஆண்டு புதியதாக ஆரம்பித்த தொழிலில் ஏற்றம் உண்டு. இரும்பு தொடர்பான தொழிலில் அதிக வருவாய் வந்து சேரும். கூட்டளிகள் இடையே ஒற்றுமை பலம் ஏற்படும்.
சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த ஆண்டு புதிய ஒப்பந்தங்கள் சற்று தாமதமாக வந்தாலும் முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும். பொருளாதாரம் எதிர்பார்த்தபடி இருக்காது. உடன் இருப்போரால் பிரச்சனைகள் வரலாம்.
பரிகாரம்: புதன்கிழமைதோறும் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று தேங்காய் நெய் விளக்கு ஏற்றி வழிபடவும். முடிந்தவர்கள் தினசரி ஸ்ரீவிஷ்ணு ஸகஸ்ர நாமம் பாராயணம் செய்யலாம். “துளஸி”யை பெருமாளுக்கு சாத்தி அர்ச்சனை செய்து வணங்கி வர தடைகள் விலகி நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். சொத்துக்களில் இருந்த வந்த பிரச்சனைகள் மாறும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.