

பலன்கள்: எதிலும் போராட்ட குணத்துடன் ஈடுபட்டு வெற்றிகளைக் குவிக்கும் மகர ராசி அன்பர்களே நீங்கள் தன்னம்பிக்கை மிக்கவர்கள். கடுமையான உழைப்பின் மூலம் அனைத்து காரியங்களிலும் வாகை சூடுவீர்கள். உங்கள் மனசாட்சிக்கு விரோதமானக் காரியங்களை செய்ய மாட்டீர்கள். இந்த ஆண்டு உங்களின் செய் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
செல்வ வளம் பெருகும். உங்கள் செல்வாக்கு உயரும். உங்களின் பெயரும், புகழும், அந்தஸ்தும் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றியை அடைவீர்கள். வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும். அனைவரிடமும் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்வீர்கள். பெரியோரிடம் நல்லுறவை வளர்த்துக் கொள்வீர்கள். பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட கவலைகள் நீங்கும்.
மனரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் அதில் இருந்து மீண்டு விடுவார்கள். அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை உண்டாகும். உங்களின் எண்ணங்களில் ஏற்பட்ட தடுமாற்றம் நீங்கும். மனக் குழப்பம் நீங்கி தெளிவுடன் காணப்படுவீர்கள். உங்களின் தேகத்தில் புதிய பொலிவு உண்டாகும். உங்களின் நகைச்சுவை உணர்வு அதிகரிக்கும். விலகிச் சென்றிருந்த உறவினர்கள் மீண்டும் வந்து இணைவார்கள்.
வருமானம் இரட்டிப்பாகும். பழைய கடன்களை வட்டியும் முதலுமாக திருப்பிச் செலுத்துவீர்கள். குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் பாகப்பிரினை உண்டாகி உங்களுக்கு உரிய பங்கு கிடைத்துவிடும். அதோடு கொடுத்த வாக்குறுதியை எப்பாடுபட்டாவது காப்பாற்றி புகழடையும் கால கட்டம் இதுவென்றால் மிகையில்லை.
ஜூலை மாதத்தில் இருந்து ஆண்டு இறுதி வரையில் உள்ள கால கட்டத்தில் நண்பர்களுடன் இணக்கமாகச் செயல்படுவீர்கள். வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்பவும் கை வந்து சேரும். உங்களைப் பற்றிய தவறான அபிப்ராயங்களை நண்பர்கள் மறந்து விடுவார்கள். அதேநேரம் சில அனாவசிய செலவுகளையும் செய்ய நேரிடும். குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் அவற்றை பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டுத் தீர்த்துக் கொள்வீர்கள்.
உங்களுக்கு என்று தனி பாணியை அமைத்துக்கொண்டு செயல்படுவீர்கள். திட்டமிட்ட காரியங்களில் சில தடுமாற்றங்கள் ஏற்பட்டாலும் நஷ்டங்கள் ஏற்படாமல் தப்பித்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவும். உற்றார் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
செய் தொழிலில் மாற்றம் செய்ய நினைக்கும் போது முன் கூட்டியே கூட்டாளிகளுடன் விவாதித்து சுமுகமான நிலைமையை ஏற்படுத்திக்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருந்தாலும் அவ்வப்போது உஷ்ணம் சம்பந்தமான உபாதைகளுக்கு ஆளாவீர்கள். எனவே கவனம் தேவை. நண்பர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகளை நடுநிலையோடு இருந்து தீர்ப்பீர்கள். அதோடு தீயோரின் நட்பையும் தவிர்ப்பது நல்லது. இதனால் தேவையற்ற சூழ்நிலைகளையும் தவிர்க்கலாம்.
இந்தக் கால கட்டத்தில் எவருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். உங்களின் பெயரில் பணம் வாங்கித் தரவும் வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். எதிர்வரும் இடையூறுகளை சாதுரியத்துடன் சமாளிப்பீர்கள்.
உங்களிடம் மேலதிகாரிகள் நட்புடன் நடந்து கொள்வார்கள். உங்களுக்கு சிறு தொல்லைகள் கொடுத்து வந்த சக ஊழியர்கள் அடங்கிவிடுவார்கள். பண வரவிற்கு எந்தக் குறைவும் இருக்காது. வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சீராக இருந்தாலும் கூடுதல் அக்கறையோடு வியாபாரம் செய்யவும். சில நேரங்களில் கடும்போட்டிகளை சந்திக்க நேரிடும். இதனால் மறைமுக எதிர்ப்புகளையும் சமாளிக்க வேண்டி வரும். எதிலும் விழிப்புடன் இருப்பது நல்லது.
நன்கு ஆலோசித்த பிறகே புதிய முதலீடுகளைச் செய்யவும். கால் நடைகளால் நன்மைகள் உண்டாகும். புதிய குத்தகைகளை நாடிச் செல்ல வேண்டாம். நெல் விளைச்சல் சாதகமாக இருக்கும். அரசியல் வாதிகள் தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக்கொள்ளவும்.
சச்சரவுகள் ஏற்படுத்தும் விஷயங்களில் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். கலைத் துறையினரின் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். அனைத்து செயல்களையும் நேர்த்தியுடன் முடிப்பீர்கள். புதிய நண்பர்களால் பலனடைவீர்கள். புதிய படைப்புகளை உருவாக்குவதில் முனைப்புடன் ஈடுபடுவீர்கள். சக கலைஞர்களும் உங்களை அனுசரித்து நடந்துகொள்வார்கள்.
பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பு, பாசம் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்து நடந்து கொள்வார்கள். புதிய ஆடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதிற்கு இனிய செய்திகளைக் கேட்பீர்கள். மாணவமணிகள் கல்வியிலும் உள்ளரங்கு விளையாட்டிலும் நன்கு தேர்ச்சி பெறுவீர்கள். மேலும் அதிக மதிப்பெண்களைப் பெற போதிய பயிற்சி தேவை.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த ஆண்டு வேலை இல்லாமல் இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்குவதற்கு ஏற்ற கால கட்டம் இது. பணத்தை விட அதிக உழைப்பின் மூலம் செய்யும் தொழில் அதிக வருவாய் கிடைக்கும்.
திருவோணம்: இந்த ஆண்டு தீவிர முயற்சியின் பேரிலேயே அரசிடம் இருந்து தான் கோரிக்கைகள் நிறைவேறும். புதிய ஒப்பந்தங்களால் பொருளாதார லாபம் கிடைக்கும். எதிர்பார்த்திருந்த வெற்றி வாய்ப்பு கிடைக்கும்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த ஆண்டு பாராட்டுகளும் விருதுகளும் கிடைக்கும். தொழிலில் சிறப்படைய மிகுந்த முயற்சி தேவை. வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். கை விட்டுப் போன சொத்துக்கள் மீண்டும் வந்து சேரும்.
பரிகாரம்: சனிக்கிழமை தோறும் அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று ஸ்ரீ பைரவரை வணங்கி வரவும். முடிந்தால் மிளகு விளக்கு போடவும். சனிக்கிழமை தோறும் பெருமாள் கோவிலில் இருக்கும் தாயாருக்கு மல்லிகைப் பூவை அர்ப்பணித்து 3 முறை வலம் வரவும். உங்களுக்கு பொன்னான காலம் கனிந்து வரும்.
பலன்கள்: கடுமையான சூழ்நிலைகளைக் கூட சமயோசிதமாக கையாண்டு மற்றவர்களை ஆச்சரியத்துடன் பார்க்க வைக்கும் கும்ப ராசி வாசகர்களே நீங்கள் புது தொழில் நுட்பங்களை கற்பதில் ஆர்வம் உடையவர்கள். எதிலும் போட்டிகள் இருந்தாலும் பொறாமை கொள்ள மாட்டீர்கள். பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுவீர்கள்.
இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை உள்ள கால கட்டத்தில் செய் தொழிலில் ஆர்வத்துடன் ஈடுபட்டு நற்பெயர் வாங்குவீர்கள். உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களுக்கு தக்க உதவிகளைச் செய்து அவர்களை உங்களுக்கு உதவியாக வைத்துக்கொள்வீர்கள். சமூக நோக்குடன் உங்களின் காரியங்களைச் செய்வீர்கள். நீண்ட நாட்களாக துன்புறுத்தி வந்த உடல் உபாதைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
வருமானம் சீராக இருக்கும். செய் தொழில் நன்றாக நடப்பதால் புதிய கடன்கள் வாங்க நேரிடாது. சிலருக்கு வேறு இடங்களுக்கு சென்று வசிக்கும் நிலைமை உண்டாகும். பிறரின் பொறாமைகளுக்கும், போட்டிக்கும் ஆளாக நேரிடும் என்பதால் கவனம் தேவை. நீங்கள் தொடுத்திருந்த வழக்குகளில் சாதகமான திருப்பங்கள் ஏற்படாது. மற்றபடி வெகு தூரத்தில் இருந்து நல்ல செய்தி உங்களைத் தேடி வரும்.
மேலும் அவசியமான விஷயங்களுக்காக திடீரென்று அவசரப் பயணங்களைச் செய்ய நேரிடும். குடும்பத்தில் சாதகமான சூழ்நிலை நிலவும். இதனால் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் இடையே உங்களின் செல்வாக்கு உயரும். உங்களின் பேச்சில் பொறுமையும் நிதானமும் இருக்கும்.
நினைத்த எண்ணங்கள் கச்சிதமாக செயல் வடிவம் பெறும். கடினமான விஷயங்களிலும் தோலை நோக்குப் பார்வையுடன் செயல்படுவீர்கள். உங்களைப் பற்றி அவதூறு பேசுபவர்களை இனம் கண்டு விலக்குவீர்கள். ஜுலை மாதத்தில் இருந்து ஆண்டு இறுதி வரை உள்ள கால கட்டத்தில் எதிரிகளால் இன்னல்கள் ஏற்படாது காக்கப்படுவீர்கள்.
உற்றார், உறவினர்கள் உங்கள் பேச்சுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். குறைந்த அளவுக்கு முதலீடு செய்து விருப்பமான வாகனங்களை வாங்குவீர்கள். பெற்றோர் வழியில் ஏற்பட்ட மனத் தாங்கல்கள் நீங்கும். உங்களின் நேர்மையான போக்கை அனைவரும் பாராட்டுவார்கள். உங்களின் சூட்சும அறிவு வேலை செய்யத் தொடங்கும்.
எதிர்பாராத வகையில் சவுபாக்கியங்கள் தேடி வரும். உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் உடனுக்குடன் நிறைவேறும். வங்கிகளில் இருந்து எதிர்பார்த்த கடன் கிடைக்கும். நெடு நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த உங்கள் விண்ணப்பம் அரசாங்கத்தால் சாதகமாக பரிசீலிக்கப்படும். இதனால் சலுகைகள் கிடைக்கும்.
மனதிற்கு இனிய பயணங்களையும் மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை திட்டமிட்டு முன்கூட்டியே செய்யவும். சில நேரங்களில் இடையூறுகளை சந்திக்க நேரிடும். அதே சமயம் பண வரவுக்குத் தடைகள் வராது. எதிர்பார்த்த ஊதிய உயர்வு சரியான நேரத்தில் வந்து சேரும். ஆனாலும் மேல் அதிகாரிகளின் ஆதரவு குறையும்.
வியாபாரிகள் விற்பனைப் பிரதிநிதிகளால் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் நன்றாகவே நடக்கும். கடன்களைப் பெற்று கடையைச் சீரமைப்பீர்கள். புதிய சந்தைகளில் உங்கள் பொருட்கள் விற்பனையாகும். அரசியல்வாதிகள் வெற்றிகளைப் பெறுவதில் சிரமம் ஏற்படும். ஆகவே உங்கள் திட்டங்களைப் பொறுமையாக செயல்படுத்தவும். அதே நேரத்தில் தொண்டர்களின் ஆதரவு நன்றாக இருக்கும். சில சமயங்களில் உங்கள் கருத்துகள் தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம். எனவே யாரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம்.
கலைத்துறையினர் வெற்றி மேல் வெற்றி காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்களைச் செய்து நல்ல வருமானத்தைக் காண்பீர்கள். சக கலைஞர்களால் பாராட்டப்படுவீர்கள். ரசிகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்துவீர்கள்.
பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். பண வரவு சீராக இருக்கும். அதே சமயம் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சூடான வார்த்தைகளைப் பேச வேண்டாம். மாணவமணிகள் படிப்பில் முன்னேற்றம் அடைவீர்கள். விளையாட்டுகளில் ஈடுபட்டு உடல் ஆரோக்கியத்தை வளர்த்துக் கொள்வீர்கள். அதேநேரம் பெற்றோரின் ஆதரவு குறையும்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த ஆண்டு நன்மைகள் கிடைக்கக் கூடிய கால கட்டமாகும். எடுத்த காரியம் கைகூடும். பணப் புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பும் மரியாதையும் சிறப்பாக இருக்கும்.
சதயம்: இந்த ஆண்டு உங்கள் மீதான அவப்பெயர் மறைந்து செல்வாக்கு மேம்படும். உங்கள் சொல்லுக்குப் பிறர் மரியாதை கொடுப்பர். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப பிரச்சனை கட்டுக்குள் அடங்கி இருக்கும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த ஆண்டு தேவையான இடங்களில் நீங்கள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தேவைகள் ஒவ்வொன்றாகப் பூர்த்தியாகும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கலாம்.
பரிகாரம்: சனிக்கிழமை தோறும் அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும். தினசரி மாலை வேளையில் ஸ்ரீ லலிதா ஸகஸ்ர நாமம் பாராயணம் செய்யவும். சனிக்கிழமை தோறும் வினாயகருக்கு அருகம் புல்லை அணிவித்து வழிபட்டு வர உங்கள் பொருளாதார நிலைமை படிப்படியாக மூன்னேற்றம் ஏற்படும்.
பலன்கள்: கடும் சொற்களால் உங்களை காயப்படுத்துபவர்களைக் கூட அரவணைக்கும் மீன ராசி அன்பர்களே, எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் உங்கள் பொறுப்புகளை நீங்கள் தட்டிக் கழிக்க மாட்டீர்கள். முடிந்தவரை அனைவருக்கும் நன்மைகள் செய்வதற்கு பாடுபடுவீர்கள்.
இந்த ஆண்டு உங்கள் சேமிப்பு விஷயங்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உங்கள் பேச்சில் பொறுமையும் நிதானமும் இருக்கும். உற்றார், உறவினர்கள் நண்பர்களிடம் சுமுகமான உறவு தொடரும். உடல் உபாதைகள் நீங்கும். எதிர்பாராத புதிய பொறுப்புகள் தேடி வரும். இதனால் கூடுதல் வருமானமும் கிடைக்கும். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உங்களின் நேர்மையான நடத்தையை அனைவரும் பாராட்டுவார்கள்.
உங்களின் விவாதத் திறமை அதிகரிக்கும். முக்கியமான விவாதங்களில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். தத்துவ ஆராய்ச்சிகளில் ஈடுபட மனம் விழையும். உங்களின் செயல்களை முறைப்படுத்தி, வகைப்படுத்தி செய்து காரியமாற்றுவீர்கள். விருப்பு, வெறுப்பின்றி அனைவருக்கும் உதவி செய்வீர்கள்.
நீங்கள் சார்ந்துள்ள துறைகளில் சாதனை புரிவீர்கள். புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்களின் தேவைகள் எளிதாகப் பூர்த்தியாகும். நீங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் நீதி மன்றத்திற்கு வெளியில் சமாதானமாக முடியும். உங்கள் மீது அபாண்ட பழி சுமத்தியவர்கள் தவறுகளை உணர்ந்து வருத்தம் தெரிவிப்பார்கள். தெய்வ பலத்தால் செயற்கரிய சாதனைகளைச் செய்வீர்கள். குல தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் வெளியூறுக்கு சுற்றுலா சென்று வருவீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி இந்தக் கால கட்டத்தில் கிடைக்கும். ஜுலை மாதத்தில் இருந்து ஆண்டு இறுதி வரை உள்ள கால கட்டத்தில் புதிய செயல்களுக்கு அஸ்திவாரம் போடுவீர்கள்.
உறவினர் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். இல்லத்தில் களவு போயிருந்த பொருட்கள் திரும்பவும் கை வந்து சேரும். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பு உங்களுக்கு உந்து சக்தியாக அமையும். உங்கள் செயல்கள் இடையூறுகளின்றி சுலபமாக நிறைவேறும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.
குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்தவர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். உறுதியின்றி செய்த செயல்களில் ஒரு நிரந்தரப் பிடிப்பு ஏற்பட்டு மளமளவென்று நடக்கத் தொடங்கும். சில அனாவசியச் செயல்களுக்கு கைப்பொருள்களை இழந்த நிலை மாறும். மற்றபடி சகோதர, சகோதரிகளால் சில பிரச்னைகள் ஏற்படலாம். அவர்களுக்கு உதவி செய்ய நினைத்து சிக்கல்களில் மாட்டிக்கொள்ள நேரிடலாம். என்றாலும் அந்தப் பிரச்னைகள் தானாகவே விலகிவிடும்.
உங்களின் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் அதிகரிக்கும் ஆண்டாக இது அமைகிறது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பவர்களை இனம் கண்டு விலக்குவீர்கள். வேலைப்பளு அதிகரித்தாலும் அவற்றை சிறப்பாகச் செய்து முடித்து நற்பெயர் வாங்குவீர்கள்.
எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். உங்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். மதிப்பு மரியாதை உயரும். வியாபாரிகள் திட்டமிட்ட வேலைகளில் கடுமையாக உழைப்பீர்கள். கால தாமதம் ஏற்பட்டாலும் உங்களின் செயல்கள் வெற்றி பெறும். ஆனால் நண்பர்கள், கூட்டாளிகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்காது. ஆகையால் புதிய முதலீடுகளைத் தள்ளிப்போடவும்.
உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். அரசியல் வாதிகளின் அந்தஸ்தில் சிறிது குறைபாடுகள் உண்டாகும். ஆகவே கவனமுடன் செயல்படவும். தொண்டர்களின் பாராமுகத்தால் கோபமடையாமல் கடமைகளைச் செய்து வரவும். பேச்சில் கண்ணியம் குறையாது கவனமாக இருக்கவும்.
கலைத் துறையினர் இந்த ஆண்டு புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். அதே சமயம் எதிர்பார்த்த புகழும், பாராட்டும் கிடைப்பதில் கால தாமதம் ஏற்படும். பொறுமையுடன் செயல்பட்டால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். போகப் போக உங்களுக்கு சாதகமற்ற நிலைமைகள் மாறிவிடும்.
பெண்மணிகளுக்கு இது மகிழ்ச்சிகரமான ஆண்டு. புத்தாடை, அணிமணிகளை வாங்கி மகிழ்வீர்கள். கணவரிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். பண வரவுக்கு எந்தக் குறைவும் இருக்காது. பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். மாணவமணிகள் முனைப்புடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். திட்டமிட்ட வேலைகளில் பதற்றப்படாமல் ஈடுபடவும். அதே சமயம் உங்கள் முயற்சிகளுக்கு ஆசிரியர்களிடம் நல்ல பாராட்டு கிடைக்கும்.
பூரட்டாதி 4ம் பாதம்: இந்த ஆண்டு நண்பர்கள் இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். அவர்களால் உதவிகள் பெறலாம். சுப நிகழ்ச்சிகளுக்கு இப்போது திட்டமிடலாம். வெகு நாட்களாக தடைப்பட்டு வந்த திருமணத்திற்கு உண்டான முயற்சிகளை இப்போது தொடங்கலாம்.
உத்திரட்டாதி: இந்த ஆண்டு புதிய வீடு கட்டுவதற்கான வேலைகளை இப்போது தொடங்கலாம். வசதியான வீட்டிற்கு குடிபுகவும் வாய்ப்புண்டு. புதிய ஆபரணங்கள் வாங்கலாம். விருந்து விழா என உல்லாசமாக பயணம் மேற்கொள்வீர்கள். சந்தாண பாக்கியம் ஏற்படும்.
ரேவதி: இந்த ஆண்டு பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு நல்ல வளர்ச்சியைக் காணலாம். உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தவர்கள் விலகுவார்கள்.
பரிகாரம்: வியாழகிழமை தோறும் அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று நவகிரகங்களை வலம் வந்து வணங்கி வரவும். தினமும் முன்னோர்களை வணங்கவும். காக்கைக்கு அன்னமிடவும். ஏழை எளியோர்க்கு உதவவும். வியாழகிழமை தோறும் உங்களால் முடிந்த அளவு அருகம் புல்லை மாலையாகக் கட்டி விநாயகருக்கு சாத்தவும். முடிந்தவர்கள் தேங்காய் மாலை சாத்தலாம்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.