Published : 26 May 2022 12:58 PM
Last Updated : 26 May 2022 12:58 PM

கடகம், சிம்மம், கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! மே 26 முதல் ஜூன் 1ம் தேதி வரை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கடகம் (புனர் பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்) - கிரகநிலை: சுக ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், குரு, சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் புதன், ராகு, சுக்ரன் - லாப ஸ்தானத்தில் சூர்யன் என கிரகநிலை உள்ளது. கிரக மாற்றம்: எதுவுமில்லை.

பலன்கள்:
இந்த வாரம் மனம் மகிழும் சம்பவங்கள் நிகழும். வீண் செலவுகள் குறையும். எந்த ஒரு வேலையைச் செய்து முடிப்பதிலும் இருந்த தடை தாமதம் நீங்கும். வீண் விவகாரங்களில் தலையிடுவதையும் மற்றவர்களுக்காக வாதாடுவதையும் தவிர்ப்பது நல்லது. வருமானம் கூடும். மன திருப்தி உண்டாகும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் பெறுவதில் இருந்த தாமதம் நீங்கும். வரவு இருந்த போதிலும் வியாபாரம் தொடர்பாக திடீர் முதலீட்டுச் செலவு உண்டாகலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. மேலிடத்துடன் கனிவை அனுசரிப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளுக்காக அலைய வேண்டி இருக்கும். மகிழ்ச்சி உண்டாகும். பெண்களுக்கு அடுத்தவர்களால் இருந்த பிரச்சினைகள் நீங்கும். கலைத்துறையினருக்கு முயற்சிகள் சாதகமான பலன் தரும். அரசியல்வாதிகள் மேலிடம் நீங்கள் சொல்வதைக் கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும். மாணவர்கள் ஆசிரியர்களின் உதவியுடன் பாடங்களை சந்தேகம் நீங்கி தெளிவாக படிப்பது நல்லது. மனதில் உற்சாகம் உண்டாகும்.
பரிகாரம்: திங்கட்கிழமை அன்று அம்பாளை வழிபடுவது காரியத் தடைகளை நீக்கும். மன அமைதியைத் தரும்.
***************

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்) - கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், குரு, சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் புதன், ராகு, சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன் என கிரகநிலை உள்ளது. கிரக மாற்றம்: எதுவுமில்லை.

பலன்கள்:
இந்த வாரம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ராசிநாதன் சூரியன் தைரிய ஸ்தானத்தில் மறைந்திருந்தாலும் அவர் குரு சாரம் பெற்று சஞ்சாரம் செய்வது அனுகூலத்தைக் கொடுக்கும். வேகத்தை விட்டு விவேகமாக செயல்படுவது வெற்றியைத் தரும். பணவரத்து எதிர்பார்த்ததைப் போல இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். அதே வேளையில் ராசியை செவ்வாய் பார்ப்பதால் மற்றவர்களிடம் உங்கள் கருத்துகளை கூறும்போது அவர்கள் தவறாக அதைப் புரிந்து கொள்ளலாம்.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி அகலும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலைச் சந்திக்க நேரும். மேல் அதிகாரிகள் கூறுவதைக் கேட்டு அதன்படி நடப்பது நல்லது. சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். மனஸ்தாபங்கள் அகலும். அக்கம்பக்கத்தினருடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு விவேகமாக செயல்படுவது வெற்றியைத் தரும். கலைத்துறையினர் நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். அரசியல்வாதிகள் நினைக்கும் காரியங்கள் தள்ளிப்போகலாம். மாணவர்கள் ஆசிரியர்கள் கூறுவதை கவனமாகக் கேட்டு அதன்படி நடப்பது வெற்றிக்கு உதவும்.
பரிகாரம்: சிவன் கோயிலுக்குச் சென்று சிவனையும் நவக்கிரகத்தில் உள்ள சூரியனையும் தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா நன்மைகளையும் உண்டாக்கும்.
**************

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்) - கிரக நிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சனி - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், குரு, சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் புதன், ராகு, சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் என கிரகநிலை உள்ளது. கிரக மாற்றம்: எதுவுமில்லை.

பலன்கள்:
இந்த வாரம் முன்னேற்றம் காண்பீர்கள். ராசிநாதன் புதன் தைரிய ஸ்தானத்தில் இருந்தாலும் அவர் குரு சாரம் பெற்றிருப்பது நன்மையைக் கொடுக்கும். உங்களுக்கு எதிர்ப்புகள் அகலும். பகை விலகி எதிலும் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தகராறுகள் வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நன்மை தீமைகளைப் பற்றி கவலைப்படாமல் எதையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். தொழில் ஸ்தானத்தை சனி பார்க்கிறார்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எண்ணப்படி எல்லாம் நடக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உங்களது செயல்களுக்கு தடை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி விடுவார்கள். குடும்பத்தில் இருந்த மன வருத்தங்கள் மாறி சுமுகமான நிலை உண்டாகும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். திருமண முயற்சி கைகூடும். பெண்களுக்கு எதிர்ப்புகள் விலகும். கலைத்துறையினருக்கு பேச்சுத் திறமையால் காரியங்கள் சாதகமாக முடியும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த காரியங்கள் தடைகளின்றி முடியும். மாணவர்களுக்கு போட்டிகள் குறையும். எதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள்.
பரிகாரம்: புதன்கிழமை அன்று ஆஞ்சநேயரை வெண்ணெய் சாற்றி வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மனோ தைரியம் கூடும்.
***************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x