Published : 11 Jun 2021 13:14 pm

Updated : 11 Jun 2021 17:00 pm

 

Published : 11 Jun 2021 01:14 PM
Last Updated : 11 Jun 2021 05:00 PM

திருமண தோஷங்கள்; பரிகாரக் கோயில்கள்! தோஷங்கள்... பரிகாரங்கள்! - 7 

dhoshangal-parikarangal

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே!
களத்திர தோஷம் என்னும் திருமணத் தடை மற்றும் தாமதம் உண்டாக்கும் தோஷம் பற்றிய விவரங்களைப் பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக இந்தப் பதிவில் மேலும் சில தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன். பரிகாரங்களையும் சொல்கிறேன்.


திருமணத்திற்குத் தடையை உண்டாக்குகிற கிரக அமைப்புகள் மற்றும் சந்நியாச சிந்தனையைத் தூண்டுகின்ற கிரக அமைப்புகளையும் சென்ற பதிவில் பார்த்தோம். இது மட்டுமல்லாமல் இந்த தளத்திலேயே மிக வீரியமான தோஷம் ஒன்று உள்ளது. அது "விஷ கன்னிகா தோஷம்!

இது பெண்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த தோஷம் என்பது மிக அரிதினும் அரிதாக உண்டாகக்கூடிய கிரக அமைப்பாகும்.

இந்த கிரக அமைப்பு கூடிய விஷகன்னிகா தோஷம் என்பது ஒரு ஆச்சரியத்தையும் உண்டாக்குகிறது. அது என்னவென்றால்... திருமணத்தை தடை செய்வதில்லை. மாறாக ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணத்தை செய்துகொள்வதற்குக் காரணமாகிறது.

இங்கே ஒன்றைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். பணம் பறிக்கும் நோக்கத்துடன் பல திருமணங்களை செய்து கொள்ளும் பெண்களின் ஜாதகம் இதற்கு பொருந்துமா? என்று கேட்டால் நிச்சயம் பொருந்தாது. அது வேறு வகையான ஜாதகம், அதை இங்கே குறிப்பிட விரும்பவில்லை.

விஷ கன்னிகா தோஷம் என்பது முறையாக இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்து அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிவது. இது ஒரு முறையல்ல மூன்று நான்கு முறை கூட தொடரும். இறுதியாக வாழ்க்கைத் துணை இல்லாமல் தனியாகத்தான் வாழ வேண்டியது வரும். திருமணத்தையும் தந்து அதில் பலவித பிரச்சினைகளையும் உண்டு பண்ணி, அடுத்தடுத்து திருமணங்களிலும் மன ஒற்றுமை ஏற்படவிடாமல் தடுத்து, மண வாழ்க்கையை கேள்விக்குறியாக்குகிறது விஷ கன்னிகா தோஷம். ஒரே ஆறுதல்...ஒரு குழந்தை பாக்கியமாவது கிடைத்துவிடும். அது மட்டுமே ஆறுதலை தரக்கூடியதாக இருக்கும். இங்கே ஒரு உதாரண ஜாதகம் தரப்பட்டுள்ளது.

இந்த ஜாதகத்துக்கு உரியவர் மருத்துவர். நல்ல வசதியான குடும்பமும் கூட! பொருளாதாரப் பிரச்சினைகளே இல்லாதவர். ஆனாலும் இந்த ஜாதக அமைப்பின் காரணமாக மூன்று திருமணங்கள் நடந்து ஒன்றைக்கூட தொடரமுடியாமல் தற்போது தனிமையில் வாழ்ந்து வருகிறார்.. ஒரே ஆறுதல், ஒரு ஆண் குழந்தை இருப்பது மட்டுமே!
தற்போது திருமண ஆசையை முற்றிலுமாக மறந்து மருத்துவச் சேவையை மட்டும் செய்து வருகிறார். இவர் ஜாதகத்தில் ஏழாம் அதிபதி நான்காமிடத்தில் ராகுவோடு இணைந்து இருப்பது கடும் பாதிப்பை ஏற்படுத்தியது, மேலும் ஏழாம் அதிபதி 4ல் அமர்ந்ததால் "கேந்திராதிபத்திய தோஷம்" ஏற்படுத்தி மண வாழ்வில் நிம்மதி இல்லாத நிலையை ஏற்படுத்தியது, மேலும் சந்திரனுக்கு இருபுறமும் எந்த கிரகங்களும் இல்லாமல் இருப்பதும், 7-ஆம் இடத்தில் இருந்து எந்த கிரகமும் பார்க்காமல் இருப்பதும், குரு, செவ்வாய், சனி போன்ற கிரகங்களின் சிறப்புப் பார்வையும் சந்திரனுக்கு கிடைக்காமல் போனதாலும், இது "கேமத்துருவ யோகம்" என்னும் "தனிமையில் வாழ வேண்டிய கட்டாயம்" என்ற அமைப்பை ஏற்படுத்துகிறது.

எனவே இந்த ஜாதகர், யாருடைய துணையும் இல்லாமல் தனிமையில் இருக்கிறார், இவருடைய குழந்தை கூட பிற்காலத்தில் பணி நிமித்தமாக வெளியூர் அல்லது வெளிநாடுகளுக்குச் சென்று விடுவார். இப்படி பலவித தோஷங்களை உள்ளடக்கியதுதான் இந்த ஜாதகம்! இதுபோன்ற ஜாதக அமைப்பு வெகு அரிதாகவே உண்டாகும்.

இப்படி திருமணத்திற்கு தடைகளைச் செய்வதும் கிரக அமைப்பு தான், திருமணத்தை தந்து அதில் மன ஒற்றுமையை உண்டாக்குவதும் கிரக அமைப்பு தான். திருமணமாகி பிரியாமல் காலம் முழுவதும் வருத்தத்துடன் வாழ வைப்பதும் இந்த கிரகங்களே!

அப்படியானால் பரிகாரங்கள் மூலம் இதைச் சரி செய்ய முடியுமா? என்று கேட்டால் முடியாது என்பதுதான் பதிலாக இருக்கும்! ஆனாலும் பரிகாரங்கள் செய்வதன் மூலம் என்ன பலன் கிடைக்கும்? எதையும் தாங்கும் வல்லமையைத் தரும், எப்படி தன் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற தெளிவைத் தரும். "நாள் செய்யாததை கோள் செய்யும், கோள் செய்யாததை இறைவன் செய்வான்" என்ற நம்பிக்கை மட்டுமே நம்மை வழிநடத்திச் செல்லும் என்பதை உறுதியாக நம்ப வேண்டும். "நம்பிக்கைதானே எல்லாம்!"

பரிகார ஆலயங்களைப் பார்க்கலாம்.அதற்கு முன் இன்னும் ஒரு தகவலை தெரிந்து கொள்ளலாம்.

இருதார தோஷம் உள்ளவர்கள் வாழை மரத்திற்கு தாலி கட்டி, அந்த வாழை மரத்தை வெட்டி விடுவார்கள்! இப்படிப்பட்ட ஒரு பரிகாரம் இந்த இருதார தோஷத்திற்கு செய்து வருகிறார்கள். இது ஏற்புடையதா? என்றால் நிச்சயமாக இல்லை.!

எந்த ஜோதிட நூல்களிலும் இப்படிப்பட்ட பரிகாரத்தை ஜோதிட சாஸ்திர மகான்கள் குறிப்பிடவே இல்லை. பொதுவாக இந்தப் பரிகாரத்தைச் செய்பவர்கள் வாழைமரத்தை ஏற்கெனவே வெட்டி எடுத்து வந்து, அதற்கு தாலி கட்டச் சொல்வார்கள். இதை நீங்கள் நிச்சயமாக அறிந்து வைத்திருப்பீர்கள். ஏற்கெனவே வெட்டப்பட்ட வாழைமரம் உயிர்ப்போடு இருக்குமா? என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.

இன்னும் ஒரு சில பரிகார வல்லுநர்கள் வாழைத்தோப்புக்கே கூட்டிச் சென்று, அங்கே ஒரு வாழை மரத்திற்கு தாலி கட்டி, அந்த வாழை மரத்தை வெட்டுவதைச் செய்கிறார்கள். இது எதுவுமே பரிகாரத்தில் வரவே வராது. இதில் வருந்தக் கூடிய விஷயம் என்னவென்றால் பெண்களுக்குக் கூட இந்த வாழைமர பரிகாரத்தை செய்கிறார்கள் என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயம்.

அப்படியானால் இந்த இருதார தோஷத்திற்கு என்னதான் பரிகாரம்? என்று கேட்டால்..! மிக எளிமையான பரிகாரம் உள்ளது.... இரு தார தோஷம் இருப்பவர்கள் திருமணம் முடிந்தவுடன், மூன்றாவது மாதத்தில், கட்டிய தாலியை ஏதாவது ஒரு ஆலயத்தின் உண்டியலில் செலுத்தி விட்டு, அந்த ஆலயத்தின் இறைவன் முன்னிலையில் மீண்டும் தாலி கட்டிக்கொள்வதே எளிமையான பரிகாரம்! இரு தாரம் எனும் தோஷம் இப்படித்தான் விலகும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இது ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தும்.

இப்போது திருமணத்திற்கு தடை அல்லது தாமதம் ஏற்படுபவர்கள் எந்த மாதிரியான பரிகாரங்களைச் செய்யலாம், எந்த ஆலயங்களுக்குச் சென்று வந்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பதைப் பார்ப்போம்.

திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் ஆலயம்... இங்கே முருகப்பெருமானுக்கும் தேவயானைக்கும் திருமணம் நடந்தது என்பது நாம் அறிந்ததே! இந்த ஆலயத்திற்குச் சென்று வருவது திருமணத்தடையை நீக்கும்.

திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயம், திருமணத் தடைகளை முற்றிலுமாக அகற்றி திருமணத்தை விரைவாக நடத்தி தரக்கூடிய ஆலயம். கருமாரி அம்மனை தரிசித்து வேண்டுதல் வைத்து வந்தால் உடனே திருமணம் நடக்கும்.

திருமணஞ்சேரி என்னும் திருத்தலம், கும்பகோணம் ஆடுதுறைக்கு அருகில் உள்ளது. இந்தத் திருத்தலம் திருமணத் தடைகளை அகற்றி திருமணத்தை நடத்தித் தரும் என்பது உலகறிந்தது! இந்த திருத்தலத்திற்கு சென்று வந்தாலே தடைகள் அனைத்தும் அகன்று திருமணம் நடக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை!

கும்பகோணம் அருகே கோனேரிராஜபுரம் என்னும் ஊரில் இருக்கக்கூடிய ஆலயம், இங்கு இறைவன் உமா மகேஸ்வரர் மேற்கு நோக்கியும் அன்னை அங்கவள நாயகி கிழக்கு நோக்கியும் காட்சி தருகிறார்கள். இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் வைபவம் போல் இருப்பதால் இந்தத் தலம் திருமணத் தடைகளை அகற்றி விரைவாக திருமணம் நடத்தி தரும் ஆலயம் என்று போற்றப்படுகிறது. இந்த ஆலயத்திற்குச் சென்று ஈசனையும் பராசக்தியையும் வணங்கி வந்தால் விரைவில் திருமணம் நடக்கும்.

சென்னை - மகாபலிபுரம் சாலையில் திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் ஆலயத்தில் பெருமாளை சேவித்து வேண்டுதல் வைத்து வந்தால் விரைவாக திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏதாவது ஒரு கோயில் திருமணத் தடைகளை நீக்கக் கூடியதாக இருக்கும். அப்படிப்பட்ட ஆலயங்களுக்குச் சென்று தரிசித்து பிரார்த்தித்து வருவது நல்ல பலனை தரக் கூடியதாக இருக்கும். அது மட்டுமல்லாமல் குலதெய்வ வழிபாடும் திருமணத் தடையை அகற்றி வம்சம் செழிக்க வழிவகை செய்யும். எனவே தவறாமல் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்., திருமணத்தடை மட்டுமல்லாமல், குடும்ப வளர்ச்சி, வம்சவிருத்தி போன்றவற்றுக்கும் துணையாக இருக்கும்.

மேலும் ஒரு சில பரிகாரங்கள்...!

ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு உதவி செய்வது, புதுமணத் தம்பதிக்கு ஆடைகள் வாங்கித் தருவது, கட்டில் மெத்தை போன்றவற்றை பரிசாகக் கொடுப்பது போன்றவையும் திருமணத் தடைகளை நீக்கக் கூடியதாகும்.

அடுத்த பதிவில் சந்திப்போம்.

- வளரும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தவறவிடாதீர்!

திருமண தோஷங்கள்; பரிகாரக் கோயில்கள்! தோஷங்கள்... பரிகாரங்கள்! - 7திருமண தோஷம்பரிகாரங்கள்பரிகாரக் கோயில்கள்தோஷங்கள்சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்ஜாதகம்ஜோதிடம்JodhidamParigarangalParigara koilgalDhoshangal parikarangal

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x