Published : 18 Mar 2021 01:03 PM
Last Updated : 18 Mar 2021 01:03 PM

பிலவ வருடம்; 2021 தமிழ்ப்புத்தாண்டு பலன்கள்; விருச்சிக ராசி அன்பர்களே! முயற்சியில் வெற்றி; வீடு மாற்றம்; அவசர முடிவு வேண்டாம்; எதிலும் கவனம்! 

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

விருச்சிக ராசி வாசகர்களுக்கு என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

விருச்சிக ராசிக்கு இந்த பிலவ ஆண்டு என்ன மாதிரியான பலன்களைத் தரும் என்பதைப் பார்ப்போம்.

சித்திரை முதல் நாள் புத்தாண்டு துவங்கும் போது இருக்கக்கூடிய கிரக நிலைகளை முதலில் பார்த்துவிடுவோம்.

உங்கள் ராசியிலேயே கேது பகவான், 7-ஆம் இடத்தில் ராகு பகவான், 3-ம் இடத்தில் சனி பகவான், நான்காமிடத்தில் குரு பகவான், 5-ஆம் இடத்தில் புதன் பகவான், 6-ஆம் இடத்தில் சூரியன் சந்திரன் சுக்கிரன் என மூன்று கிரகங்கள், எட்டாம் இடத்தில் உங்கள் ராசி அதிபதி செவ்வாய் என கிரகங்கள் அணிவகுத்து நிற்கிறது.

இந்தக் கிரக அமைப்பு உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மிக முக்கியமாக மூன்றாம் இடத்தில் இருக்கக் கூடிய சனிபகவான் நிச்சயம் உங்களுடைய முயற்சிகள் அனைத்தையும் வெற்றிகரமாக முடித்துக் கொடுப்பார் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

அதேபோல உங்கள் ராசிக்கு யோகத்தைச் செய்யக்கூடிய சூரியபகவான் உச்சமாக இருந்து இந்தப் புத்தாண்டைத் தொடங்கி வைக்கிறார், அதுவும் உங்களுக்கு நற்பலன்களைத் தரக்கூடியது. ஆனால் ராசியில் இருக்கும் கேது பகவான் 7-ம் இடத்தில் இருக்கக்கூடிய ராகு பகவான் ஒரு சில நெருக்கடிகளை நிச்சயமாகத் தருவார் என்பதில் என்பதை மறுப்பதற்கில்லை. எனவே உங்களுடைய செயல்பாடுகள் அனைத்தையும் முதலில் திட்டமிட்டு வகுத்துக்கொள்ள வேண்டும்.

அதன்பிறகு செயல்களில் இறங்க வேண்டும். அவசர செயல்பாடுகளில் இறங்கினால் கேதுபகவான் அதற்கு அனுமதிக்க மாட்டார். அதேபோல ஏழாமிடத்தில் ராகு பகவான் இருப்பது வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டுமென எடுத்துச் சொல்கிறது,
அதுமட்டுமில்லாமல் நண்பர்கள், கூட்டாளிகள் என இவர்களிடம் சற்று கவனமாக... கூடுதல் எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டும் என்பதை உணர்த்திக் கொண்டே இருக்கிறார். எனவே உங்கள் செயல்பாடுகளில் மிகுந்த கவனம் தேவை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மற்றபடி இந்த கிரக அமைப்புகள் அனைத்தும் உங்களுக்கு நன்மையைச் செய்யத் தவறாது.

குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இரண்டாம் அதிபதி குரு 4-ம் இடத்தில் இருப்பது நன்மையையே தரும். அவர் அர்த்தாஷ்டம குருவாக இருந்தாலும் நன்மைகளைத் தருவதில் எந்தவித தடையும் செய்யமாட்டார். எனவே சொத்துகள் தொடர்பான பிரச்சினைகளில் உங்களுக்கு உரிய பங்கை நிச்சயம் பெற்றுத்தருவார்.

அதேபோல வீடு மாற்றம், வாகன மாற்றம் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும். அப்படி ஒரு நிலை வந்தால் தாராளமாக வீடு மாற்றத்தையோ அல்லது வாகனம் மாற்றத்தையோ அல்லது அலுவலக இடமாற்றத்தையோ ஏற்றுக்கொள்ளவேண்டும். அப்படி இடம் மாற்றம் ஏற்பட்டுச் செல்லும்போது உங்களுக்கு குரு பகவான் நல்ல பலன்களை நிச்சயமாகத் தருவார்.

அதேபோல உங்களுக்கு எந்தவிதமான பிரச்சினைகளும் வராமல் காப்பாற்றிக் கொண்டிருப்பவர் சூரிய பகவான். உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருந்தாலும் அடுத்தடுத்த மாதங்களில் நல்ல நல்ல நிலைக்கு வருவதால் உங்களை சூரிய பகவான் எந்த நேரத்திலும் கைவிடமாட்டார். அதேபோல உங்கள் ராசிக்கு பாக்கியாதிபதியாக வரக்கூடிய சந்திர பகவான் உங்களுக்கு தொடர்ச்சியான நன்மைகளைத் தந்து கொண்டே இருப்பார்., எனவே உங்களுக்கு எந்தவிதமான நெருக்கடியான சூழ்நிலைகள் என்பது எப்போதுமே வராது.

அலுவலகப் பணிகளில் ஒரு சில நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டாலும் அவற்றை எல்லாம் சமாளித்து உங்கள் பணிகளில் நீங்கள் தனித்துத் தெரிவீர்கள். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் இருந்தாலும் அதையெல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு உங்கள் பணிகளைத் தொடர்ச்சியாக செய்து கொண்டு வாருங்கள். உயரதிகாரிகளின் நெருக்கடிகள் அதிகரித்தாலும் உங்கள் திறமை மீது இருக்கக்கூடிய நம்பிக்கையால் உங்களுக்கு எந்த இடைஞ்சலும் செய்யமாட்டார். எனவே அலுவலகப் பணிகளில் எந்தவிதமான இடையூறுகள் வந்தாலும் அதை எதிர்த்துப் போராடும் இயற்கை குணம் உங்களை காப்பாற்றிக் கொண்டிருக்கும்.

அரசு ஊழியராக இருக்கும் பட்சத்தில் ஒரு சில நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். அவற்றை தைரியமாக எதிர்கொள்ளுங்கள். முடிவு உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் தாராளமாக மாறிக் கொள்ளலாம். அதற்கான கிரக சூழ்நிலைகள் இந்த ஆண்டு முழுவதும் பல சந்தர்ப்பங்களாக, உங்களுக்கு வந்துகொண்டே இருக்கிறது. எனவே வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி வெற்றியைத் தரும். மன நிம்மதியையும் தரும் என்பதை உறுதியாக நம்பலாம்.

தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். இதுவரை இருந்து வந்த அரசு வழியிலான நெருக்கடிகள் விலக ஆரம்பிக்கும். முதலீடுகள் கிடைக்கப்பெறுவீர்கள். தொழிலை விருத்தி செய்யக் கூடிய வாய்ப்புகள் அதிகமுள்ளன. அதேபோல ஊழியர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும். இவை அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருந்தாலும் உங்களுடைய முடிவெடுக்கும் திறன் இப்போது சற்று குறைவாகவே வெளிப்படும். எனவே அவசர முடிவுகளை எடுக்காமல் நிதானமாக யோசித்து அதன் பிறகு முடிவு எடுக்க வேண்டும். அப்படி முடிவு எடுக்கும் பட்சத்தில் உங்களுடைய தொழில் வளர்ச்சி எந்தத் தடையும் இல்லாமல் வளரும் உயரும் என்பது உறுதி.

டிராவல்ஸ், டிரான்ஸ்போர்ட் போன்ற தொழில் செய்பவர்களுக்கும், உணவுத் தொழில் செய்பவர்களுக்கும், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழில் செய்பவர்களுக்கும் தொழில் வளர்ச்சி சிறப்பாகவே இருக்கும். படிப்படியான வளர்ச்சியை நீங்களே காணமுடியும். திரும்பவும் சொல்கிறேன்... அவசர முடிவுகளை மட்டும் எடுக்காமல் இருந்தால் போதும். நிச்சயமாக தொழில் வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். ஒரு சில தேவையற்ற சர்ச்சைகளில் சிக்க வேண்டிய சூழ்நிலை வரும். எந்தவொரு செய்தியையும் உறுதிப்படுத்தாமல் வெளியே சொல்லவேண்டாம். ஒரு சிலருக்கு வேலை மாற்றம், இடமாற்றம் ஏற்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு குறையும். இவற்றையெல்லாம் தாண்டி ஏதாவது ஒரு வகையில் நிச்சயமாக இந்த உலகத்தின் கவனத்தை ஈர்க்கக் கூடிய விஷயங்களைச் செய்வீர்கள். பேரும்புகழும் தாமதமாக வந்தாலும் சரியான அங்கீகாரத்தோடு கிடைக்கும். எழுத்தாளர்கள் தங்களுடைய எழுத்துகளில் கவனமாக இருக்கவேண்டும். சர்ச்சைக்குரிய விஷயங்களை எழுதும்போது முழுமையான தரவுகளை வைத்துக்கொண்டு எழுத வேண்டும்.

கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். எது சிறந்த படைப்பாக இருக்கும் என்பதை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்படும். மற்றவர்களின் ஆலோசனை பெற்று அதன் பிறகு தேர்ந்தெடுப்பது நல்ல வழிமுறையாக இருக்கும்.
நடன நாட்டிய இசைக் கலைஞர்களுக்கும் இதேநிலைதான், போலியான நபர்கள் நிறுவனங்கள் போலிக் கௌரவத்திற்காக அணுகுவார்கள். அவர்களிடம் கவனமாக இருக்கவேண்டும். புகழ் பெற்ற நிறுவனங்கள், நபர்களின் ஒப்பந்தங்களை மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள்.
பெண்களுக்கு பெருவாரியான நன்மைகள் நடக்கும். அதேசமயம் சுயமாக முடிவு எடுப்பதை விட குடும்பத்தாருடன் ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். யாரிடமும் கடன் வாங்க வேண்டாம். அதேபோல யாருக்கும் கடன் கொடுக்கவும் கூடாது. மிக முக்கியமாக ஆபரணங்களை குடும்பத்துக்குத் தெரியாமல் வேறு யாருக்கும் உதவி செய்கிறேன் என தரவேண்டாம். ஏமாறும் சூழ்நிலை இருக்கிறது.

மற்றபடி குடும்ப உறவுகள், பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு போன்றவை சிறப்பாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு நிச்சயமாகப் புத்திர பாக்கியமும் உண்டாகும். அதிலும் குறிப்பாக புத்திர பாக்கியத்திற்காக மருத்துவச் செலவு செய்தவர்களுக்கு இப்போது அதன் பயனாக குழந்தை பாக்கியம் உண்டாகும். உங்களுடைய மருத்துவச் செலவு வீண் போகாது. சுய தொழில் செய்பவர்களும், வியாபாரங்களில் இருப்பவர்களும் அதிக முதலீடுகள் செய்யாமல் இருக்கின்ற தொழிலை இருப்பது போலவே செய்து வரவேண்டும். குலதெய்வ வழிபாட்டை குடும்பத்தோடு தவறாமல் செய்து வர வேண்டும்.

மாணவர்களுக்கு கல்வியில் நல்ல வளர்ச்சி முன்னேற்றம் இருக்கும். ஆரம்பத்தில் தடுமாறினாலும் சுதாரித்து அதிலிருந்து மீண்டு கல்வியில் வெற்றி நடை போடுவீர்கள். சக மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரின் ஆதரவும் கிடைக்கும். உயர்கல்வி மாணவர்களுக்கு விரும்பிய கல்வி கிடைக்கும். அதற்கான வங்கிக் கடனும் கிடைக்கும். பட்ட மேற்கல்வி படிப்பவர்களுக்கு இப்போது மிக எளிதாக கல்வியை முடிக்கும் சூழ்நிலை இருக்கிறது. நல்ல தேர்ச்சி விகிதத்தில் வெற்றி பெறுவீர்கள்.

பொதுவாக விருச்சிக ராசிக்காரர்களுக்கு அவ்வப்போது சிறுசிறு உடல்நலத் தொல்லைகள் ஏற்பட்டு விலகும் என்பது உறுதி. அதிலும் குறிப்பாக உடற்கழிவுகள் வெளியேறும் பகுதிகளில் அடிக்கடி பிரச்சினைகள் வரும். குறிப்பாக பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்சினைகள், மாதவிடாய் பிரச்சினைகள் போன்றவை இருந்து கொண்டே இருக்கும். இந்த காலகட்டத்தில் தகுந்த மருத்துவ ஆலோசனைகளை பெற்று உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -

காஞ்சிபுரம் சித்ரகுப்தன் ஆலயத்திற்கு சென்று வாருங்கள். உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் விநாயகர் கோயிலுக்குச் சென்று விநாயகப்பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவது நல்ல பலன்களை அதிகப்படுத்தித் தரும்.
**************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x