Published : 25 Oct 2020 16:14 pm

Updated : 25 Oct 2020 16:14 pm

 

Published : 25 Oct 2020 04:14 PM
Last Updated : 25 Oct 2020 04:14 PM

குருப்பெயர்ச்சி பலன்கள்; துலாம் ராசி அன்பர்களே! ஆரோக்கியத்தில் கவனம்; கோபம் வேண்டாம்; நிதானம் அவசியம்! 

guru-peyarchi-thulam

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

எல்லையில்லாத நட்பு வட்டத்தைக் கொண்ட துலாம் ராசி வாசகர்களே!


வரவிருக்கும் குருப்பெயர்ச்சி என்ன மாதிரியான பலன்களை உங்களுக்குத் தரக் காத்திருக்கிறது என்று பார்ப்போம்.

இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் இருந்த குரு பகவான், அதிகப்படியான நன்மைகளையும், ஒரு சில விஷயங்களில் தாமதத்தையும் ஏற்படுத்தித் தந்திருப்பார். இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் 3க்கும் 6க்கும் அதிபதியான குரு பகவான் மூன்றாம் இடத்தில் மறைந்து விபரீத ராஜ யோகத்தைத் தந்து கொண்டிருந்தார்.

எதிர்பாராத காரியங்களில் வெற்றிகளை கொடுத்துக் கொண்டும், அதிக முயற்சி இல்லாமலேயே பல காரியங்களை நல்லவிதமாக முடித்துக் கொடுப்பவராகவும் இருந்தார். ஆனாலும் ஒரு சில விஷயங்களில் தடை தாமதங்களையும், சில பிரச்சினைகளையும் தந்து கொண்டிருந்தார். குறிப்பாக சகோதரர்களிடம் தேவையில்லாத மனவருத்தங்கள், தொழில் மற்றும் வியாபாரத்தில் சில இடர்கள், சில தடைகள் என்றெல்லாம் ஏற்படுத்தி இருப்பார். ஆனாலும் பெரிய பாதிப்புகள் ஏதும் இருந்திருக்காது.

ஆனால் இப்போது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் குரு செல்லப் போகிறார். இந்த நான்காம் இடத்து குரு நன்மைகளைச் செய்வாரா? அல்லது சிரமங்களைக் கொடுப்பாரா? என்பதே இப்போதைய உங்களுடைய எதிர்பார்ப்பு.

குரு நான்காம் இடத்திற்கு வருவதை அர்த்தாஷ்டம குரு என்று சொல்வார்கள். குரு நான்காம் இடத்திற்கு வரும்போது ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள், பாதிப்புகள் என்றெல்லாம் உண்டாக்குவார். சொத்து தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்துவார். தேவையற்ற எல்லைப் பிரச்சினை தொடர்பான சிக்கல்களை உண்டாக்குவார். சரியான தூக்கம் இருக்காது, வாகனப் பழுது, வீட்டுப் பராமரிப்புச் செலவு என செலவுகள் அதிகமாக ஏற்படும். கடன் வாங்கும் அளவுக்கு நெருக்கடிகள் உண்டாகும். ஏற்கெனவே அர்த்தாஷ்டம சனி, இரண்டில் கேது எட்டில் ராகு என கிரகங்கள் சற்று அழுத்தம் தரக்கூடிய அளவில்தான் உள்ளன. எனவே நிதானம் காப்பதும், பொறுமையாக இருப்பதும் நல்லது.

குடும்பத்தினரிடம் கோபப்படுவது, எரிந்து விழுவது என்பதெல்லாம் கூடவேகூடாது. தாயாரின் உடல்நலத்தில் மிக மிக அதிக கவனம் செலுத்த வேண்டும். தந்தையின் உடல்நலத்தில் பெரிய பாதிப்புகள் ஏதும் இருக்காது. சொத்துகள் தொடர்பான பிரச்சினைகளில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பாகப்பிரிவினைகளைத் தள்ளி வைப்பதும் நல்லது. சட்ட சிக்கல்கள் எதுவும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். தொலைதூரப் பயணங்கள் செல்வதாக இருந்தால் பொது போக்குவரத்தை பயன்படுத்துங்கள். இரவு நேரப் பயணங்களை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

அலுவலகப் பணிகளில் இருப்பவர்களுக்கு கடுமையான பணிச்சுமை ஏற்படும். சக பணியாளர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை தேவையில்லாத பிரச்சினைகளை உண்டாக்குவார்கள். உணர்ச்சிவசப்பட்டு வேலையை விடுவது போன்ற செயல்களைச் செய்ய வேண்டாம். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி சாதகமாக இருந்தாலும், அங்கும் இதுபோன்ற பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியது வரும். சூழ்நிலைக்கு ஏற்ப நீங்களே முடிவெடுங்கள்.

சொந்தமாக தொழில் செய்பவர்கள் தொழிலில் அதிக கவனம் செலுத்தவேண்டும். இயந்திரங்களின் செயல்பாடுகளில் கவனமாக இருக்க வேண்டும். பழைய இயந்திரங்களை மாற்றி புதிய இயந்திரங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டியது வரும். ஒப்பந்தங்கள் கையெழுத்திடுகிற போது முழுமையாக படித்துப் பார்த்த பின்பு ஏற்கவேண்டும். அதிகப்படியாக கடன் வாங்குவது கூடாது. புதிய தொழில் முயற்சிகளில் இறங்காமல் எதையும் சற்று தள்ளி வையுங்கள். ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு முதலிடம் கொடுங்கள். அவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரத்தில் கடன் கொடுப்பது கூடாது. வியாபாரத்தை விரிவுபடுத்துவது போன்ற செயல்களைச் செய்ய வேண்டாம். பங்கு வர்த்தகத்தில் இருப்பவர்கள் நிதானப் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். அதிக முதலீடுகள் செய்ய வேண்டாம். எதிர்பார்ப்புகள் சற்று ஏமாற்றம் தரலாம்.

ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பவர்கள் நிலத்தை வாங்கும் போதும் அல்லது விற்கும் போதும் பத்திரங்களின் உண்மைத் தன்மையை உறுதி படுத்த வேண்டும். இல்லை என்றால் தேவையில்லாத சட்டச் சிக்கல்கள் ஏற்படும்.

பெண்களுக்கு ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தினரிடமும் உறவினர்களிடமும் தேவையில்லாத சச்சரவுகளை உண்டாக்கும்படியாக நடந்து கொள்ள வேண்டாம். பணிபுரியும் அலுவலகத்தில், தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்தால் எந்த பிரச்சினையும் வராது. பணியில் அதிக கவனமாக இருக்கவேண்டும். வங்கிப் பணியாளராக இருந்தால் பணத்தைக் கையாளும்போது கவனம் வேண்டும். கணவரின் பிரச்சினைக்காக நகைகளை அடகு வைப்பது போன்றவை செய்யக்கூடாது. உறவினர்களிடமும் நண்பர்களிடமும் கடன் வாங்க வேண்டாம். மன அமைதி பெற தியானமும் செய்து வாருங்கள்.

மாணவர்கள் கல்வியில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்த வேண்டும். கவனம் சிதறாமல் இருக்க வேண்டும். தேவையற்ற பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடக்கூடாது. நண்பர்களுடன் ஊர் சுற்ற வேண்டாம். ஆடம்பர நாட்டங்களைத் தவிர்க்கவேண்டும். கல்வியில் சிறப்பாக பரிணமிக்க முடியும்.
கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஆனாலும் எதிர்பார்த்த ஊதியம் கிடைக்காமல், குறைவான ஊதியமே கிடைக்கும். கிடைக்க வேண்டிய பணம் தாமதம் ஆகலாம். ஒப்பந்தங்கள் நிறைவேறுவதில் ஒருசில தடை தாமதங்கள் ஏற்படும். நிதானம் காப்பது நல்லது.

பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்கள் எந்தவொரு செய்தியையும் அதன் நம்பகத் தன்மையை ஆராய்ந்த பின்பே வெளியிடவேண்டும். புதிய நபர்களைச் சந்திக்கும் பொழுது கவனமாக இருக்கவேண்டும். உங்களுடைய திறமைக்கு சவால் விடும் விதமாக பலவித சிக்கல்கள் பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியது வரும். மன உறுதியுடன் எதிர்கொண்டால் வெற்றி பெறலாம்.

பொதுவாக துலாம் ராசிக்காரர்களுக்கு, ஆரோக்கிய பாதிப்புகள் பெரிய அளவில் இருப்பதால் சரியான மருத்துவச் சிகிச்சைகளை மேற்கொள்ளவேண்டும். நீரிழிவு நோய் பிரச்சினை இருப்பவர்கள் தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்று மருந்துகளை எடுத்துக் கொள்வதும், உணவு உண்பதும் நேரம் தவறாமல் செய்ய வேண்டும். முடிந்தவரை தொலைதூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

வணங்க வேண்டிய தெய்வம் - கும்பகோணம், அய்யாவாடி பிரத்தியங்கிரா தேவி.

ஆதரவற்றவர்களுக்கும், வயதானவர்களுக்கும், மருத்துவ சிகிச்சை பெற முடியாத ஏழ்மை நிலையிலுள்ள நோயாளிகளுக்கும் முடிந்தவரை உதவி செய்யுங்கள். மேற்கண்ட பிரச்சினைகள் அனைத்தும் பாதியாகக் குறையும். பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியாகும். மன நிம்மதி கிடைக்கும்.
*************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!


குருப்பெயர்ச்சி பலன்கள்; துலாம் ராசி அன்பர்களே! ஆரோக்கியத்தில் கவனம்; கோபம் வேண்டாம்; நிதானம் அவசியம்;குருப்பெயர்ச்சிகுருப்பெயர்ச்சி பலன்கள்துலாம்துலாம் ராசிசொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்Guru peyarchiGuru peyarchi palangalThulamGuru peyarchi 2020

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x