Published : 10 Jun 2020 13:18 pm

Updated : 10 Jun 2020 13:18 pm

 

Published : 10 Jun 2020 01:18 PM
Last Updated : 10 Jun 2020 01:18 PM

காரியத்தில் கண், வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு, ஈஸியாக ஏமாறுவார்கள்; சுவாதி நட்சத்திர கேரக்டர் இப்படித்தான்! 

27-natchatirangal-a-to-z-46

27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள் - 46

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


வணக்கம் வாசகர்களே.


சுவாதி நட்சத்திரம் குறித்த தகவல்களை சுவாதி நட்சத்திரக்காரர்களின் கேரக்டர்களையும் பார்த்தோம்.


இப்போது, சுவாதியின் 4 பாதங்களுக்குமான தனித்தனியாக குணநலன்களையும் பலன்களையும் பார்ப்போம்.

சுவாதி 1ம் பாதம் -

சுவாதி 1ம் பாதத்தில் பிறந்தவர்கள் சிறந்த பக்திமான்கள். ஒழுக்கம் பிறழாதவர்கள். மனசாட்சிக்கு கட்டுப்பட்டவர்கள். சத்தியத்தைக் காப்பாற்றுபவர்கள். ரகசியம் காப்பவர்கள். தர்ம சிந்தனையாளர்கள்.
வாழ்வில் போராடி முன்னுக்கு வருபவர்கள். தந்தையின் பணத்தையோ அல்லது பூர்வீகச் சொத்தின் பின்புலத்தையோ எதிர்பார்க்காமல் தன் சுய அறிவு, மனோதிடம் மூலம் முன்னேறுபவர்கள். அதேசமயம் தன் பூர்வீகச் சொத்துக்களை வளர்ச்சியோடும் வருமானத்தோடும் பாதுகாக்கவும் தவறமாட்டார்கள்.

இவர்களில் பெரும்பாலானோர் உத்தியோகத்தில் இருக்கவே விரும்புவார்கள். சுயதொழில் செய்வோர் குறைவுதான். அரசுப்பணி, ஆசிரியர், விரிவுரையாளர், திட்ட அலுவலர், கட்டிடப் பொறியாளர். மனிதவள மேம்பாடு, குழந்தைகள் பள்ளிக் கூடம் நடத்துபவர், நிதி நிர்வாகம், வங்கிப்பணி, ஆடிட்டர், பிரசங்கம், மந்திர உபதேசம், போர்ப் பயிற்சி, போர் ஆயுதங்கள் தொடர்பான ஆராய்ச்சி, அணு ஆயுத ஆராய்ச்சி போன்ற பணிகளில் இருப்பார்கள்.

உணவு விஷயத்தில் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே தேர்ந்தெடுப்பார்கள். உடல் உபாதைகள் என பார்த்தால், முதுகு, பிட்டம், தொடை பகுதிகளில் பிரச்சினைகள் இருக்கும். பிறப்புறுப்பில் நோய் தொற்று, சிறுநீரில் தொற்று போன்ற பிரச்சினைகளும் இருக்கும்.

இறைவன் - வைத்தீஸ்வரன்

விருட்சம் - மருத மரம்

வண்ணம் - மஞ்சள்

திசை - கிழக்கு
***********************************

சுவாதி 2ம் பாதம் -

சுவாதி 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் உழைப்பால் முன்னேறி தொழிலதிபர்களாக மாறக்கூடியவர்கள். எந்த வேலைக்குச் சென்றாலும் தன் முத்திரையைப் பதிக்கத் தவறாதவர்கள். ஆனால் ஒரு கட்டத்தில் தனியாக தொழில் தொடங்கி பலருக்கும் வேலை தருபவர்கள்.

வளர்ச்சி என்றால் சாதாரண வளர்ச்சி அல்ல, பிரமாண்டமான வளர்ச்சி. கனவுகள் கூட பிரமாண்டம்தான். ஒரு பிரச்சினை என்றால் அந்த இடத்திலேயே தீர்வு காண்பவர்கள். நீட்டி முழக்குவது என்பதெல்லாம் கிடையாது. வெட்டு ஒன்று துண்டு இரண்டு என இருப்பவர்கள். எங்கும் வேகம் எதிலும் வேகம். உணவைக் கூட சில நிமிடங்களில் சாப்பிட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க போய்விடுவார்கள். ஓய்வு என்பதே இவர்களுக்குக் கிடையாது. நடுநிசியாக இருந்தாலும் வேலை என்று வந்து விட்டால் உடனே கிளம்பி விடுவார்கள்.

சாமக்கோழி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதற்கு உதாரணம் இவர்கள்தான். இரவில் வேலை பார்ப்பதுதான் இவர்களுக்கு பிடித்தமான ஒன்று. எதை எப்படி பணமாக்கலாம் என்பது இவர்களுக்கு கைவந்த கலை. உழைப்பு வீண் போகக் கூடாது என்பது இவர்களின் தத்துவம். ஓசி வேலை என்பதே இவர்கள் அகராதியில் கிடையாது, இவர்களும் யாரிடமும் இலவச சேவையை எதிர்பார்க்க மாட்டார்கள்.

இவர்களில் அதிகம்பேர் சொந்தத் தொழில் செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள். கட்டுமானத் தொழில், சாலை போடுதல், பாலங்கள் கட்டுமானம்,இயந்திரங்கள் தொடர்பு உடைய தொழில். மின்சார கட்டமைப்பு, ஆடை அணிகலன் தொழில், ஏற்றுமதி இறக்குமதி தொழில், நிலக்கரிச் சுரங்கம், பெட்ரோகெமிக்கல், கைவினைப்பொருட்கள் தொழில், அழகுநிலையம், தோல் பொருட்கள் உற்பத்தி, அலங்காரப் பொருட்கள் விற்பனை, டைல்ஸ் மார்பிள் கிரானைட் தொழில் முதலான தொழில் வாய்ப்புகள் உண்டாகும்.

உணவு விருப்பம் என்று பார்த்தால், எந்த உணவையும் ஒரு பிடி பிடிப்பார்கள், அசைவ உணவின் மீது விருப்பம் அதிகமிருக்கும். ஆரோக்கியம் என பார்த்தால் அஜீரணம், குடல்வால் பிரச்சினை, மூலம், சிறுநீர் தொற்று போன்ற பிரச்சினைகள் இருக்கும். வயதானவர்களாக இருந்தால் தீராத மூட்டுவலி இருக்கும்.

இறைவன் - காஞ்சி ஏகாம்பரநாதர்

விருட்சம் - புளியமரம்

வண்ணம் - கருநீலம்

திசை - தென்மேற்கு
*********************************

சுவாதி 3ம் பாதம் -

சுவாதி 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் தன்மானச் சிங்கங்கள். தன் கொள்கையில் உறுதியாக இருப்பவர்கள், முரட்டுப் பிடிவாதம் கொண்டவர்கள். தன் திறமை மேல் அதீத நம்பிக்கை உள்ளவர்கள். சரியோ தவறோ எதுவானாலும் தன் கருத்தில் சற்றும் பின்வாங்காதவர்கள்.
காரியத்தில் கண்ணாக இருப்பார்கள். இவர்களைப் பொருத்தவரை, ஆதாயம் இருந்தால் மட்டுமே ஒரு காரியத்தில் இறங்குவர்கள். ஆதாயம் இல்லாவிட்டால் திரும்பிக் கூட பார்க்கமாட்டார்கள்.

இவர்கள் வேலையில் இருந்தாலும் பகுதி நேரத் தொழில் செய்பவர்களாகவும் இருப்பார்கள். ஒவ்வொரு மணி நேரத்தையும் இவர்கள் பணமாகத்தான் பார்ப்பார்கள். படிப்படியான வளர்ச்சி இவர்களுக்கு பிடிக்காது,மாறாக லிப்ட் (மின் தூக்கி) போல் டக்கென்று பணக்காரனாகிவிட வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள். பணத்திற்காக எந்த வேலையையும் மறுக்காமல் செய்வார்கள்.

தரகு மற்றும் கமிஷன் தொழில், ரியல் எஸ்டேட் தொழில், சினிமா தொடர்பான தொழில், மொத்த ஏஜென்ட், பைனான்ஸ், டிராவல்ஸ், கான்ட்ராக்ட் தொழில், வெளிநாட்டிற்கு ஆட்கள் அனுப்புதல், கலை தொடர்பான தொழில், அதாவது போட்டோகிராபி, ஓவியம், சுற்றுலா தொடர்பான தொழில், அரசியல்வாதி, அரசுப்பணி, இடைத்தரகர், கந்துவட்டி, தவணை திட்டம், சிட்பண்ட் தொழில் இது போன்ற தொழில்களும் வேலைகளும் அமையும்.

விதவிதமான உணவின் மீது விருப்பம் இருக்கும். வீட்டு உணவைவிட ஹோட்டல் உணவுகளில் தான் அதிக விருப்பம் இருக்கும். இதன் காரணமாகவே அஜீரணப் பிரச்சினை, அசிடிட்டி, முதுகுத் தண்டுவட பிரச்சினை போன்றவை இருக்கும்.

இறைவன் - திருநள்ளாறு தர்ப்பராண்யேஸ்வரர்

விருட்சம் - கொன்றை மரம்

வண்ணம் - இள நீலம்

திசை - மேற்கு
*****************************
சுவாதி 4ம் பாதம் -

சுவாதி 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் இளகிய மனம் கொண்டவர்கள். எதையும் நம்பும் குணம் உடையவர்கள். எளிதில் ஏமாறுபவர்கள். சிறு விஷயத்திற்குக் கூட உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். எதையும் எளிதாக ஏற்றுக்கொள்பவர்கள். ஏமாற்றங்களையும் சிரித்துக்கொண்டே கடப்பவர்கள்.
மனக்கவலையை வெளிக்காட்டாதவர்கள். மனதில் பட்டதை பளிச்சென சொல்பவர்கள். தூய்மையான உடைகளை அணிபவர்கள். அதை சிறிதும் அழுக்காகாமல் பார்த்துக் கொள்வார்கள். அகத்தூய்மை புறத்தூய்மை உடையவர்கள். ஆடம்பர நாட்டம் இருக்கும். செலவுகள் அதிகம் செய்பவராக இருப்பார்கள். இவர்கள் கற்ற கல்விக்கும் வேலைக்கும் சற்றும் தொடர்பே இருக்காது. பின்னால் நடக்கப் போவதை முன்பே அறியும் ஞானம் உடையவர்கள்.

வரவுக்கு மேல் செலவு செய்பவர்கள். ஆனாலும் பணப்புழக்கம் இருந்துகொண்டே இருக்கும். ஆண்களாக இருந்தால் திருமணத்திற்குப் பின் முன்னேற்றம், செல்வச் செழிப்பு என வாழ்வார்கள். பெண்களாக இருந்தால், இருக்கும் வரை பிறந்த வீடு செல்வ வளத்துடன் இருக்கும், திருமணம் நடந்து கணவர் வீட்டுக்குச் சென்ற பின் கணவர் வீடு வளமாக மாறிவிடும். பிறந்த வீடு பொருளாதார பிரச்சினைகளை சந்திக்கும்.

இவர்களில் பெரும்பாலானோர் அயல்நாடுகளில் தங்கள் திறமையால் உயர்ந்த பதவிகளில் இருப்பார்கள். அங்கேயே நிரந்தரமாக தங்கிவிடுபவர்களும் உண்டு. பயணம் தொடர்பான தொழில், ஆசிரியர், வழக்கறிஞர், பேச்சை தொழிலாக செய்தல், மருத்துவம், ஜோதிடம், கடல் ஆராய்ச்சி, மீன் இறால் பண்ணை, கப்பல் பொறியாளர் மற்றும் கப்பல் தொடர்பான பணிகள் என்றிருக்கும்.
பெட்ரோலியம் தொடர்பான வேலை, தகவல் தொழில்நுட்பப் பணி, பத்திரிகை மற்றும் ஊடகப் பணி, உணவகம் தொடர்பான தொழில், சுப விசேஷ நிகழ்ச்சிகள், மனமகிழ் மன்றம், மது விடுதிகள் தொழில், வெளிநாட்டுப் பொருள் விற்பனை, பெண்கள் அழகு நிலையம், பெண்களுக்கான அழகு சாதனம் விற்பனை நிலையம், திருமண தகவல் மையம், தூதரகப் பணி, ரகசிய உளவுப் பணி போன்ற பணிகள் தொழில்கள் அமையும்.

இறைவன் - ராமேஸ்வரம் ராமநாத சுவாமி

விருட்சம் - மந்தாரை மரம்

வண்ணம் - இளநீலம் மற்றும் இளம் பச்சை

திசை - வடக்கு மற்றும் வடமேற்கு

சுவாதி நட்சத்திரத்தின் ஏ டூ இஸட் தகவல்களை கடந்த சில அத்தியாயங்களிலும் இந்த அத்தியாயத்திலும் கொடுத்திருக்கிறேன். நீங்களோ உங்கள் குடும்பத்தாரோ சுவாதி நட்சத்திரம் எனில், இவை உபயோகமானதாக இருக்கும். இல்லையெனில், உங்கள் சுவாதி நட்சத்திர நண்பர்களுக்கு இவற்றை ஷேர் செய்யுங்கள். அவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.


அடுத்த பதிவில் வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை கற்றுத்தரும் விசாகம் எனும் நட்சத்திரத்தையும் விசாக நட்சத்திரக்காரர்களின் கேரக்டர்களையும் பார்ப்போம். விசாகம்... போர்க்கள நட்சத்திரம்!


- வளரும்

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

காரியத்தில் கண்வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுஈஸியாக ஏமாறுவார்கள்; சுவாதி நட்சத்திர கேரக்டர் இப்படித்தான்!27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள் - 46- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author