Last Updated : 26 Oct, 2023 01:11 PM

 

Published : 26 Oct 2023 01:11 PM
Last Updated : 26 Oct 2023 01:11 PM

மேஷம் ராசியினருக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் | 30.10.2023 - 19.05.2025

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

புதுமையாக சிந்திக்கும் மனமும், பூப்போல புன்னகை பூக்கும் முகபாவங்களும், எடுத்த காரியத்தை எப்படியாவது முடித்துவிடும் அபார சக்தியும், ஊரே ஒரு குடையின் கீழ் எதிர்த்து நின்றாலும் அஞ்சாமல் போராடி வெற்றிபெறும் வேங்கைகளே! தன்மானம் உடைய நீங்கள், யாரையும் சார்ந்து வாழ மாட்டீர்கள்.

ராகுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்து கொண்டு உடல் நலக்குறைவுகளையும், குடும்பத்தில் பிரச்சினைகளையும் தந்து கொண்டிருந்த ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டில் வந்து அமர்கிறார். ராகுவால் உங்களுக்கு விபரீதமான ராஜ யோகங்கள் உண்டாகும். வீடு, வாகன வசதி பெருகும். தம்பதிக்குள் நடந்துவந்த நிழல் யுத்தம் நீங்கி நல்லுறவு தொடரும். பிள்ளைகளால் வந்த பிரச்சினைகள் தீரும்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: ரேவதி நட்சத்திரத்தில் 30.10.2023 முதல் 6.7.2024 வரை ராகுபகவான் சஞ்சாரம் செய்வதால் இக்காலகட்டங்களில் திடீர் பயணங்கள், வீண் பயம், அலைச்சல், வாகன செலவுகள் வந்துபோகும். சொத்து பத்திரத்தில் கையெழுத்திடும்போது கவனம் தேவை. உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 6.7.2024 முதல் 15.3.2025 வரை ராகு பகவான் செல்வதால் மனக்குழப்பம், காரியத் தடங்கல் வரக் கூடும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் 15.3.2025 முதல் 19.5.2025 வரை ராகுபகவான் செல்வதால் பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். ஏற்றுமதி - இறக்குமதியால் அதிக லாபம் வரும். கூட்டுத் தொழிலில் புது முதலீடுகளை செய்வீர்கள். பங்குதாரர்களிடையே அவ்வப்போது வாக்குவாதங்கள், வந்தாலும், இறுதியில் உங்கள் வார்த்தைக்கு கட்டுப்படுவார்கள். உத்தியோகத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் உயரதிகாரியை கவர்வீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. கலைஞர்கள், நல்ல வாய்ப்புகள் கிடைத்து, புகழடைவர். வசதி பெருகும்.

கேதுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசியில் 7ஆம் இடத்தில் கேது இருந்துகொண்டு எந்த வேலையையும் முடிக்க முடியாத சூழலை தந்தார். கேது இனி ஆறாம் வீட்டுக்கு வருகிறார். அடுக்கடுக்காய் விபரீத ராஜ யோகங்களை உருவாக்குவார். விநாயகர் வழிபாட்டில் ஈடுபாட்டை ஏற்படுத்துவார். வேதங்கள் படித்து அதன் உள்ளார்ந்த அர்த்தங்களை புரிந்து கொள்ளும் வாய்ப்பு உருவாகும். தாழ்வு மனப்பான்மை நீங்கி, தன்னம்பிக்கை ஊற்றெடுக்கும்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 30.10.2023 முதல் 4.3.2024 வரை கேது பகவான் செல்வதால் இக்காலகட்டங்களில் கவுரவப் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் 4.3.2024 முதல் 8.11.2024 வரை கேது செல்வதால் ஷேர் மூலம் பணம் வரும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். புது வேலை கிடைக்கும். வேற்றுமதம், மொழியினரால் ஆதாயம் உண்டு. கூடா பழக்க வழக்கங்களை தவிர்த்துவிடவும்.

சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் 8.11.2024 முதல் 19.5.2025 வரை கேது செல்வதால் எதையோ இழந்ததைப் போல் ஒரு வித கவலைகள், படபடப்பு, வீண் டென்ஷன், தாழ்வு மனப்பான்மை, சோர்வு, சலிப்பு வந்து நீங்கும். சொத்து பிரச்சினையை நிதானமாக கையாளுங்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும்.

பெண்களுக்கு மன உளைச்சல் நீங்கும். கர்ப்ப சிதைவு, உடல் கோளாறு போன்ற பிரச்சினைகள் இனி இருக்காது. தடைகள் நீங்கி திருமணம் கூடி வரும். வேலை கிடைக்கும். மேலதிகாரிகளின் தொல்லைகள் நீங்கி உங்களுக்கு நன்மைகள் விளையும். வியாபாரத்தில் போராட்டங்கள் நீங்கும். கடையை வேறிடத்துக்கு மாற்றுவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும்.

உத்தியோகத்தில் உங்களை வெறுத்த மேலதிகாரி இனி வலிய வந்து பேசுவார். உங்களின் கடின உழைப்புக்காக பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு. இந்த ராகு - கேது மாற்றம் ஒடுங்கி, ஒதுங்கியிருந்த உங்களை முன்னுக்கு கொண்டு வருவதுடன், திடீர் யோகம், வசதி வாய்ப்புகளை அள்ளித் தரும்.

பரிகாரம்: வேலூர், வாணியம்பாடிக்கு அருகில் ஆம்பூர் எனும் ஊரில் அருள்பாலிக்கும்  அபயவல்லி சமேத ஸ்ரீநாகரத்தின சுவாமியை வணங்குங்கள். கட்டிடத் தொழிலாளிக்கு உதவுங்கள். வெற்றிகள் தொடரும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x