Published : 06 Jan 2014 12:20 PM
Last Updated : 06 Jan 2014 12:20 PM

ஒர் ஓவியனின் மறுபக்கம்

லியனார்டோ டா வின்சி என்றதும் நினைவுக்கு வருவது என்ன? அவர் வரைந்த மோனாலிசாவும், இறுதி விருந்தும்தானே. 1452ஆம் ஆண்டு இத்தாலியில் உள்ள வின்சி நகரில் பிறந்த அவர், ஓவியர் என்பதைத் தாண்டியும் பல அடையாளங்களைக் கொண்டவர்.

ஒரே நபர் பல துறைகளிலும் சிறந்து விளங்குவது அரிது. அப்படி அரிதினும் அரிதான மனிதர்தான் லியனார்டோ. ஓவியம் வரைவதுடன் சிலைகள் வடிப்பதிலும் அவர் சிறந்து விளங்கினார். அறிவியல் கண்டுபிடிப்புகள் பலவற்றின் முன்னோடி அவர். அவர்தான் சைக்கிளைக் கண்டுபிடித்தார் என்று சொல்கிறவர்களும் உண்டு.

அறிவியல் துறையில் அதீத ஈடுபாட்டுடன் விளங்கினார். தசைகள், தசைநாண்கள், எலும்பு அமைப்புகள், உடற்கூறு குறித்தெல்லாம் அவர் வரைந்த படங்கள்தான் பிற்கால அறிவியல் படிப்புகளுக்கு வழிகாட்டி. மனித உடலை ஊடறுத்துப் பார்க்கும் எந்தக் கருவியின் உதவியும் இன்றி, இதயம் உட்படப் பல உள்ளுறுப்புகளின் படங்களை அவர் துல்லியமாக வரைந்திருக்கிறார்.

பொறியியல் துறையிலும் இவருடைய பங்களிப்பு குறிப்பிடத் தக்க அளவில் இருந்தது. மத்திய இத்தாலியில் பாயும் ஆர்னோ ஆற்றின் குறுக்கே கட்டுவதற்கான ஒற்றைப் பாலத்தின் மாதிரியை வடிவமைத்துக் கொடுத்தவர் லியனார்டோதான். எதிரிகளின் தாக்குதலில் இருந்து நகரத்தைக் காப்பாற்றக்கூடிய நகரும் தடுப்பரண்களையும் அவர் வடிவமைத்தார். அறிவியல் உண்மைகள், கண்டுபிடிப்புகள் தொடர்பான அவரது தொகுப்பில் கிட்டத்தட்ட 13 ஆயிரம் படங்கள் இடம்பெற்றிருந்தன.

எல்லாமே இந்த உலகைக் குறித்த அவரது அறிவியல் பார்வையின் வெளிப்பாடுகள். பறவைகளால் மட்டுமே பறக்க முடியும் என்ற எண்ணம் வேரூன்றி இருந்த அந்தக் காலத்திலேயே கிளைடர்கள், ஹெலிகாப்டர், போர் எந்திரங்கள் ஆகியவற்றின் மாதிரிகளை வரைந்தார் டா வின்சி. இசைக் கருவிகளின் படங்களையும், தற்போது நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு வகையான குழாய்களையும்கூட அப்போதே வரைந்துவிட்டார்.

இப்படிப் பல துறைகளிலும் சிறந்து விளங்கியவரின் சொற்பப் படங்கள் மட்டுமே தற்போது இருக்கின்றன. அவர் வாழ்ந்த காலம்வரை ஓவியராக மட்டுமே அறியப்பட்டிருந்தார். அவர் மிகச் சிறந்த கண்டுபிடிப்பாளர் என்பதை, அவரது மறைவுக்குப் பிறகுதான் உலகம் உணர்ந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x