Published : 04 Feb 2015 09:29 AM
Last Updated : 04 Feb 2015 09:29 AM

நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யருக்கு பாரத ரத்னா விருது: உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் வலியுறுத்தல்

நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் கூறியுள்ளார்.

நீதியரசர் சிவராஜ் வி. பாட்டீல் அறக்கட்டளை சார்பாக மறைந்த நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர், நீதி யரசர் பிரபா ஸ்ரீதேவன், சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு ஆகியோருக்கு நீதிபதி சிவராஜ் வி.பாட்டீல் விருது வழங்கப்பட்டது. வி.ஆர்.கிருஷ்ணய் யரின் சார்பாக அவரது சகோதரர் மற் றும் தமிழ்நாடு முன்னாள் காவல்துறை தலைவர் (டி.ஜி.பி.) வி.ஆர்.லட்சுமி நாராயணன் பெற்றுக் கொண்டார்.

நீதியரசர் சிவராஜ் வி.பாட்டீல் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியாகவும் தேசிய மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் தலைவருமாக பணியாற்றியுள்ளார். அவரது பெயரில் மனித குலத்துக்கு தொண்டாற்றியவர்களை அங்கீகரிக்கும் விதத்தில் அவரது முன்னிலையில் விருதுகள் வழங்கப்பட்டன.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். கிருபாகரன் தலைமையுரையாற்றிய போது, “அரசு வேலை அல்லது மற்ற உயரிய பதவிகளில் இருப்பவர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களையும் மற்றவர்களையும் அடிமைகளாக நினைக்கிறார்கள். இது நவீன கால வர்ணாசிரம முறையாகும்.

இந்திய நீதித் துறையை கிருஷ்ணய் யருக்கு முன், கிருஷ்ணய்யருக்கு பின் என்று பிரிக்கக் கூடிய அளவுக்கு கிருஷ்ணய்யர் முக்கிய பங்காற்றினார். ஆனால், அவரை இந்திய அரசு அங்கீகரிக்கவில்லை. அவருக்கு பாரத் ரத்னா விருது வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

உயர்நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பேசும்போது கூறியதாவது:

‘‘சில விருதுகள் வாங்கப்படுகின்றன. சில விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒரு குடியாட்சியில் நீதித்துறை, சட்டம் இயற்றும் துறை, நிர்வாகத் துறை ஆகிய மூன்று துறைகளிலும் வி.ஆர்.கிருஷ்ணய்யர் மக்களுக்கு தொண்டாற்றியுள்ளார். இந்தியாவின் மிகப் பெரிய பலமே எதையும் எதிர்பாராமல் தொண்டாற்றும் தனி நபர்கள் மற்றும் பொது நல இயக்கங்கள்தான். பலவித பாகுபாடுகள் இருந்தாலும், இந்திய சமூகத்தை இயக்குவது இவர்கள் தான்’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.வி.மாசிலாமணி, நீதியரசர் சிவராஜ் வி.பாட்டீல் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எஸ்.செல்வகோமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x