Published : 02 Jun 2014 17:16 pm

Updated : 02 Jun 2014 17:19 pm

 

Published : 02 Jun 2014 05:16 PM
Last Updated : 02 Jun 2014 05:19 PM

ஐபிஎல் சீசன் 7-ல் கலக்கிய இளம் இந்திய வீரர்கள்!

7

ஐபிஎல் திருவிழா ஒருவழியாக முடிந்து விட்டது. கொல்கத்தா சற்றும் எதிர்பாராத வகையில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளது.

இதில் அயல்நாட்டு வீரர்களை விடவும், இந்திய அணியில் உள்ள சில வீரர்களை விடவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது பரவலான் வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது.

குறிப்பாக இந்தியாவுக்கு இன்னும் விளையாடாத, இந்திய வாய்ப்பை எதிர்நோக்கும் வீரர்கள் பற்றி பார்க்கலாம்.

இதில் மேலும் வரவேற்கத்தக்க விஷயம் என்னவெனில் பவுலர்களான அக்‌ஷர் படேல் (கிங்ஸ் லெவன்), மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூருக்கு ஆடிய யஜுவேந்திர சாஹல் ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்லியாகவேண்டும்.

இடது கை சுழற்பந்து வீச்சாளரான அக்‌ஷர் படேல் ஒரு பேட்டிங் ஆல் ரவுண்டர். ஆனால் அவரது பேட்டிங் திறமைக்கு கிங்ஸ் லெவன் வாய்ப்பு அளிக்கவில்லை. மாறாக அவரது பந்து வீச்சுத் திறமையை முழுதும் வெளிக்கொணர்ந்தார் கின்ஸ் லெவன் கேப்டன் பெய்லி மற்றும் பவுலிங் கோச் டேவிஸ். இவரது உழைப்பிற்குக் கிடைத்ததுதான் வளரும் வீரர் விருது.

கிட்டத்தட்ட ரவி சாஸ்திரி போன்ற பந்து வீச்சு ஆக்சனைக் கொண்ட அக்‌ஷர் படேல் சர்வதேச பேட்ஸ்மென்கள் பலரை தனது பிளைட், லெந்த் ஆகியவற்றால் திணறடித்தார். மேலும் இவரது சிக்கன விகிதம் ஓவருக்கு 6.48தான்.

அபுதாபியில் நடைபெற்ற முதல் சுற்று ஐபிஎல் லீக் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 205 ரன்கள் விளாசித் தோல்வி அடைந்த போட்டியில் அக்‌ஷர் படேல் 4 ஓவர்களில் 34 ரன்களை மட்டுமெ விட்டுக் கொடுத்தார். ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் சென்ற போட்டியில் 8 ரன்களைக் கொடுத்தது பெரும் சிக்கனம்தான். அடுத்த போட்டியில் அவர் ராஜஸ்தான் அணிக்கு எதிராக 4 ஓவர்களில் 22 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்ததோடு முக்கிய கட்டத்தில் ஆக்ரோஷ ஷேன் வாட்சனைக் காலி செய்தது வெற்றிக்கு வித்திட்டது என்றே கூறவேண்டும்.

ஷார்ஜாவில் சன் ரைசர்ஸை நசுக்கிய ஆட்டத்தில் இவர் 20 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கொல்கத்தாவுக்கு எதிராக ஷார்ஜாவில் 4 ஓவர்களில் 16 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள். துபாய் சுற்றில் 5 போட்டிகளில் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்தப் பிட்ச்கள் ஸ்பின் பந்து வீச்சிற்கு இந்தியப் பிட்ச்கள் அளவுக்கு உதவிகரமாக இல்லாதவை. இந்தியாவில் அவர் ஒரு சில அரிதான போட்டிகளில் அடி வாங்கினாலும் தளராமல் அடித்த பேட்ஸ்மென்களின் விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இவர் இந்திய அணியில் இடம்பெறக்கூடிய திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

யஜுவேந்திர சாஹல்:


அமித் மிஸ்ராவுக்குப் பிறகு இந்திய லெக்ஸ்பின் பாரம்பரியத்தைத் தொடர ஆளில்லாமல் போகும் என்ற அபாயத்தை முறியடிக்க வந்தவர் யஜுவேந்திர சாஹல், 23 வயதான இவர் ஹரியானா மாநிலத்திற்கு ஆடி வருபவர். இதற்கு முன்பு ஒரேயொரு ஐபிஎல் போட்டியில் மட்டும் ஆடியுள்ளார். ஆனால் இந்த முறை நிறைய போட்டிகளில் சாஹல் இடம்பெற்றார். இவரது கூக்ளி இவருக்கு அதிக விக்கெட்டுகளைப் பெற்றுதந்ததுள்ளது. அதிரடி வீரர்களான கிளென் மேக்ஸ்வெல், சேவாக், டேவிட் மில்லர், மெக்கல்லம், டிவைன் ஸ்மித் ஆகியோருக்கு எதிராகவும் இவரது பந்து வீச்சு சோபித்துள்ளது. இதில் மேக்ஸ்வெல், சேவாக், டேவிட் மில்லர் ஆகியோரை இருமுறை சொற்ப ரன்களுக்கு வெளியேற்றியுள்ளார். அக்‌ஷரை ஒப்பிடும்போது இவரது சிக்கன விகிதம் சற்றே கூடுதல். ஆனாலும் இவரது பலம் விக்கெட்டுகளை கைப்பற்றுவது.

சந்தீப் சர்மா:

இவர் கிங்ஸ் லெவன் வீரர். இவரிடம் பெரிய வேகமெல்லாம் இல்லை. ஆனால் நல்ல லெந்த்தில் இவர் வீசும் மிதவேகப்பந்துகள் ஸ்விங் காரணமாக விக்கெட்டுகளை பெற்றுக் கொடுத்தது. மிகவும் சாதாரணமாக ஓடி வந்து வீசும் இவர் வீசுவதைப் பார்க்கும் அனைவருமே இவரிடம் என்ன இருக்கிறது என்று அணியில் சேர்த்தனர் என்று கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் இந்த ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றார். ஆனால் இவர் வேகத்தைக் கூட்டினால்தான் அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியும். இல்லையெனில் இந்த மட்டத்திலேயே கிடந்து உழல வேண்டியதுதான். இவர் இந்த ஐபிஎல் கிரிக்கெட்டில் சற்றும் எதிர்பாராதவிதமாக நன்றாக வீசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டிங்கில் மனன் வோரா

கிங்ஸ் லெவன் அணிக்கு ஆடிய மனன் வோரா துவக்கத்தில் களமிறங்கி சற்றும் எதிர்பாரா விதமாக அபூர்வ பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார். இத்தனைக்கும் இவருக்கு முதல் 9 போட்டிகளில் வாய்ப்பளிக்கப் படவில்லை என்பது பெரும் ஆச்சரியமே. கடைசியில் 5 ஆட்டங்களில்தான் இவர் விளையாடினார். இவரை பஞ்சாப் அணி இத்தனைக்கும் தக்க வைத்தது. இவர் வீரர்கள் ஏலத்தில் இல்லை என்பதும் ஆச்சரியம். தக்கவைத்த ஒரு வீரரை 9 போட்டிகளுக்கு ஆடாமல் உட்கார வைத்ததன் மர்மம் என்னவென்று தெரியவில்லை. பஞ்சாப் அணி பிளே ஆப் சுற்றுக்கு ஏறக்குறைய தகுதி பெற்ற பின்பே இவருக்கு முதன் முதலாக சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக வாய்ப்பளிக்கப்பட்டது. சேவாகுடம் இறங்கிய இவரோ அந்தப் போட்டியில் 20 பந்துகளில் 47 ரன்களை விளாசி அசத்தினார். பிறகு டெல்லிக்கு எதிராக 19 பந்துகளில் 43, 4 பவுண்டரி 3 சிக்சர்கள். மும்பை அணிக்கு எதிராக ஒரு வேகமான 36 ரன்கள். அதன் பிறகு 25, 47, 26, 34, பிறகு நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 52 பந்துகளில் 67 ரன்கள். டேல் ஸ்டெய்ன், மோர்னி மோர்கெல் உட்பட அனைவரையும் சிக்ஸர்களை விளாசி தன்னை நீருபித்தார்.

கருண் நாயர் - ராஜஸ்தான் ராயல்ஸ்

இவர் உண்மையில் கர்நாடக அணியினால் ஒதுக்கப்பட்டவர். இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இந்த முறை விளையாடினார். இவரது முதல் ஐபிஎல் தொடராகும் இது. இப்போதைய இருபது ஓவர் கிரிக்கெட் வீரர்களைப் போலவே இவரும் கட், புல் மற்றும் ஸ்லாக் ஸ்வீப்பில் பலமாகத் திகழ்ந்தார். மொத்தமாக இந்த சீசனில் 330 ரன்களை எடுத்து அசத்தினார். இவரும் கர்நாடகாவிலிருந்து இந்திய அணிக்காக ஒரு காலத்தில் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளவர்.

சி.கவுதம் - மும்பை இந்தியன்ஸ்

இவரை விக்கெட் கீப்பராக மும்பை இந்தியன்ஸ் தேர்வு செய்தது. அதனால் துவக்கத்தில் அவர் பின்னாலேயே களமிறங்கினார். இவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர். ராயல் சாலஞ்சர்ஸ் இவரைத் தேர்வு செய்யவில்லை. மைக் ஹஸ்ஸியும் ஆதித்யா தாரேயும் சில போட்டிகளில் களமிறக்கப்பட்டனர். இப்படியிருக்கையில் மே 3ஆம் தேதி நடைபெற்ற பஞ்சாபிற்கு எதிரான போட்டியில் இவர் துவக்கத்தில் களமிறக்கப்பட்டார். மும்பை வெற்றி பெற்ற அந்தப் போட்டியில் இவர் 2 பவுண்டரி 2 சிக்சர்கள் சகிதம் 33 ரன்களை விளாசி அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.

அடுத்த போட்டியில் பெங்களூருக்கு எதிராக 2 பவுண்டரி 3 பெரிய சிக்சர்களுடன் 30 ரன்களை எடுத்து அடித்தளம் அமைத்துக் கொடுக்க 187 ரன்கள் எடுத்த மும்பை, பெங்களூருவை வீழ்த்தியது. ஆனால் அதன் பிறகு 2 போட்டிகளில் அடிக்கவில்லை என்பதற்காக மீண்டும் தாரேயை அணியில் எடுத்து ஹஸ்ஸி, சிம்மன்ஸை துவக்கத்தில் களமிறக்கி கவுதமிற்கு வாய்ப்பை மறுத்தது மும்பை இந்தியன்ஸ். ஆனால் மேற்கூறிய் 3 இன்னிங்ஸ்களில் இவரது ஆட்டத்திறமை பளிச்சிட்டது. வேகப்பந்து வீச்சாளர்களை மேலேறி வந்து எக்ஸ்ட்ரா கவரில் சிக்ஸ் அடிக்கும் திறமை உடையவர் சி.கவுதம். இவருக்கு மேலும் வாய்ப்புகளை அளித்திருந்தல் மனன் வோரா அளவுக்கு இவரும் சிறந்த வீரராக மிளிர்ந்திருப்பார். ஆனால் ஐபிஎல். கிரிக்கெட் வெற்றியை மட்டுமே குறிவைத்து நட்சத்திர வீரர்களுக்காக நடத்தப்படும் ஒன்று.இதில் சி.கவுதமிற்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்படாதது புரிந்து கொள்ளக்கூடியதே.

குறிப்பிடத்தக்க வீரர்கள்

இந்த வீரர்களைத் தவிர ராபின் உத்தப்பா இந்தத் தொடரில் தனது தலைசிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிகபட்ச ரன்களை குவித்த வீரராகத் திகழ்ந்ததோடு இந்திய ஒருநாள் அணியிலும் மீண்டும் இடம்பிடித்துள்ளார். இவர் போன்றவர்கள் மீண்டும் வருவது இந்திய அணிக்கு நல்லது. விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவின் திடீர் பேட்டிங் எழுச்சியும் தோனிக்கு அடுத்த பதிலீடுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.

இவரைத் தவிர அம்பாத்தி ராயுடுவின் சில இன்னிங்ஸ்கள், ஹர்பஜன் சிங்கின் பந்து வீச்சு, பிராக்யன் ஓஜா, முக்கியப் போட்டிகளில் சிறப்பாக வீசியது, மோகித் சர்மா, மற்றும் ஈஷ்வர் பாண்டே ஆகியோரின் அபாரப் பந்து வீச்சு, இருபது ஓவர் உலகக் கோப்பைக்குப் பிறகே பெரிய அளவுக்கு முன்னேறிய வருண் ஆரோனின் வேகப்பந்து வீச்சு என்று இந்த ஐபிஎல் தொடர் நிறைய பாசிடிவ்களை அளித்துள்ளது.

விளிம்பில் உள்ள வீரர்கள் கொடுக்கப்பட்ட வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்திக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த நிலையில் பாபா அபராஜித் என்ற திறமை மிக்க வீரருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி வாய்ப்பளிக்காதது இந்த ஐபிஎல். கிரிக்கெட்டின் கரும்புள்ளி என்றே கூறவேண்டும்

ஐபிஎல் கிரிக்கெட்கொல்கத்தா சாம்பியன்மனன் வோராசஹாஉத்தப்பாசாஹல்சந்தீப் சர்மா

You May Like

More From This Category

More From this Author