Published : 26 Jun 2014 09:00 AM
Last Updated : 26 Jun 2014 09:51 AM
பிஹாரில் 11 சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் இருபது வருடங்களுக்குப் பிறகு லாலு பிரசாத் யாதவும் நிதீஷ் குமாரும் கூட்டு சேர்ந்து போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
பிஹாரில் மக்களவை தேர்தலில் போட்டியிட்டவர்களில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 5 எம்எல்ஏக்களும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஒரு எம்.எல்.ஏவும் வெற்றி பெற்று எம்.பி.யாகி விட்டனர்.
லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் மூன்று எம்.எல்.ஏக்கள் தம் பதவியை ராஜினாமா செய்து ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தனர். இவர்கள் மூவரும், சட்ட மேலவை உறுப்பினராகி பிஹார் புதிய முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி அரசில் அமைச்சர்களாக உள்ளனர்.
அதேபோல், பாரதிய ஜனதா கட்சியின் 2 எம்.எல்.ஏக்கள் தம் பதவியை ராஜினாமா செய்து ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தனர். இந்த இருவரையும் ஜிதன்ராம் மேலவை உறுப்பினராக்கி உள்ளார்.
இவர்கள் ராஜினாமா செய்ததால் காலியாக உள்ள 11 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவை தேர்தலில் வீசிய மோடி அலை, பிஹார் இடைத் தேர்தலிலும் வீசும் என கருதுவதால் இதை தடுக்க, லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளமும், நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் கூட்டு சேர்ந்து போட்டியிடத் திட்டமிட்டு வருகின்றன. இவர்களுடன் காங்கிரஸ் மற்றும் இந்தியக் குடியரசு கட்சியும் இணையும் எனக் கருதப்படுகிறது.
இதற்காக, பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டு காங்கிரஸின் தேசிய செய்தி தொடர்பாளரான ஷகீல் அகமது, இருதினங்களுக்கு முன் நிதீஷ்குமாரை சந்தித்தார். இது தொடர்பாக லாலுவுடன், நிதீஷ்குமார் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.
இது குறித்து ‘தி இந்து’விடம் பிஹாரின் அரசியல் வட்டாரங்கள் பேசும்போது, ‘11 தொகுதிகளில் தனக்கு 5-ம், லாலுவிற்கு நான்கும், காங்கிரஸுக்கு இரண்டும் தர நிதீஷ் முன் வந்துள்ளார். ஆனால் தனக்கு மூன்று வேண்டும் என காங்கிரஸும், ஒரு தொகுதியை சிபிஐயும் கோரி வருகிறது. இது பற்றிய இறுதி முடிவு இடைத்தேர்தல் அறிவிப்புக்கு பின் எடுக்கப்படும்.‘ என தெரிவித்தன.
மக்களவையில் போட்டியிட்டு தோல்வி அடைந்த தன் மகள் மிசா பாரதியை பிஹார் மேலவை உறுப்பினராக்க லாலு பேரம் பேசி இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
முதல்வராக இருந்த நிதீஷ்குமார், மக்களவை தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளத்துக்கு ஏற்பட்ட படுதோல்விக்கு பிறகு தன் பதவியை ராஜினாமா செய்தார். புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜிதன்ராம் மாஞ்சி, பலத்தை நிரூபிக்க லாலு தம் கட்சியின் 21 எம்.எல்.ஏக்களின் ஆதரவை தர முன் வந்தார்.
இதன் பிறகு மாநிலங்கள
வைக்கு 2 உறுப்பினர்களை தேர்வு செய்ய நடந்த இடைத்தேர்தலில் நிதீஷ்குமாரின் வேட்பாளர்கள், லாலுவின் 18, காங்கிரஸின் 2 மற்றும் சிபிஐயின் ஒரு எம்.எல்.ஏ. ஆகியோரின் ஆதரவுடன் வெற்றி பெற்றனர். இதற்கு மதவாத சக்திகள் நுழைவதை தடுக்க ஆதரவளித்ததாக லாலு கூறி இருந்தார். தற்போது அதே காரணத்தை முன் வைத்து 11 தொகுதிக்கான இடைத்தேர்தலிலும் நிதீஷுடன் லாலுவும், காங்கிரஸும் இணைய உள்ளனர். இதன் வெற்றியை பொறுத்து அடுத்த வருடம் வரும் பிஹார் சட்டசபை தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் எனக் கருதப்படுகிறது.