Last Updated : 04 Sep, 2014 12:00 AM

 

Published : 04 Sep 2014 12:00 AM
Last Updated : 04 Sep 2014 12:00 AM

ஓஷோ சொன்ன கதை: ஏழையின் குடிசை

ஒரு ஏழை மரவெட்டி காட்டில் உள்ள சின்னஞ்சிறு குடிசை ஒன்றில் வாழ்ந்து வந்தான். அந்தக் குடிசை மிகமிகச் சிறியது. அவனும் அவன் மனைவியும் மட்டுமே அதில் தூங்க முடியும் அளவே வசதி கொண்டது. ஒரு மழை நாள் நள்ளிரவில் விறகு வெட்டியின் குடிசைக் கதவு ‘தடதட’வென்று தட்டப்பட்டது.

விறகு வெட்டி தன் மனைவியிடம், “யாரோ ஒருவன் வழிதவறி காட்டில் மாட்டிக்கொண்டு விட்டான். மழையில் எங்கும் போகவும் முடியாது. விலங்குகள் ஆபத்து வேறு இருக்கிறது. அதனால் கதவைத் திற” என்றான். அவன் மனைவியோ இந்தக் குடிசையில் இன்னொரு மனிதனுக்கு எப்படி இடம் கொடுக்கமுடியும் என்று கேட்டாள்.

விறகு வெட்டி சிரித்தான். “இது ராஜ அரண்மனை அல்ல. அங்கேதான் இடப் பற்றாக்குறை இருக்கும். இது ஒரு ஏழையின் குடிசை. இங்கே இரண்டு பேர் வசதியாகத் தூங்க முடியும். மூன்று பேர் வசதியாக அமர்ந்து இருக்க முடியும். கதவைத் திற” என்றான்.

கதவு திறக்கப்பட்டது. வந்த மனிதன் விறகு வெட்டிக்கும் அவன் மனைவிக்கும் நன்றி சொல்லி அமர்ந்தான். அவர்கள் சேர்ந்து அமர்ந்து கதைகளைச் சொல்லிப் பொழுதைப் போக்கிக்கொண்டிருந்தபோது கதவைத் தட்டும் சத்தம் மீண்டும் கேட்டது. கதவடியில் உட்கார்ந்திருந்த விருந்தினன், இன்னொருவருக்கு இடமில்லையே என்றான்.

விறகு வெட்டியோ, “இதைத்தான் நீங்கள் முன்பு வரும்போதும் என் மனைவி கூறினாள். அவளது சொல்லைக் கேட்டிருந்தால் நீங்கள் குடிசைக்குள் உட்கார்ந்து கொண்டிருக்க முடியாது. மூன்று பேர் சௌகரியமாக அமர்வதற்கு இடம் இருந்தால் நான்காம் நபருக்கும் கொஞ்சம் இடம் இருக்கத்தான் செய்யும்” என்று சொல்லி கதவைத் திறக்கச் சொன்னான்.

தற்போது அவர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக அமர்ந்திருந்தனர். ஒரு அங்குலம் அளவு கூட இடமில்லை. மீண்டும் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. ஆனால் அது ஒரு மனிதனுடையதைப் போல இல்லை. இப்போதும் விறகுவெட்டி கதவைத் திறப்பானோ என்று இரண்டு விருந்தினர்களுக்கும் அச்சம்.

விறகுவெட்டியோ, “கதவைத் திறங்கள். அது என்னுடைய கழுதைதான். இவ்வளவு பெரிய உலகில் அது ஒன்றுதான் எனது நண்பன். நான் தினசரி வெட்டிக்கொண்டு வரும் விறகுகளைச் சுமக்கும் உயிர் அது. வெளியே கடும் மழை பெய்கிறது. என் நண்பனை வரவேற்போம்” என்றான்.

விறகு வெட்டியின் மனைவி உட்பட எல்லாரும் கதவைத் திறப்பதை எதிர்த்தனர். “கழுதை உள்ளே வந்தால் அது எங்கே நிற்கும். உனது குடிசையில் இப்படி மாட்டிக்கொண்டிருப்பதை விட மழையிலேயே நின்றுகொண்டிருந்திருக்கலாம்” என்றனர்.

“இது ஒரு ஏழையின் குடிசை. அது எப்போதும் வசதியானதே. தற்போது நாம் எல்லாரும் உட்கார்ந்திருக்கிறோம். கழுதை வந்தால் நாம் எல்லாரும் நிற்போம். அவ்வளவுதான்” என்றான்.

கழுதையும் குடிசைக்குள் வந்தது. மழை நீர் அதன் ரோமம் முழுவதும் வடிந்துகொண்டிருக்க, விறகு வெட்டி அதைக் குடிசை நடுவில் கொண்டுவந்து நிறுத்தினான். எல்லாரும் அதைச் சுற்றி நின்றார்கள்.

“எனது கழுதை ஆத்மஞானியைப் போன்றது. நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங் கள். அது ஒருபோதும் தொந்தரவுக்குள்ளாகாது. அது நீங்கள் அமைதியாகப் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்கும்.” என்றான் விறகு வெட்டி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x