Published : 09 Jul 2014 12:00 AM
Last Updated : 09 Jul 2014 12:00 AM

இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?

இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இங்கிலாந்தின் நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

கடந்த 2011-ல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இந்திய அணி 0-4 என்ற கணக்கில் தோல்வி கண்டது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் சந்திக்கும் இந்திய அணி, இந்த முறை இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

2011-ல் மேற்கிந்தியத் தீவுகளை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியதே தோனி தலைமையிலான இந்திய அணி அந்நியமண்ணில் பெற்ற கடைசி டெஸ்ட் வெற்றியாகும். அதன்பிறகு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் 0-8 என்ற கணக்கில் தோல்வி கண்ட இந்திய அணி,கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து தொடரை இழந்தது.

55 ஆண்டுகளுக்குப் பிறகு

இந்த நிலையில் இப்போது இங்கிலாந்துடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளது இந்திய அணி. இங்கிலாந்து மண்ணில் 1959-ல் இவ்விரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடின. அதில் இந்திய அணி 0-5 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது. அதன்பிறகு 55 ஆண்டுகள் கழித்து இப்போது மீண்டும் இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது இந்தியா.

இளம் இந்திய அணி

2011-ல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணியில் வீரேந்திர சேவாக், சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், வி.வி.எஸ்.லட்சுமண் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். ஆனால் இந்த முறை இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய அணியில் கேப்டன் தோனி, கௌதம் கம்பீர், இஷாந்த் சர்மா ஆகிய 3 பேர் மட்டுமே கடந்த டெஸ்ட் தொடரில் விளையாடியவர்கள். மற்ற அனைவருமே முதல்முறையாக இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளனர்.

புஜாரா, கோலி பலம்

தற்போதைய இந்திய அணியின் பேட்டிங்கிற்கு வலு சேர்ப்பது சேதேஷ்வர் புஜாராவும், விராட் கோலியும்தான். மிடில் ஆர்டரில் இவர்களின் ஆட்டத்தைப் பொறுத்தே இந்தியாவின் ரன் குவிப்பு அமையும். இந்தியாவின் இன்னிங்ஸை ஷிகர் தவணும், கௌதம் கம்பீரும் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மிடில் ஆர்டரில் புஜாரா, கோலிக்கு அடுத்தபடியாக ரஹானே, ரோஹித் சர்மா, கேப்டன் தோனி ஆகியோர் இடம்பெறுவார்கள் என தெரிகிறது.

பந்துவீச்சைப் பொறுத்த வரையில் இஷாந்த் சர்மா, முகமது சமி, புவனேஸ்வர் குமார், ரவீந்திர ஜடேஜா என 4 பௌலர்களுடன் இந்திய அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தடுமாறும் இங்கிலாந்து

இங்கிலாந்து அணி தொடர் தோல்விகளால் தடுமாறி வருகிறது. கடந்த முறை இந்தியாவின் தோல்விக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்த கெவின் பீட்டர்சன், கிரீம் ஸ்வான் ஆகியோர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டனர். ஜொனாதன் டிராட் மன அழுத்தம் காரணமாக அணியில் இருந்து விலகியிருக்கிறார்.

கேப்டன் அலாஸ்டர் குக், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் மோசமான பார்ம் காரணமாக போராடி வருகின்றனர். இந்தியாவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்ட் தொடர்களில் (2011, 2012-13) 14 இன்னிங்ஸ்களில் விளையாடி 910 ரன்கள் குவித்த இங்கிலாந்து கேப்டன் குக், கடந்த 24 இன்னிங்ஸில் ஒன்றில்கூட சதமடிக்கவில்லை.

அலாஸ்டர் குக், சாம் ராப்சன், இயான் பெல், பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட், கேரி பேலன்ஸ், மட் பிரையர், மொயீன் அலி, லியான் பிளங்கெட், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அட்டவணை

ஜூலை 9-13 : முதல் டெஸ்ட் - டிரென்ட் பிரிட்ஜ்

ஜூலை 17-21 : 2-வது டெஸ்ட் - லார்ட்ஸ்

ஜூலை 27-31 : 3-வது டெஸ்ட் - தி ரோஸ் பௌல்

ஆகஸ்ட் 7-11 : 4-வது டெஸ்ட் - ஓல்ட் டிராபோர்டு

ஆகஸ்ட் 15-19 : 5-வது டெஸ்ட் - ஓவல்

1932 முதல் 2012 வரையிலான காலங்களில் இவ்விரு அணிகளும் 107 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இங்கிலாந்து 40 முறையும், இந்தியா 20 முறையும் வெற்றி கண்டுள்ளன. 47 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

போட்டி நேரம்: பிற்பகல் 3.30

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x