Published : 04 Apr 2015 09:47 AM
Last Updated : 04 Apr 2015 09:47 AM

எளிதாக பென்ஷன் பெற கூடுதல் வசதிகள்: புதிய வாழ்வுச் சான்று, விவரங்களை ஓய்வூதியர்கள் தாக்கல் செய்ய உத்தரவு

ஓய்வூதியர்கள் எளிதாக பென்ஷன் பெற கூடுதல் வசதிகள் செய்யப்பட உள்ளன. இதற்காக புகைப்படத்துடன் கூடிய வாழ்வுச் சான்றிதழ் மற்றும் கூடுதல் விவரங்களை ஓய்வூதியர்கள் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ‘பென்ஷன் பைலட் ஸ்கீம்’ என்ற திட்டத்தின் கீழ் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெற்றுவருகின்றனர்.

இவர்கள் ஓய்வூதியம் பெறுவதை எளிதாக்கும் வகையில் பல கூடுதல் வசதிகள் செய்யப்பட உள்ளன. அதற்காக, ஓய்வூதியம் பெறுவது மென்பொருள் மூலம் கண்காணிப்பு, தகவல் மையம் இணைப்பு, வாழ்வுச் சான்றிதழை டிஜிட்டல் முறையில் சமர்ப்பிப்பது, ஆதார் எண் இணைப்பு ஆகிய பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக கருவூலம் மற்றும் கணக்குகள் இயக்குநர், அரசுக்கு கடிதம் எழுதினார். ஓய்வூதியரின் புகைப்படம் மற்றும் கூடுதல் தகவல்கள் இடம்பெற, ஆண்டுதோறும் அளிக்கப்படும் வாழ்வுச் சான்றிதழில் புதிய மாற்றங்கள் செய்யப்படுவதை அங்கீகரிக்குமாறும் அரசுக்கு வேண்டுகோள் விடப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு புதிய அரசாணை பிறப்பித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

‘பென்ஷன் பைலட் ஸ்கீம்’ திட்டத்தில் வங்கிகள் மூலம் ஓய்வூதியம் பெறுவோர், புகைப்படத்துடன் கூடிய வாழ்வுச் சான்றிதழ், கூடுதல் தகவல்கள் மற்றும் தேவையான சான்றிதழ்களை அரசு அதிகாரியின் சான்றொப்பம் பெற்று, ஓய்வூதியம் வழங்கும் அதிகாரியிடம் ஜூன் மாதத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

பொதுத் துறை வங்கிகள் திட்டத்தில் ஓய்வூதியம் பெறுபவர்கள், வாழ்வுச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை, ஓய்வூதியம் வழங்கும் வங்கியில் நவம்பர் மாதம் வழங்கவேண்டும்.

இதுதொடர்பான தகவல்கள், புதிய விண்ணப்ப படிவம் ஆகிய வற்றை ஓய்வூதிய அலுவலகங்கள், வங்கிகளின் அறிவிப்பு பலகையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x