Published : 18 Apr 2015 17:28 pm

Updated : 18 Apr 2015 17:28 pm

 

Published : 18 Apr 2015 05:28 PM
Last Updated : 18 Apr 2015 05:28 PM

ஏப்ரலில் மைனஸ் 3 டிகிரியான வெப்பநிலை: 1815-ம் ஆண்டு சென்னையில் நிகழ்ந்த அதிசயம்

3-1815

சென்னையில் எப்போதும் 3 பருவநிலைகளே உள்ளன. வெப்பம், அதிவெப்பம், மெலும் வெப்பம் என்ற 3 நிலைகளையே நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் சென்னையில் கடும் கோடையான ஏப்ரல் மாதத்தில் பூஜ்ஜியத்துக்கும் கீழே வெப்ப நிலை சென்றது என்று நான் கூறினால் மக்கள் என்னை நம்புவார்களா?

இவ்வாறு கூறினால், இது ஒரு முட்டாள்கள் தின ஜோக் என்று தட்டிக் கழித்து விடுவார்கள் என்பதே உண்மை. ஆனால் சரியாக 200 ஆண்டுகளுக்கு முன்பாக சென்னையில், கோடை மாதமான ஏப்ரலில் வெப்ப நிலை பூஜ்ஜியத்துக்கும் கீழ் சென்றது. அதாவது 1815-ம் ஆண்டு ஏப்ரல் மாத கடைசி வாரத்தில் இந்த அதிசயம் நிகழ்ந்தது.

1815, ஏப்ரல் 24-ம் தேதி காலை வெப்ப நிலை 11 டிகிரி செல்சியஸாக இருந்தது. ஆனால் ஏப்ரல் 28-ம் தேதி மைனஸ் 3 டிகிரி செல்சியசாக வெப்ப நிலை குறைந்தது. பனிப்பொழிவு கூட இருந்ததாக சில ஆதாரமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது சற்று மிகைப்படுத்தலாகக் கூட இருக்க வாய்ப்பிருக்கிறது.

1815, ஏப்ரல் 28-ம் தேதி வெப்ப நிலை மைனஸ் 3 டிகிரிக்கு சென்றதற்கான காரணம், இந்தோனேசியாவில் தொலைதூரம் இருந்த மவுண்ட் தம்போரா என்ற எரிமலை வெடித்துச் சிதறியதே. அப்போது மவுண்ட் தம்போரா இந்தோனேசிய தீவுக்கூட்டத்தில் உயரமான சிகரம். 4300 மீ உயரம் கொண்டது இந்த மவுண்ட் தம்போரா.

1815, ஏப்ரல் 10, 11 ஆகிய தேதிகளில் எரிமலைக் குழம்பான லாவா வெடித்துக் கிளம்பியது. இந்த எரிமலை வெடித்த சப்தம் சுமார் 2,000 கிமீ தொலைவிலிருந்தவர்களுக்கும் கேட்டது என்று கூறப்படுகிறது. லாவா வழிந்து ஓடியதிலும், வெடிப்பின் தீவிரத்திலும் சுமார் 12,000 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவித்தன.

இன்று வரையிலும் மவுண்ட் தம்போரா எரிமலை வெடிப்புதான் எரிமலை வெடிப்பு வரலாற்றில் மிகப்பெரியதாக கருதப்பட்டு வருகிறது.

அதன் பிறகு Tambora: The Eruption That Changed The World, என்று கிலன் டி’ஆர்சி உட் என்பவர் எழுதிய கட்டுரை இதனை விளக்கும் போது, “தம்போரா வெடிப்பின் சாம்பல் புகை மண்டலத் திரை மேகத்துக்கும் மேல் மிகப்பெரியதாகக் காணப்பட்டது. காற்றுடன் மேற்கு நோக்கி அது நகரத் தொடங்கியது... தம்போராவின் சாம்பல் புகை வங்காள விரிகுடா பக்கம் சில நாட்களில் வந்து சேர்ந்தது” என்று விவரித்துள்ளார்.

2 வாரங்களுக்குப் பிறகு இதன் விளைவை சென்னைதான் முதலில் உணர்ந்தது. வெப்ப நிலை பூஜ்ஜியத்துக்கும் கீழ் இறங்கியது. எரிமலை சாம்பல் ராட்சத புகையில் உள்ள காற்றின் மூலக்கூறுகள் பூமியிலிருந்து வெப்பத்தை உறிஞ்சிக் கொண்டது. ஒவ்வொரு ஆண்டு டிசம்பர் மாதமும் குளிருக்காக குரங்கு தொப்பிகளையும், காதுகளை அடைக்கும் மப்ளரையும் அணிந்து கொள்ளும் நம் மக்கள் அப்போது என்ன செய்திருப்பார்கள்? ஆனால் காலனிய கிழக்கிந்திய கம்பெனியின் எந்த ஒரு ஆவணமும் இது பற்றி எதையும் பதிவு செய்யவில்லை. சுனாமி பற்றி குறிப்புகள் இல்லை.

தம்போராவின் சாம்பல் மேகம் உலகம் முழுதும் பரவி 1816-ம் ஆண்டை ‘கோடையில்லாத ஆண்டாக’ மாற்றியது. சென்னை உட்பட இந்தியாவின் பெரும்பகுதிகளில் பருவமழை இல்லை. பயிர் செய்தல் கடும் தோல்வி கண்டது. காலரா, பஞ்சம் இந்தியாவில் பரவியது. இப்போது அந்தப் பெரும்பஞ்சம் எரிமலை நடவடிக்கையின் காரணமாக ஏற்பட்டதாக தற்போது பண்டிதர்கள் கூறுகின்றனர். தம்போரா எரிமலை வெடிப்பு காரணமாக ஏற்பட்ட வானிலை மாற்றங்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உலகம் முழுதும் 70,000த்துக்கும் மேற்பட்டோர் அழிந்தனர்.

1815, ஆகஸ்ட் மாதம் தம்போரா எரிமலை வெடிப்புக்குப் பிறகு ஜாவாவிலிருந்து காதரீனா என்ற கப்பல் சென்னைக்கு வந்தது. அப்போது தி மெட்ராஸ் கூரியர் அதன் மாஸ்டரை பேட்டி கண்டனர். அவர் தம்போரா எரிமலை சாம்பலை ஒரு பையில் கொண்டு வந்தார். அது பிறகு கொல்கத்தாவுக்கு மேலும் ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை 1815 ஏப்ரலில் சென்னையில் மைனஸ் 3 டிகிரிக்கு வெப்ப நிலை குறைந்ததை தம்போரா எரிமலை வெடிப்புடன் தொடர்புபடுத்தவில்லை.

மூலம்: தி இந்து (ஆங்கிலம்)

தமிழில்: முத்துக்குமார்


மறைக்கப்பட்ட வரலாறுகள்தி இந்து ஆங்கிலம்சென்னை வெப்ப நிலை மைனஸ் 3 டிகிரிஇந்தோனேசியா தம்போரா எரிமலை...

You May Like

More From This Category

More From this Author