Published : 23 Apr 2015 12:50 pm

Updated : 23 Apr 2015 12:50 pm

 

Published : 23 Apr 2015 12:50 PM
Last Updated : 23 Apr 2015 12:50 PM

தெய்வத்தின் குரல்: பெற்ற தாயார் பெருமை

ரொம்ப வித்தியாசமாக ஒரு இடத்தில் பார்க்கிறோம். எந்த இடத்திலென்றால், தசோபநிஷத்துக்கள் என்று பிரசித்தமாக நம்முடைய வேதாந்த மதத்திற்கே அஸ்திவாரமாக இருக்கப்பட்ட பத்தில் (பத்து உபநிஷத்துக்களில்) முடிவாக வரும் ப்ருஹதாரண்யகத்தில் ‘வம்ச ப்ராஹ்மணம்' என்ற முடிவான பாகத்தில்தான்.

அதிலே அந்த உபநிஷத்தை ஆதியிலிருந்து வழி வழியாக உபதேசித்து ரக்ஷித்துக் கொடுத்திருக்கிற, அதாவது குருமார்களான அத்தனை ரிஷிகளுக்கும் பேர் சொல்லி அவர்கள் இன்னின்ன வம்சம் என்று லிஸ்ட் கொடுத்திருக்கிறது, வேறே உபதேசம் இல்லை, வம்சாவளி மட்டும்தான். ஒவ்வொரு குரு பேரையும் சொல்லி, அவர் இன்னார் புத்திரன் என்று சொல்லியிருக்கிறது.

ஒருத்தர் அம்மா, அப்பா இரண்டு பேருக்கும் புத்திரராயிருந்தாலும், லோகம் பூராவிலுமே வழக்கத்தில் அப்பாதான் Head of the familyயாகக் கருதப்படுவதற்கேற்ப, ‘இன்ன அப்பாவுடைய புத்திரர்' என்றுதான் சொல்வதாக இருக்கிறது. பத்திரமோ, அப்ளிகேஷன் ஃபாரமோ எதுவானாலும் இன்றைக்கும் father's nameதான் கேட்கிறார்கள்.

இனிஷியலும் அப்படித்தான் போட்டுக்கொள்வதாக இருக்கிறது. இந்த விஷயத்தில் இப்போதும் ஸ்த்ரீ சமத்துவப் போராட்டக்காரர்கள்கூடப் போராட்டம், agitation ஆரம்பித்ததாகத் தெரியவில்லை. ஒருவேளை இப்போது நானேதான் இதைச் சொல்லி அது வேறு ஒன்று கிளறிக் கொடுக்கிறேனோ, என்னவோ?

வேதம், உபநிஷத் ஆகியவற்றில் வரும் ரிஷிகளின் பிதாக்கள் பிதாவாக மட்டுமில்லாமல் குருவாகவும் இருந்திருப்பதால் அவர்களை வைத்தே புத்திரரைச் சொல்வது வழக்கம். நாமுங்கூட அபிவாதனத்தில் நம்முடைய கோத்ர பிரவர்த்தகர்களான (கோத்திரத்தைத் தொடங்கியவர்களான) ரிஷிகளின், புருஷ ஜாதியே ஆனவர்களின், பெயர்களைத்தானே அப்பா, பிள்ளை வரிசையில் சொல்கிறோம். ஏதோ ஒப்பிக்கிறோம். இது நம்முடைய கோத்திரத்தின் பூர்வ ரிஷிகளின் பெயர்களா என்று இப்போதுதான் தெரிந்துகொண்டவர்களும் இருக்கலாம்.

லோகம் பூரா பரவியுள்ள இந்த வழக்குக்கு வித்தியாசமாக, நான் சொன்ன அந்த இடத்தில் (ப்ருஹதாரண்யக உபநிஷத்தின் முடிவுப் பகுதியில்) லிஸ்ட் ஆரம்பத்திலிருந்து ரொம்ப தூரம்வரை ஒவ்வொரு ரிஷியின் பேரையும் அவர் 'இந்த அம்மாவின் புத்திரர், அந்த அம்மாவின் புத்திரர்' என்பதாகத் தாயார்மார்களின் பெயர்களை வைத்தே கொடுத்திருக்கிறது.

'இதென்ன, இப்படிப் பண்ணியிருக்கிறதே' என்பதற்குப் பதில் ஆசார்யாளின் பாஷ்யத்திலிருந்து தெரிகிறது. என்ன சொல்கிறாரென்றால், “புத்திரன் குணவானாக இருப்பதற்கு ஸ்த்ரீயே, அதாவது அவனுடைய தாயாரே, பிரதானமான காரணம் என்பது வெகுவாகப் புகழ்ந்து சொல்லப்படும் விஷயம். ஸ்த்ரீ ஜாதிக்குள்ள அந்த விசேஷத்தினாலேயே புத்திரன் விசேஷம் பெறுவதால்தான் இங்கே ஆசார்ய பரம்பரை இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது” என்கிறார்.

'நல்வழிப்படுத்துவது' என்பதுதானே குருவின் முக்கியமான காரியம். அதனால் அம்மாவுக்கும் அப்பா மாதிரியே குரு ஸ்தானம் உண்டு. இதையும் ஆசார்யாள் எடுத்துக்காட்டிச் சொல்லியிருப்பதுண்டு. சித்தே முந்திதானே பார்த்தோம், பிள்ளை குணவானாக இருப்பதில் அம்மாவுக்கே ப்ராதான்யம் (பிரதானமான ஸ்தானம்) என்று அவர் சொன்னதை.

குணவதியான மாதாவின் கர்ப்பத்தில் ரூபமாகி, அவளிடமிருந்து ஆகாரம், பானம் பண்ணிக் குழந்தை வளர்வதாலேயே முக்கியமாக ஒரு பிரஜைக்கு குண சம்பத்து ஏற்படுகிறது. இது அவளுக்கே தெரியாமல் அவள் புத்திரனை நல்வழிப்படுத்துவது. அப்புறம் சின்ன வயசில் அதற்குக் கதை, புராணம் சொல்லி, ஸ்தோத்ரங்கள், நீதிப் பாடல்கள் சொல்லிக் கொடுத்து நல்வழிப்படுத்துகிறாள்.

‘இப்படிப் பண்ணப்பா, அப்படிப் பண்ணாதேப்பா!' என்று அநேகம் சொல்லிக் கொடுக்கிறாள். அவளுடைய நல்ல நடத்தையைப் பார்த்துப் பார்த்தே, அதன் சூட்சுமமான சக்தியாலேயேகூட, பாலப்பிராயத்தில் ஒருத்தன் நல்லவற்றைத் தெரிந்துகொண்டு அந்தப்படி செய்கிறான். ‘தாயைப் போலப் பிள்ளை' என்று வசனமே இருக்கிறது.

இதையெல்லாம் ஆசார்யாள் கவனித்து, ரொம்பவும் ‘சிம்பதெடிக்'காகவும் கெளரவம் கொடுத்தும் கவனித்துத்தான், கடோபநிஷத்திலே ஒரு இடத்தில் ப்ருஹதாரண்யகத்தையும் Quote பண்ணிக் காட்டி, வேதம் வகுத்துக் கொடுக்கிற விதிமுறையின்படி குருவைப் போலவே அம்மா, அப்பாவுக்கும் - ‘அம்மாவுக்கும்' என்பதைக் கவனிக்க வேண்டும் - மாதா, பிதா, குரு என்று மூன்று பேருக்குமே, 'பிரமாண காரணம்' என்ற பெருமை, உரிமை இருப்பதாகக் காட்டியிருக்கிறார். ‘பிரமாண காரணம்' என்பதற்கு ‘அதிகாரபூர்வமான குரு ஸ்தானம்' என்று இங்கே அர்த்தம். அதாவது, தாயாருக்கும் குருஸ்தானம் உண்டு.

தாயார்களின் பெயரைச் சொல்லி ப்ருஹதாரண்யகத்தில் ஏராளமான ரிஷிகளைத் தெரிவித்திருக்கிறதென்றால், சாந்தோக்கியத்திலும் இரண்டு பேரை அந்த மாதிரியே சொல்லியிருக்கிறது.

தெய்வத்தின் குரல்சாஸ்திரம்பெரியவாதொடர்

You May Like

More From This Category

More From this Author