Published : 06 Feb 2015 08:32 am

Updated : 06 Feb 2015 10:58 am

 

Published : 06 Feb 2015 08:32 AM
Last Updated : 06 Feb 2015 10:58 AM

ஐ.எஸ். அமைப்பின் ரகசிய உலகம்

உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் பயங்கரவாத அமைப்பின் இயங்குமுறைகள்

ஐ.எஸ். பயிற்சி முகாமில் தனது முதல் நாளிலேயே கடுமையான பயிற்சிக்கு உள்ளானார் ஹமீத் கன்னாம். ஆகஸ்ட் 13-ம் தேதி அதிகாலை தன்னுடைய உடுப்புகளை மட்டும் சிறிய பையில் எடுத்துக்கொண்டு, தான் வசித்த கிராமத்தின் பெரிய வீதிக்கு வந்தார் கன்னாம். ஐ.எஸ். அமைப்பில் சேரும் எல்லா இளைஞர்களையும்போல அவரும் வீட்டில் சொல்லாமல் வந்துவிட்டார்.


தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரர்கள் 3 பேர் வந்ததும் எல்லோருமாய் சிரியாவின் கிழக்கில் டெய்ர் எஸார் என்ற பகுதியில் உள்ள மாயாதீன் பாலைவனப் பகுதிக்கு வெள்ளை மினி வேனில் சென்றனர். அங்கு ஒமர் எண்ணெய் வயல் பகுதியிலிருந்த முகாமுக்குச் சென்றனர். கன்னாமின் தூரத்து உறவினர் ஆள் எடுக்கும் பொறுப்பில் இருந்தார். அவர்களுடைய கிராமத்தி லிருந்து மட்டும் 8 பேர் சேர்ந்திருந்தார்கள். கன்னாமுக்கு முதல் நாளே பாதுகாப்புப் பணி தரப்பட்டது. அனைவரும் தங்குமிடத்துக்குச் சென்றனர். அங்கே மேலும் சில வாரங்கள் பயிற்சி பெற்றாக வேண்டும். வேலைக்கு எடுத்தவர் அவர்களிடம் சில நிமிஷங்கள் பேசினார். போகும்போது, “நம் கிராமத்தின் பெயரைக் காப்பாற்றுங்கள்” என்று கூறினார். அவர்களை வரவேற்ற மற்றொருவர், “ஷரியா பாடங்களுக்குத் தயாராகுங்கள்” என்று கட்டளையிட்டார்.

பொறுமை தேவை

“ஐ.எஸ்ஸில் சேர்வது அவ்வளவு சுலபமில்லை. பொறுமையாக இருக்க வேண்டும். முதலில் நீங்கள் எப்படிப்பட்டவர் என்று சோதிப்பார்கள். சிறிது நேரம் பேசிக்கொண்டிருப்பார்கள். மதத்தைப் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும் என்று ஆழம் பார்ப்பார்கள். பிறகு விவாதிப்பார்கள். நுஸாய்ரி (ஆலவைட்டுகள்) பற்றி, சுதந்திர சிரியா ராணுவம்பற்றி, தவறாக வழிகாட்டப்பட்ட குழுக்கள் பற்றியெல்லாம் பேசுவார்கள். பேசிப் பேசிக் களைப்பே வந்துவிடும்” என்கிறார் கன்னாம்.

ஐ.எஸ். பயிற்சி முகாம்கள் இராக், சிரியா எல்லைக்குள் இருப்பதால், அங்கே என்ன போதிக்கப்படுகிறது, என்னென்ன பயிற்சிகள் வழங்கப்படுகின்றன என்று வெளியுலகுக்குத் தெரியாது. மதரீதியாக அவர்களை எப்படித் தயார் செய்கிறார்கள் என்று யாராலும் அறிய முடியாது. அல்-காய்தாவைப் போலவும் சவூதியில் உள்ள சலாஃபிஸ்ட்டுகளைப் போலவும் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைத்தான் கற்றுத்தருகிறார்கள்.

யாரெல்லாம் இலக்கு?

முகாமில் சேர்பவர்கள் அறியும் புதிய சிந்தனைகள், கதைகள், உண்மைச் சம்பவங்கள் என்ன? ஐ.எஸ். அமைப்புக்குப் புதியவர்களை இழுப்பது எது? ஐ.எஸ்ஸில் சேர்ந்தவர்கள் அதிலேயே நீடிக்கக் காரணம் என்ன என்பவற்றை அறிய, நானும் அமெரிக்க ஆய்வாளர் மைக்கேல் வெய்ஸும் அந்த அமைப்பில் வெவ்வேறு நிலைகளில் பணிபுரியும் 6 முக்கியமான நபர்களை அணுகித் தகவல்களைச் சேகரித்தோம். மதம்தான் அவர்களை ஈர்த்திருக்கிறது. ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு, முஸ்லிம்களில் இரு பிரிவினர் மீது கவனம் செலுத்துகிறது. இஸ்லாமிய மதத்தில் பிறந்திருந்தாலும் முறையாக நோன்பு, தொழுகை போன்றவற்றை மேற்கொள்ளாதவர்கள், இஸ்லாமிய நாடுகளில் ஆட்சியில் இருப்பவர்களை அகற்ற விழைபவர்கள் என்று அந்த இரு பிரிவினர்தான் அதன் கவனத்துக்கு உரியவர்கள்.

ஷரியா பயிற்சியானது பொதுவானது அல்ல. உறுப்பினர்களின் மத அறிவு, உணர்வு, ஆர்வம் ஆகிய வற்றைப் பொருத்தது. பயிற்சிக் காலமும் 2 வாரங்கள், ஒரு மாதம், 45 நாள்கள், 6 மாதங்கள் என்று வேறுபட்டு அதிகபட்சம் ஓராண்டுகூட நீடிக்கிறது. மதம் சார்ந்த பயிற்சி, ராணுவப் பயிற்சி, அரசியல் பயிற்சி என்று 3 பிரிவுகளில் பயிற்சி தரப்படுகிறது.

5 பயிற்றுநர்கள் இருக்கிறார்கள். பயிற்சிக் காலத்தில் காவல் சாவடிகளுக்குப் பயிற்சியாளர்கள் அனுப்பப் படுகிறார்கள், களத்துக்குக் கடைசியாகத்தான் அனுப்பப் படுகிறார்கள். பயிற்சி முடிந்தாலும் மூத்தவர்களின் கண்காணிப்பில்தான் இருக்க வேண்டும். தவறு செய்தால் முகாமிலிருந்து வெளியேற்றப்படுவது உள்ளிட்ட தண்டனைகள் உண்டு. கட்டளைகளைச் செயல்படுத்த மறுத்தால் கசையடியும் கிடைக்கும். ஐ.எஸ்ஸின் நடவடிக்கைகள் கொடூரம் என்று பேசினாலோ எதிர்த்தாலோ அவர்களை ‘மார்க்க நம்பிக்கையை’ மேலும் வளர்த்துக்கொள்ள முகாமுக்குத் திருப்பி அனுப்பிவிடுவார்கள்.

அரபிதான் ஆட்சி மொழி

முகாமில் அரபி கற்றுத்தரப்படுகிறது. அனைவரும் தூய அரபியில் பேச வேண்டும். மதம் தொடர்பாக ஏற்கெனவே பெற்ற கல்வி எப்படிப்பட்டதாக இருந்தாலும், இங்கு கற்றுத்தரப்படுவதை ஏற்றாக வேண்டும். மதக் கல்வியைக் கற்றுத்தருகிறவர்கள் ‘ஷர்’ என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் மதக் கல்விக் கூடங்களில் பயின்றவர்கள். மதக் கல்வியைக் கற்றுத் தருவதில் நீண்ட அனுபவம் உள்ளவர்கள். ஐ.எஸ்ஸின் கட்டுப்பாட்டுக்குள் வரும் ஒவ்வொரு ஊரிலும் சுமார் 20 மசூதிகள் இருக்கின்றன. அங்கு தொழுகை நடத்தத் தகுதி படைத்த இமாம்கள் இல்லை. எனவே, பல இளைஞர்களுக்கு இமாம் பயிற்சியும் வழங்கப்படுகிறது. கிழக்கு சிரியாவிலும் மேற்கு இராக்கிலும் இளைஞர்கள் பலர் இமாம்களாகப் பணிபுரிகிறார்கள். ஐ.எஸ். வருவதற்கு முன்னால் சூஃபிகளின் கட்டுப்பாட்டில் மசூதிகள் இருந்தன. நக்ஷபந்தி அல்லது கஸ்னவிகளின் கிளைகளாக இவை இருந்தன. புதிய இமாம்கள் 3 அம்சங்களை வலியுறுத்துகிறார்கள். ஏக இறைக் கொள்கை, மத விஷயங்களில் பிறழ்ச்சி கூடாது, இஸ்லாத்தைத் தவிர வேறெதையும் விசுவாசிக்கக் கூடாது என்பதே அந்த 3 அம்சங்கள்.

முஸ்லிம்கள் விலக்கி வைப்பா?

“முஸ்லிம்களையே விலக்கி வைக்கிறது அல்-தௌலா என்று சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். (அல்-தௌலா என்பது ஐ.எஸ்.ஐ.எஸ். அரசுக்கு முஸ்லிம்களிடையே வழங்கப்படும் பெயர்) நாங்கள் அப்படிச் செய்வதில்லை. எங்களுடைய இறைச் செய்தியை மறுப்பவர்களை நாங்கள் சகித்துக்கொள்வதில்லை என்பது உண்மையே. இல்லாவிட்டால், நாங்கள் ஏன் சுதந்திர சிரியா ராணுவத் துக்கு எதிராகப் போராடுகிறோம்?” என்கிறார் அபு மூசா.

ஷரியாவில் இல்லாத எதையும் புதிய உறுப்பினர் களுக்கு ஐ.எஸ். போதிப்பதில்லை. ஆனால், அமைப்பின் மூத்த உறுப்பினர்களுக்கு அபு பக்கர் நஜி எழுதியுள்ள புத்தகம், பொதுவான வழிகாட்டுக் குறிப்புகள் படிக்கக் கொடுக்கப்படுகின்றன. அடிமைகளை எப்படி நடத்த வேண்டும் என்று அதில் விளக்கப்பட்டிருக்கிறது. “ஜிகாத் என்பது கருணை காட்டுவது அல்ல, எதிரிகளுக்குக் கிலியை ஏற்படுத்தும் வகையில் முழு பலத்தையும் பிரயோகித்து அவர்களை வன்மையாகத் தாக்குவதுதான்” என்று நஜி எழுதியிருக்கிறார்.

கண்டுபிடிப்புகள்

இப்போது பெரும்பாலான நாடுகளில் கடைப்பிடிக்கப் படும் இஸ்லாமிய நெறிகள், கடந்த சில பத்தாண்டுகளில் ‘கண்டுபிடிக்கப்பட்டவை’ என்கிறார்கள் ஐ.எஸ். நிர்வாகிகள். தன்பாலுறவாளர்கள் என்று அடையாளம் கண்ட பலரை, உயரமான மாடிக் கட்டடத்தின் உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட்டுக் கொல்கிறார்கள். இஸ்லாமியச் சட்டப்படி தண்டனை வழங்கும் நாடுகளில்கூட இப்படிக் கொல்லப்படுவதில்லை. கல்லால் அடித்துக் கொல்வது, சிலுவை மரத்தில் அறைந்து கொல்வது அனைவரும் அறிந்தவை. ‘இது வழக்கத்தில் இல்லையே?’ என்று ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இருப்போர் யாரும் கேட்பதில்லை. இது மிகவும் புராதனமான தண்டனை முறை என்று சொல்லி அதை ஏற்றுக்கொள்கிறார்கள்.

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் ஒருவர் சேர்ந்த உடனேயே புதிய போதனைகள் தொடங்கப்படுவதில்லை. முதலில் சேர்த்துக்கொள்வதற்கு முன்னர் அடிக்கடி சந்தித்துப் பேசுகிறார்கள். அவர்கள் உறுப்பினர்களாகச் சேர்ந்த பிறகும்கூட வாரக் கணக்கில் அல்லது மாதக் கணக்கில் உபதேசங்கள் தொடர்கின்றன. எனவே, அமைப்பில் சேரும்போதே அவர்கள் சித்தாந்தரீதியாக மனதளவில் தயாராகிவிடுகிறார்கள். அதன் பிறகு, அவர்கள் இதுவரை அறிந்திராத பழைய விஷயங்கள் பல அவர்களுக்கு எடுத்துக் கூறப்படுகின்றன. அவற்றிலிருந்தே அவர்கள் விளக்கம் பெறுகிறார்கள்!

- © ‘தி கார்டியன்’, தமிழில்: சாரி.

ஐஎஸ் தீவிரவாத அமைப்புஐஎஸ்ஐஎஸ்ரகசிய உலகம்ரகசிய அமைப்புபயங்கரவாத அமைப்புஹஸன் ஹஸன்தீவிராவ பயிற்சி முகாம்அல் தௌலாசிரியா ராணுவம்

You May Like

More From This Category

More From this Author