Published : 19 Feb 2015 15:31 pm

Updated : 19 Feb 2015 15:31 pm

 

Published : 19 Feb 2015 03:31 PM
Last Updated : 19 Feb 2015 03:31 PM

யுத்தம் செய் | வைதேகி காத்திருக்கிறாள்!

யார் இந்த வைதேகி?

எதற்காக காத்திருக்கிறாள்?

இந்தக் கேள்விகளுக்கு பதில் தெரிந்துகொள்ள இந்த பதிவைப் படிக்க ஒரு சில நிமிடங்களை செலவழியுங்கள்.

ஏனெனில், உங்கள் நட்போ அல்லது உறவோ இல்லை யாரோ தூரத்து சொந்தமோ அவர்களுக்கு வைதேகியைப் பற்றி நீங்கள் சொல்வதால் நன்மை ஏற்படும்.

வைதேகியைப் பற்றிய சிறு குறிப்பு. அழகான தோற்றம், மென்பொருள் நிறுவனத்தில் வேலை, சரிசமமாக நடத்தும் கணவர், வாழ்க்கைக்கு வசந்தம் சேர்க்க மகள், சுதந்திரத்தைத் தட்டிப் பறிக்காத புகுந்த வீடு. இதுதான் வைதேகியின் வாழ்க்கை. இதைவிட என்ன வேண்டும் ஒரு பெண்ணுக்கு என நீங்கள் கேட்பது புரிகிறது. அப்படித்தான் வைதேகியும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தார். 2014-ம் ஆண்டு வரை.

எப்போதும் சுறுசுறுப்பாக, பரபரப்பாக வீடு, வேலை, குடும்பம், குழந்தை என இருந்த வைதேகிக்கு திடீரென வலது புற கழுத்தில் ஒரு கட்டி ஏற்படுகிறது. அடுத்தடுத்த நாட்களில் வலி அதிகமாகிறது. காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் செல்ல சில மருந்துகளை தருகிறார். தற்காலிக நிவாரணம். உடனே, தனது குடும்ப மருத்துவரிடம் ஆலோசனை செய்கிறார். அவர் இதை அசட்டை செய்ய வேண்டாம் என எஃப்.என்.ஏ.சி. என்ற மிக முக்கியமான பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார்.

மருத்துவ பரிசோதனை முடிவு, வைதேகியின் கணவரிடம் தெரிவிக்கப்படுகிறது. கண்ணீர் கண்களை மறைக்க, மனைவியையும் மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறார். மருத்துவர் முதலில் ஒரு மணி நேரம் இருவருக்கும் கவுன்சிலிங் தருகிறார். வைதேகியின் நிலவரம் அறிந்து மொத்தக் குடும்பமும் நிலை குலைந்து போகிறது.

தனிமையில் சிந்திக்க ஆரம்பிக்கிறாள் வைதேகி... "நான் வெஜிடேரியன். ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கம் கொண்டவள். சோம்பேறி இல்லை. வீட்டு வேலை, அலுவலக வேலை என எப்போதும் பரபரப்பாக இருப்பவள். வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக பேணுபவள். உடற்பயிற்சிகள் செய்யத் தவறியதில்லை. அப்புறம் எப்படி எனக்கு..?" வைதேகியின் யோசனை நீள்கிறது. அவருக்கு ஒரு தெளிவு பிறக்கிறது.

இது போன்ற நோய் ஏற்பட இதுமட்டும்தான் காரணம் என குறிப்பிட்டு வரையறுக்க முடியாது. காரணம் எது வேண்டுமானாலும் இருக்கலாம். வாழ்க்கைமுறை இல்லாமல், பரம்பரை தாக்கம் இல்லாமல், வேறு ஏதோ ஒன்றுகூட காரணமாக இருக்கும் என புரிந்து கொள்கிறார்.

அந்த தெளிவு பிறந்தவுடன் தொடங்குகிறது ஒரு யுத்தம். அது 'lymphoma' என்ற வகையான புற்றுநோயுடனான யுத்தம். இரண்டாவது கட்டத்தை நோய் எட்டியிருந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். புற்றுநோய் என்பதே வேதனை என்றால் அதற்கான சிகிச்சையும் வேதனையளிப்பதாகவே இருக்கிறது. கீமோதெரபி, ஸ்டெராய்டு, நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் ஊசிகள். பக்க விளைவுகளும் வந்தன. அழகான, அடர்த்தியான கூந்தல் அனைத்தையும் கொத்து கொத்தாக வைதேகி இழந்து கொண்டிருந்தபோது, வைதேகியின் கணவர் தலையை முழுவதும் மொட்டை அடித்துக் கொண்டு வந்து நிற்கிறார். இறைவா இந்த அன்பைவிட எனக்கு வேறு என்ன வேண்டும் என்ற வைதேகி சிலாகிக்கிறாள்.

சிகிச்சைக்கு ஒத்துழைப்பதைத் தவிர வேறு வழியில்லை. பொறுமையாக காத்திருக்கிறாள் வைதேகி. வைதேகியை முன்பு பார்த்தவர்கள் அவளை அடையாளம் காண முடியாத அளவு உருக்குலைந்து கொண்டிருந்தது. கண்ணாடி பார்ப்பதை தவிர்த்தாள் வைதேகி. 4 சுற்று சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் பரிசோதனை செய்யப்படுகிறது. வைதேகி உடலில் புற்றுநோய் அறிகுறிகள் முற்றிலும் அழிந்திருந்தன. இருப்பினும் அணு அளவேனும்கூட இருந்துவிடக் கூடாது என்பதால் இன்னும் சில காலத்துக்கு மருந்து, மாத்திரை உட்கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்கள் அறிவுரை.

முழுமையாக ஓராண்டு கடந்துவிட்டது. இப்போது வைதேகி இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார். அவரது வருகைக்காகவே காத்திருந்த அவரது நிறுவனம் அவரை மீண்டும் பணியமர்த்திக் கொண்டது. ஸ்டெராய்டு தாக்கம் உடலில் இருந்து மெல்ல, மெல்ல குறைந்து வருகிறது. தலையில் முடி லேசாக எட்டிப்பார்க்க துவங்கியிருக்கிறது. வைதேகி காலையில் எழுந்து குழந்தையை பள்ளிக்குத் தயார் செய்து. உணவு சமைத்து. மின்சார ரயில் பிடித்து, பின்னர் ஒரு ஷேர் ஆட்டோ ஏறி அலுவலகம் செல்கிறார். வைதேகி யுத்தத்தில் வெற்றி பெற்றுவிட்டார் என்று உங்கள் மனசு சொல்வது கேட்கிறது.

இந்த வைதேகியை நீங்கள் எப்படி இந்த எழுத்தின் மூலம் தெரிந்து கொண்டீர்களோ... அதேபோல்தான் நானும் எழுத்து மூலம் தெரிந்து கொண்டேன். ஆம், வைதேகியே அவரது வலைப்பதிவு பக்கத்தில் பதிந்திருந்த பதிவில் இருந்து அறிந்து கொண்டேன்.

இன்றைய காலகட்டத்தில் அன்றாடம் யாருக்காவது புற்றுநோய் வருகிறது. சிலர் போராடுகிறார்கள் பலர் தோற்றுப்போகிறார்கள் என்றுதானே சொல்கிறீர்கள். உண்மைதான். ஆனால், வைதேகி தனது வெற்றியோடு நின்றுவிடவில்லை. வைதேகி காத்திருக்கிறாள். தன்னைப் போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனதிடத்தை வளர்த்துக் கொள்வதற்கான ஆலோசனை வழங்க, சிகிச்சை பெறும் வழிமுறைகள் கூற, சிகிச்சை பின்விளைவுகளை ஏற்றுக் கொள்வது எப்படி என தெரிவிக்க காத்திருக்கிறாள். தன் வலைப்பதிவின் கீழ் அவர் பதிந்திருக்கும் நிலைத்தகவல் இதுவே...

"புற்றுநோய் எனக்கு நிறைய பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறது. நண்பர்கள் யார் என அடையாளம் காட்டியிருக்கிறது. உறவுகளின் நம்பகத்தன்மையை உணர வைத்திருக்கிறது. இவற்றைவிட முக்கியமானது மனக்குழப்பத்தை தவிர்க்க வேண்டும் என்பது. இருப்பது ஒரு லைஃப். அதை அமைதியாக வாழ்வோமே. நீங்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு சிற்சில ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம். நான் வாழத் தொடங்கியிருக்கிறேன். வாழ்ந்து காட்டுவேன்."

இப்போது புரிகிறதா வைதேகி ஏன் காத்திருக்கிறாள் என்று.

வைதேகியின் பதிவில் இருந்து சில பாடங்கள்:

1. புற்றுநோய் பேதம் பார்ப்பதில்லை. ஏழை, பணக்கார, சாதி, மதம், வயது வித்தியாசம் இதற்குக் கிடையாது.

2. நான் ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் கொண்ட நபர். எனக்கு புற்றுநோய் வர வாய்ப்பே என்ற எண்ணம் தவறானது.

3. அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்வது நல்லது.

4. மருத்துவப் பரிசோதனைகளுக்கு செலவு செய்வது தேவையற்றது என்ற எண்ணம் கூடாது.

5. சரி, நோய் வந்தேவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். முடங்கிப் போகாதீர்கள்.

6. இருப்பது ஒரு வாழ்க்கை அதை மகிழ்ச்சியாக அனுபவிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு இவை தவிர்த்தும் வேறேனும் தோன்றியிருக்கலாம். படித்த கையோடு பகிர்ந்துவிடுங்கள்.

வைதேகியின் வலைப்பதிவை வாசிக்க>My fight against the dreadful disease - CANCER

புற்றுநோய்புற்றுநோய் பாதிப்புவிழிப்புணர்வுதன்னம்பிக்கைவைதேகிCancerFight against Cancer

You May Like

More From This Category

More From this Author