Last Updated : 13 Feb, 2015 02:07 PM

 

Published : 13 Feb 2015 02:07 PM
Last Updated : 13 Feb 2015 02:07 PM

ரயில் விபத்தில் சிக்கிய பயணிகளின் நிலை: நேரில் கண்ட இளம்பெண் அதிர்ச்சித் தகவல்

விபத்துக்குள்ளான பெங்களூரு - எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த ரோஷினி ஹரிஹரன்(27) தனது அனுபவங்களை அதிர்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

'தி இந்து'(ஆங்கிலம்) நாளிதழில் பணியாற்றிய ரோஷினி ஹரிஹரன் கோயம்புத்துரை சேர்ந்தவர். தற்போது பெங்களூருவில் வசித்து வரும் இவர் நேற்று விபத்துக் குள்ளான ரயிலில் கோயம்புத் தூருக்கு சென்றுக் கொண்டிருந்தார்.

பெங்களூரில் இருந்து கோயம்புத்தூர் வழியாக எர்ணாகுளம் வரையில் செல்கின்ற இன்டர்சிட்டி விரைவு ரயில் ஓசூரில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆனைக்கல் என்ற இடத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் பலியாகினர், 60 பேர் காயமடைந்தனர்.

இனிமையாகவே இருந்துள்ளது அந்த காலை நேரம், விபத்து நடக்கும் அத்தருணம்வரை. கோயமுத்தூருக்கு பயணித்துக் கொண்டிருந்திருக்கிறார் ரோஷினி ஹரிஹரன்(27). சிறிய தூக்கம், இனிமையான இசை என சென்று கொண்டிருந்திருக்கிறது அந்தப் பயணம்.

அப்போதுதான், நொடிப்பொழுதில் அந்த விபத்து நடந்துள்ளது. பெரிய சப்தம். நிலைமையை உணரும் முன்னரே எல்லாம் முடிந்திருந்தன. ரோஷினி கண் திறந்தபோது அவர் இருந்த டி9 பெட்டி முழுவதும் புகை மண்டலம். புகைப்படலம் விலகியபோது ஆங்காங்கே சடலங்கள் தொங்கிக் கொண்டிருந்ததைதான் ரோஷினி பார்த்திருக்கிறார்.

ரோஷினி கூறும்போது, "மக்கள் ஆங்காங்கே தொங்கிக் கொண்டிருந்தனர். ஒரு சிறுவன் தலை நசுங்கி இறந்து கிடந்தான. ஒரு பெண் தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்தார்" என்றார்.

விபத்து காலை 7.35 மணியளவில் நடந்திருக்கிறது. ஆனால், காலை 9 மணி வரை சம்பவ இடத்துக்கு போலீஸ் அதிகாரிகளோ, மீட்புக் குழுவினரோ வரவில்லை. ஒன்றரை மணி நேரமாக சக பயணிகள் சிலர் உதவியாலும், அப்பகுதி மக்கள் உதவியாலுமே பயணிகள் சிலர் மீட்கப்பட்டனர் என ரோஷினி கூறியிருக்கிறார்.

தானும் உள்ளே சிக்கிக் கொண்டிட்ருந்தாலும், ரோஷினி சக பயணிகளை தேற்றியிருக்கிறார். புகை மண்டலத்தைப் பார்த்து பெட்டியில் சிக்கியிருந்த பயணிகள் தீ பிடித்திருப்பதாக அலறியபோது, "தீ பிடிக்கவில்லை, ரயில் தடம் புரண்டதால் ஏற்பட்டுள்ள புகைப்படலமே" என ரோஷினி ஆறுதல் கூறியுள்ளார்.

"பெங்களூரு - எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தவர்களுக்கு இது ஒரு கருப்பு வெள்ளி. நான் உட்பட பலர் காயங்களின்றி தப்பியது ஒரு அற்புதம். நான் இன்று சாவின் விளிம்பிற்கே சென்று திரும்பியுள்ளேன்" என ரோஷினி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x