Published : 09 Feb 2015 10:12 AM
Last Updated : 09 Feb 2015 10:12 AM

பள்ளி செல்லா குழந்தைகளுக்கு கல்வி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் விரிவான ஏற்பாடுகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி செல்லாத குழந்தைகளைக் கண்ட றிந்து சிறப்பு கல்வி அளிக்க விரிவாக திட்டமிட்டுள்ளதாக அனைவருக்கும் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது. கல்வியின் அவசியத்தை விளக்கி 90 இடங்களில் விழிப்புணர்வு வீதி நாடகங் களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் 13 ஒன்றியங்களில் உள்ள கிராமப் பகுதிகளில் 2,586 பள்ளி செல்லாத குழந்தைகள் கடந்த கல்வியாண்டில் கண்டறியப்பட்டுள்ளன. அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் ஆசிரியர், பயிற்றுநர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் மூலம் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை விவரம் தெரிய வந்தது. இவர்களுக்கு, அந்தந்த கிராமங்கள் உட்பட 64 கற்பிக் கும் மையங்கள் ஏற்படுத்தப்பட் டுள்ளன. இவற்றை 3 பிரிவுகளாக பிரித்து ஆசிரியர்கள் மூலம் கற்பிக்கப்படுகிறது.

இதில் 882 குழந்தைகளுக்கு ஓர் ஆண்டு கல்வியும் 356 குழந்தைகளுக்கு குறுகிய கால கல்வியும் தேவை என வகைப் படுத்தி கல்வி கற்பிக்கப்படுகிறது. இது தவிர, 2 ஆண்டுகள் கல்வி அறிவு தேவை என அறியப்பட்ட 193 குழந்தைகளுக்கு மாவட்டத்தின் மூன்று இடங்களில் உள்ள உண்டு, உறைவிட பள்ளிகளில் கல்வி போதிக்கப்படுகிறது. மேலும் இடைநின்ற 412 குழந்தைகளுக்கும் 123 மாற்று திறனாளி குழந்தைகளுக்கும் அந்தந்த பகுதியிலேயே உள்ள பள்ளிகளில் சிறப்பு அனுமதியுடன் கல்வி அளிக்கப்படுகிறது.

இதுதவிர கட்டிடம் மற்றும் செங்கல்சூளை போன்ற பணிகளுக்காக பிற மாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் கல்வி கற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிற மாநிலத்தவர்கள் பெரும்பாலும் தெலுங்கு மற்றும் இந்தியை தாய்மொழியாக கொண்டுள்ள தால் அந்தந்த மொழிப் பாடபுத்தகங்களை கிருஷ்ணகிரி மற்றும் திருவள்ளூர் மாவட்டங் களில் இருந்து வரவழைத்து பாடம் நடத்தப்படுகிறது.

கடந்த ஆண்டு பிற மாநிலங்களைச் சேர்ந்த 682 குழந்தைகள் பள்ளி செல்லாத குழந்தைகளாகக் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிறப்பு பள்ளிகள் மூலம் கல்வியும் தமிழக அரசின் விலையில்லா திட்டங்களில் வழங் கப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் சத்துணவும் வழங்கப் படுகிறது.

இதேபோல், 2015-16-ம் ஆண்டில் பள்ளி செல்லாத குழந்தைகளைக் கண்ட றிய இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளதாக அனைவருக்கும் கல்வி இயக்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, அதன் கூடுதல் முதன்மை அலுவலர் சீதாலட்சுமி கூறும்போது, “அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வி உரிமை சட்டம் 2009 மற்றும் குழந்தைகளின் சுகாதாரம், தன்சுத்த செயல் பாடுகள், பாதுகாப்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை களைதல் மற்றும் பள்ளியில்லாத கிராமப் பகுதிகள், குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாததால் ஏற்படும் தீமைகள் தொடர்பாக மாவட்டம் முழுவதும் 90 இடங்களில் விழிப்புணர்வு வீதி நாடகங்கள் நடைபெற உள்ளன.

மேலும், மாவட்டத்தில் 2015-16ம் ஆண்டில் 2,141 பள்ளி செல்லாத குழந்தைகளைக் கண்டறிவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் ஏப்ரல் மாதம் தொடங்கப்படும். இவ் வாறு கண்டறியப்படும் குழந்தை களுக்கு, அதே கிராமப் பகுதி யில் உள்ள பட்டதாரி இளைஞர் களை சிறப்பு ஆசிரியர்களாக நியமித்து கல்வி அளிக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x