Last Updated : 13 Feb, 2015 01:03 PM

 

Published : 13 Feb 2015 01:03 PM
Last Updated : 13 Feb 2015 01:03 PM

விட்டுக் கொடுக்காததும் காதல்தான்...

காதல் புனிதமானது, காதல் ஒரு முறைதான் வரும், எதையுமே எதிர்பார்க்காதது காதல், காதலுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக்கொடுக்கலாம். ஆனால் எதற்காகவும் காதலை விட்டுக்கொடுக்கக் கூடாது. இப்படிக் காலங்காலமாக காதல் எனும் உணர்வு சிலாகித்துக் கொண்டாடப்படுகிறது.

இன்றைய இளைஞர்கள் காதலை எப்படிப் பார்க்கிறார்கள்?

எம்.சுவாதி, கல்லூரி மாணவி:

படிக்கிற காலத்தில் வருகிற காதல் அதிகம் வெற்றியடைவதில்லை. 23 வயதிற்குப் பிறகு தான் காதலில் தெளிவான முடிவெடுக்க முடியும். விட்டுக் கொடுப்பதுதான் காதல் என்றாலும் சுயமரியாதையை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்கக் கூடாது.

மோ.கிஷோர்குமார், சாப்ட்வேர் இன்ஜினியர், மதுரை

காதல் ரொம்ப புனிதமான விஷயம். இன்றைய தொழில்நுட்பம் அதை சல்லிசாக்கிவிட்டது. வாட்ஸ் ஆப், பேஸ்புக் தவிர்த்து ஒரு காதல் இருக்குது இல்லையா? அதுதான் உண்மையான காதல்.

மோ.கிஷோர்குமார், எம்.சுவாதி,

எஸ்.சரண்யா, கல்லூரி மாணவி:

வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வு காதல். ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும் ரொம்ப மகிழ்ச்சியான, துடிப்பான காலம் என்றால் அது காதலிக்கும் காலம் தான். காதல் விளையாட்டாகிவிட்டது, ஏமாற்றுகிறார்கள் என்று இப்போது குறை சொல்கிறார்கள்.

ஒருவர் உண்மையாகக் காதலைச் சொல்கிறாரா, விளையாடுகிறாரா என்பதை அவரது செயல்பாடுகளைப் பார்த்தே புரிந்துகொள்ளும் நுட்பத்தை பெண்களுக்குக் இருக்கிறது என்றே தோன்றுகிறது. உண்மையாகக் காதலிப்பவர்கள் காதலுக்காகப் பெற்றோரையோ, பெற்றோருக்காகக் காதலையோ இழக்க மாட்டார்கள்.

எம்.எஸ்.நந்தினி, மாணவி:

ஒருவருக்கொருவர் உண்மையாக இருப்பதும், விட்டுக்கொடுப்பதும் காதல். ஆனால் தனக்காக அதை விடு, இதை விட்டுவிடு என்று நிர்ப்பந்திப்பது காதல் அல்ல. காதலில் இழக்கவே கூடாத விஷயம் என்றால், அது லட்சியம்தான். இருவருக்கும் சேர்த்துப் புதிதாக ஒரு லட்சியத்தை ஏற்படுத்திக்கொள்ளலாமே தவிர, ஒருவரின் லட்சியத்தை மற்றவர் அழிக்கக் கூடாது.

எஸ்.சரண்யா, எம்.எஸ்.நந்தினி

ஜே.மோசஸ், ஆய்வு மாணவர்:

இளைஞர்கள் ஒரு குறிப்பிட்ட வயதுவரை காதலில் விழாமல் இருப்பது நல்லது. இல்லைன்னா ஸ்கூல்ல ஒரு காதல், யு.ஜி.ல ஒரு காதல், பி.ஜி.ல இன்னொரு காதல்னு வந்துக்கிட்டே இருக்கும். அதற்காகப் பெண்களின் நட்பே இல்லாமல் இருப்பதும் ஆபத்து. ஒரு குறிப்பிட்ட காலம்வரை நட்பாக இருந்து, முழுமையாகப் புரிந்துகொண்ட பிறகு சொல்லப்படும் காதல்தான் வாழ்வின் இறுதிவரை நிலைத்திருக்கும். காதலில் இழக்கக் கூடாதது என்று எதுவுமே கிடையாது.

எம்.மீனா பாரதி, ஆசிரியை:

ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்கும் காதல் வெற்றியடைகிறது. இந்தச் சமுதாயத்திற்குக் காதலும் தேவை, காதலர் தினமும் தேவை. முந்தைய தலைமுறையில் உண்மையாகக் காதலித்தவர்கள், அடுத்த தலைமுறை காதலைக் கொச்சைப்படுத்த மாட்டார்கள். காதலுக்காக இழக்கக் கூடாத விஷயங்கள், சுய மரியாதையும் லட்சியமும்தான்.

எம்.மீனா பாரதி, ஜே.மோசஸ்

எம்.வழிவிட்டான், கிடாத்திருக்கை கிராமம்:

கிராமத்துக் காதலும் இப்போது தொழில்நுட்ப ரீதியில் முன்னேறிவிட்டது. நம்மளவிட சுமாரான பசங்களுக்கு எல்லாம் ஒரு லவ்வர், ரெண்டு மூணு கேர்ள் பிரண்ட்ஸ் இருக்காங்க. நமக்கு இல்லியேன்னு பாய்ஸ் படத்து ஹீரோ மாதிரிக் கிராமத்துப் பசங்க சுத்த ஆரம்பிச்சிட்டாங்க.

காதலுக்காக அம்மா, அப்பாவை தவிர எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கலாம் என்று சொல்வார்கள். என்னைக் கேட்டால் நட்பைத் தவிர எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கலாம் என்பேன். காரணம், எப்படியும் பெற்றோர் நம்மை மன்னித்துச் சேர்த்துக்கொள்வார்கள். ஆனால், காதல் திருமணத்தில் முடிய நல்ல நண்பர்களின் உதவி கட்டாயம் தேவைப்படும்.

வித்யாலட்சுமி, சாப்ட்வேர் இன்ஜினியர், சென்னை:

என் காதலன் வெறும் காதலை மட்டும் வெளிப்படுத்தினால் போதாது. எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் எல்லாவற்றையும் தரும் அம்மாவாக, தொடர்ந்து நம்பிக்கையூட்டும் அப்பாவாக, இன்பத்திலும் துன்பத்திலும் தோள் கொடுக்கும் தோழனாக, விளையாட்டாய்ச் சண்டையிடும் செல்லப் பிராணியாகவும் அவன் இருக்க வேண்டும்.

எம்.வழிவிட்டான், வித்யாலட்சுமி

பரத்வாஜ், முகப்பேர், சென்னை:

காதல் என்பது வெறும் டைம் பாஸ்தான். ‘பிரேக் அப்’ எனும் வார்த்தை சர்வ சாதாரணமாகிவிட்டது. எனக்குத் தெரிந்து 80 சதவிகிதம் காதல் போலி. அது புரியாமல் சிலர் ஏமாந்துவிடுகிறார்கள்.

எஸ்.ராகுல், புகைப்படக் கலைஞர்:

பெற்றோர் எல்லாம் காதலுக்கு விரோதி கிடையாது. சரியான வயதில் வரும் காதல், சரியான நேரத்தில் பெற்றோரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும்போது வெற்றியடையும்.

ஏ.பவித்ரா, கல்லூரி மாணவி:

பார்த்ததும் வருவது காதலே கிடையாது. அது வெறும் இனக் கவர்ச்சிதான். பேசிப் பழகி வருவதுதான் காதல். சண்டை போட்டுக்கொள்ளாத காதல் கிடையாது. அப்படிப் பேசாமல் இருக்கும் இடைவெளியை, வெறுப்புணர்வை வளர்ப்பதற்காக அல்லாமல் அன்பைப் பெருக்கப் பயன்படுத்திக்கொள்பவர்கள் வெற்றி பெறுவார்கள். காதலுக்காகப் பெற்றோரையும், சுயகவுரவத்தை இழக்கக் கூடாது.

பரத்வாஜ், எஸ்.ராகுல், ஏ.பவித்ரா

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

காதலில் அன்று, இன்று எனக் குறுக்கே கோடு கிழிப்பது சரியான அணுகுமுறையாகாது. இருப்பினும் பலதரப்பட்ட இளைஞர்களோடு நடத்தப்பட்ட இந்த உரையாடலில் ‘இன்றைய காதல்’ என்று சொல்லும்படியான சில அம்சங்கள் பளிச்சிடுகின்றன. குறிப்பாக இன்றைய இளம் பெண்கள் சுயகவுரவத்தையும், லட்சியத்தையும் காதலுக்காக ஒருபோதும் இழக்க மாட்டோம் என உறுதியாகக் கூறுகிறார்கள்.

காதலன் தலைவனாக இல்லாமல் தோழனாக இருக்க விரும்புகிறார்கள். பெற்றோரை ஒரு போதும் காதலுக்காக இழக்கக் கூடாது என்ற பார்வையும் ஆண்கள், பெண்கள் இருவரிடமுமே தலைதூக்குகிறது. அதேநேரம் நவீன உலகில் நினைத்தால் வாங்கும், வேண்டாதபோது ஒதுக்கும் விஷயமாகக் காதல் மாறி வருகிறது எனும் ஏக்கமும் (குறிப்பாக ஆண்களிடம்) வெளிப்படுகிறது.

விட்டுக் கொடுப்பதுதான் காதல் என இத்தனைக் காலம் நினைத்தோம். விட்டுக்கொடுக்காததும் காதல்தான் என்கிறனர் இன்றைய இளைஞர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x