Published : 23 Feb 2015 08:58 AM
Last Updated : 23 Feb 2015 08:58 AM

பெட்ரோலிய அமைச்சக ஆவணங்கள் திருட்டு: ‘ரா’ உளவுத் துறை ரகசிய விசாரணை

பெட்ரோலிய அமைச்சகத்தின் முக்கிய ஆவணங்கள் திருடப் பட்டது தொடர்பாக இந்திய உளவுத் துறையான ‘ரா’ அமைப்பின் மூத்த அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

பெட்ரோலிய அமைச்சகத்தில் இருந்து முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டிருப்பது அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது. இது தொடர்பாக டெல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்து ரிலை யன்ஸ் உள்ளிட்ட ஐந்து நிறுவனங் களின் மூத்த அதிகாரிகள், பத்திரிகையாளர் உட்பட மொத்தம் 12 பேரை கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து எரிவாயு திட்ட அறிக்கைகள், பிரதமரின் தனிச் செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா பெட்ரோலிய அமைச்சகத் துக்கு எழுதிய கடிதம், எரிசக்தி வரைவுத் திட்டங்கள், இந்தியா-இலங்கை இடையிலான எரிசக்தி ஒப்பந்தம், பட்ஜெட் தயாரிப்பு குறிப் புகள் உள்ளிட்ட முக்கிய ஆவ ணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அண்மையில் ஐ.என்.எஸ். அரிஹந்த் நீர்மூழ்கி கப்பலை பிரதமர் நரேந்திர மோடி பார்வை யிட்டது தனியார் தொலைக்காட்சி யில் பிரத்யேகமாக ஒளிபரப்பப் பட்டது. அந்த படங்கள் குறிப்பிட்ட தொலைக்காட்சிக்கு எவ்வாறு கிடைத்தது என்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

பாதுகாப்புத் துறை, நிதித்துறை, பெட்ரோலிய அமைச்சகம் என முக்கிய அமைச்சகங்களின் ஆவணங்கள் திருடு போவது தொடர்கதையாகி உள்ளது. சில ஆவணங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் கைமாறி உள்ளன.

இந்த திருட்டு விவகாரம் தேச பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள் ளது. எனவே இதுகுறித்து உயர் நிலை விசாரணை நடத்துமாறு ரா உளவுத் துறை அதிகாரிகளுக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பல்வேறு துறைகளின் மூத்த அதிகாரிகளிடம் அவர் தனி யாக ஆலோசனையும் நடத்தியுள் ளார்.

விடை தெரியாத கேள்விகள்

பெட்ரோலிய ஆவண திருட்டு விவகாரத்தில் ஊழல் எதிர்ப்பு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சில கேள்விகளை எழுப்பியுள்ளன.

1) பெட்ரோலிய அமைச்சக மூத்த அதிகாரிகளின் அறைக் கதவு சாவி ஊழியர்களுக்கு எவ்வாறு கிடைத்தது?

2) அவர்கள் அதிகாரிகளின் அறைகளில் எப்போது, எவ்வாறு நுழைந்தார்கள்?

3) ஆயிரக்கணக்கான கோப்புகள் குவிந்திருக்கும் இடத்தில் முக்கிய ஆவணங்கள் எங்கிருக்கின்றன என்பது அவர்களுக்கு எப்படி தெரியும்?

4) கீழ்நிலை ஊழியர்களின் செயல்பாடுகள் மூத்த அதிகாரிகளுக்கு தெரியுமா? அதிகாரிகளின் ஆசியோடுதான் அத்தனை முறைகேடுகளும் நடைபெற்றனவா?

5) சிசிடிவி கேமராக்கள் அணைக்கப்பட்டதை பாதுகாப்பு படை வீரர்கள் கடைசிவரை கண்டுபிடிக்காதது ஏன்? அலுவலக நேரம் தவிர்த்து இரவில் கீழ்நிலை ஊழியர்களை அலுவலகத்துக்குள் அனுமதித்தது ஏன்?

ஊழல் எதிர்ப்பு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் எழுப்பியுள்ள இந்த கேள்விகளுக்கு பெட்ரோலிய அமைச்சக அலுவலகம் தரப்பில் இதுவரை பதில் அளிக்கப்படவில்லை.

ரூ.1.5 லட்சம் ஊதியத்துக்கு உயர்ந்த டைப்பிஸ்ட்

பெட்ரோலிய அமைச்சக அலுவலகத்தில் டைப்பிஸ்டாக பணியாற்றிய சுபாஷ் சந்திரா என்பவர் இன்று தனியார் நிறுவனத்தின் மிக உயர்ந்த பதவியில் அமர்ந்துள்ளார்.

2011-ம் ஆண்டுவரை டெல்லியில் உள்ள பெட்ரோலிய அமைச்சகத்தில் டைப்பிஸ்டாக சுபாஷ் சந்திரா பணியாற்றினார். அப்போது அவரது ஊதியம் ரூ.8 ஆயிரம் மட்டுமே. அந்த அமைச்சகத்தில் பணியாற்றியபோதே முக்கியமான அரசு ஆவணங்களை தனியார் நிறுவனங்களுக்கு அவர் விற்று வந்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஜூப்ளியண்ட் எனர்ஜி என்ற நிறுவனத் தின் மூத்த செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார். இப்போது அவரது ஊதியம் ரூ.1.5 லட்சம்.

அமைச்சகத்தில் தனக்குள்ள பழைய தொடர்புகள் மூலம் முக்கிய ஆவணங்களை சுபாஷ் சந்திரா பெற்று வந்ததாக போலீஸார் கூறுகின்றனர். அதற்காகவே அந்த தனியார் நிறுவனம் அவருக்கு உயர் பதவியை அளித்து லட்சத்தில் ஊதியம் அளித்து வந்ததாகத் தெரிகிறது. இவரைப்போல் இன்னும் பலர் செயல்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x