Published : 23 Jan 2015 10:16 AM
Last Updated : 23 Jan 2015 10:16 AM

சியாரா லியோனைப் புரட்டிப்போட்ட எபோலா

நட்புணர்வு மிக்க இந்த நாட்டினர் தற்போது அச்சத்திலேயே வாழ்கிறார்கள்.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனைத்து நாடுகளும் பெரு முயற்சி செய்து மருந்து களையும் மருத்துவக் குழுக்களையும் அனுப்பி வைத்த பிறகும்கூட, எபோலா வைரஸ் மடியவில்லை. எவ்வளவு கடுமையானது இந்த நோய் என்பதையும் எவ்வளவு ஆழமாக இது பரவியிருக் கிறது என்பதையும் இதன் மூலம் உணர முடிகிறது.

2012 ஜனவரியில் என்னுடைய கணவருடன் சியாரா லியோன் சென்றேன். சர்வதேச உதவிகளை மக்களுக்குக் கொண்டுசெல்லும் தன்னார்வத் தொண்டர் அவர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நோயின் தீவிரம் காரணமாக அனைவருடைய பயணங்களும் கட்டுப்படுத்தப்பட்டன. அப்போது அங்கிருந்து வெளி யேற்றப்பட்டேன். 5 மாதங்களுக்கு முன்னால் நான் பார்த்த சியாரா லியோனுக்கும் இப்போது நான் பார்க்கும் சியாரா லியோனுக்கும் இடையே பெரிய வித்தியாசங்கள் காணப்படுகின்றன.

வளர்ச்சியின் வாசல்

நாங்கள் சியாரா லியோனுக்கு வந்த முதல் இரண்டரை ஆண்டுகளில் பல மாறுதல்களைப் பார்த்தோம். உள்நாட்டுப் போரில் உருக்குலைந்த நாடு வேகமாக வளர்ச்சிப் பாதையில் முன்னேறிக்கொண்டிருந்தது. எல்லாமே நன்றாக நடப்பதாக நாங்கள் நினைத்தோம். வருமானத்தைப் பல மடங்கு பெருக்கும் புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டன. வெளிநாடு சென்றவர்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பினார்கள். வெளிநாட்டு முதலீடு பெருகத் தொடங்கியது. சிற்றுண்டி விடுதிகளும் உணவு விடுதிகளும் எண்ணிக்கையில் அதிகரித்தன. சுற்றுலாத் தொழில் கொழிக்கத் தொடங்கியது. விமான நிலைய ஓடுபாதைகள் புதிதாகப் போடப்பட்டன. கட்டுமானத் தொழில் உச்சத்துக்குச் சென்றது.

இப்போது நிலப்பரப்பே அப்படியே மாறிவிட்டது. ஃப்ரீடவுன் வானில் ராணுவ ஹெலிகாப்டர்கள் அடிக்கடி வட்டமிடுகின்றன. தீபகற்பத்தைச் சுற்றிலும் சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மலையடி வாரங்களில் வெண்ணிறக் கூடாரங்கள் முளைத்துள்ளன. எபோலா குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஊட்டும் சுவரொட்டிகள் நகரெங்கிலும் ஒட்டப்பட்டுள்ளன. ‘எபோலாவை எட்டி உதைத்துத் துரத்து’, ‘எபோலா (பட்டது) போதும்பா போதும்’ என்ற வாசகங்கள் அவற்றில் உள்ளன. சாலைச் சந்திப்புகளில் உள்ள சோதனைச் சாவடிகளிலும் பெரிய வணிக வளாகங்கள், உணவு விடுதிகளின் வாயில்களிலும் முதலில் கைகளைச் சோப்பு போட்டுக் கழுவிக்கொண்டு, உடலின் வெப்பநிலையை சோதித்துப் பார்த்த பிறகே மேற்கொண்டு நகர வேண்டும் என்பது கட்டாய மாகிவிட்டது.

வெறிச்சோடும் வீதிகள்

மாலை வேளைகளிலும் வாரக் கடைசி நாட் களிலும் மக்கள் கூட்டத்தால் அலைமோதும் கடைவீதி களும் பொது இடங்களும் மக்கள் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடிவிட்டன. இப்போது வர்த்தக நிறுவனங்களுக்கே பல கட்டுப்பாடுகள் வந்து விட்டன. ஆளே இல்லாத கடை வீதிகளுக்கு இடையே தெரு நாய்கள்தான் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக் கின்றன. அவசர ஊர்திகளின் ஓலம் அடிக்கடி கேட்டுக்கொண்டே இருக்கிறது. எபோலாவை எப்படித் தடுப்பது, வந்துவிட்டால் என்ன செய்வது என்று வானொலிகளில் அடுத்தடுத்து நிகழ்ச்சிகளாகத் தொகுத்து வழங்குகிறார்கள். பாப் பாடல்களில்கூட எபோலா வைரஸ் புராணம்தான்.

சமூக வாழ்க்கை அஸ்தமித்தது

நாட்டில் முன்பு துடிப்பாகக் காணப்பட்ட சமூக வாழ்க்கை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. மக்கள் எந்தக் காரணத்துக்காகவும் கூடுவது தடைசெய்யப்பட்டிருக்கிறது. மதுபான விடுதிகளும் ஹோட்டல்களும் மாலை 6 மணிக்கே மூடப்பட்டு விடுகின்றன. ராடிசன் புளூ போன்ற ஆடம்பர ஹோட்டல்கள் மட்டும் விதிவிலக்கு. ஆனால், அங்கு மனிதாபிமானத் தொண்டர்கள்தான் தங்கியிருக்கிறார்கள். உள்நாட்டுப் போர் நடந்தபோது ஐ.நா. சபையின் தலைமையகமாக இந்த இடம் செயல்பட்டது.

மனிதர்களை மனிதர்கள் தொடுவது அறவே நிறுத்தப்பட்டுவிட்டது. சியாரா லியோன் என்பது விருந்தோம்பலும் நட்புணர்வும் மிக்க நாடு. வழக்கமாக அங்கு மற்றவர்களைக் கைகுலுக்கி வரவேற்பதுடன் கையைத் தொட்டுவிட்டு இதயத்தையும் தொடுவதுபோல மார்பைத் தொடுவார்கள். நீங்கள் சந்திப்பவரை உங்களுடைய இதயத்துக்கு நெருக்கமாகக் கொண்டு வருவதாக இதை கருதிக்கொள்ளவே இந்த வரவேற்பு முறை. எபோலா நோய் பரவத் தொடங்கியபோதுகூட இப்படித் தொடுவது தொடர்ந்தது. ஆனால், கையைப் பிடித்துக் குலுக்குவதற்குப் பதிலாக, முழங்கையோடு முழங்கையை இடித்து குறும்பாக “எ(ல்)போ-லா” என்பார்கள் (எல்போ- முழங்கை). நோயின் தீவிரம் உணரப்பட்டுவிட்டதால், எவ்வளவு அன்புக்கு உரியவராக இருந்தாலும் ஏ.பி.சி-யை மறக்காதீர்கள் என்று கூறுகிறார்கள். ‘அவாய்டு பாடி கான்டாக்ட்’ (உடலோடு உடல் தொடக் கூடாது) என்ற 3 வார்த்தை களின் சுருக்கம்தான் ஏ.பி.சி. ஒருவரை ஒருவர் தொட்டு ஆறுதல் சொல்ல வேண்டிய இத்தருணத்தில் தொடு வதற்கே தடை விதிக்கும்படி நேர்ந்துவிட்டது.

வேலையில்லை

எபோலா பரவியதால் வேலைவாய்ப்பு அறவே இல்லாமல் போய்விட்டது. குறிப்பிட்ட நேரம்தான் வியாபாரம் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு காரணமாக, சம்பாதிக்கும் திறன் குறைந்துவிட்டது. விவசாயத்தையும் போக்குவரத்தையும்கூட எபோலா பலிவாங்கிவிட்டதால் உணவுப் பண்டங்களின் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டது.

எபோலா முடிவுக்கு வந்தாலும் அது பரவலாக ஏற்படுத்திய பாதிப்புகள் முடிவுக்குவர மேலும் நீண்டகாலம் பிடிக்கும். ஒரு தலைமுறையே படிக்க முடியாமல் பாதிக்கப்படவிருக்கிறது. முதலீட்டாளர்கள் வேறு நாடுகளைத் தேடிப் போய்விட்டார்கள். உள்நாட்டுப் போரால் சியாரா லியோன் மீது ஏற்பட்டிருந்த களங்க முத்திரை எபோலாவால் நிரந்தரமாகப்போகிறது.

சுகாதாரத் துறை படுத்துவிட்டது. மருத்துவமனை களுக்குச் செல்லவே மக்கள் அஞ்சுகிறார்கள். வேறு ஏதாவது நோய்க்காகச் சிகிச்சை செய்துகொள்ளச் சென்றாலும் எபோலா தொற்றிவிடுமோ என்று மக்கள் மருத்துவமனைகளுக்கே வராமல் இருக்கிறார்கள். சுகாதாரப் பணியாளர்கள் நேரம், காலம் பார்க்காமல் தொடர்ந்து வேலை செய்ய வேண்டியிருக்கிறது, கூடவே நோய் தொற்றிவிடுமோ என்ற அச்சமும். எபோலா நேரடியாக அல்லாமல் வேறு விதமாகவும் மக்களைக் கொல்கிறது. கர்ப்பிணிகளும் மலேரியா காய்ச்சல் வந்தவர்களும்கூட சிகிச்சைக்குச் செல்லாமல் இருக்கிறார்கள். 3 வாரங்களுக்கு முன்னால் என்னுடைய நெருங்கிய சகாவை இழந்தேன். வயிற்றில் ஏதோ வலி ஏற்பட்டு அதனால் துடித்த அவர், நோய் முற்றிய நிலையில் சிகிச்சை பெறாமலே இறந்துவிட்டார். நோய் இன்னதென்று சோதித்துப் பார்க்கப்படாததால் மருந்தோ சிகிச்சையோ இல்லாமல் இறந்தார்.

நல்லது எப்போதும் இழக்கப்படுவதில்லை

உள்நாட்டுப் போரின்போது சிப்பாயாக இருந்த ஒரு சிறுவன் இப்போது யோகாசன ஆசானாக மாறிவிட்டான். புதிய மறுமலர்ச்சியின் அடையாளம் அவன். இத்தனை துயரங்களுக்கு இடையிலும் சியாரா லியோன் மக்கள் புன்னகை பூக்கத் தவறுவதில்லை. “சலோன் இ திரங்கா, வை கோ திரை போ கிக் தி எபோலா, வை கோ தினாப் பேக்” என்ற முழக்கங்களை சியாரா லியோன் மக்கள் இப்போது எழுப்பி வருகின்றனர். இதன் பொருள், “சியாரா லியோன் வலிமையானது, எபோலாவிடமிருந்து நாங்கள் விடுதலை பெறுவோம், நாங்கள் மீண்டும் எழுந்து நிற்போம்” என்பதே.

இதைச் செய்ய சியாரா லியோனுக்கு மட்டுமல்ல, எபோலாவால் பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளுக்குமே பணக்கார நாடுகளின் ஆதரவு மிகமிகத் தேவை.

இந்தத் துயரத்திலும் ஒரு நன்மை, இந்த நாட்டின் சுகாதாரத் துறை மீது உலக நாடுகளின் கவனம் திரும்பியதுதான். மேற்கத்திய நாடுகளின் வலுவான உதவி காலம் கடந்துதான் இப்போது கிடைத் திருக்கிறது. இந்த ஆண்டின் இறுதிவரை எபோலாவின் ஊழித் தாண்டவம் தொடர்ந்து, பிறகு படிப்படியாகக் குறையும் என்று சுகாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். ஆனால், அதற்குப் பிறகும் சுகாதாரத் துறைக்கும் பிற துறைகளுக்கும் வெளிநாடுகளின் உதவி தேவைப்படும்.

வாழ்க்கை தொடர்கிறது. கடலோரத்திலும் ஹோட்டல் களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருப்பதால் அவரவர் வீடுகளில் மெழுகுவர்த்தி ஏற்றி புத்தாண்டை வரவேற்றுள்ளனர். நம்பிக்கையோடு செய்யப்படும் பிரார்த்தனைகளுக்கு என்றுமே பலனுண்டு.

தி கார்டியன், தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x