Published : 15 Oct 2014 09:48 AM
Last Updated : 15 Oct 2014 09:48 AM

ரயிலில் தவறவிட்ட ரூ.1.29 லட்சம் பயணியிடம் போலீஸார் ஒப்படைப்பு

அரக்கோணத்தில் ரயிலில் தவற விட்ட ரூ.1.29 லட்சத்தை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் மீட்டு, பயணியிடம் நேற்று ஒப்படைத்தனர்.

உத்தரபிரதேச மாநிலம், ஆக்ராவை சேர்ந்தவர் ரூபா கிஷோர். இவர் ஷூ வியாபாரம் செய்து வருகிறார். வியாபார விஷயமாக கேரள மாநிலம், கன்னூருக்கு சென்றுவிட்டு, நேற்றுமுன்தினம் இரவு சென்னை வருவதற்காக, மங்களூர் ரயிலில் ஏறினார். நேற்று காலை அரக்கோணம் ரயில் நிலையத்தை ரயில் அடைந்ததும், டீ சாப்பிடுவதற்காக ரூபா கிஷோர் ரயிலை விட்டு இறங்கி சென்றார்.

டீ சாப்பிட்டு விட்டு வருவதற்குள் ரயில் கிளம்பி விட்டது. ரயில் பெட்டியில் இருந்த அவரது சூட்கேஸில் ரூ.1.29 லட்சம் பணம் இருந்தது. இதனால், பதற்றம் அடைந்த கிஷோர், உடனடியாக அரக்கோணம் ரயில் நிலைய அதிகாரியிடம் சென்று தகவல் தெரிவித்தார்.

இதற்கிடையே, ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கு, கிஷோரின் சூட்கேஸ் அனாதையாக இருப்பதைக் கண்ட, ரயில் பரிசோதகர் இதுகுறித்து, ரயில்வே போலீஸாருக்கு தெரி வித்தார். போலீஸார் உடனடியாக அந்த சூட்கேஸைக் கைப்பற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அதில் வெடிபொருட்கள் ஏதேனும் இருக்குமோ என சந்தேகமடைந்து பெட்டியைத் திறந்து பார்த்தனர். அப்போது, அதில் பணம் இருப்பது தெரியவந்தது.

இதற்கிடையே, ரூபா கிஷோர் மற்றொரு ரயிலை பிடித்து சென்ட்ரல் வந்தடைந்தார். பின்னர், போலீஸாரிடம் சென்று நடந்த சம்பவத்தைக் கூறினார். போலீஸார் அவரது அடையாள அட்டையை பரிசோதித்து, சூட் கேஸ் அவருக்கு சொந்தமானது என உறுதி செய்தனர். பின்னர், பணத்துடன் பெட்டியை அவரிடம் ஒப்படைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x