Published : 01 Sep 2014 08:45 am

Updated : 01 Sep 2014 08:46 am

 

Published : 01 Sep 2014 08:45 AM
Last Updated : 01 Sep 2014 08:46 AM

மாபெரும் அழிவின் முன்கதைச் சுருக்கம்

போர் என்பதை நாகரிக சமுதாயம் வரவேற்காது. சமாதானத்தின் அவசியத்தைத்தான் உலகப் போர்கள் உணர்த்துகின்றன. ஆனால், அந்தச் சமாதானம் நிலைபெறத்தான் போர்களும் நடக்கின்றன என்பதுவே வரலாற்று விந்தை!

முதல் உலகப் போரைப் போலவே இரண்டாவது உலகப் போரும் பல அதிநவீன கண்டுபிடிப்புகளுக்கு வழிகோலியது. போர்க்களத்தில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட பல கருவிகளும் தொழில்நுட்பங்களும் சமாதான காலத்திலும் பலனளித்தன. போர்க் கருவிகளில் மட்டுமல்ல, உயிர் காக்கும் மருத்துவக் கருவிகளிலும் முறைகளிலும் பல கண்டுபிடிக்கப்பட்டன. சமூகங்களில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டன. பல நாடுகளின் நில எல்லைகள் மாற்றி வரையப்பட்டன. சில நாடுகள் பிரிந்தன, சில நாடுகள் சேர்ந்தன. பழைய பெயர்கள் மறைந்தன, புதிய பெயர்கள் தோன்றின. ராணுவக் கூட்டணிகள் உருவாயின, ராணுவக் கூட்டணிகள் சிதறின.


ஐரோப்பியக் காலனியாதிக்கம் முடிவுக்கு வந்தது. அமெரிக்காவில் மனித உரிமைக் கழகம் ஏற்பட்டது. நவீனப் பெண்களுக்கான உரிமை இயக்கங்களும் முகிழ்த்தன. விண்வெளியை ஆராயும் எண்ணங்களுக்கு உத்வேகம் ஏற்பட்டது.

இந்தப் போரில் நாஜி ஜெர்மனி, பாசிஸ்ட் இத்தாலி, சக்ரவர்த்தியின் ஜப்பான், அவர்களுடைய சிறு ஆதரவு நாடுகள் ‘அச்சு நாடுகள்' என்ற பெயரில் ஓரணியாகத் திரண்டு போரில் ஈடுபட்டன. பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்த பல நாடுகள், சோவியத் சோஷலிஸ்ட் குடியரசு நாடுகள், அமெரிக்கா ஆகியவை ‘நேச நாடுகள்' என்ற பெயரில் தனி அணியாகத் திரண்டு அச்சு நாடுகளை எதிர்த்தன. நேச நாடுகள்தான் போரில் இறுதியாக வென்றன. இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கா, சோவியத் ரஷ்யா என்ற இருபெரும் வல்லரசுகள் தோன்றின. ஆனால், இவ்விரு வல்லரசுகளுக்கு இடையிலேயே ‘பனிப்போரும்' பிறகு தொடங்கியது.

போர் எப்போது தொடங்கியது?

முதலாம் உலகப் போர் 1918-ல் முடிந்தது. ஆனால், அங்கிருந்தே இரண்டாவது உலகப் போர் தொடங்கியதாகக் கூறுவோரும் உண்டு. 1931-ல் சீனாவிடமிருந்து மஞ்சூரியாவை ஜப்பான் கைப்பற்றியதிலிருந்து இந்தப் போர் தொடங்கியது என்றும் சொல்வார்கள். இத்தாலி அபிசீனியாவில் (எத்தியோப்பியா) நுழைந்து, 1935-ல் அதைக் கைப்பற்றியதும் இந்தப் போரின் இன்னொரு தொடக்கப் புள்ளி. ஜெர்மனியின் ரைன்லாந்தை அடால்ஃப் ஹிட்லர் ராணுவமயமாக்கியதும் இன்னொரு முக்கியமான கட்டம். ஸ்பெயின் நாட்டின் உள்நாட்டுப் போர் (1936-39), செக்கோஸ்லோவேகியாவை ஜெர்மனி 1938-ல் ஆக்கிரமித்தது,

7.7.1937-ல் சீனாவின் மார்கோபோலோ பாலத்தை ஜப்பான் கைப்பற்றியது என்று இரண்டாம் உலகப் போருக்குப் பல்வேறு நதிமூலங்கள் சொல்லப்படுகின்றன. எனினும், 1.9.1939-ல் போலந்து மீது ஜெர்மனி படையெடுத்ததால் பிரிட்டனும் பிரான்ஸும் ஜெர்மனிக்கு எதிராகப் போர் அறிவிப்பு செய்ததால், அதிகாரபூர்வமாக இந்தப் போர் தொடங்கியது எனலாம்.

தொடக்க சம்பவம் ஏதுமில்லை

முதலாம் உலகப் போருக்குக் காரணம் என்று அரச குடும்பத்தைச் சேர்ந்தவரின் படுகொலையைக் குறிப்பிட்டதைப் போல, இரண்டாவது உலகப் போருக்கு ஏதாவது ஒரு சம்பவத்தை மட்டும் குறிப்பிட முடியாது. ஜார் மன்னர் தலைமையிலான ரஷ்யாவை ஜப்பான்(1904-05) போரில் வென்ற பிறகு, ஆசியாவிலும் பசிபிக் பிராந்தியத்திலும் தன்னுடைய சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த ஜப்பான் துடித்ததும் போருக்கு முக்கியக் காரணம். ஜப்பானை மனதில் வைத்தே அமெரிக்கா தனது கடற்படையை அவ்வப்போது நவீனப்படுத்திவந்தது.

முதல் உலகப் போருக்குப் பிறகு, உலக அளவில் பொருளாதாரத்தில் ஸ்திர நிலை இல்லை. 1930 சமயத்தில் மிகப் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டு, நாடுகளின் தொழில்வளங்களும் பொருளாதாரமும் முடங்கின. அதே நேரத்தில் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு தேசிய உணர்வை வெறித்தனமாக ஊட்டிவந்தன. அதனால், அவற்றுக்குத் தங்களுடைய எல்லையை விரிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணமும் ஏற்பட்டது. ரஷ்யாவில் ஏற்பட்ட போல்ஷ்விக்குகளின் புரட்சி முதலாளித்துவ நாடுகளைப் பீதியில் ஆழ்த்தின. கம்யூனிஸம் பரவாமல் தடுக்க வேண்டும் என்று நினைத்தன. சோவியத் யூனியனுக்கு எதிராக இத்தாலி, ஜெர்மனி, ருமேனியா, ஜப்பான் அணி சேர்ந்தன. ஆனால், அவை நேச நாடுகளைப் போல இணைந்து செயல்படாமல் தனித்தனியாகச் செயல்பட்டதால் போரில் தோற்றன.

இரண்டாவது உலகப் போரில் வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு அரங்குகளில் முக்கியமான தாக்குதல்களும் படையெடுப்புகளும் நிகழ்ந்தன. அவை ஒவ்வொன்றும் போரின் வேகத்தை விரைவுபடுத்தியதோடு போக்கையும் மாற்றின. அவற்றைத் தனித்தனியாக அறிவதன் மூலம் இந்தப் போரின் போக்கை உணர முடியும்.

1.9.1939-ல் போலந்து மீது ஜெர்மனி படையெடுத்ததால், பிரிட்டனும் பிரான்ஸும் ஜெர்மனிக்கு எதிராகப் போர் அறிவிப்பு செய்ததால் அதிகாரபூர்வமாக இந்தப் போர் தொடங்கியது எனலாம்.

மாபெரும் அழிவுஅழிவின் முன்கதைச் சுருக்கம்உலகப் போர்இரண்டாவது உலகப் போர்

You May Like

More From This Category

More From this Author