Published : 25 Sep 2014 11:14 AM
Last Updated : 25 Sep 2014 11:14 AM
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிக்கான அணியில் இருந்து மூத்த வீரரான யூனிஸ் கான் நீக்கப்பட்டுள்ளார்.
அந்த அணியின் தேர்வுக்குழு தலைவரும், மேலாளருமான மொயீன் கான் கூறுகையில், “உலகக் கோப்பை போட்டிக்காக இளம் வீரர்களை தயார்படுத்தும் வகையில் மூத்த வீரரான யூனிஸ் கான் அணியில் சேர்க்கப்படவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்காக மிகப்பெரிய அளவில் யூனிஸ் கான் பங்களிப்பு செய்துள்ளார். ஆனால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டிக்காக நாம் தயாராக விரும்பினால் இளம் வீரர்களுக்கு பெரிய அளவில் அனுபவமும், பொறுப்பும் கிடைக்க வேண்டிய தருணம் இது” என்றார்.
யூனிஸ் கான் கூறுகையில், “ஓய்வு பெறும் எண்ணம் இல்லை. உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்ற எண்ணத்தோடு இப்போதும் இருக்கிறேன். தேர்வாளர்கள் தங்களுடைய முடிவை எடுப்பதற்கு அவர்களுக்கு உரிமையுள்ளது. ஆனால் நான் விடப்போவதில்லை. கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பாக விளையாடி மீண்டும் அணிக்கு திரும்ப முயற்சிப்பேன்” என்றார்.
2013 மார்ச்சுக்குப் பிறகு வாய்ப்பை இழந்த யூனிஸ் கான், கடந்த மாதம் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக அணிக்கு அழைக்கப்பட்ட நிலையில், மீண்டும் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸி.-பாக். தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறுகிறது. இது பாகிஸ்தானின் உள்ளூர் மைதானம் (ஹோம் கிரவுண்ட்) ஆகும். ஒரேயொரு டி20 போட்டி வரும் அக். 5-ம் தேதி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து அக்.7, 10, 12 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறுகின்றன. இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அக்.22-ம் தேதி தொடங்குகிறது.
ஒருநாள் போட்டி அணி: மிஸ்பா உல் ஹக் (கேப்டன்), முகமது ஹபீஸ், அஹமது ஷெஸாத், உமர் அக்மல், உமர் அமின், ஷோயிப் மசூத், ஆசாத் ஷபிக், ஃபவாட் ஆலம், சர்ஃப்ராஸ் அஹமது, ஷாகித் அப்ரிதி, ரெஸா ஹசன், முகமுது இர்ஃபான், அன்வர் அலி, வஹாப் ரியாஸ், ஜுனைத் கான்.
டி20 போட்டி அணி: ஷாகித் அப்ரிதி (கேப்டன்), முகமது ஹபீஸ், அஹமது ஷெஸாத், உமர் அக்மல், ஷோயிப் மசூத், ஓவைஸ் ஷா, சாட் நஸிம், ரெஸா ஹசன், முகமது இர்ஃபான், வஹாப் ரியாஸ், பிலவால் பட்டி, அன்வர் அலி, சோஹைல் தன்வீர்.