Published : 30 Sep 2014 12:06 pm

Updated : 30 Sep 2014 12:08 pm

 

Published : 30 Sep 2014 12:06 PM
Last Updated : 30 Sep 2014 12:08 PM

யார் குற்றவாளி?

டெல்லி விலங்கு காட்சிசாலையில் வெள்ளைப் புலி இருந்த பகுதிக்குள் விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும், அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த இளைஞரின் பரிதாப மரணத்துக்கு அவரது அலட்சிய மனப்போக்கே காரணம் என்று ஒரு தரப்பினரும்; விலங்கு காட்சிசாலை நிர்வாகமே காரணம் என மற்றொரு தரப்பினரும் மாறிமாறி பழிசுமத்திக் கொண்டிருக்கிறார்கள். இளைஞரைக் கடித்த புலியைக் கொல்ல வேண்டும் என்று வேறு சிலர் குரல் கொடுக்கிறார்கள். இந்த விவகாரத்தில் தவறு செய்தது யார்?

இந்த விவகாரத்தில் விலங்கு காட்சிசாலையில் உள்ள தடுப்பின் உயரம் மிகக் குறைவாக இருக்கிறது, புலி இருந்த தடுப்பு மீது அந்த இளைஞர் ஏறியபோது அங்கிருந்த ஊழியர்கள் ஏன் தடுக்கவில்லை, புலியிடம் சிக்கிய அந்த இளைஞர் உயிருக்காக அதனிடம்

கெஞ்சிக் கொண்டிருந்த போது அங்கிருந்த ஊழியர்கள் என்ன செய்தார்கள், அவரை மீட்க என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுத் துளைத்தெடுக்கிறார்கள்.

கொஞ்சம் யோசிப்போம்

இவை எல்லாமே உணர்ச்சிவசப்பட்டு வெளிவரும் வார்த்தைகள்தான். இந்த இடத்தில் ஒன்றை வசதியாக மறந்துவிடுகிறோம். முதலில், எதற்காக விலங்கு காட்சிசாலைக்குச் செல்கிறோம்?

எல்லோராலும் காடுகளுக்குச் செல்ல முடியாது. அப்படியே காட்டுக்குப் போனாலும், அங்கே எவ்வளவு சுற்றி அலைந்தாலும் கண்களுக்கு அகப்படாத விலங்குகளை எளிதாகப் பார்த்து மகிழ்வதற்காகத்தானே போகிறோம். ஏற்கெனவே, சுதந்திரமான இயல்பு வாழ்க்கை தடுக்கப்பட்டுதான், அவை கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருக்கின்றன.

என்ன செய்கிறோம்?

அந்த விலங்குகளைத் தள்ளி நின்று பார்த்து ரசித்துவிட்டுச் செல்வதுதானே முறை. குழந்தைகள் மட்டும்தான் விலங்குகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டு ரசிக்கிறார்கள். ஆனால், வளர்ந்தவர்கள், குறிப்பாக இளவட்டங்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? இந்த வயதினருக்கு எந்த இடமானாலும் பிக்னிக் ஸ்பாட்தான். அதனால், அரிய விலங்குகளைப் பார்த்து ரசிப்பதை விட்டுவிட்டு, இருக்கும் இடத்தை மறந்து ஆறாவது அறிவை அடகு வைக்கும் நிலைக்குச் சென்றுவிடுகிறோம், இல்லையா?

விலங்கு காட்சி சாலைகள் சில விதிமுறைகளின்படியே அமைக்கப்படுகின்றன. அதைக் கடைப்பிடிக்க வசதியாக, பார்வையாளர்களுக்குப் பல்வேறு அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருக்கும்.

விதிமுறைகள்

எடுத்துக்காட்டாக, விலங்குகளுக்கு உணவு வகைகளைத் தராதீர்கள் என்றிருக்கும். ஆனால், உணவை மட்டுமல்ல, கையில் என்ன வைத்திருக்கிறோமே, எல்லாவற்றையும் வீசுகிறோம். காட்சிப் பொருளாகக் கூண்டுக்குள் அடைபட்டிருக்கும் விலங்குகளைப் பார்த்துக் கர்ணக் கொடூரக் குரலில் ஓலமிட்டுப் பயமுறுத்துகிறோம்.

அவற்றின் உணவுப் பாதை-சுவாசப் பாதையைப் பாதிக்கக்கூடிய, பிளாஸ்டிக் பாட்டில்களைக் கூண்டுக்குள் வீசுகிறோம். குரங்குகள் உள்ளிட்ட சில விலங்குகளின் மீது கல்லெறிந்து உசுப்பி விடுகிறோம்.

ஏற்கெனவே இயல்பான வாழ்க்கை குலைந்துபோயுள்ள உயிரினத்தை, எரிச்சல் படுத்தும் வகையில் பல்வேறு செயல்பாடுகளைச் செய்கிறோம். எல்லாமே, அவை நம்மை நோக்கிப் பார்க்க வேண்டும் என்ற ஒற்றைக் காரணத்துக்காக.

நடப்பது என்ன?

இங்குள்ள சில ஒளிப்படங்களைப் பாருங்கள். டெல்லியில் இளைஞர் புலியிடம் பலியான ஆபத்தான இடத்தில் சிறிய தடுப்பின் மீது தன் மகனை நிற்க வைத்து, ஃபோட்டோவுக்கு ஃபிரேம் பார்த்துக் கொண்டிருக்கிறார் ஓர் அப்பா. இதில் யார் மீது தவறு இருக்கிறது? புலி மீதா, விலங்கு காட்சிசாலை நிர்வாகம் மீதா? இல்லை சுற்றிப் பார்க்கச் செல்லும் மனிதர்களான நம் மீதா?

நாட்டின் பல்வேறு விலங்கு காட்சிசாலைகளில் எடுக்கப்பட்ட வேறு சில படங்களும் இதை உறுதிப்படுத்துகின்றன. மைசூர் விலங்கு காட்சிசாலையில், சிங்கத்தை நல்ல போஸில் படம் எடுப்பதற்காக ஒரு இளைஞர் எவ்வளவு பக்கத்தில் நின்றுகொண்டிருக்கிறார், பாருங்கள். அடுத்த படத்தில் கூண்டுக்குள் உள்ள சிறுத்தையைச் சீண்டுகிறார் மற்றொரு இளைஞர். ஏன் இத்தனை ஆர்வக் கோளாறு அல்லது அலட்சியம்?

ஏன் இப்படி?

இந்த நிலையில் நம்முடைய பாதுகாப்பை, மற்றொருவர் எப்படி உறுதி செய்ய முடியும்? நாம் அத்துமீறிச் செய்யும் சேட்டைகளை அரசோ அல்லது சம்பந்தப்பட்ட நிர்வாகமோ தனி ஊழியரை நியமித்துத் தடுத்துக் கொண்டிருக்க முடியுமா?

விலங்கு காட்சிசாலை போன்ற இடங்களில் பின்பற்ற வேண்டிய அடிப்படை விதிமுறைகளைக்கூட கடைப்பிடிக்க மறுக்கிறோம். இப்படி ஆறாவது அறிவு செயல்பட மறுத்து நின்றுவிடும்போது, ஐந்தறிவு கொண்ட உயிரினம் என்ன செய்யும் என்பதைத்தான் டெல்லி சம்பவம் உணர்த்துகிறது. விலங்கு காட்சிசாலைக்குச் செல்வோர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்குப் பாடம் கற்றுத் தந்திருக்கிறது டெல்லி வெள்ளைப் புலி. கற்றுக்கொள்ள வேண்டியது நாம்தான்.


சிங்கம்விலங்குவெள்ளைப் புலிடெல்லிஇளைஞர் பலிதற்காப்புஎச்சரிக்கைசர்ச்சைபாதுகாப்பு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author