Published : 09 Jun 2014 19:05 pm

Updated : 09 Jun 2014 19:05 pm

 

Published : 09 Jun 2014 07:05 PM
Last Updated : 09 Jun 2014 07:05 PM

உலகக் கோப்பை ஹாக்கி: ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி

தி ஹேக்கில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியாவை 4-0 என்ற கோல் கணக்கில் ஊதித் தள்ளியது.

4 கோல்கள் மட்டுமே வாங்கியதற்காக இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷிற்குத்தான் மீண்டும் நன்றி கூறவேண்டும். இந்தப் போட்டியிலும் குறைந்தது 4 கோல்களையாவது அவர் தடுத்திருக்கிறார் என்றே கூற வேண்டும். இவரது இத்தகைய திறமைக்குக் கிடைத்த பரிசே ஆட்ட நாயகன் விருது.

“இந்த உலகக் கோப்பை எனக்கு நல்ல தொடராக அமைந்தது” என்றார் அவர் பெருமிதத்துடன்.

ஆட்டம் துவங்கியது முதல் இந்திய கோல் பக்கமே பந்து இருந்தது. தொடர்ந்து கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் கடும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டார்.

ஆட்டத்தின் 3வது நிமிடத்தில் களத்தின் வலப்புற ஓரமாக ஆஸி. விரர்கள் சலேவ்ஸ்கி மற்றும் வெட்டன் ஆகியோர் பந்தை அபாரமாகக் கொண்டு சென்று கிரன் கோவர்ஸுக்கு அடிக்க அவர் கோலாக மாற்றினார். ஆஸி. 1-0 முன்னிலை. இந்திய பாதுகாப்பு அரணுக்கு சிறிது நேரம் ஒன்றும் புரியவில்லை. எந்த மட்டையிலிருந்து கோல் விழுந்தது என்று அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு வேகமாக அனைத்தும் நடந்து முடிந்தது.

ஆட்டத்தின் 16வது நிமிடம் மீண்டும் ஒரு ஆஸ்திரேலியத் தாக்குதல் டி-வட்டத்தில் தவறு நிகழ்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு பெனால்டி கார்னர் கிடைக்க கிறிஸ் சிரியெல்லோ அதனை அருமையாக கோலாக மாற்றினார். ஆஸி. 2-0 என்று முன்னிலை.

பிறகு 22வது நிமிடம் ஆஸ்திரேலிய ஆக்ரோஷம் மேலும் வலுவடைய அடுத்தடுத்து மின்னல் போல் இரண்டு கோல்கள் போட்டது. ஜெர்மி ஹேவர்ட் 3வது கோலை அடிக்க மீண்டும் சிரியெல்லோ தனது 2வது கோலை அடிக்க ஆட்டம் 4-0 என்று ஆஸ்திரேலியா பக்கம் வலுவாக இருந்தது.

பந்து 80% ஆஸ்திரேலியா கையில் இருந்தது. இந்தியர்கள் ஆட்டம் சில வேளைகளில் பரிதாபமாக வெறும் தடுக்கும் வேலையாகவே போய் முடிந்தது. ஒரு பெனால்டி கார்னர் கூட இந்தியாவுக்குக் கிடைக்கவில்லை.

இடைவேளைக்குப் பிறகு இந்திய வீரர்கள் அரிதாக ஆஸ்திரேலிய எல்லைக்குள் ஊடுருவிச் சென்றனர். இடதுபுறம் மன்ப்ரீத் பந்தை நழுவ விட அந்த முயற்சியும் வீணானது.

இடைவேளைக்குப் பிறகு 10வது நிமிடத்தில் வெட்டன் - டர்னர் ஜோடி வலது புறம் மிக வேகமாக பந்தை எடுத்து வந்தனர். இந்திய பாதுகாப்பு அரண் பல்லிளித்தது. ஆஸி. வீரர் ஒரே அடி அடிக்க கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் அதனை அருமையாக தடுத்தார்.

மீண்டும் ஆஸ்திரேலியா இந்தியப் பகுதிக்குள் வேகமாக முன்னேறி வர, கோல் லைனில் அடிக்கப்பட்ட ஷாட்டை பாறை போல் நின்று தடுத்தார் ஸ்ரீஜேஷ்.

அதன் பிறகு இந்தியாவின் தரம்வீர் ஆஸ்திரேலிய பாதுகாப்பு அரணைத் தாண்டிச் சென்று கோல் முயற்சி ஒன்று செய்தார். ஆனால் ஆஸ்திரேலிய கோலி அதனை கையால் தட்டி விட்டார்.

மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு ஒரு பெனால்டி கார்னர் கிடைக்க சிரியெல்லோ அடித்த கோல் ஷாட்டை மீண்டும் ஸ்ரீஜேஷ் தடுத்து சிரியெல்லோவின் 3வது கோலைத் தடுத்தார்.

ஆட்டம் முடிய 3 நிமிடங்கள் இருந்தபோது இந்திய வீரர்கள் வேகம் கொண்டனர். ஒரு அபாரமான எதிர்த் தாக்குதல் தொடுத்தனர். ஆனால் அடித்த அடி நேராக ஆஸி. கோல் கீப்பரிடம் சென்றது.

நல்ல வேளையாக ஸ்ரீஜேஷினால் இந்தியா 0-4 என்று தோல்வியடைந்தது. இல்லையெனில் 7 அல்லது 8 கோல்கள் வாங்கி படு தோல்வியைச் சந்தித்திருக்கும்.

ஆஸ்திரேலியாவுக்கு இந்த ஆட்டத்தில் நிகழ்ந்த பின்னடைவு என்னவெனில் அவர்களது கேப்டன் நோலெஸ், அனுபவ வீரர் ட்வையர் ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் ஆஸ்திரேலிய அணியின் தூண் என்றால் மிகையாகாது. வெள்ளிக்கிழமை ஆஸ்திரேலியா அரையிறுதியில் விளையாடுகிறது.

2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் கடைசியில் முடிந்த இந்திய ஹாக்கி அணி தற்போது கடைசிக்குச் செல்லவில்லை என்பதே ஆறுதல். ஆனாலும் இந்தத் தொடரில் இந்த இளம் அணியின் திறமை வெளிப்பட்டது.

மேலும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு நுட்பங்கள் கைகூடினால் ஸ்ரீஜேஷை வைத்துக்கொண்டு இந்தியாவின் இந்த அணி முன்னேற வாய்ப்பு உள்ளது. ஆனால் இவையெல்லாம் நடக்குமா அல்லது அவசரகதி முடிவெடுத்து அணியை மாற்றுவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

உலகக் கோப்பை ஹாக்கிஇந்தியாஆஸ்திரேலியாகோல் கீப்பர் ஸ்ரீஜேஷ்

You May Like

More From This Category

More From this Author