Published : 24 Dec 2014 10:54 AM
Last Updated : 24 Dec 2014 10:54 AM

சென்செக்ஸ் 195 புள்ளிகள் சரிவு: 8300 புள்ளிகளுக்கு கீழே சரிந்தது நிப்டி

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் நேற்று 195 புள்ளிகள் சரிவை சந்தித்தது. கடந்த மூன்று வர்த்தக நாட்களில் 1,000 புள்ளிகளுக்கு ஏற்றம் கண்ட சந்தை நேற்றைய வர்த்தகத்தில் இறக்கத்தை சந்தித்தது. இதன் மூலம் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 27,506 புள்ளிகளில் முடிந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையான நிப்டி 57 புள்ளிகள் சரிந்து 8,267 புள்ளிகள் முடிந்துள்ளது.

சர்வதேச சந்தைகளில் நிலவும் ஏற்ற இறக்கம் இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலிக்கிறது. சீனாவின் பங்குச் சந்தையும் இறக்கத்தை சந்தித்தது.

சர்வதேச கமாடிட்டி வர்த்தகம் மற்றும் நாணய சந்தையில் நிலவும் நிலையில்லாத தன்மை காரணமாக இந்திய சந்தையில் ஏற்ற இறக்கம் நிலவுகிறது. மேலும் நடப்பு கூட்டத்தொடரில் முக்கிய சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளவில்லை என்பதால் முதலீட்டாளர்கள் சந்தையில் முதலீடு செய்ய தயக்கம் காட்டுவதாக தெரிகிறது என பங்குச்சந்தை நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இரண்டு மாநில சட்டமன்ற தேர்தல் முடிவு

களும் நேற்றைய வர்த்தகத்தில் எதிரொலித்தது. ஜார்கண்ட் மற்றும் ஜம்மு ஜாஷ்மீர் மாநில தேர்தலில் பி.ஜே.பி.க்கு பெரும்பான்மை கிடைக்காததால் காலையில் ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தைகள் மாலையில் சரிவுடன் முடிவடைந்தன.

எப்எம்சிஜி துறை தவிர மற்ற அனைத்து துறை குறியீடுகளும் சரிவுடன் முடிந்தன. கேப்பிட்டல் கூட்ஸ், மெட்டல் மற்றும் வங்கித் துறை பங்குகள் சரிவைக் கண்டன.

ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், ஹெச்டிஎஃப்சி, எல் அண்ட் டி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ் மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனப் பங்குகள் ஒரு சதவீதத்துக்கும் மேலான இறக்கம் கண்டன. டாடா பவர் நிறுவனத்தின் பங்குகள் 3 சதவீதம் சரிந்தது.

என்டிபிசி நிறுவன பங்குகள் 3 சதவீத ஏற்றம் கண்டது. இந்த நிறுவனத்துக்கு பேங்க் ஆப் பரோடாவிடமிருந்து 2,000 கோடி கடன் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானதால் இதன் பங்குகள் விலை அதிகரித்தது. சிப்லா நிறுவனத்துக்கு தென்னாப்பிரிக்க அரசிடமிருந்து 1,096 கோடிக்கான ஒப்பந்தம் கிடைத்துள்ளதால் இந்த நிறுவனப் பங்குகள் 1.8 சதவீத ஏற்றத்தைக் கண்டன.

நேற்றைய வர்த்தகத்தில் 1,073 பங்குகள் ஏற்றத்தையும், 1850 பங்குகள் சரிவையும் சந்தித்தன. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.28 ஆக இருந்தது. கடந்த வாரம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிந்த நிலையில் இந்த வார வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு ஏற்றம் கண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x