Published : 30 Dec 2014 11:33 AM
Last Updated : 30 Dec 2014 11:33 AM

அன்றிரவு மட்டும் சென்னை ரயிலில் டிக்கெட் கிடைத்திருந்தால்...!

பெங்களூரு குண்டு வெடிப்பில் பலியான பவானி தேவி, சம்பத்தன்று இரவு சென்னை செல்வதற்க்காக ரயில் டிக்கெட் பெற கடும் முயற்சி செய்துள்ளார். ஆனால் அவருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. அவருக்கு மட்டும் சென்னை ரயிலில் டிக்கெட் கிடைத்திருந்தால், அவர் பத்திரமாக ஊர் திரும்பியிருப்பார் என ஆதங்கப்படுகின்றனர் அவரது உறவினர்கள்.

சென்னை அண்ணா சாலையைச் சேர்ந்தவர் பவானி தேவி (38).கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாடுவதற்காக தனது குழந்தைகளுடன் கடந்த 24-ம் தேதி பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது குழந்தைகள் மற்றும் உறவினர் களுடன் எம்ஜி சாலைக்கு ஷாப்பிங் செய்ய சென்றார். அப்போது சென்னையில் உள்ள தனது கணவர் பாலன் உட்பட குடும்பத்தினருக்காக புத்தாடைகளை வாங்கினார்.

அதன்பிறகு தன‌து மகள் லட்சுமிதேவிக்கு (11) பிடித்தமான 'அமீபா' விளையாட்டு மையத்துக்கு சென்று விளையாட வைத்தார். இரவு 8.30 மணியளவில் எம்ஜி சாலை அருகிலுள்ள சர்ச் தெரு வழியாக நட‌ந்து சென்று கொண்டிருந்தபோது பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் பவானிதேவிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மயங்கி விழுந்தார். அடுத்த கணம் அந்த இடமே புகைமூட்டமாக காட்சியளித்தது என சம்பவத்தின் போது உடனிருந்த பவானிதேவியின் உறவினர் மங்கிய குரலில் கூறினார்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பவானி தேவியை அவரது உறவினர்கள் ஆட்டோ மூலம் இரவு 9.50 மணியளவில் மல்லையா மருத்து வ‌மனையில் அனுமதித்தனர். மூளையில் பலத்த காயம் ஏற்பட்டு அதிகளவில் ரத்தம் வெளியேறியதால் பவானிதேவி சிகிச்சை பலனின்றி இரவு 10.45 மணியளவில் உயிரிழந்தார்.

பவானி தேவி, ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை செல்வதற்க்காக ரயில் டிக்கெட் பெற கடும் முயற்சி செய்துள்ளார். ஆனால் அவருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. அவருக்கு மட்டும் சென்னை ரயிலில் டிக்கெட் கிடைத்திருந்தால், அவர் பத்திரமாக ஊர் திரும்பியிருப்பார் என அவரது மைத்துனர் மகேந்திரன் கண்ணீர் மல்க கூறினார்.

சென்னையில் இருந்து விரைந்து வந்த பவானியின் கணவர் பாலன் (46), "என்னிடம் பவானி பேசிய கடைசி வார்த்தை சாப்பிட்டியா" என உணர்ச்சிவசப்பட்டு அழுது புலம்பினார்.

பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில்தான் பிரேத பரிசோதனை நடந்தது. அங்கு ஒரு ஓரமாக நின்றிருந்த குழந்தைகள் பரத், லட்சுமி இருவரையும் யாராலும் தேற்ற முடியவில்லை.

மகேந்திரன் கூறியதுபோல், அன்றிரவு மட்டும் சென்னை ரயிலில் பவானிக்கு டிக்கெட் கிடைத்திருந்தால், இப்படி தீவிரவாதத்துக்கு பலியாகியிருக்க மாட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x