Published : 11 Aug 2014 17:54 pm

Updated : 11 Aug 2014 17:54 pm

 

Published : 11 Aug 2014 05:54 PM
Last Updated : 11 Aug 2014 05:54 PM

இதுவும் அர்த்தமுள்ள வாழ்க்கை

வறுமையும் வெறுமையும் விளிம்புக்குத் துரத்த, எதிர்த்து நின்று வெற்றிபெறுவது மட்டுமல்ல வாழ்க்கை. ஒவ்வொரு தருணத்தையும் அர்த்தமுள்ளதாகவும் தன்னிறைவுடனும் வாழ்வதிலும்கூட வாழ்க்கையின் முழுமை அடங்கியிருக்கிறது. மதுரை சின்ன சொக்கிக்குளத்தைச் சேர்ந்த சாமுண்டீஸ்வரியும் இதையே தன் வாழ்வின் மூலம் முன்மொழிகிறார்.

பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டுமே சாமுண்டீஸ்வரிக்கு மதுரைதான். திருமணம் முடிந்ததும் வீட்டுடன் தன் எல்லை சுருங்கிவிட்டதே என்று முடங்கிவிடாமல் பியூட்டிஷியன் படிப்பில் சேர்ந்தார். படித்து முடித்த பிறகுதான் தெருவுக்கு இரண்டு பியூட்டி பார்லர்கள் இருப்பது மனதில்பட்டிருக்கிறது. நாமும் மூன்றாவதாக இன்னொரு பியூட்டி பார்லர் நடத்துவது நல்லதல்ல என்று நினைத்தவர் பிறகு என்ன செய்தார்?

“எப்பவுமே எதையுமே புதுசா செய்யறது எனக்குப் பிடிக்கும். பியூட்டி பார்லர் தொடங்கறதைவிட, அழகுக்காகப் பயன்படுத்தப்படுற பொருட்களை இயற்கையான முறையில் தயார் செய்தா என்னன்னு தோணுச்சு. எடுத்ததுமே அதுக்கு எல்லாப் பக்கத்துல இருந்தும் எதிர்ப்புதான் வந்தது” என்று சொல்லும் சாமுண்டீஸ்வரி அந்த எதிர்ப்புகளை எல்லாம் தன் திறமையால் தகர்த்திருக்கிறார்.

“ஒழுங்கா பியூட்டி பார்லர் திறந்தோமா, வேலையைப் பார்த்தோமான்னு இல்லாம எதுக்கு இந்த வேண்டாத வேலை?”

“பெரிய பெரிய நிறுவனங்களே இயற்கை அழகுப் பொருட்களை விற்க முடியாம திணறுது. இதுல நீ புதுசா செய்யறதை யார் வாங்குவாங்க?” - இப்படி ஒவ்வொரு நாளும் சாமுண்டீஸ்வரியின் முயற்சிக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை விழுந்துகொண்டே இருந்தது. தன்னைச் சுற்றி இருப்பவர்களையும், கணவரையும் பொறுமையான அணுகுமுறையால் சமாளித்தார். தன் திட்டத்தைத் தெளிவாக விளக்கி, தன்னால் நிச்சயம் சாதிக்க முடியும் என்று உறுதியளித்தார். அந்த உறுதிதான் அவருக்கு உயர்வும் தந்தது.

இயற்கையின் வழியில்


பியூட்டிஷியன் படிப்பில் தனக்குக் கிடைத்த அறிவுடன் அனுபவ அறிவையும் இணைத்து அழகு தரும் பொடிகள் தயாரிப்பில் இறங்கினார் சாமுண்டீஸ்வரி. இயற்கைப் பொருட்களை மட்டுமே மூலப் பொருட்களாகப் பயன்படுத்தி முகத்துக்கும் கூந்தலுக்கும் பொலிவு தரும் ஏழு விதமான பொடிகள் தயாரித்தார். கரிசலாங்கண்ணி, வேப்பிலை, பாதாம், வெள்ளரி, ரோஜா இதழ்கள், மருதாணி, கடுக்காய்ப் பொடி என்று ஒவ்வொரு பொருளையும் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்தார்.

“எட்டு வருஷத்துக்கு முன்னால நான் இந்தத் தொழிலைத் தொடங்கினப்போ மக்களிடம் செயற்கை அழகு சாதன க்ரீம்கள் மீதான மோகம் குறைந்து, இயற்கையின் பக்கம் அவர்கள் பார்வை விழுந்தது. தவிர, இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் எந்தப் பக்க விளைவும் இல்லை.

இவைதான் இயற்கையின் பக்கம் என்னைத் திருப்பின. முகத்துக்கும், கூந்தலுக்கும் நான் தயார் செய்த பொடிகளை நான் தான் முதலில் பயன்படுத்தினேன். நான் எதிர்பார்த்த மாதிரி ஓரளவுக்கு நல்ல பலன் கிடைத்த பிறகே அவற்றைச் சந்தைப்படுத்த முடிவு செய்தேன்” என்று சொல்கிறவர், சந்தைப்படுத்துவதில் நிறையச் சிக்கல்களைச் சந்தித்திருக்கிறார்.

வரவேற்ற வாடிக்கையாளர்கள்

வியாபார அணுகுமுறை குறித்து எதுவும் தெரியாததால் சாமுண்டீஸ்வரிக்கு அவருடைய கணவர் அசோக்குமார் உதவியிருக்கிறார். புதிய தயாரிப்பு, அதுவும் உள்ளூர் தயாரிப்பு என்றதும் அனைவரும் யோசித்திருக்கிறார்கள். பிறகு சில கடைகளில் இலவச மாதிரிகளை முதலில் வைத்திருக்கிறார்கள். அதைப் பயன்படுத்திய வாடிக்கையாளர்கள் அடுத்த முறையும் கேட்க, அந்தப் புள்ளியில் சூடு பிடித்தது இவர்களது விற்பனை.

“முதல்ல கொஞ்சம் சிரமமா இருந்தது. போகப்போக எங்க பொருளோட விற்பனை ஓரளவு அதிகரிச்சது. ஆரம்பத்துல நானேதான் எல்லா வேலையையும் செய்தேன். இப்போ என் சொந்தக்காரங்க ஒருத்தங்க, எனக்கு உதவியா இருக்காங்க.

நாங்க தயாரிக்கிற ஏழு பொடிகளில் முகப் பரு நீக்கும் பொடிக்கு நல்ல வரவேற்பு. ஆண், பெண் இரு பாலருமே எங்கப் பொடிகளைப் பயன்ப டுத்தலாம்ங்கறது எங்களோட இன்னொரு சிறப்பு” என்று தங்கள் தயாரிப்பு குறித்து விளக்குகிறார் சாமுண்டீஸ்வரி.

இவர்களுக்கு உள்ளூரில் மட்டுமல்லாமல் ராஜபாளையம், சென்னை என வெளியூரிலும் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு கூரியர் மூலம் பொருட்களை அனுப்பி வைக்கிறார்கள்.

அழகுப் பொடிகளோடு மட்டும் தன் வியாபாரத்தை நிறுத்திக்கொள்ளாமல் ஒரு கிராம் தங்க நகைகள் வாங்கி விற்பது, ஃபேஷன் நகைகள் செய்வது என்று சாமுண்டீஸ்வரி தன் எல்லையை விரிவாக்கினார். மாலை நேரத்தில் டியூஷன் எடுப்பது, சதுரங்கப் பயிற்சி அளிப்பது, மாணவர்களுக்கு சம்மர் வகுப்புகள் நடத்துவது என எப்போதும் ஏதாவது ஒரு வேலை செய்துகொண்டே இருக்கிறார். தன் கணவர் நடத்திவரும் கேட்டரிங் தொழிலிலும் பங்கெடுக்கிறார்.

வாழ்க்கை வசப்படும்

“எங்களுக்கு கோவை, மதுரை, திருச்சி என வெளியூர்களில் இருந்தும் சமையல்ஆர்டர்வரும். ஒவ்வொரு வாடிக்கை யாளரையும் தக்க வைத்துக் கொள்வதற்காகப் பல புது உத்திகளைச் செய்ய வேண்டும். ஒவ்வொரு விருந்திலும் ஏதாவது ஒரு புதுமை இருக்கும்படி பார்த்துக்கொள்வோம். பொதுவா அவர்களாகவே எடுத்துப் போட்டுச் சாப்பிடும் பஃபே முறையில் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் தருவோம். அவர்களுக்கும் பிடித்த வகையில் உணவுகளைப் பட்டியலிடுவோம். இப்போது அனைவரிடமும் உடல் நலம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. அதனால் சிறு தானிய உணவுகளைச் சேர்க்கச் சொல்லி எங்கள் வாடிக்கையாளர்களிடம் சொல்லி வருகிறோம்” என்று தங்கள் வெற்றிக்கான காரணங்களை அடுக்குகிறார்.

தான் சொந்தமாக ஒரு தொழிலில் ஈடுபட்ட போது மாற்றுக் கருத்து சொன்ன கணவரே இப்போது தன் நண்பர்களிடம் தன்னைப் புகழ்ந்து பேசுவதே தனக்குக் கிடைத்த வெற்றி என்று நினைக்கிறார் சாமுண்டீஸ்வரி. தனக்கு ஓரளவு அங்கீகாரமும் வருமானமும் கிடைக்கிறது என்று உட்கார்ந்துவிடவில்லை இவர். அடுத்து என்ன என்று ஒவ்வொரு நாளும் தன் பயணத்தை, அதன் எல்லைகளை விசாலப்படுத்திக்கொண்டே செல்கிறார். அதுதான் தன் வாழ்வை அர்த்தமுள்ள தாக்குகிறது என்கிறார் சாமுண்டீஸ்வரி. அதை வழிமொழிக்கின்றன அவர் கடந்துவந்த பாதைகளும், காத்திருக்கும் வெற்றிகளும்!

படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி.

இயற்கை பொருள்பியூட்டிஷியன்வியாபாரம்அணுகுமுறைவாடிக்கையாளர்கள்அழகுப் பொருட்கள்

You May Like

More From This Category

pullingo

புள்ளிங்கோ 3.0!

இணைப்பிதழ்கள்
gana-stephen

கைவிடாத கானா!

இணைப்பிதழ்கள்

More From this Author