Last Updated : 04 Feb, 2015 08:26 AM

 

Published : 04 Feb 2015 08:26 AM
Last Updated : 04 Feb 2015 08:26 AM

பெற்றோரின் கனவுகளை சுமப்பவர்களா பிள்ளைகள்?

பிளஸ் 2 தேர்வுகள் நெருங்கி வருகின்றன. அதற்கு முன்னதாக பிளஸ் 2 படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு எளிமையாக ஒரு தேர்வு...

உங்கள் குழந்தைக்கு பிடித்த உணவு எது?

பிடித்த உடை எது?

பிடித்த விளையாட்டு எது?

பிடித்த பாடம் எது?

பிடித்தமான ஆசிரியர் யார்?

உங்கள் குழந்தை என்னவாக விரும்புகிறார்?

மேற்கண்ட ஆறு கேள்விகளில் ஐந்து கேள்விக்கு பதில் தெரியும் எனில் நீங்கள் தேர்ச்சி அடைந்துவிட்டீர்கள். தேர்ச்சி அடையவில்லையா? ஒன்றும் பிரச்சினை இல்லை. இப்போதுகூட உங்கள் குழந்தையிடம் கேட்டு அறிந்துகொண்டு தேர்ச்சி பெறுங்கள்.

சரி, விஷயத்துக்கு வருவோம். வரும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் உங்கள் மகன்/மகள் பெறும் மதிப்பெண் களுக்கான பொறுப்பு அவர்களுக்கானது மட்டும் அல்ல... அது ஆசிரியர்களுக்கு நிகராக உங்களையும் சார்ந்தே உள்ளது. இன்று பிளஸ் 2 பொதுத் தேர்வை எதிர்கொண்டுள்ள ஒவ்வொரு வீடும் பரபரப்பு களமாக மாறியுள்ளது. தேர்வைச் சுற்றியே பெற்றோர், குழந்தைகளின் கவனம் சுழன்று கொண் டிருக்கும் தருணம் இது. இப்போது நிதானமாக பெற்றோர்கள் யோசித்து, ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டும்.

இந்த போட்டியில் மூன்று தரப்பிலி ருந்து உங்கள் குழந்தை அழுத்தங்களை எதிர்கொள்கிறது. 1. பெற்றோர் 2. பள்ளி நிர்வாகம் 3. சமூகம். உங்கள் குழந் தையின் பலம், பலவீனம், எதிர்பார்ப்பு, கோபம், ஆனந்தம், ஆத்திரம் உள்ளிட்ட சகல குணங்களை அறிந்து ஏற்றுக் கொண்டிருக்கும் பெற்றோரால் மட்டுமே மேற்கண்ட மன அழுத்தத்தை நேர்மறை மன அழுத்தமாக, ஆரோக்கியமான மன அழுத்தமாக உங்கள் குழந்தையின் மீது செலுத்த முடியும். ஏனெனில் சமூகத்துக்கும் பள்ளி நிர்வாகத்துக்கும் அந்த பொறுப்புகள் கிடையாது. பொரு ளியல் அல்லது ஏதோ ஓர் எதிர்பார்ப்பு அடிப்படையில் அவை இயங்குகின்றன.

பெரும்பாலான பெற்றோர் தங்களின் குழந்தைகள் முதல் மதிப்பெண் பெற வேண்டும்; மருத்துவராக அல்லது பொறியாளராக வர வேண்டும் என்று ஆசை கொண்டுள்ளனர். இது இயலும் அல்லது இயலாது என்பது அடுத்த விஷயம்.

ஆனால், ஒவ்வொரு குழந்தையும் தங்களிடம் இருக்கும் திறமைக்கு ஏற்ப மட்டுமே மதிப்பெண் பெறும் என்கிற அடிப்படை உண்மையை பெற்றோர் உணர வேண்டும். படிப்பு வராத குழந் தைக்கு ஓவியத்திலோ அல்லது வேறு ஏதோ ஒன்றிலோ அபரிமிதமான தனித் திறமை இருக்கும். திறமையே இல்லாத குழந்தை என்று யாரும் கிடையாது.

ஆனால், அதனை கண்டறிவதுதான் பெற்றோரின் சாமர்த்தியம். குழந்தை யின் திறமை குறித்து தெரிந்து கொள்ள முடியாத பெற்றோர், உங்கள் பிள்ளையின் நண்பர்கள், நெருங்கிப் பழகும் உறவினர்கள், குழந்தையின் ஆசிரியர் ஆகியோரிடம் கேட்டு அறிந்து கண்டறிய வேண்டும். அந்த தனித் திறமைக்கு ஏற்ற வகையிலான துறை சார்ந்த பணிக்கான பாடப் பிரிவுகளை தேர்வு செய்ய பெற்றோர் உதவ வேண்டும்.

ஆனால், மேற்கண்ட விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு தடையாக இருப்பது பெற்றோரின் சுயநலமே. விருப்பத்தை, நிறைவேறாத அல்லது தங்களால் சாதிக்க இயலாத ஒன்றை குழந்தையின் தலையில் சுமத்துவதே நடைமுறையில் அதிகமாக இருக்கிறது. உங்கள் நிறைவேறாத ஆசைகளின் வடிகால் அல்ல உங்கள் பிள்ளைகள். உங்களின் நிறைவேறாத கனவுகளை கண்டடையும் தேவதூதர்களும் அல்ல அவர்கள். அவர்களுக்கு உங் களைப் போன்றே சுயமான ஆசைக ளும் கனவுகளும் கொண்ட சராசரி மனிதர் கள்தான். அவர்களை சூப்பர் மேன்களாக கற்பிதம் செய்துகொள்ளாதீர்கள். எனவே, ஒருபோதும் உங்கள் பிள்ளையின் விருப்பத்துக்கு மாறான படிப்பை, தொழிலை உருவாக்கி கொடுக்கும் சூழலை ஏற்படுத்திவிட வேண்டாம்.

மிரட்டல் அல்லது கட்டாயப்படுத்தும் விதத்தில் மதிப்பெண் இலக்கு நிர்ண யிக்கக் கூடாது. இலக்கு அடைய முடியாதபட்சத்தில் விபரீதமாக எதையும் செய்யத் துணியும் பதின்ம வயதில் உங்கள் பிள்ளை இருக்கிறார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மாறாக தேர்வுக்கு தயாராகி வரும் குழந்தைகளிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள். இரவு 10 மணிக்கு படுக்கைக்கு குழந்தைகளை அனுப்பி அதிகாலை 5 மணிக்கு எழுப்பி படிக்க வையுங்கள். ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் ஓய்வு அவசியம்.

தேர்வு சமயத்திலும்கூட குழந்தை கள் தினமும் அரை மணி நேரமாவது அவர்கள் விரும்பிய இசை, தொலைக் காட்சி, விளையாட்டு உள்ளிட்ட பொழுது போக்குகளில் ஈடுபட வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அப்போது தான், கவனக்குறைவின்றி (Lack of concentration) தேர்வுக்கு அவர்க ளால் தயாராக முடியும்.

பெற்றோரின் அன்பும் அரவ ணைப்புமே குழந்தைகளின் தேர்வு பயத்தை போக்கும் அருமருந்து. தினமும் குழந்தைகளை பத்து நிமிடம் தியானப் பயிற்சி எடுக்கச் செய்யலாம்.

தியானத்தில் இருக்கும் போது, தேர்வு அறையில் பதற்றமின்றி அமர்ந்து இருப்பதை போன்றும், கேள்வித்தாள் எளிமையாக இருப்பதாகவும், நல்ல முறையில் தேர்வு எழுதி முடிப்பதை போலவும் அழகான கற்பனை உலகை நினைவில் நிறுத்த கற்றுக்கொடுங்கள். இதனால், உளவியல் ரீதியாக மனதில் நேர்மறை சிந்தனை அதிகரித்து, நல்ல முறையில் தேர்வுக்கு தயாராக முடியும்.

கட்டாயம் தவிர்க்க வேண்டிய வசனங்கள்...

 “உனக்கு என்ன வேண்டுமோ கேட்டு வாங்கிக்கொள்... எது வேண்டுமானாலும் செய்துகொள். மதிப்பெண் மட்டும் வாங்கிவிடு...” ரீதியிலான வசனங்களை தவிர்க்கவும். காசு கொடுத்து வாங்குவது அல்ல மதிப்பெண்கள்!

 அவரைப் போல வரவேண்டும்; இவரைப் போல வர வேண்டும் என்று ஒப்பிடாதீர்கள். ஏனெனில் உங்கள் பிள்ளை என்பவர் உங்கள் பிள்ளை மட்டுமே. நீங்கள் குறிப்பிடும் அவரோ இவரோ அல்ல.

 “மதிப்பெண் குறைவாக எடுத்துவிட்டால் எங்களால் வெளியே தலைகாட்ட முடியாது...” என்று சொல்லி உங்கள் பிள்ளையின் தனிப்பட்ட திறன் சார்ந்த விஷயத்தை சமூகம் சார்ந்த பிரச்சினையாக உருவாக்காதீர்கள்.

 “நீ எடுக்கும் மதிப்பெண்ணில்தான் நம் குடும்பத்தின் எதிர்காலமே இருக்கிறது...” என்று உங்கள் பொறுப்பை உங்கள் பிள்ளையின் மீது சுமத்தாதீர்கள்.

பேராசிரியர் எஸ்.கதிரவன்,உளவியல் துறைத் தலைவர், பெரியார் பல்கலைக்கழகம்

இந்தக் கட்டுரையின் அச்சு வடிவத்தை டவுன்லோடு செய்ய - >இனிது இனிது தேர்வு இனிது! - பெற்றோரின் கனவுகளை சுமப்பவர்களா பிள்ளைகள்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x