Published : 25 Jan 2015 11:32 AM
Last Updated : 25 Jan 2015 11:32 AM

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலுக்காக கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்துள்ளது அதிமுக: மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்காக ஆளும்கட்சியான அதிமுக கோடிக்கணக்கான ரூபாயை அங்கு முன்கூட்டியே முதலீடு செய்துள்ளது என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் மிஸ்டு கால் மூலம் பாஜக உறுப்பினர்கள் சேர்க்கையை பொன். ராதாகிருஷ்ணன் நேற்று தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் இதுவரை 9 லட்சம் பேர் மிஸ்டுகால் மூலம் பாஜகவில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். மார்ச் 31-ம் தேதிக்குள் 60 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கைக்கான இலக்கு எட்டப்படும்.

திருச்சியில் பாஜக வேட்பாளருக்கு அனைத்து கூட்டணிக் கட்சிகளும் ஆதரவு தரும். இந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும். இடைத்தேர்தல் என்பதால் திருமங்கலம் பார்முலாபோல் வாக்காளர்களுக்கு மற்ற கட்சிகள் பணம் வழங்கி தவறான வழியில் வாக்குகளை பெற முயற்சி செய்கின்றன. ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்காக அந்த தொகுதியில் வாக்குகளைப் பெற ஆளும்கட்சியானது முன்கூட்டியே கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்துள்ளது.

மீத்தேன் ஆய்வு இன்னும் தொடங்கப்படவில்லை. அதற்குள் அரசியல் கட்சிகள் அந்தத் திட்டத்தை கண்மூடித்தனமாக எதிர்க்கத் தொடங்கியுள்ளன. எந்த திட்டங்கள் வந்தாலும் எதிர்க்கும்போக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல. இதனால், எதிர்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள். 50 ஆண்டுகளாக தமிழகத்தை திமுக, அதிமுக கட்சிகள் மாறிமாறி ஆட்சி செய்துள்ளன. அதனால், கேரளம், கர்நாடகத்தைக் காட்டிலும் தமிழகம் பின்னோக்கி சென்றுவிட்டது.

சத்துணவுக்கூட ஆயா பணிக்குக்கூட தமிழகத்தில் ஒன்றரை லட்சம், 2 லட்சம் ரூபாய் என வாங்கப்படுகிறது. வாங்கிய இந்த பணத்தை இப்போது வாக்குக்காக முதலீடு செய்கின்றனர். சாதாரண டீக்கடையில் இருந்த நரேந்திர மோடி இன்று நாட்டின் பிரதமராக உயர்ந்துள்ளார். அவரது தலைமையில் இந்தியா வளர்ச்சி பெறத் தொடங்கியுள்ளது. அதேபோல் தமிழகமும் வளர்ச்சி பெற அவரது கரத்தை தமிழ் மக்கள் வலுப்படுத்த வேண்டும்.

தற்போது பதவிக்கு வந்துள்ள இலங்கை புதிய அதிபர், தமிழர் நலனுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என நேரடியாகக் கேட்கும் அளவுக்கு நரேந்திர மோடி ராஜதந்திரங்களைக் கையாளுகிறார் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x