Last Updated : 09 Nov, 2014 09:26 AM

 

Published : 09 Nov 2014 09:26 AM
Last Updated : 09 Nov 2014 09:26 AM

புகார் அளித்த 10 நிமிடத்தில் நடவடிக்கை: ட்விட்டரில் கலக்கும் பெங்களூரு போலீஸார்

ட்விட்டர் சமூக வலைத்த‌ளத்தின் மூலம் பொதுமக்கள் புகார் அளித்தால் 10 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெங்களூரு மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி தெரிவித் துள்ளார்.

சமீப காலமாக பெங்களூருவில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் பலாத்காரம், போதைப் பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக புகார் அளிக்க செல்வோர், காவல்துறையினரால் அலைக்கழிப்புக்கு ஆளாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலைக்கு முடிவு கட்டும் வகையில், புகார்களை தெரிவிப்பதற்கு பேஸ்புக், மின்னஞ்சல், ஏ.டி.எம்.களைப் போன்ற புகார் மையம் உள்ளிட்ட பல்வேறு வசதி களை போலீஸார் ஏற்படுத்தி வருகின்றனர்.

ட்விட்டரில் புகார் தரலாம்

சமீபத்தில் ட்விட்டர் சமூக வலைத் தளத்தில் இணைந்த பெங்களூரு மாநகர காவல் துறை ஆணையர் எம்.என்.ரெட்டி, அதில் பொதுமக்கள் புகார் தரலாம் என அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் 13-ம் தேதி ஒருவர் ட்விட்டர் மூலமாக பெங்களூரு ஆணையர் ரெட்டிக்கு புகார் அளித்தார். அதில், ஏர்போர்ட் சாலையில் வாகனத்தில் சென்ற தனது மனைவி, அனைத்து ஆவணங்களை வைத்துள்ள போதிலும், அவரிடம் போலீஸார் லஞ்சம் கேட்பதாகத் தெரிவித்தார். உடனடியாக ஏர்போர்ட் போலீ ஸாருக்கு மின்னஞ்சல் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டு நட வடிக்கை எடுக்கப்பட்டது.

அடுத்த 10-வது நிமிடத்தில் புகார் அளித்த நபர், “மிக்க‌ நன்றி. எனது மனைவியை வாகனத்தில் செல்வதற்கு போலீஸார் அனு மதித்து விட்டனர்” என்று ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பொதுமக்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக பெங்களூரு மாநகர காவல் துறை ஆணையர் எம்.என்.ரெட்டி கூறியதாவது:

பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் நடைமுறையை எளிமைப்படுத்தும் விதமாக தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தத் தொடங்கியுள்ளோம். எனது ட்விட்டர் பக்கத்தில் புகார் வந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

ட்விட்டர், பேஸ்புக், மின்னஞ்சல் ஆகியவற்றை கண்காணிப்பதற்காக பெங்களூரு போலீஸில் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பிரிவு 24 மணி நேரமும் சமூக வலைத்தளங்களை கண்காணித்துவரும். இத்திட்டத்துக்கு பொது மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி யளிக்கிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x